4

சில தினங்கள் கழிந்தபின், ஒரு நாள் தாயும் சோபியாவும் ஏழை நாடோடிப் பெண்களைப்போல் உடை தரித்தவாறு நிகலாவின் முன்னால் வந்து நின்றார்கள். அவர்கள் இருவரும் நைந்து போன கவுன்களும் ரவிக்கைகளும் அணிந்திருந்தார்கள்.. முதுகில் ஆளுக்கொரு சாக்குப் பையைத் தொங்கவிட்டுக்கொண்டிருந்தார்கள், ஒவ்வொருவர் கையிலும் கம்பு இருந்தது. அந்த உடையலங்காரம் சோபியாவை ஓரளவு குள்ளமாக எடுத்துக்காட்டியது. அவளது வெளுத்த முகத்தை மேலும் கடுமையாகக் காட்டியது.

நிகலாய் தனது சகோதரிக்கு விடை கொடுக்கும்போது அவளது கரத்தை ஆர்வத்தோடு குலுக்கினான் அவர்களிருவருக்குமிடையே நிலவிய அமைதியான எளிமையான ஒட்டுறவைத் தாய் மீண்டும் ஒருமுறை உணர்ந்தாள், அவர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடவில்லை. அன்பு ததும்ப அழைக்கவில்லை. என்றாலும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆழ்ந்த பரிவோடும் ஆர்வத்தோடும் தம் உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொண்டார்கள். அவள் குடிவாழ்ந்த இடத்தில் ஜனங்கள் முத்தமிடவும் செய்தார்கள், அன்போடு அழைக்கவும் செய்தார்கள். ஆனால் ஒருவரையொருவர் பசி வெறிகொண்ட பட்டி நாய்களைப்போல் கடித்துக் குதறவும் செய்தார்கள்.


பெண்கள் மௌனமாய் நகரத்தின் வீதிகளின் வழியே, வயற் புறங்களின் வழியே நடந்து சென்றார்கள், இருபுறத்திலும் பெரிய பெரிய பிர்ச் மரங்கள் வளர்ந்தோங்கி நிற்க, சமதளமற்று மேடுபள்ளமாயிருக்கும் அகன்ற பாதையின் வழியாக, தோளோடு தோள் உரச, ஒருவர் பக்கம் ஒருவராக நடந்துசென்றார்கள்.

“உங்களுக்கு களைப்பே தோன்றவில்லையா” என்று சோபியாவைப் பார்த்துக் கேட்டாள் தாய்.

“எனக்கு அதிகமாக நடந்து பழக்கமிராது என்று நினைக்கிறீர்களா? இதெல்லாம் எனக்குப் பழகிப்போன விவகாரம்.”

சோபியா உற்சாகத்தோடு தனது பிள்ளைப் பிராயத்தின் செல்ல விளையாட்டுக்களை நினைவு கூர்வதைப்போல, தனது புரட்சி நடவடிக்கைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினாள். அவள் பொய்யான தஸ்தாவேஜுகளோடு எத்தனை எத்தனையோ பெயர்களில் வாழ்ந்திருக்கிறாள். அவள் மாறு வேடம் பூண்டு, உளவாளிகளிடமிருந்து தப்பியிருக்கிறாள். விரோதமான புத்தகங்களை கட்டுக்கட்டாக வண்டிகளில் ஏற்றிக்கொண்டு ஊர் ஊராய்ச் சென்றிருக்கிறாள். நாடு கடத்தப்பட்டவர்களைத் தட்பித்து ஓடச் செய்வதிலும் ஒத்துழைத்திருக்கிறாள், அவர்களோடு வெளி நாடுகளுக்கு துணையாகவும் சென்று சேர்த்திருக்கிறாள். ஒரு தடவை அவள் தான் குடியிருந்த வீட்டுக்குள்ளேயே ஒரு இரகசிய அச்சகத்தை வைத்திருந்தாள்; போலீஸ்காரர்கள் அதைக் கண்டுபிடித்து, வீட்டைச் சோதனையிட வந்தபோது, அவள் தன்னை ஒரு வேலைக்காரி மாதிரி வேடமிட்டு மறைந்துகொண்டு தன் வீட்டு வாசலில் வந்து நின்ற போலீஸ்காரர்கள் முன்னிலையிலேயே தன்னை இனங்காட்டாமல் ஓடி மறைந்து தப்பிவிட்டாள். அன்றைய தினம் ஒரே குளிர். அவளோ மெல்லிய ஆடைகளைத்தான் அணிந்திருந்தாள். தலைமீது ஒரு சவுக்கத்தைப் போட்டவாறு. அவள் அந்தப் பெரிய நகரத்தின் எல்லை வரைக்கும் நடந்துசென்றாள்; கையில் ஒரு டப்பாவைத் தூக்கிக்கொண்டு மண்ணெண்ணெய் வாங்கச் செல்கிறவள்போல் சென்று நழுவித் தப்பிவிட்டாள்.

இன்னொரு தடவை அவள் சில தோழர்களைச் சந்திப்பதற்காக, ஒரு நகரத்துக்குள் வந்து சேர்ந்தாள்; அவர்கள் தங்கியிருந்த மாடிக்குச் செல்லும் சமயத்தில், படியில் ஏறிக்கொண்டிருக்கும்போதே, மாடியில் சோதனை நடக்கிறது என்பதைக் கண்டுகொண்டாள், திரும்பவும் கீழே இறங்கித் தப்பித்துச் செல்வதற்கு அவளுக்கு நேரமில்லை. எனவே அவள் ஒரு மாடியின் கீழே இருந்த வீட்டுக் கதவைத் துணிந்து தட்டினாள், உள்ளிருந்தவர்கள் கதவைத் திறந்தவுடன் அவள் விறுவிறு என்று தனது மூட்டை முடிச்சுகளுடன் அந்த இனந்தெரியாத ஜனங்களின் வீட்டுக்குள் நுழைந்துவிட்டாள். பிறகு அவர்களிடம் பட்டவர்த்தனமாகத் தன். நிலைமையைச் சொன்னாள்.

“நீங்கள் விரும்பினால், என்னைப் போலீசாரிடம் பிடித்துக்கொடுக்கலாம், ஆனால் நீங்கள் அந்த மாதிரி செய்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை” என்றாள்.

அந்த வீட்டிலுள்ளவர்களோ ரொம்பவும் பயந்துபோய்விட்டார்கள். அன்றிரவு முழுவதும் அவர்களை கண்ணையே இமைக்கவில்லை. எந்த நேரத்திலும் போலீஸ்காரர்கள் தம் வீட்டுக் கதவைத் தட்டக்கூடும் என்று எதிர்பார்த்தார்கள். இருந்தாலும் அவளை அவர்கள் வெளியே விரட்டவில்லை. மறுநாள் காலையில் அவர்கள் அனைவரும் தங்களது தீரமிக்க செயலை எண்ணிக் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்.

மற்றொரு முறை அவள் ஒரு கன்னியாஸ்திரி மாதிரி வேடமிட்டுக்கொண்டு, அவளைத் தொடர்ந்து திரியும் ஒரு உளவாளி சென்ற அதே ரயிலில், அவனுக்குப் பக்கத்துச் சீட்டிலேயே பிரயாணம் செய்தாள். தான் மோப்பம் பிடித்து வரும் பெண்ணை எவ்வளவு கெட்டிக்காரத்தனமாகப் பின் தொடர்ந்து வருகிறான் என்பதை அவளிடமே” அவன் பெருமையோடு பீற்றிக்கொண்டான். அந்த உளவாளி அவள் அதே ரயிலில் இரண்டாவது வகுப்பில் பிரயாணம். செய்து வருவதாக அவளிடமே தெரிவித்தான். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் அவன் கீழே இறங்கிச் சென்று அவள் இருக்கின்ற பெட்டியை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பி வந்து அந்தக் கன்னியாஸ்திரியிடம் சொன்னான் அவளை இப்போது காணவில்லை.

“ஒருவேளை படுத்துத் தூங்கியிருப்பாள், அவளுக்கு ஒரே களைப்பாயிருந்திருக்கும், நமது வாழ்க்கையையெல்லாம்விட, அவளுடைய வாழ்க்கை சிரமமானதுதானே!”

சோபியாவை அன்பு ததும்பப் பார்த்தவாறே அந்தக் கதைகளைக் கேட்டு, தாய் தனக்குள் சிரித்துக்கொண்டாள், நெட்டையாகவும் ஒல்லியாகவுமிருந்த சோபியா தனது அழகிய கால்களை லாவகமாக எட்டி வீசி நடந்தாள். அவளது பேச்சிலும் நடையின் வீச்சிலும், அவளது உற்சாகம் நிறைந்த கம்மலான குரலிலும், அவளது நிமிர்ந்த தோற்றம் முழுவதிலுமே ஒரு துணிவும் முழுமையான ஆரோக்கியமும் நிறைந்திருப்பதாகத் தோன்றியது. அவள் எதையுமே ஒரு வாலிபமிடுக்கோடுதான் நோக்கினாள்; எங்கெங்கு நோக்கினும். அவள் தன் இதயத்துக்கு மகிழ்வூட்டும் எதையோதான் கண்டாள்.

“எவ்வளவு அழகான பைன்மரம்!” என்று ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டியவாறு கூவினாள் சோபியா. தாய் உடனே நின்று அந்த மரத்தைப் பார்த்தாள்–அந்தப் பைன் மரமும் மற்ற மரங்களைப்போலத்தான் அவளுக்குத் தோன்றியது. அவளுக்கு அதில் எந்தவித அழகோ புதுமையோ தோன்றவில்லை.

“ஆமாம் அது ஒரு அழகான மரம்தான்” என்று கூறிக்கொண்டே அவள் சிரித்துக்கொண்டாள். சோபியாவின் காதருகே உள்ள நரை முடிகளில் காற்று எப்படி ஊசலாடித் திரிகிறது என்பதைப் பார்த்தாள்.

“அதோ ஒரு வானம்பாடி!” என்றாள் சோபியா, சோபியாவின் சாம்பல் நிறக் கண்கள் அன்பு ததும்பி ஒளிபெற்று விளங்கின, அவளது உடல் முழுவதுமே நிர்மலமான வான மண்டலத்தில் எங்கேயோயிருந்து கேட்கும் ஏதோ ஒரு அரூபியான கீதத்தைக் கேட்க எண்ணித் துடித்தது. சமயங்களில் அவளது அழகிய உடல், ஒரு காட்டு மலரைக் கொய்வதற்காகக் குனிந்து வளையும்; வாய்க்குள்ளாக ஏதோ ஒரு இசையை முணுமுணுத்துக்கொண்டே அவள் அந்த மலரைத் தனது மெல்லிய விரல்களால் விருட்டென்று பறித்தெடுப்பாள், நடுங்கும் அந்தப் பூவின் இதழ்களை இனிமையாய்த் தடவுவாள்.

இவையெல்லாம் சாம்பல் நிற கண்களையுடைய சோபியாவின் மீது தாய்க்கு ஒரு ஈடுபாட்டை உண்டாக்கியது; எனவே அவளோடு சேர்ந்து நடப்பதற்காக, தாய் அவளுக்கு மிகவும் அருகில் நெருங்கியவாறு நடந்த சென்றாள், சில சமயங்களில் சோபியா கடுமையாகவும் பேசினாள். தாய்க்கு அப்படிப் பேசுவது பிடிக்காது; எனவே அப்போது அவள் தனக்குத்தானே நினைத்துக்கொள்வாள்:

“மிகயீலுக்கு இவளைப் பிடிக்காது.”

ஆனால் மறுகணமே சோபியா மீண்டும் அன்போடும் எளிமையோடும் பேசுவாள்; தாயும் அவளை ஒரு புன்னகையோடு பார்த்துக்கொள்வாள்.

“நீங்கள் இன்னும் எவ்வளவு இளமையோடிருக்கிறீர்கள்?” என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.

“எனக்கு முப்பத்திரண்டு வயதாகிறதே!” என்றாள் சோபியா.

பெலகேயா புன்னகை செய்தாள்:

“நான் அதைச் சொல்லவில்லை. முகத்தைப் பார்த்தால், உங்கள் வயது நீங்கள் சொன்னதைவிடவும் அதிகமாகத்தான் தெரிகிறது. ஆனால், உங்கள் பேச்சைக் கேட்டால், கண்களைப் பார்த்தால் எனக்கு ஒரே வியப்பாயிருக்கிறது — நீங்கள் ஒரு சின்னஞ்சிறு பெண் போலவே இருக்கிறீர்கள். எவ்வளவோ கஷ்டமும் அபாயமும் நிறைந்த வாழ்க்கையை அனுபவித்திருக்கிறீர்கள். இருந்தாலும் இதயம் மட்டும் எப்போதும் சிரித்த வண்ணமாகவே இருக்கிறது.”

“எனக்கு என்னுடைய கஷ்டங்கள் எப்போதுமே தெரிவதில்லை. என்னுடைய வாழ்க்கையைவிட, ருசிகரமும் சிறப்பும் மிக்க வாழ்க்கை வேறு ஒன்றிருக்க முடியும் என்றே எனக்குத் தோன்றுவதில்லை. நான் உங்களை உங்கள் தந்தைவழிப் பெயரால்—நீலவ்னா என்றே அழைக்கிறேனே! பெலகேயா என்ற பெயர் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.”

‘நீங்கள் என்னை எப்படி அழைத்தாலும் எனக்குச் சம்மதம்தான்” என்று ஏதோ யோசித்தவாறே சொன்னாள் தாய். “உங்கள் இஷ்டம் போலவே வைத்துக்கொள்ளுங்கள், நான் உங்களையே பார்க்கிறேன்: உங்கள் பேச்சையே கேட்கிறேன்; உங்களைப் பற்றியே சிந்திக்கிறேன். நீங்கள் மனித இதயத்துக்குள் புகும் வழியை அறிந்தவர் என்பதைக் காணும்போது எனக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. தன் மனத்திலுள்ள அந்தரங்கத்தையெல்லாம் உங்களிடம் எவனும் மறைக்காது சொல்லிவிடுவான். அவன் தானாகவே தன் இதயத்தை உங்களிடம் திறந்து காட்டிவிடுவான். என் மனதில் ஒரு எண்ணம் உண்டாகிறது. உங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வாழ்வின் துன்பத்தையெல்லாம் ஒரு நாள் வெற்றி கண்டே தீருவார்கள். அது மட்டும் நிச்சயம்!”

“நாங்கள் வெற்றிபெறுவது நிச்சயம்: ஏனெனில், நாங்கள் தொழிலாளி மக்களோடு ஒன்று சேர்ந்து நிற்கிறோம்” என்ற உறதியாகவும், உரத்தும் கூறினாள் சோபியா. “அவர்களிடம் ஒரு மகா சக்தி மறைந்துகிடக்கிறது; அவர்களால் எதையும் சாதிக்க முடியும். அவர்களது மதிப்பையும் சக்தியையும் அவர்களை உணரச் செய்ய வேண்டியதே முக்கியம், அதை உணர்ந்துவிட்டால் அவர்கள் உடனே சுதந்திரமாகத் தாமே வளர்ச்சி பெறத் தொடங்குவார்கள்......”

அவளது பேச்சு தாயின் இதயத்திலே பற்பல உணர்ச்சிக் கலவைகளை உண்டாக்கியது. ஏதோ ஒரு காரணத்தால், அவள் சோபியாவுக்காக நட்புரிமையோடும், மனத்தாங்கலில்லாத ஒரு அனுதாபத்தோடும் வருத்தப்பட்டாள்; இம்மாதிரியே அவள் எளிய வார்த்தைகளை, புரியும் வர்த்தைகளையே மேன்மேலும் பேச வேண்டுமெனத் தாய் விரும்பினாள்.

“உங்களது சிரமங்களுக்கெல்லாம் பலனளிக்கப் போவது யார்?” என்று அமைதியுடனும் வருத்தத்துடனும் கேட்டாள் தாய்.

“நமக்கு ஏற்கெனவே விருது கிடைத்துவிட்டது” என்றாள் சோபியா. அந்த வார்த்தைகள் பெருமிதத்தோடு ஒலிப்பதாய்த் தாய்க்குத தோன்றியது. “நாங்கள் ஒரு புதிய வாழ்க்கைப் பாதையைக் கண்டுபிடித்திருக்கிறோம்; அதுவே எங்களுக்குத் திருப்தி அளிக்கிறது. நமது இதயங்களின் பரிபூரண சக்திகளோடு நாம் வாழ்கிறோம். வாழ்க்கையில் நாம் இதைவிட வேறு என்னதான் எதிர்பார்ப்பது?”

தாய் அவளை ஒரு முறை பார்த்துவிட்டு, கண்களைத் தாழ்த்திக்கொண்டு மீண்டும் சிந்தித்தாள்:

“மிகயீலுக்கு இவளைப் பிடிக்காது”

அந்த இனிய காற்றை நெஞ்சு நிறையச் சுவாசித்தவாறு அவர்கள் விரைவாக ஆனால் அவசரமின்றிச் சென்றார்கள். தான் ஏதோ ஒரு புண்ணிய யாத்திரை செல்வது போலத் தாய்க்குத் தோன்றியது. தூரத்தொலைவிலுள்ள ஒரு தேவாலயத்துக்கு, அந்த தேவாலயத்திலுள்ள அற்புதச் சித்திவாய்ந்த தெய்வத்துக்கு ஒரு விடுமுறைப் பிரார்த்தனைக்காக குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சி பொங்கச் சென்றுவந்த நினைவைத் தாய் ஞாபகப்படுத்திப் பார்த்தாள்.

சமயங்களில் சோபியா வானத்தைப் பற்றியோ காதலைப் பற்றியோ இனிமையான குரலில் ஏதாவதொரு புதிய பாட்டைப் பாடுவாள். அல்லது வயல் வெளிகளைப் பற்றியும் பாடியுள்ள பாடல்களை ஒப்புவிப்பாள். தாய் அதையெல்லாம் கேட்டு, புன்னகை புரிவாள். தன்னை மறந்து அந்தப் பாடல்களின் இனிமையில் மனம் இழந்து அதன் தாள லயத்துக்குத் தக்கவாறு தலையை ஆட்டிக்கொள்வாள்.

அவளது இதயத்துக்குள்ளே வேனிற் கால இரவில் கம கமவென்று மணம் வீசும் ஒரு சிறு அழகிய நந்தவனத்தில் இருப்பதைப்போல், அமைதியும் தண்மையும் சிந்தனையும் நிரம்பி இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/33&oldid=1293139" இலிருந்து மீள்விக்கப்பட்டது