நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/எந்த ஆசையும் கிடையாது

29. எந்த ஆசையும் கிடையாது

நபிகள் நாயகம் அவர்களின் அறிவுரைகள் வெகுவேகமாகப் பரவலாயின.

அதைக் கண்ட குறைஷிகளின் கோபத்துக்கு அளவில்லை. பெருமானார் அவர்களுக்குப் பல வழிகளிலும் துன்பத்தை உண்டாக்கத் தொடங்கினார்கள்.

பெருமானார் அவர்களின் அறிவுரைகள் மற்றவர்களுக்குக் கேட்காதவாறு குறைஷிகள் கூச்சலிட்டுக் குழப்பத்தை விளைவித்தார்கள். அவர்கள் எதிரிலேயே, அவர்களை இகழ்ந்து பழித்தார்கள்.

பெருமானார் அவர்கள் கஃபாவுக்குச் சென்று வணங்க இயலாமல் தடை செய்தார்கள். அவர்கள் போகும் வழி நெடுகிலும் முட்களைப் பரப்பி வைப்பார்கள். சிறுவர்களையும், வம்பர்களையும் தூண்டிவிட்டு அவர்களை ஏசும்படி செய்வார்கள். பெருமானார் அவர்கள் அவற்றைக் கண்டு கலங்காமல், தளராமல், ஆண்டவனிடம் முழு நம்பிக்கை கொண்டு தங்களுடைய புனிதத் தொண்டை செவ்வனே செய்து வந்தார்கள்.

பெருமானார் அவர்களின் உறுதியைக் கண்டு குறைஷிகள் வியப்புற்றார்கள். ஆயினும், அவர்களுடைய நோக்கம் என்ன என்பது அந்த மக்களுக்குப் புலப்படவில்லை.

“உலக ஆசையே இதற்குக் காரணமாக இருக்குமோ?” எனச் சந்தேகித்து, குறைஷி சமூகத்துப் பிரமுகர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசித்து, உத்பா என்னும் தூதர் ஒருவரைப் பெருமானார் அவர்களிடம் அனுப்பி வைத்தனர்.

தூதர் உத்பா சென்று, பெருமானார் அவர்களைக் கண்டார்.

“அருமைச் சகோதரர் புதல்வரே! தாங்கள் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள். நம்மவர்களிலேயே மிகுந்த கெளரவம் உடையவர்கள். அத்தகைய நீங்கள் நம்முடைய விக்கிரக வணக்கத்தை எதிர்த்தும், தேவதைகளை இகழ்ந்தும், தடுத்தும் வருவது உங்களிடம் வருத்தத்தை உண்டாக்கி, வெறுப்படையச் செய்கிறது. அவ்வாறு நீங்கள் ஈடுபடுவதன் நோக்கம்தான் என்ன? மிகுந்த செல்வத்தைப் பெற்று, செல்வச் சீமானாக வேண்டும் என்ற ஆசை இருக்குமானால் சொல்லுங்கள். ஏராளமான செல்வத்தைச் சேகரித்துத் தந்து, பெரிய சீமானாகச் செய்கிறோம். அல்லது,

எங்களுக்குத் தலைமை வகிக்க வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருந்தால் கூறுங்கள். எங்களுக்கு மட்டும் அல்லாமல் அரேபியா தேசம் முழுவதற்குமே உங்களை அரசராக ஆக்கி விடுகிறோம். இல்லை,

அழகு மிக்க மங்கையை அடைய வேண்டும் என்ற ஆசை இருக்குமானால் தெரிவியுங்கள். அழகு மிக்க பெண்ணை உங்களுக்குத் தருகிறோம்.

இம்மூன்றையும் நீங்கள் விரும்பவில்லையானால், உங்களிடத்தில் ஏதோ மனக்கோளாறு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். அவ்வாறானால், அதற்கும் எங்களுடைய செலவிலேயே சிகிச்சை செய்வதற்கும் தயாராக இருக்கிறோம்” என்றார். அவர் கூறியவற்றைப் பொறுமையோடு செவிமடுத்த பெருமானார் அவர்கள் “தோழரே! எனக்குச் செல்வத்திலோ, தலைமை வகிக்கவோ, பெண் ஆசையோ கிடையவோ கிடையாது. மேலும் என் உடலில் குண பேதமும் இல்லை. நான் ஆண்டவனுடைய பிரதிநிதி! ஆண்டவனின் சிறப்பு மிக்க கருணை நிறைந்த நற்செய்திகளை எடுத்துக் கூறவும், அவனைப் பற்றி உங்களுடைய உள்ளங்களில் அச்சத்தை ஊட்டவுமே நான் வந்துள்ளேன். நான் சொல்வதை நீங்கள் ஏற்பீர்களானால், இம்மையிலும் மறுமையிலும் சுகம் பெறுவீர்கள். என்னுடைய நற்செய்திகளை அலட்சியம் செய்து, என்னைப் பொய்யன் என்று கருதினால், உங்களுடைய நிந்தனைகளைப் பொறுத்துக்கொண்டு, அது பற்றி ஆண்டவனிடம் முறையிட்டு விடுவேன். உங்களுக்கும் எனக்கும் மத்தியில் அவனே தீர்ப்பு அளிக்கட்டும்.

“உங்களுக்கு எடுத்துரைக்கும் வேதமானது, பரிபூரண கருணையுள்ள ஆண்டவனால் அருளப் பெற்றது. நீங்கள் எல்லோரும் அறிவதற்காக அரபு மொழியில் அது வெளியாகி இருக்கிறது. அதைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு நன்மைகளும், அதைப் புறக்கணிப்பவர்களுக்கு ஆண்டவனுடைய தண்டனைகளும் பற்றி அதில் அடங்கியுள்ளன.

“மேலே கூறியுள்ள கருத்துகளை உண்மையென நம்பி, நற்காரியங்கள் செய்பவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். இதுவரை நான் கூறியதை நீங்கள் கேட்டீர்கள். இனி, உங்கள் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம்” என்று கூறி முடித்தார்கள்.

தூது வந்த உத்பா திரும்பிப் போய் விட்டார்.