நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கொடியவர்கள் இழைத்த கொடுந்துன்பம்

44. கொடியவர்கள் இழைத்த கொடுந்துன்பம்

குறைஷிகளின் போக்கில் சிறிதும் மாற்றம் ஏற்படவில்லை. அதனால் பெருமானார் அவர்கள் சஞ்சலமுற்றார்கள்.

மக்காவுக்கு அண்மையில் உள்ள ‘தாயிப்’ என்னும் ஊருக்குப் போய், இஸ்லாத்தைப் பற்றி உபதேசிக்கலாம் எனக் கருதி, அங்கே சென்றார்கள்.

அங்கே செல்வந்தர்களும், பிரபுக்களும் பலர் இருந்தனர். அதில் முக்கியமான ஒரு குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களிடம் ஜைதுப்னு ஹாரிதாவுடன் சென்று பெருமானார் அவர்கள், இஸ்லாத்தின் பெருமையைக் கூறி, அதில் சேருமாறு அவர்களை அழைத்தார்கள்.

அந்த மூவரும் கூறிய சொற்கள் நகைக்கத் தக்கவையாக இருந்தன.

“உம்மை நபியாக ஆண்டவன் அனுப்பி இருந்தானானால், நல்ல உடையும், சவாரியும் தந்திருக்கமாட்டானா?" என்றார் முதலாவது ஆசாமி.

“ஆண்டவனுக்கு உம்மைத் தவிர வேறு ஒருவரும் கிடைக்கவில்லையா?” என்றார் இரண்டாவது நபர்.

“உம்மோடு எக்காரணத்தைக் கொண்டும் நான் பேச இயலாது. உண்மையில் நீர் நபியாக இருந்தால், உம்முடன் பேசுவது எங்களுக்கே விரோதமாகும். நீர் பொய்யரா இருந்தால், உரையாடுவதற்குத் தகுதியுடையவர் அல்லர்” என்றார் மூன்றாவது ஆள். அந்த மூவரும் அத்தோடு நிற்கவில்லை, பெருமானார் அவர்களை ஏளனம் செய்யுமாறு கடை வீதியிலுள்ள மக்களைத் தூண்டி விட்டனர்.

ஊரில் உள்ள வீணர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு வந்து, பெருமானார் அவர்களுக்கு எதிரில் அணி வகுத்து நின்றார்கள்.

பெருமானார் அவர்கள் புறப்பட்டுச் செல்லும் போது, அந்தக் கொடியவர்கள், அவர்களின் பாதங்களில் கற்களை வீசி எறிந்தனர்.

கல் வீச்சினால் காயம் பட்டுக் காலணிகள் இரத்தத்தால் நனைந்தன.

காயத்தால் சோர்வுற்று, அவர்கள் உட்கார முற்படும் போது, அந்தப் படுபாவிகள் உட்கார விடாமல், தோளைப் பிடித்து எழுந்து நிற்குமாறு தூக்கி விடுவார்கள்.

மேலும் நிந்திப்பார்கள்; ஏளனம் செய்வார்கள்; கைகொட்டிச் சிரிப்பார்கள்.