நளவெண்பா/கலிநீங்கு காண்டம்/பாடல் 317 முதல் 360
கலிநீங்கு காண்டம் 317 முதல் 360
தொகுதமயந்தியைப் பிரிந்து சென்ற நளன் தீயிடைப்பட்ட ஒருவன் துயரக்குரல் கேட்டது
தொகு317. மன்னா வுனக்கபய மென்னா வனத்தீயில்
பன்னாக வேந்தன் பதைத்துருகிச் - சொன்ன
மொழிவழியே சென்றான் முரட்கலியின் வஞ்சப்
பழிவழியே செல்கின்றான் பார்த்து.
நளன் ஒரு பாம்பைத் தீயிடைக் கண்டது
தொகு318. ஆருந் திரியா அரையிருளில் அங்கனமே
சோர்குழலை நீத்த துயரோடும் - வீரன்
திரிவானத் தீக்கானிற் செந்தீயின் வாய்ப்பட்
டெரிவானைக் கண்டா னெதிர்.
நளன் தீயிடம் சென்றது
தொகு319. தீக்கடவுள் தந்த வரத்தைத் திருமனத்தில்
ஆக்கி யருளா லரவரசை - நோக்கி
அடைந்தா னடைதலுமே ஆரழலோ னஞ்சி
உடைந்தான் போய்ப்புக்கான் உவர்ந்து.
பாம்பு தனது வரலாறு கூறித் தன்னை விடுவிக்க வேண்டியது
தொகு320. வேத முனியொருவன் சாபத்தால் வெங்கானில்
ஆதபத்தின் வாய்ப்பட் டழிகின்றேன் - காதலால்
வந்தெடுத்துக் காவென்றான் மாலை மணிவண்டு
சந்தெடுத்த தோளானைத் தான்.
321. சீரியாய் நீயெடுப்பத் தீமை கெடுகின்றேன்
கூருந் தழலவித்துக் கொண்டுபோய்ப் - பாரில்
விடுகென்றான் மற்றந்த வெந்தழலால் வெம்மைப்
படுகின்றான் வேல்வேந்தைப் பார்த்து.
322. என்றுரைத்த அவ்வளவி லேழுலகுஞ் சூழ்கடலும்
குன்றுஞ் சுமந்த குலப்புயத்தான் - வென்றி
அரவரசைக் கொண்டகன்றா னாரணியந் தன்னின்
இரவரசை வென்றா னெடுத்து.
323. மண்ணின்மீ தென்றனைநின் வன்றாளா லொன்றுமுதல்
எண்ணித் தசவென் றிடுகென்றான் - நண்ணிப்போர்
மாவலான் செய்த வுதவிக்கு மாறாக
ஏவலாற் றீங்கிழைப்பே னென்று.
324. ஆங்கவன்றா னவ்வா றுரைப்ப அதுகேட்டுத்
தீங்கலியாற் செற்ற திருமனத்தான் - பூங்கழலை
மண்ணின்மேல் வைத்துத் தசவென்ற வாய்மையால்
எண்ணினான் வைத்தா னெயிறு.
325. வீமன் மடந்தை விழிமுடியக் கண்டறியா
வாம நெடுந்தோள் வறியோருக் - கேமம்
கொடாதார் அகம்போற் குறுகிற்றே மெய்ம்மை
விடாதான் திருமேனி வெந்து.
அரவை நோக்கி நளன் உரைத்தது
தொகு326. ஆற்ற லரவரசே யாங்கென் னுருவத்தைச்
சீற்றமொன் றின்றிச் சினவெயிற்றால் - மாற்றுதற்கின்
றென்கா ரணமென்றா னேற்றமரிற் கூற்றழைக்கும்
மின்கா லயின்முகவேல் வேந்து.
அரவின் மறுமொழியும் அது அளித்த வரமும்
தொகு327. காயுங் கடகளிற்றாய் கார்க்கோ டகனென்பேர்
நீயிங்கு வந்தமை யானினைந்து - காயத்தை
மாறாக்கிக் கொண்டு மறைந்துறைதல் காரணமா
வேறாக்கிற் றென்றான் விரைந்து.
328. கூனிறால் பாயக் குவளை தவளைவாய்த்
தேனிறால் பாயுந் திருநாடா - கானில்
தணியாத வெங்கனலைத் தாங்கினா யிந்த
அணியாடை கொள்கென்றா னாங்கு.
329. சாதி மணித்துகில்நி சாத்தினால் தண்கழுநீர்ப்
போதின்கீழ் மேயும் புதுவரால் - தாதின்
துளிக்குநா நீட்டுந் துறைநாடர் கோவே
ஒளிக்குநாள் நீங்கு முரு.
330. வாகு குறைந்தமையால் வாகுவனென் றுன்னாமம்
ஆக வயோத்தி நகரடைந்து - மாகனகத்
தேர்த் தொழிற்கு மிக்கானீ யாகென்றான் செம்மனத்தால்
பார்த்தொழிற்கு மிக்கானைப் பார்த்து.
நளன் அக்கான் கடந்து சென்றது
தொகு331. இணையாரு மில்லா னிழைத்த உதவி
புணையாகச் சூழ்கானிற் போனான் - பணையாகத்
திண்ணாக மோரெட்டுந் தாங்குந் திசையனைத்தும்
எண்ணாக வேந்த னெழுந்து.
நளன் கடற்கரையைக் கண்டது
தொகு332. நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும்
கனற்புகைய வேகின்றான் கண்டான் - பனிக்குருகு
தன்படாம் நீழல் தனிப்பேடைப் பார்த்திரவு
கண்படா வேலைக் கரை.
நளன் கடற்கரையில் பலவற்றைக் கண்டு புலம்பல்
தொகு333. கொம்ப ரிளங்குருகே கூறா திருத்தியால்
அம்புயத்தின் போதை யறுகாலால் - தும்பி
திறக்கத்தே னூறுந் திருநாடன் பொன்னை
உறக்கத்தே நீத்தேனுக் கொன்று.
334. புன்னை நறுந்தாது கோதிப் பொறிவண்டு
கன்னிப் பெடையுண்ணக் காத்திருக்கும் - இன்னருள்கண்
டஞ்சினா னாவி யழிந்தா னறவுயிர்த்து
நெஞ்சினா லெல்லாம் நினைந்து.
335. காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ - நாதம்
அளிக்கின்ற ஆழிவா யாங்கலவ ஓடி
ஒளிக்கின்ற தென்னோ வுரை.
336. பானலே சோலைப் பசுந்தென்றல் வந்துலவும்
கானலே வேலைக் கழிக்குருகே - யானுடைய
மின்னிமைக்கும் பூணாரம் வீங்கிருள்வா யாங்குணர்ந்தால்
என்னினைக்குஞ் சொல்வீ ரெனக்கு.
நளன் அயோத்தி நகரை அடைந்தது
தொகு337. முந்நீர் மடவார் முறுவல் திரள்குவிப்ப
நன்னீ ரயோத்தி நகரடைந்தான் - பொன்னீர்
முருகுடைக்குந் தாமரையின் மொய்ம்மலரைத் தும்பி
அருகுடைக்கும் நன்னாட் டரசு.
நளன் அயோத்தி மன்னனை அடைதல்
தொகு338. மான்தேர்த் தொழிற்கு மடைத்தொழிற்கு மிக்கோனென்று
ஊன்தேய்க்கும் வேலா னுயர்நறவத் - தேன்தோய்க்கும்
தார்வேந்தற் கென்வரவு தானுரைமி னென்றுரைத்தான்
தேர்வேந்தன் வாகுவனாய்ச் சென்று.
339. பொய்யடையாச் சிந்தைப் புரவலனை நோக்கித்தன்
செய்ய முகமலர்ந்து தேர்வேந்தன் - ஐயநீ
எத்தொழிற்கு மிக்கானீ யாதுன் பெயரென்றான்
கைத்தொழிற்கு மிக்கானைக் கண்டு.
340. அன்னம் மிதிப்ப அலர்வழியுந் தேறல்போயச்
செந்நெல் விளைக்குந் திருநாடர் - மன்னா
மடைத்தொழிலுந் தேர்த்தொழிலும் வல்லன்யா னென்றான்
கொடைத்தொழிலின் மிக்கான் குறித்து.
தமயந்தி நளனைத் தேடப் புரோகிதனை விடுத்தது
தொகு341. என்னை யிருங்கானில் நீத்த இகல்வேந்தன்
தன்னைநீ நாடுகெனத் தண்கோதை - மின்னுப்
புரைகதிர்வேல் வேந்தன் புரோகிதனுக் கிந்த
உரைபகர்வ தானா ளுணர்ந்து.
342. காரிருளில் பாழ்மண் டபத்தேதன் காதலியைச்
சோர்துயிலின் நீத்தல் துணிவென்றோ - தேர்வேந்தற்
கென்றறைந்தா நேர்நின் றெதிர்மாற்றந் தந்தாரைச்
சென்றறிந்து வாவென்றாள் தேர்ந்து.
புரோகிதன் அயோத்தியை அடைந்தது
தொகு343. மின்னாடும் மால்வரையும் வேலையும் வேலைசூழ்
நன்னாடுங் கானகமு நாடினான் - மன்னு
கடந்தாழ் களியானைக் காவலனைத் தேடி
அடைந்தா னயோத்தி நகர்.
புரோகிதன் கூறிய மொழிகேட்டு நளன் கூறிய மறுமொழி
தொகு344. கானகத்துக் காதலியைக் காரிருளிற் கைவிட்டுப்
போனதுவும் வேந்தற்குப் போதுமோ - தானென்று
சாற்றினா னந்தவுரை தார்வேந்தன் தன்செவியில்
ஏற்றினான் வந்தா னெதிர்.
345. ஒண்டொடி தன்னை யுறக்கத்தே நீத்ததுவும்
பண்டை விதியின் பயனேகாண் - தண்டரளப்
பூத்தாம வெண்குடையான் பொன்மகளை வெவ்வனத்தே
நீத்தானென் றையுறேல் நீ.
தமயந்தி வந்த புரோகிதனை வினாவியது
தொகு346. எங்க ணுறைந்தனைகொல் எத்திசைபோய் நாடினைகொல்
கங்கைவள நாட்டார்தங் காவலனை - அங்குத்
தலைப்பட்ட வாறுண்டோ சாற்றென்றாள் கண்ணீர்
அலைப்பட்ட கொங்கையா ளாங்கு.
புரோகிதன் மறுமொழி
தொகு347. வாக்கினால் மன்னவனை யொப்பான் மதித்தொருகால்
ஆக்கையே நோக்கி னவனல்லன் - பூக்கமழும்
கூந்தலாய் மற்றக் குலப்பாக னென்றுரைத்தான்
ஏந்துநூல் மார்ப னெடுத்து.
தமயந்தி தன் இரண்டாஞ் சுயம்வரச் செய்தி அறிவிக்கச் செய்தது
தொகு348. மீண்டோ ர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை
பூண்டாளென் றந்தணநீ போயுரைத்தால் - நீண்ட
கொடைவேந்தற் கித்தூரந் தேர்க்கோலங் கொள்வான்
படைவேந்த னென்றாள் பரிந்து.
இரண்டாஞ் சுயம்வரச் செய்தி கேட்டு இருதுபன்னன் கூறியது
தொகு349. எங்கோன் மகளுக் கிரண்டாஞ் சுயம்வரமென்
றங்கோர் முரச மறைவித்தான் - செங்கோலாய்
அந்நாளும் நாளை யளவென்றா னந்தணன்போய்த்
தென்னாளுந் தாரானைச் சேர்ந்து.
350. வேத மொழிவாணன் மீண்டுஞ் சுயம்வரத்தைக்
காதலித்தாள் வீமன்றன் காதலியென் - றோதினான்
என்செய்கோ மற்றிதனுக் கென்றா னிகல்சீறும்
மின்செய்த வேலான் விரைந்து.
நளன் அதுகேட்டுக் கூறியது
தொகு351. குறையாத கற்பினாள் கொண்டானுக் கல்லால்
இறவாத வேந்திழையா ளின்று - பறிபீறி
நெல்லிற் பருவரா லோடும் நெடுநாடா
சொல்லப் படுமோவிச் சொல்.
இருதுபன்னன் கூறிய சமாதானம்
தொகு352. என்மே லெறிகின்ற மாலை யெழில்நளன்தன்
தன்மேல் விழுந்ததுகாண் முன்னாளில் - அன்னதற்குக்
காரணந்தா னீதன்றோ வென்றான் கடாஞ்சொரியும்
வாரணந்தா னன்னான் மறித்து.
நளனது தியக்கம்
தொகு353. முன்னை வினையான் முடிந்ததோ மொய்குழலாள்
என்னைத்தான் காண விசைந்ததோ - தன்மரபுக்
கொவ்வாத வார்த்தை யுலகத் துரைப்பட்ட
தெவ்வாறு கொல்லோ விது?
நளன் இருதுபன்னனுக்குத் தேரோட்டிச் செல்ல உடன்பட்டது
தொகு354. காவலனுக் கேவற் கடன்பூண்டேன் மற்றவன்றன்
ஏவன் முடிப்ப னினியென்று - மாவிற்
குலத்தேரைப் பூட்டினான் கோதையர்தங் கொங்கை
மலர்த்தேன் அளிக்குந்தார் மன்.
355. ஒற்றைத் தனியாழித் தேரென்ன வோடுவதோர்
கொற்ற நெடுந்தேர் கொடுவந்தேன் - மற்றிதற்கே
போந்தேறு கென்றுரைத்தான் பொம்மென் றளிமுரலத்
தீந்தேறல் வாக்குந்தார்ச் சேய்.
நளன் தேர் ஓட்டிய சிறப்பு
தொகு356. முந்தை வினைகுறுக மூவா மயல்கொண்டான்
சிந்தை யினுங்கடுகச் சென்றதே - சந்தவிரைத்
தார்குன்றா மெல்லோதி தன்செயலைத் தன்மனத்தே
தேர்கின்றா னூர்கின்ற தேர்.
357. மேலாடை வீழ்ந்த தெடுவென்றா னவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே - தோலாமை
மேல்கொண்டா னேறிவர வெம்மைக் கலிச்சூதில்
மால்கொண்டான் கோல்கொண்ட மா.
இருதுபன்னனது கணிதச் சிறப்பு
தொகு358. இத்தாழ் பணையி லிருந்தான்றிக் காயெண்ணில்
பத்தா யிரங்கோடி பாரென்ன - உய்த்ததனில்
தேர்நிறுத்தி யெண்ணினான் தேவர் சபைநடுவே
தார்நிறுத்துந் தோள்வேந்தன் தான்.
இருதுபன்னன் நளனிடம் கூறியது
தொகு359. ஏரடிப்பார் கோலெடுப்ப இந்தேன் தொடைபீறிக்
காரடுத்த சோலைக் கடனாடன் - தேரடுத்த
மாத்தொழிலு மித்தொழிலும் மாற்றுதியோ வென்றுரைத்தான்
தேர்தொழிலின் மிக்கானைத் தேர்ந்து.
கலி நளனைவிட்டு நீங்கியது
தொகு360. வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான்
தண்டார் புனைசந் திரன்சுவர்க்கி - கொண்டாடும்
பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன்பால் நின்ற கலி.