நளவெண்பா/சுயம்வர காண்டம்/பாடல் 55 முதல் 110
புகழேந்திப்புலவர் பாடிய நளவெண்பா
தொகுசுயம்வர காண்டம்
தொகு- (பாடல்கள் 55 முதல் 110 முடிய)
- வீமன் தமயந்திக்குச் சுயம்வரம் ஏற்படுத்தியது
55. பேரழகு சோர்கின்ற தென்னப் பிறைநுதன்மேல்
நீரரும்பத் தன்பேதை நின்றாளைப் - பாராக்
குலவேந்தன் சிந்தித்தான் கோவேந்தர் தம்மை
மலர்வேய்ந்து கொள்ளும் மணம்.
56. மங்கை சுயம்வரநாள் ஏழென்று வார்முரசம்
எங்கும் அறைகென் றியம்பினான் - பைங்கமுகின்
கூந்தன்மேற் கங்கைக் கொழுந்எதாடும் நன்னாடன்
வேந்தர்மேல் தூதோட விட்டு.
- சுயம்வரத்திற்கு அரசர்களின் வருகை
57. மாமுத்த வெண்குடையான் மால்களிற்றான் வண்டிசைக்கும்
தாமத் தரிச்சந் திரன்சுவர்க்கி - நாமத்தால்
பாவேய்ந்த செந்தமிழா மென்னப் பரந்ததே
கோவேந்தர் செல்வக் குழாம்.
58. புள்ளுறையுஞ் சோலைகளும் பூங்கமல வாவிகளும்
உள்ளும் புறமு மினிதுறைந்தார் - தெள்ளரிக்கண்
பூமகளைப் பொன்னைப் பொருவேல் விதர்ப்பன்றன்
கோமகளைத் தம்மனத்தே கொண்டு.
- நளன் அன்னம் திரும்பிவரக் கண்டது
59. வழிமேல் விழிவைத்து வாள்நுதலாள் நாம
மொழிமேற் செவிவைத்து மோகச் - சுழிமேல்தா
நெஞ்சோட வைத்தயர்வான் கண்டான் நெடுவானில்
மஞ்சோட அன்னம் வர.
60. முகம்பார்த் தருள்நோக்கி முன்னிரந்து செல்வர்
அகம்பார்க்கு மற்றாரைப் போல - மிகுங்காதல்
கேளா விருந்திட்டா னன்னத்தைக் கேளாரை
வாளால் விருந்திட்ட மன்.
- நளனது வினாவும் அன்னத்தின் மறுமொழியும்
61. அன்னக் குலத்தி னரசே அழிகின்ற
என்னுயிரை மீள வெனக்களித்தாய் - முன்னுரைத்த
தேமொழிக்குத் தீதிலவே யென்றான் திருந்தாரை
ஏமொழிக்கும் வேலா னெடுத்து.
62. கொற்றவன்ற னேவலினாற் போயக் குலக்கொடிபால்
உற்றதும் ஆங்கவள்தான் உற்றதுவும் - முற்றும்
மொழிந்ததே அன்னம் மொழிகேட் டரசற்
கழிந்ததே யுள்ள அறிவு.
- நளனது காதல் நோய் நிலை
63. கேட்ட செவிவழியே கேளா துணர்வோட
ஓட்டை மனத்தோ டுயிர்தாங்கி - மீட்டும்
குழியிற் படுகரிபோற் கோமான் கிடந்தான்
தழலிற் படுதளிர்போற் சாய்ந்து.
- வீமராசன் விடுத்த தூதர் நளனிடம் வந்தது
64. கோதை சுயம்வரநாள் கொற்றவனுக் குற்றுரைப்ப
ஏதமிலாக் காட்சியர்வந் தெய்தினார் - போதில்
பெடையொடு வண்டுறங்கும் பேரொலிநீர் நாடன்
அடையாத வாயி லகம்.
65. காவலன்றன் தூதர் கடைக்கா வலர்க்கறிவித்
தேவலிற்போ யீதென் றியம்புதலும் - மாவில்
பொலிந்ததேர் பூட்டென்றான் பூவாளி பாய
மெலிந்ததோள் வேந்தன் விரைந்து.
- நளன் தேரூர்ந்து குண்டினபுரம் சென்றது
66. கெட்ட சிறுமருங்குற் கீழ்மகளிர் நீள்வரம்பில்
இட்ட பசுங்குவளை யேரடித்த - கட்டி
கரையத்தே னூறுங் கடல்நாட னூர்க்கு
விரையத்தே ரூரென்றான் வேந்து.
67. சடைச்செந்நெல் பொன்விளைக்குந் தன்னாடு பின்னாகக்
கடல்தானை முன்னாகக் கண்டான் - அடற்கமைந்த
வல்லியரும் பொற்றாம வீமன் திருமகளாம்
நல்லுயிரும் வாழும் நகர்.
- நாரதமுனிவர் வானுலகு சென்றது
68. நெற்றித் தனிக்கண் நெருப்பைக் குளிர்விக்கும்
கொற்றத் தனியாழ்க் குலமுனிவன் - உற்றடைந்தான்
தேனாடுந் தெய்வத் தருவுந் திருமணியும்
வானாடுங் காத்தான் மருங்கு.
- இந்திரன் நாரதரை வினாவியது
69. வீரர் விறல்வேந்தர் விண்ணாடு சேர்கின்றார்
ஆரு மிலராலென் றையுற்று - நாரதனார்
நன்முகமே நோக்கினான் நாகஞ் சிறகரிந்த
மின்முகவேற் கையான் விரைந்து.
- நாரதர், தமயந்தி சுயம்வரத்தையும் அவளது எழிற் சிறப்பையும் கூறியது
70. வீமன் மடந்தை மணத்தின் விரைதொடுத்த
தாமம் புனைவான் சயம்வரத்து - மாமன்னர்
போயினா ரென்றான் புரந்தரற்குப் பொய்யாத
வாயினான் மாதவத்தோர் மன்.
71. அழகு சுமந்திள்த்த ஆகத்தாள் வண்டு
பழகு கருங்கூந்தற் பாவை - மழகளிற்று
வீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம் மற்றவளே
காமன் திருவுக்கோர் காப்பு.
- அச்சுயம்வரத்திற்கு இந்திரன் முதலிய தேவர்கள் புறப்பட்டது
72. மால்வரையை வச்சிரத்தா லீர்ந்தானும் வானவரும்
கோல்வளைதன் மாலை குறித்தெழுந்தார் - சால்புடைய
விண்ணாடு நீங்கி விதர்ப்பன் திருநகர்க்கு
மண்ணாடு நோக்கி மகிழ்ந்து.
- நளனைத் தேவர்கள் வழியில் கண்டது
73. பைந்தெரியல் வேல்வேந்தன் பாவைபாற் போயினதன்
சிந்தை கெடுத்தனைத் தேடுவான் - முந்தி
வருவான்போல் தேர்மேல் வருவானைக் கண்டார்
பெருவானிற் றேவர் பெரிது.
- இந்திரன் நளனைத் தமயந்திபால் தூதுசெல்ல வேண்டியது
74. காவற் குடைவேந்தைக் கண்ணுற்ற விண்ணவர்கோன்
ஏவற் றொழிலுக் கிசையென்றான் - ஏவற்கு
மன்னவனும் நேர்ந்தான் மனத்தினான் மற்றதனை
இன்னதென றோரா திசைந்து.
75. செங்கண் மதயானைத் தேர்வேந்தே தேமாலை
எங்களிலே சூட்ட இயல்வீமன் - மங்கைபால்
தூதாக வென்றானத் தோகையைத்தன் ஆகத்தால்
கோதாக வென்றானக் கோ.
76. தேவர் பணிதலைமேற் செல்லுந் திரிந்தொருகால்
மேவுமிளங் கன்னிபால் மீண்டேகும் - பாவில்
குழல்போல நின்றுழலுங் கொள்கைத்தே பூவின்
நிழல்போலுந் தண்குடையான் நெஞ்சு.
77. ஆவ துரைத்தா யதுவே தலைநின்றேன்
தேவர்கோ னேயத் திருநகரிற் - காவல்
கடக்குமா றென்னென்றான் காமநீ ராழி
அடக்குமா றுள்ளத் தவன்.
78. வார்வெஞ் சிலையொழிய வச்சிரத்தால் மால்வரையைப்
போர்வெஞ் சிறகறிந்த பொற்றோளான் - யாருமுனைக்
காணார்போய் மற்றவளைக் காணென்றான் கார்வண்டின்
பாணாறுந் தாரானைப் பார்த்து.
- நளன் தூது சென்றதும், தமயந்தியைக் கண்டதும்
79. இசைமுகந்த வாயும் இயல்தெரிந்த நாவும்
திசைமுகந்தா லன்ன தெருவும் - வசையிறந்த
பொன்னாடு போந்திருந்தாற் போன்றதே போர்விதர்ப்ப
நன்னாடற் கோமாந்தன் நாடு.
80. தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலரப்
பூங்குவளை தாமரைக்கே பூத்ததே - ஆங்கு
மதுநோக்குந் தாரானும் வாள்நுதலுந் தம்மில்
பொதுநோக் கெதிர்நோக்கும் போது.
- நளனைக் கண்ட தமயந்தி நிலை
81. நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று
தீண்டு மளவில் திறந்ததே - பூண்டதோர்
அற்பின்தாழ் கூந்தலாள் வேட்கை யகத்தடக்கிக்
கற்பின்தாழ் வீழ்ந்த கதவு.
82. உய்ஞ்சு கரையேற வொட்டுங்கொ லொண்டொடியாள்
நெஞ்சு தடவும் நெடுங்கண்கள் - விஞ்சவே
நீண்டதோ வங்ஙனே யிங்ஙனே நீள்மலராள்
ஆண்டதோள் மன்ன னழகு.
83. மன்னாகத் துள்ளழுந்தி வாரணிந்த மென்முலையும்
பொன்னாணும் புக்கொளிப்பப் புல்லுவனென் - றுன்னா
எடுத்தபே ரன்பை யிடையே புகுந்து
தடுத்ததே நாணாந் தறி.
- தமயந்தி நளனை யாவனென வினாவியது
84. காவல் கடந்தெங்கள் கன்னிமா டம்புகுந்தாய்
யாவனோ விஞ்சைக் கிறைவனோ - தேவனோ
உள்ளவா சொல்லென்றா ளூசற் குழைமீது
வெள்ளவாள் நீர்சோர விட்டு.
- நளனது மறுமொழி
85. தீராத காமத் தழலைத்தன் செம்மையெனும்
நீரா லவித்துக் கொடுநின்று - வாராத
பொன்னாட ரேவலுடன் போந்தவா சொல்லித்தன்
நன்னாடுஞ் சொன்னான் நளன்.
86. என்னுரையை யாதென் றிகழா திமையவர்வாழ்
பொன்னுலகங் காக்கும் புரவலனை - மென்மாலை
சூட்டுவா யென்றான் தொடையில் தேன்தும்பிக்கே
ஊட்டுவா னெல்லா முரைத்து.
- தமயந்தி கூறிய உறுதிமொழி
87. இயமரநின் றார்ப்ப இனவளைநின் றேங்க
வயமருதோள் மன்னா வகுத்த - சுயம்வரந்தான்
நின்பொருட்டா லென்று நினைகென்றா நீள்குடையான்
தன்பொருட்டால் நைவாள் தளர்ந்து.
88. போதரிக்கண் மாதராள் பொன்மாலை சூட்டத்தான்
ஆதரித்தார் தம்மோ டவையகத்தே - சோதிச்
செழுந்தரள வெண்குடையாய் தேவர்களும் நீயும்
எழுந்தருள்க வென்றா ளெடுத்து.
89. வானவர்கோ னேவல் வழிச்சென்று வாணுதலைத்
தானணுகி மீண்டபடி சாற்றவே - தேன்முரலும்
வண்டார் நளன்போந்து வச்சிராயு தற்றொழுதான்
கண்டா ருவப்பக் கலந்து.
- நளனுக்கு அத்தேவர்கள் அளித்த வரங்கள்
90. விண்ணவர்தம் ஏவலுடன் வீமன் திருமகள்பால்
நண்ணு புகழ்நளனும் நன்குரைத்த - பெண்ணங்கின்
வன்மொழியுந் தேவர் மனமகிழத் தான்மொழிந்த
மென்மொழியுஞ் சென்றுரைத்தான் மீண்டு.
91. அங்கி யமுதம்நீ ரம்பூ அணியாடை
எங்குநீ வேண்டினைமற் றவ்விடத்தே - சங்கையறப்
பெற்றா யெனவருண ஆகலண்டன் தருமன்
மற்றோனு மீந்தார் வரம்.
- தமயந்தியின் துயர நிலை
92. தூதுவந்த காதலனைச் சொல்லிச் செலவிடுத்த
மாதுவந்து பின்போன வன்னெஞ்சால் - யாதும்
அயிர்த்தா ளுயிர்த்தா ளணிவதன மெல்லாம்
வியர்த்தா ளுரைமறந்தாள் வீழ்ந்து.
93. உள்ளம்போய் நாண்போ யுரைபோய் வரிநெடுங்கண்
வெள்ளம்போய் வேகின்ற மென்றளிர்போல் - பிள்ளைமீன்
புள்ளரிக்கும் நாடன் திருமடந்தை பூவாளி
உள்ளரிக்கச் சோர்ந்தா ளுயிர்.
94. பூவின்வாய் வாளி புகுந்த வழியேயென்
ஆவியார் போனாலு மவ்வழியே - பாவியேன்
ஆசைபோ காதென் றழிந்தா ளணியாழின்
ஓசைபோற் சொல்லா ளுயிர்த்து.
- சூரியன் அத்தமித்தல்
95. வையம் பகலிழப்ப வானம் ஒளியிழப்பப்
பொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்பப் - பையவே
செவ்வாய அன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான்
வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு.
96. மாயிரு ஞாலத் துயிர்காண வானரங்கில்
பாயிரு ளென்னும் படாம்வாங்கிச் - சேய்நின்
றறைந்தா ரணம்பாட ஆடிப்போய் வெய்யோன்
மறைந்தான் குடபால் வரை.
- மாலைப்பொழுதின் வரவு
97. மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை யந்திப் பொழுது.
98. புற்கென்றா ரந்தி புனைமலர்க்கண் நீரரும்ப
நிற்கின்ற தந்தோ நிலங்காப்பான் - முற்கொண்
டடைகின்ற வேந்தர்க்கு மாண்டஞ்சி னோர்க்கும்
இடைநின்ற காலம்போ லின்று.
- பிறையின் தோற்றம்
99. பைந்தொடியா ளாவி பருகுவான் நிற்கின்ற
அந்தி முறுவலித்த தாமென்ன - வந்ததால்
மையார்வேற் கண்ணாள் வனமுலைமே லாரழலைப்
பெய்வா னமைந்த பிறை.
100. கூட்டுமைபோற் சிறந்த கூரிருளைக் கூன்கோட்டால்
கோட்டுமண் கொண்ட குளிர்திங்கள் - ஈட்டுமணிப்
பூணிலா மென்முலைமேற் போதச் சொரிந்ததே
நீணிலா வென்னும் நெருப்பு.
- தமயந்தியின் துயர நிலை
101. அன்னங்காள் நீங்களுமவ் வாதித்தன் தானும்போய்
மன்னும் படியகலா வல்லிரவின் - மின்னும்
மழைத்தாரை வல்லிருட்கும் வாடைக்கும் நாங்கள்
பிழைத்தால்வந் தேனென்னும் பேர்.
102. செப்பிளங் கொங்கைமீர் திங்கட் சுடர்பட்டுக்
கொப்புளங் கொண்ட குளிர்வானை - இப்பொழுது
மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ
தேன்பொதிந்த வாயால் தெரிந்து.
103. கானுந் தடங்காவுங் காமன் படைவீடு
வானுந்தேர் வீதி மறிகடலும் - மீனக்
கொடியாடை வையமெலாங் கோதண்ட சாலை
பொடியாடிக் கொன்றதெல்லாம் பொய்.
104. கொள்ளைபோ கின்ற துயிரென்னும் கோளரவின்
முள்ளெயிறோ மூரி நிலாவென்னும் - உள்ளம்
கொடிதிரா வென்னுங் குழையுந் தழல்போல்
நெடிதிரா வாய்புலர நின்று.
105. வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கியோ
கொங்கை யனலிற் கொளுந்தியோ - திங்கள்
விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோ
எரிகின்ற தென்னோ இரா.
106. ஊழி பலவோ ரிரவாயிற் றோவென்னும்
கோழி குரலடைத்த தோவென்னும் - ஆழி
துயிலாதோ வென்னுஞ் சுடர்மதியங் கான்ற
வெயிலா லுடலுருகா வீழ்ந்து.
107. ஆடி வரிவண் டருகே பறக்கவே
வாடி மெலிவாள் வனமுலைமேல் - ஓடிப்
பொறையாகச் சோர்வாள் பொறுக்குமோ மோகத்
துறைவா யடங்காத் துயர்.
108. ஈர மதியே! இளநிலவே யிங்ஙமேன
சோர்குழலின் மீதே சொரிவதெவன் - மாரன்
பொரவளித்தான் கண்ணி யுனக்குப் புலரா
இரவளித்தா னல்லனோ இன்று.
109. தாங்கு நிலவின் தழல்போய்த் தலைக்கொள்ளத்
தேங்குழல்சேர் வண்டு சிறைவெதும்ப - ஓங்குயிர்ப்பின்
தாமங் கரியாத் தனியே தளர்கின்றாள்
யாமங் கரியாக இன்று.
110. மையிட்ட கண்ணருவி வார வளைசோரக்
கையிற் கபோலத் தலம்வைத்து - மெய்வருந்தி
தேனிருந்த பூங்கணையே தீயாகத் தேமொழியாள்
தானிருந்து செய்வாள் தவம்.