நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை


சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்

தொகு

உரை: களத்தூர் வேதகிரி முதலியார்

தொகு

1. அறத்துப்பால்: துறவறவியல்

தொகு

இரண்டாம் அதிகாரம் இளமை நிலையாமை

[அதாவது, இளமைப்பருவமானது நிலைநில்லாமையாம்]

பாடல்: 11 (நரைவருமென்)

தொகு

நரைவரு மென்றெண்ணி நல்லறி வாளர் நரை வரும் என்று எண்ணி நல் அறிவாளர்

குழவி யிடத்தே துறந்தார் - புரைதீரா குழவி இடத்தே துறந்தார்- புரை தீரா

மன்னா இளமை மகிழ்ந்தாரே கோலூன்றி மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி

யின்னாங் கெழுந்திருப் பார். (01) இன்னாங்கு எழுந்து இருப்பார்

பதவுரை
நரை= நரைதிரை; வரும் என்று= வருமென்று; எண்ணி= நினைத்து; நல்=நல்ல; அறிவாளர்=விவேகிகள்; குழவியிடத்தே= இளமைப்பருவத்தில்; துறந்தார்= மனைவாழ்க்கையை விட்டார்; புரை= குற்றம்; தீரா= நீங்காத; மன்னா=நிலைபெறாத; இளமை= இளமைப் பருவத்தை; மகிழ்ந்தார்= இச்சித்தார்; கோல்= தடியை; ஊன்றி= ஊன்றிக்கொண்டு; இன்னாங்கு= துன்பத்துடன்; எழுந்திருப்பார்= எழுந்திருப்பார்.
கருத்துரை
அறிவுடையவர்கள் நரைதிரை வருமென்று இளமைப் பருவத்தில் இல்வாழ்க்கையை விட்டார்கள்; இளமைப்பருவத்தை விரும்பினவர்கள், துன்பத்துடன் தடியூன்றி எழுந்திருப்பார்.
விசேடவுரை
அறிவாளர்- எழுவாய், துறந்தார்- பயனிலை, மகிழ்ந்தார்- எழுவாய், எழுந்திருப்பார்- பயனிலை. ஏ- அசை. தீயிற் புகைதோன்றி யழிதல் போல, இளமையும் அழிதலான் 'மன்னா இளமை' என்றார்.

பாடல்: 12 (நட்புநாரற்)

தொகு
நட்புநா ரற்றன நல்லாரு மஃகினா () நட்பு நார் அற்றன நல்லாரும் அஃகினார்
ரற்புத் தளையு மவிழ்ந்தன- வுட்காணாய் ()அற்புத் தளையும் அவிழ்ந்தன- உள் காணாய்
வாழ்தலி னூதிய மென்னுண்டாம் வந்ததே () வாழ்தலின் ஊதியம் என் உண்டாம் வந்ததே
யாழ்கலத் தன்ன கலி. (02) ஆழ் கலத்து அன்ன கலி.
பதவுரை
நட்பு= உறவாகிய,
நார்= பாசங்களும்,
அற்றன= நீங்கின;
நல்லாரும்= மகளிரும்,
அஃகினார்= அன்பிற்குறைந்தார்;
அற்பு= அன்பாகிய,
தளையும்=பந்தங்களும்,
அவிழ்ந்தன= நெகிழ்ந்தன;
உள்= உன்னுள்ளே,
காணாய்= பாராய்;
ஆழ்= முழுகும்,
கலத்து அன்ன= கப்பலோசைபோல்,
கலி= உறவினர் அழுமோசை,
வந்ததே= வந்ததல்லவோ? (ஆதலால்),
வாழ்தலின்= வாழ்தலினால்,
ஊதியம்= இலாபம்,
என்= யாது,
உண்டாம்= உண்டாகும்?
கருத்துரை
கப்பலோசை போலச் சுற்றத்தார் அழுகுரலோசை வந்ததல்லவோ? ஆதலால், இல்வாழ்க்கையின் வாழ்தலினாற் பயனென்ன உண்டாகும்?
விசேடவுரை
ஊதியம்- எழுவாய்; என்னுண்டாம்- பயனிலை.

பாடல்: 13 (சொற்றளர்ந்து)

தொகு
சொற்றளர்ந்து கோலூன்றிச் சோர்ந்த நடையினராய்ப் () சொல் தளர்ந்து கோல் ஊன்றிச் சோர்ந்த நடையினர் ஆய்ப்
பற்கழன்று பண்டம் பழிகாறு - மிற்செறிந்து ()பல் கழன்று பண்டம் பழி காறும்- இல் செறிந்து
காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே () காம நெறி படரும் கண்ணினார்க்கு இல்லையே
யேம நெறிபடரு மாறு. (03) ஏம நெறி படரும் ஆறு.
பதவுரை
சொல்= சொற்கள்,
தளர்ந்து= குழறி,
கோல்= தடியை,
ஊன்றி= ஊன்றிக்கொண்டு,
சோர்ந்த= தள்ளாடிய,
நடையினர் ஆய்= நடையை உடையவராய்,
பல்= பற்கள்,
கழன்று= உதிர்ந்து,
பண்டம்= உடலாகிய பண்டம்,
பழிகாறும்= பழிக்கப்படுமளவும்,
இல்= இல்வாழ்க்கையில்,
செறிந்து= நெருங்கி,
காமநெறி= ஆசைவழியே,
படரும்= நடக்கும்,
கண்ணினார்க்கு= அறிவுடையார்க்கு,
ஏமம்= தமக்குக்கோட்டையாகிய,
நெறி= நல்வழியில்,
படரும்= நடக்கும்,
ஆறு= வழி,
இல்= இல்லை.
கருத்துரை
இல்வாழ்க்கை வழியிலே நடப்பவர்கள் உயிர்க்கு நல்வாழ்க்கை வழியில்லை.
விசேடவுரை
ஆறு- எழுவாய். இல்லை- பயனிலை. ஏகாரம்- அசை.

பாடல்: 14 (தாழாத்)

தொகு
தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா () தாழாத் தளராத் தலை நடுங்காத் தண்டு ஊன்றா
வீழா விறக்கு மிவண்மாட்டுங் - காழிலா ()வீழா இறக்கும் இவள் மாட்டும் - காழ் இலா
மம்மர்கொண் மாந்தர்க் கணங்காகுந் தன்கைக்கோ () மம்மர் கொள் மாந்தர்க்கு அணங்கு ஆகும் தன் கைக் கோல்
லம்மனைக்கோ லாகிய ஞான்று. (01) அம்மனைக் கோல் ஆகிய ஞான்று.


பதவுரை
அம்மனைக்கோல்= தன் தாய் கைக்கோலானது,
தன்கைக்கோல்= தன் கையில் கோல்,
ஆகிய ஞான்று= ஆன காலத்தில்,
தாழாத்= தாழ்ந்து,
தளரா= தளர்ந்து,
தலை= தலையை,
நடுங்கா= நடுங்கி,
தண்டு= அத்தடியை,
ஊன்றா= ஊன்றி,
வீழா= வீழ்ந்து,
இறக்கும்= மரணமாகும்,
இவள் மாட்டும்= இவளிடத்தும்,
காழ்= உறுதி,
இலா= இல்லாத,
மம்மர்= மயக்கம்,
கொள்= கொண்ட,
மாந்தர்க்கு= மனிதர்க்கு,
அணங்கு= துன்பம்,
ஆகும்= உண்டாகும்.
கருத்துரை
தன் தாய்க்கைக்கோலானது, தன்கைக்கோல் ஆன காலத்து வருத்தமுற்று இறக்கும் இவளிடத்து மயக்கங் கொண்டவர்களுக்குத் துன்பமுண்டாகும்.
விசேடவுரை
அம்மனைக்கோல்- இவ்விடத்து உயர்திணைக்கண் ஒற்று மிகுந்த்து செய்யுள்விகாரம். அணங்கு- எழுவாய், ஆகும்- பயனிலை. ’இவண்மாட்டும்’ என்பதை இவ்விடத்தெனப் பொருள் கூறுவாருமுளர்.

பாடல்: 15 (எனக்குத்)

தொகு
எனக்குத்தா யாகியா ளென்னையீங் கிட்டுத் () எனக்குத் தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள்-தனக்குத்தா ()தனக்குத் தாய் நாடியே சென்றாள்- தனக்குத் தாய்
யாகி யவளு மதுவானாற் றாய்தாய்க்கொண் () ஆகியவளும் அது ஆனால் தாய் தாய்க் கொண்டு
டேகு மளித்திவ் வுலகு. (05) ஏகும் அளித்து இவ் உலகு.
பதவுரை
எனக்கு= எனக்கு,
தாய் ஆகியாள்= தாயானவள்,
என்னை= என்னை,
ஈங்கு= இவ்விடத்து,
இட்டு= பெற்றுவைத்து,
தனக்கு= தனக்கு ஒரு,
தாய்= தாயை,
நாடி= தேடி,
சென்றாள்= இறந்தாள்;
தனக்கு= அவளுக்கு,
தாய் ஆகியவளும்= தாயானவளும்,
அது ஆனால்= அத்தன்மையாளானால்,
தாய் தாய்க்கொண்டு= தாயைத் தாயைத் தேடிக்கொண்டு,
ஏகும்= போகும்,
இ உலகு= இவ்வுலகமானது,
அளித்து= ஏழைமை யுடையது.
கருத்துரை
இவ்வுலகமானது, தாயைத் தாயைத் தேடிக்கொண்டு போகும் ஏழைமை யுடையது.
விசேடவுரை
‘தாய் தாய்க்கொண்டு’ ? இவ்விடத்து உயர்திணை மெய்யீறு ஒற்றுக்கண் மிக்கான செய்யுள் விகாரம். உலகு- எழுவாய், அளித்து- பயனிலை. ஏ-அசை. அளித்து- பெற்றுவைத்து எனினுமாம்.


பாடல் 16 (வெறியயர்)

தொகு
வெறியயர் வெங்களத்து வேன்மகன் பாணி () வெறி அயர் வெம் களத்து வேல் மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த்- தயங்க ()முறி ஆர் நறும் கண்ணி முன்னர்த்- தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி () மறி குளகு உண்டு அன்ன மகிழ்ச்சி
யறிவுடை யாளர்க ணில். (06) அறிவுடையாளர் கண் இல்.
பதவுரை
வெறி= வெறியாடலை,
அயர்= செய்கின்ற,
வெம்= வெய்ய,
களத்து= பலிக்களத்து,
வேல்மகன்= பூசாரி,
பாணி= கையில்,
முறி= தளிர்,
ஆர்= நிறைந்த,
நறும்= மணக்கும்,
கண்ணி= மாலை,
முன்னர்= தன் முன்னாக,
தயங்க= அசைந்து தொங்க,
மறி= ஆடு,
குளகு= உணவாக,
உண்டன்ன= உண்டாற்போலும்,
மன்னா= நிலைபெறாத,
மகிழ்ச்சி= இளமையினான் ஆகும் மகிழ்ச்சி,
அறிவுடையார்கண்= விவேகிகளிடத்தில்,
இல்= இல்லை.
கருத்துரை
ஆடுகொண்ட மகிழ்ச்சி அறிவுடையாளர்களிடத்தில் இல்லை.
விசேடவுரை
மகிழ்ச்சி- எழுவாய், இல்- பயனிலை. மறியின் மகிழ்ச்சி கணம்போதேனு நில்லாமை பற்றி ‘மன்னா’ என்றார்.

பாடல் 17 (பனிபடு)

தொகு
பனிபடு சோலைப் பயன்மர மெல்லாங் () பனி படு சோலைப் பயன் மரம் எல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை- நனிபெரிதும் ()கனி உதிர்ந்து வீழ்ந்தற்று இளமை- நனி பெரிதும்
வேற்கண்ண ளென்றிவளை வெஃகன்மின் மற்றிவளுங் () வேல் கண்ணள் என்று இவளை வெஃகன்மின் மற் றிவளுங்
கோற்கண்ண ளாகுங் குனிந்து (07) கோல் கண்ணள் ஆகும் குனிந்து.
பதவுரை
இளமை= இளமைப்பருவமானது,
பனி= குளிர்ச்சி,
படு= பொருந்திய,
சோலை= சோலையில்,
பயன்= பலனைத்தரும்,
மரம் எல்லாம்= எல்லா மரங்களிலும்,
கனி= பழங்கள்,
உதிர்ந்து= உதிர்ந்து,
வீழ்ந்தற்று= விழுந்தாற் போலும்; (ஆதலால்),
நனி= மிக,
பெரிதும்= பெரிய,
வேல்= வேலை நிகர்த்த,
கண்ணள் என்று= கண்களையுடையவள் என்று,
இவளை= இப்பெண்ணை,
வெஃகன்மின்= இச்சியாதிருங்கள்,
மற்று இவளும்= பின்பு இப்பெண்ணும்,
குனிந்து= கூனியாகி,
கோல்= கோலையே,
கண்ணள் ஆகும்= கண்ணாக வுடையவள் ஆவாள்.
கருத்துரை
இளமைப் பருவமானது, மரங்களிற் பழங்களுதிர்ந்தாற்போலும். ஆதலால், வேலொத்த கண்களையுடையவள் என்று இவளையிச்சியாதிருங்கள். இவளும் கூனியாகிக் கோலையே கண்ணாகக்கொண்டு திரிவாள்.
விசேடவுரை
தொல்காப்பியம்
"வினையின் றொகுதி காலத் தியலும்"
நீவிர்-தோன்றா எழுவாய், வெஃகன்மின்- பயனிலை, இவளை- செயப்படுபொருள்.

பாடல் 18 (பருவமெனைத்)

தொகு
பருவ மெனைத்துள பல்லின் பாலேனை () பருவம் எனைத்து உள பல்லின் பால் ஏனை
யிருசிகையு முண்டீரோ வென்று- வரிசையா ()இரு சிகையும் உண்டீரோ என்று- வரிசையால்
லுண்ணாட்டங் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோ () உள் நாட்டம் கொள்ளப்படுதலால் யாக்கைக் கோள்
ளெண்ணா ரறிவுடை யார். (08) எண்ணார் அறிவுடையார்.
பதவுரை
பருவம்= வயது,
எனைத்து= எவ்வளவு,
உள= உண்டாயிருக்கின்றன?
பல்லின்= பற்களினுடைய,
பால்= வலிமைப்பகுதி,
ஏனை= எவ்வளவு?
இருசிகையும்= வன்மையான பதார்த்தங்களையும், மென்மையான பதார்த்தங்களையும்,
உண்டீரோ என்று= புசித்தீரோ எனக்கேட்டு,
வரிசையால்= முறைமையாக,
உள்= உங்களுள்ளம்,
நாட்டம்= ஆராய்ச்சி,
கொள்ளப்படுதலால்= பிறரால் செய்யப்படுதலால்,
யாக்கை= உடலினது,
கோள்= கொள்கையை,
அறிவுடையார்= விவேகமுடையார்,
எண்ணார்= பொருளாக நினையார்.
கருத்துரை
வயது எவ்வளவு? பற்களின் பலன் எவ்வளவு? வலிய பதார்த்தங்களையும் உண்டீரோ? என்று கிரமமாய் உங்கள் உள்ளம் பிறராலாராய்ச்சி கொள்ளப்படுதலால் உடலின் கொள்கையை விவேகிகள் பொருளாக எண்ணார்கள்.
விசேடவுரை
அறிவுடையார்- எழுவாய், எண்ணார்- பயனிலை, கோள்- செயப்படுபொருள்.

பாடல் 19 (மற்றறிவா)

தொகு

மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது () மற்று அறிவாம் நல்வினை யாம் இளையம் என்னாது

கைத்துண்டாம் போழ்தே கரவா - தறஞ்செய்ம்மின் ()கைத்து உண்டாம் போழ்தே கரவாது - அறம் செய்ம்மின்

முற்றி யிருந்த கனியொழியத் தீவளியா () முற்றி இருந்த கனி ஒழியத் தீ வளியால்

னற்கா யுதிர்தலு முண்டு. (01) நல் காய் உதிர்தலும் உண்டு.

பதவுரை
முற்றி= முதிர்ந்து,
இருந்த= இருந்த,
கனி= பழங்கள்,
ஒழிய= நீங்க,
தீவளியால்= தீக்காற்றால்,
நல்= நல்ல,
காய்= காய்கள்,
உதிர்தலும்= விழுதலும்,
உண்டு= உண்டு ஆதலால்,
நல்வினை= தருமத்தை,
மற்று= இனிமேல்,
அறிவாம்= அறிந்து செய்வோம்,
யாம்= நாம்,
இளையம்= இளமை வயதுடையோம்,
என்னாது= என்று நினையாது,
கைத்து= திரவியம்,
உண்டாம்= உண்டாயிருக்கும்,
போழ்தே= காலத்திலேயே,
கரவாது= ஒளிக்காமல்,
அறம்= தருமத்தை,
செய்ம்மின்= செய்யுங்கள்.
கருத்துரை
தீக்காற்றால் பழங்களன்றிக் காய்களுதிர்தலும் உண்டு; ஆகையால், தருமத்தைப் பின் செய்வோம் என்று நினையாது பொருள் உள்ளபொழுதே செய்யுங்கள்.
விசேடவுரை
நீங்கள்- தோன்றா எழுவாய், செய்ம்மின்- பயனிலை, அறம்- செயப்படுபொருள்.

பாடல் 20 (ஆட்பார்த்)

தொகு

ஆட்பார்த் துழலு மருளில்கூற் றுண்மையால் () ஆள் பார்த்து உழலும் அருள் இல் கூற்று உண்மையால்

தோட்கோப்புக் காலத்திற் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப் ()தோள் கோப்புக் காலத்தில் கொண்டு உய்ம்மின் - பீள் பிதுக்கிப்

பிள்ளையைத் தாயலறக் கோடலான் மற்றதன் () பிள்ளையைத் தாய் அலறக் கோடலான் மற்று அதன்

கள்ளங் கடைப்பிடித்த னன்று. (01) கள்ளம் கடைப்பிடித்தல் நன்று.

பதவுரை
ஆள்= ஆளை,
பார்த்து= பார்த்து,
உழலும்= திரியும்,
அருள்= தயை,
இல்= இல்லாத,
கூற்று= இயமன்,
உண்மையால்= இருக்கின்றான் ஆதலால்,
தோள் கோப்பு= கட்டமுதாகிய (தருமத்தை),
இளமையில்= இளமைப்பருவத்தில்,
கொண்டு= தேடிக்கொண்டு,
உய்ம்மின்= பிழையுங்கள்;
பீள்= கருப்பத்தை,
பிதுக்கி= பிதுங்கச்செய்து,
தாய்= தாயானவள்,
அலற= அழ,
பிள்ளையை= சிசுவை,
கோடலால்= கொள்ளுதலால்,
அதன்= அவ் இயமனது,
கள்ளம்= வஞ்சத்தை,
கடைப்பிடித்தல்= உறுதியாய் அறிந்துகொள்ளுதல்,
நன்று= நல்லது.
கருத்துரை
இயமன் இருக்கிறபடியால் தருமத்தை இளமைப் பருத்திற்செய்து பிழையுங்கள், தாய் அழப் பிள்ளையைக் கொண்டு போதலால், அவன் வஞ்சத்தை உறுதியாக அறிந்து கொள்ளுதல் உத்தமம்.
விசேடவுரை
அகத்தியம்
"மின்னீறு பலர்பால் வினையொடு முடிமே.’
கடைப்பிடித்தல்= எழுவாய், நன்று- பயனிலை. மற்று- அசை.


பார்க்க

தொகு
நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரையுடன்
நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை
நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை
நாலடியார் 6-ஆம் அதிகாரம் - துறவு
[[]]:[[]]
[[]]
[[]]
[[]]
[[]] :[[]] :[[]]