நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை
சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்
தொகுஉரை: களத்தூர் வேதகிரி முதலியார்
தொகு1. அறத்துப்பால்: துறவறவியல்
தொகுமூன்றாம் அதிகாரம் யாக்கை நிலையாமை
- {அதாவது, சரீரமானது நிலைநில்லாமையாம்}
பாடல்: 21 (மலைமிசைத்)
தொகுமலைமிசைத் தோன்று மதியம்போல் யானைத் மலை மிசைத் தோன்றும் மதியம் போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையீர் - நிலமிசைத் தலைமிசைக் கொண்ட குடையீர் - நிலம் மிசைத்
துஞ்சினா ரென்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லா துஞ்சினார் என்று எடுத்துத் தூற்றப்பட்டார் அல்லால்
லெஞ்சினா ரிவ்வுலகத் தில். (01) எஞ்சினார் இவ் உலகத்து இல்.
- பதவுரை
- மலை= மலையின்,
- மிசை- மேல்,
- தோன்றும்- உதிக்கும்,
- மதியம்போல்= சந்திரனைப் போல,
- யானை= யானையின்,
- தலைமிசை= தலைமேல்,
- கொண்ட= கவியக்கொண்ட,
- குடையர்= புடையையுடைய மன்னர்களும்,
- நிலமிசை= பூமிமேல்,
- துஞ்சினார் என்று= இறந்தார் என்று,
- எடுத்து= பிறரால் எடுத்து,
- தூற்றப்பட்டார்= தூறு சொல்லப்பட்டார்கள்,
- அல்லால்= அல்லாமல்,
- எஞ்சினார்= உயிரோடிருந்தார்,
- இ உலகத்து= இந்த உலகத்தில்,
- இல்= ஒருவருமில்லை.
- கருத்துரை
- யானைமேல் ஏறிய அரசர்களும், இறந்தார்களென்று சொல்லப்பட்டார்களேயல்லாமல், இவ்வுலகத்து உயிரோடு வாழ்ந்தவர்கள் ஒருவருமில்லை.
- விசேடவுரை
- எஞ்சினார்- எழுவாய், இல்- பயனிலை.
பாடல்: 22 (வாழ்நாட்)
தொகு- வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம் () வாழ் நாட்கு அலகா வயங்கு ஒளி மண்டிலம்
- வீழ்நாள் படாஅ தெழுதலால் - வாழ்நாள் ()வீழ் நாள் படாது எழுதலால் - வாழ் நாள்
- ளுலவாமுனொப்புர வாற்றுமின் யாரு () உலவா முன் ஒப்புரவு ஆற்றுமின் யாரும்
- நிலவார் நிலமிசை மேல். (02) நிலவார் நிலம் மிசை மேல்.
- பதவுரை
- வாழ்நாட்கு= வாழும் நாள்களுக்கு,
- அலகு ஆ(க)= அளவு மரக்காலாக,
- வயங்கு= பிரகாசிக்கும்,
- ஒளி= கிரணங்களையுடைய,
- மண்டிலம்= சூரியனானவன்,
- வீழ்நாள்= வீழுங்காலம்,
- படாது= உண்டாகாமல்,
- எழுதலால்= உதயமாதலால்,
- வாழ்நாள்= வாழுநாள்,
- உலவாமுன்= கெடாமுன்,
- ஒப்புரவு= தருமத்தை,
- ஆற்றுமின்= செய்யங்கள்!,
- யாரும்= யாவரும்,
- நிலமிசைமேல்= நிலத்தின்மேல்,
- நிலவார்= நிலைக்கமாட்டார்.
- கருத்துரை
- யாரும் உலகத்தில் நிலைநிற்க மாட்டார்கள்; உங்கள் ஆயுள் கெடுமுன்னமே தருமத்தைச் செய்யுங்கள்.
- விசேடவுரை
- நீங்கள்- தோன்றா எழுவாய், ஆற்றுமின்- பயனிலை, ஒப்புரவு,செயப்படுபொருள்.
பாடல்: 23 (மன்றங்)
தொகுமன்றங் கறங்க மணப்பறை யாயின () மன்றம் கறங்க மணப் பறை ஆயின
வன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை ()அன்று அவர்க்கு ஆங்கே பிணப் பறையாய்ப் - பின்றை
யொலித்தலு முண்டாமென் றுய்ந்துபோ மாறே () ஒலித்தலும் உண்டாம் என்று உய்ந்து போம் ஆறே
வலிக்குமா மாண்டார் மனம். (03) வலிக்குமாம் மாண்டார் மனம்.
- பதவுரை
- மன்றம்= சபையில்,
- கறங்க= சப்திக்க,
- மணப்பறை ஆயின= மணக்கோலத்திற்கான பறைகள்,
- அன்று= அன்றைக்கே,
- அவர்க்கு= அம்மாப்பிள்ளைக்கு,
- ஆங்கே= அவ்விடத்தே,
- பிணப்பறையாய்= பிணக்கோலத்திற்குக் கொட்டும்பறையாய்,
- பின்றை= பின்பு,
- ஒலித்தலும்= சப்தித்தலும்,
- உண்டாம் என்று= உண்டாகுமென்று நினைத்து,
- உய்ந்துபோம்= பிழைத்துப் போகிற,
- ஆறு= வழியை,
- வலிக்கும்= துணிந்து நிற்கும்,
- மாண்டார்= பெரியோர்கள்,
- மனம்= இருதயம்.
- கருத்துரை
- மணத்திற்குக் கொட்டும் பறைகளே பிணத்திற்குக் கொட்டும் பறைகளாமென்று நினைத்துப் பெரியோர்கள் மனம் பிழைக்கும் வழியைத் துணிந்து நிற்கும்.
- விசேடவுரை
- மனம்- எழுவாய், வலிக்கும்- பயனிலை, ஆறு- செயப்படுபொருள்.
பாடல்: 24 (சென்றே)
தொகு- சென்றே யெறிப வொருகால் சிறுவரை () சென்றே எறிப ஒருகால் சிறு வரை
- நின்றே யெறிப பறையினை - நன்றேகாண் ()நின்றே எறிப பறையினை - நன்றே காண்
- முக்காலைக் கொட்டினுண் மூடித்தீக் கொண்டெழுவர் () முக் காலைக் கொட்டின் உள் மூடித் தீக் கொண்டு எழுவர்
- செத்தாரைச் சாவார் சுமந்து. (04) செத்தாரைச் சாவார் சுமந்து.
- பதவுரை
- சென்று= போய்,
- பறையினை= பிணப்பறையினை,
- ஒருகால்= ஒருமுறை,
- எறிப= அடிப்பார்கள்;
- சிறுவரை= சற்றுநேரம்,
- நின்று= நிறுத்தி, (அப்பறையினை),
- எறிப= இரண்டாமுறை அடிப்பார்கள்;
- முக்காலை= மூன்றாமுறை,
- கொட்டின்= அடித்தமாத்திரத்தில்,
- உள்= பாடையினிடத்து,
- மூடி= பிணத்தைச் சீலையால் மூடி,
- தீ= நெருப்பை,
- கொண்டு= சட்டியிற்கொண்டு,
- செத்தாரை= இறந்தவரை,
- சாவார்= இனி யிறப்பவர்கள்,
- சுமந்து= தோள்களிற் சுமந்து,
- எழுவர்= மயானத்திற்கு எழுவர்,
- நன்றே காண்= (இவ்வுலக இயற்கையை) நன்றாகப் பார்.
- கருத்துரை
- மூன்றுமுறை பறையறைந்த மாத்திரத்தில் பிணத்தைப் பாடையில் வைத்துச் சீலையால் மூடித் தீயுடன் சுடலைக்குக் கொண்டுபோவார்கள்.
- விசேடவுரை
- தொல்காப்பியம் "அர் ஆர் ப என வரூஉம் மூன்றும்
- பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே" - என்ற சூத்திரப்படிப் பலர்பால் விகுதி பெற்றது. சாவார்- எழுவாய், எழுவர்- பயனிலை, செத்தாரை- செயப்படுபொருள். நீ- தோன்றா எழுவாய், காண்- பயனிலை. ஏ- இரண்டும் அசைகள்.
பாடல்: 25 (கணங்கொண்டு)
தொகு- கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் () கணம் கொண்டு சுற்றத்தார் கல் என்று அலறப்
- பிணங்கொண்டு காட்டுய்ப்பார் கண்டு - மணங்கொண்டீண் ()பிணம் கொண்டு காட்டு உய்ப்பார் கண்டு - மணம் கொண்டு ஈண்டு
- டுண்டுண்டுண் டென்னு முணர்வினாற் சாற்றுமே () உண்டு உண்டு உண்டு என்னும் உணர்வினால் சாற்றுமே
- டொண்டொண்டொ ணென்னும் பறை. (05) டொண் டொண் டொண் என்னும் பறை.
- பதவுரை
- கணம் கொண்டு= கூட்டம் கூடிக்கொண்டு,
- சுற்றத்தார்= இனத்தார்,
- கல்லென்று= கலீல் என்னுஞ் சத்தம் உண்டாக,
- அலற= புலம்ப,
- பிணம்= சவத்தை,
- கொண்டு= எடுத்துக்கொண்டு,
- காடு= சுடுகாட்டில்,
- உய்ப்பார்= செலுத்துபவரை,
- கண்டும்= பார்த்திருந்தும்,
- மணம்கொண்டு= விவாகஞ் செய்துகொண்டு,
- ஈண்டு= இவ்விடத்தில்,
- உண்டு உண்டு உண்டு என்னும்= (இல்வாழ்க்கை) உண்டுஉண்டு உண்டு என்னும்,
- உணர்வினான்= அறிவீனனுக்கு,
- டொண் டொண் டொண் என்னும்= டொண் டொண் டொண் என்னும் (ஓசையுள்ள),
- பறை= சாப்பறை,
- சாற்றும்= (சரீர நில்லாமையை) அறிவிக்கும்.
- கருத்துரை
- இனத்தார் அழப் பிணத்தைக் கொண்டு போவாரைக் கண்டிருந்தும் இல்வாழ்க்கையை விரும்பினவனுக்குச் சரீர நில்லாமையைச் சாப்பறை அறிவிக்கும்.
- விசேடவுரை
- பறை- எழுவாய், சாற்றும்- பயனிலை.
பாடல் 26 (நார்த்தொடுத்)
தொகு- நார்த்தொடுத் தீர்க்கிலெ னன்றாய்ந் தடக்கிலென் () நார்த் தொடுத்து ஈர்க்கில் என், நன்று ஆய்ந்து அடக்கில் என்
- பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் - பழிக்கிலென் ()பார் துழிப் பெய்யில் என் பல்லோர் - பழிக்கில் என்
- தோற்பையு ணின்று தொழிலறச் செய்தூட்டுங் () தோல் பை உள் நின்றுதொழில் அறச் செய்து ஊட்டும்
- கூத்தன் புறப்பட்டக் கால். (06) கூத்தன் புறப்பட்டக் கால்.
- பதவுரை
- தோற்பை= உடலாகிய பை,
- உள்= உள்ளே,
- நின்று= இருந்து,
- தொழில்= எத்தொழில்களையும்,
- அற= முற்றாக,
- செய்து= பண்ணி,
- ஊட்டும்= உண்பிக்கும்,
- கூத்தன்= ஆத்மாவானது,
- புறப்பட்டக்கால்= வெளிப்பட்டால்,
- நார்= நாரினால்,
- தொடுத்து= (அவ்வுடலைக்) கட்டி,
- ஈர்க்கில் என்= இழுத்தாலென்ன?
- பார்= பூமியின்,
- துழி= வெட்டுப்பள்ளத்தில்,
- பெய்யில் என்= போட்டாலென்ன?
- பல்லோர்= பலரும்,
- பழிக்கில் என்= பழித்தாலென்ன?
- கருத்துரை
- உயிர்போன பின்பு உடலை எவ்விதஞ் செய்யினும் பயனென்ன?
- விசேடவுரை
- பிறர்- தோன்றா எழுவாய், இழுத்தல் முதலிய - பயனிலை, உடல்- செயப்படுபொருள்.
- தொல்காப்பியம்-வினையியல்-32-ஆம் சூத்திரம்.
- "பின்முன் கால்கடை வழியிடத் தென்னு
- மன்ன மரபிற் காலங் கண்ணிய
- வென்ன கிளவியு மவற்றியல் பினவே."
- இவ்விதியால் ‘புறப்பட்டக்கால்’வினையெச்சம். பார்த்துழி யென்றதைக் கண்டுழியென்பாரு முளர்.
பாடல் 27 (படுமழை)
தொகு- படுமழை மொக்குளிற் பல்காலுந் தோன்றிக் () படு மழை மொக்குளில் பல் காலுந் தோன்றிக்
- கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றந் ()கெடும் இது ஓர் யாக்கை என்று எண்ணித் - தடுமாற்றம்
- தீர்ப்பேமியா மென்றுணருந் திண்ணறி வாளரை () தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண் அறிவாளரை
- நேர்ப்பாரியார் நீணிலத்தின் மேல். (07) நேர்ப்பார் யார் நீள் நிலத்தின் மேல்.
- பதவுரை
- படு= பெய்கிற,
- மழை= மழையினது,
- மொக்குளில்= குமிழியைப்போல,
- பல்காலமும்= பலகாலமும்,
- தோன்றி= உண்டாகி,
- கெடும்= அழியும்,
- இது= இஃது,
- ஓர்= ஒரு,
- யாக்கை என்று= உடலென்று,
- எண்ணி= நினைத்து,
- தடுமாற்றம்= பிறவித் துன்பத்தை,
- தீர்ப்பேம்= நீக்குவோம்,
- யாம் என்று= நாமென்று,
- உணரும்= அறியும்,
- திண்= வலிய,
- அறிவாளரை= விவேகிகளை,
- நீள்= நீண்ட,
- நிலத்தின்மேல்= பூமியிடத்து,
- நேர்ப்பார்= நேரானவர்,
- யார்= எவர்?
- கருத்துரை
- குமிழியைப்போல் தோன்றி யழியும் உடலென்றெண்ணிப் பிறவித்துன்பத்தை நீக்கும் விவேகிகளை யொப்பானவர் யார்?
- விசேடவுரை
- நேர்ப்பார்- எழுவாய், யார்- பயனிலை.
பாடல் 28 (யாக்கையை)
தொகு- யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற () யாக்கையை யாப்பு உடைத்து ஆப் பெற்றவர் தாம் பெற்ற
- யாக்கையா லாய பயன்கொள்க - யாக்கை ()யாக்கையால் ஆய பயன் கொள்க - யாக்கை
- மலையாடு மஞ்சுபோற் றோன்றிமற் றாங்கே () மலை ஆடும் மஞ்சு போல் தோன்றி மற்று ஆங்கே
- நிலையாது நீத்து விடும். (08) நிலையாது நீத்து விடும்.
- பதவுரை
- யாக்கையை= உடலை,
- யாப்பு உடைத்து ஆ= பலமுள்ளதாக,
- பெற்றவர்= அடைந்தவர்கள்,
- தாம்= தாங்கள்,
- பெற்ற= அடைந்த,
- யாக்கையால்= அவ்வுடலால்,
- ஆய= ஆகிய,
- பயன்= தருமப்பிரயோசனத்தை,
- கொள்க= கொள்ளக்கடவர்கள்;
- யாக்கை= உடலானது,
- மலை= மலையில்,
- ஆடும்= சஞ்சரிக்கும்,
- மஞ்சுபோல்= மேகம்போல,
- தோன்றும்= தோற்றமாகி,
- நிலையாது= நில்லாமல்,
- நீத்துவிடும்= கெட்டுவிடும்.
- கருத்துரை
- உடலைப் பெற்றவர்கள் தங்கள் உடலால் ஆகிய தருமபபயனைக் கொள்ளக்கடவர்கள்; உடலோ மலைமேல் தோன்றும் மேகம்போல் தோன்றி யழியும்.
- விசேடவுரை
- பெற்றவர்- எழுவாய், கொள்க- பயனிலை, பயன்- செயப்படுபொருள்.
பாடல் 29 (புன்னுனி)
தொகு- புன்னுனிமே னீர்போ னிலையாமை யென்றெண்ணி () புல் நுனி மேல் நீர் போல் நிலையாமை என்று எண்ணி
- யின்னினியே செய்க வறவினை - இன்னினியே ()இன் இனியே செய்க அறம் வினை - இன் இனியே
- நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் () நின்றான் இருந்தான் கிடந்தான் தன் கேள் அலறச்
- சென்றா னெனப்படுத லால். (09) சென்றான் எனப் படுதலால்.
- பதவுரை
- இன்னினியே = இப்பொழுதே இப்பொழுதே,
- நின்றான்= நின்றிருந்தான்,
- கிடந்தான்= படுத்திருந்தான்,
- தன்= தன்னுடைய,
- கேள்= இனத்தவர்,
- அலற= புலம்ப,
- சென்றான்= இறந்தான்,
- எனப்படுதலால்= என்று சொல்லப்படுதலால்,
- புல்= புல்லின்,
- நுனிமேல்= நுனியிடத்து,
- நீர்போல= பனிநீரைப்போல,
- நிலையாமை என்று= சரீர நில்லாதென்று,
- எண்ணி= நினைத்து,
- இன்னினியே= இப்பொழுதே இப்பொழுதே,
- அறம் வினை= தருமத்தை,
- செய்க= செய்யக்கடவீர்.
- கருத்துரை
- இப்பொழுதே இருந்தான், இறந்தான் என்று சொல்லப்படுதலால் சரீரநில்லாதென்றெண்ணி இப்பொழுதே தருமஞ் செய்யக்கடவீர்கள்.
- விசேடவுரை
- தொல்காப்பியம்
- "தானென் கிளவி யொருமைக் குரித்தே."
- நீங்கள்- தோன்றா எழுவாய், செய்யக்கடவீர்- பயனிலை, அறவினை- செயப்படுபொருள்.
பாடல் 30 (கேளாதே)
தொகு- கேளாதே வந்து கிளைகளா யிற்றோன்றி () கேளாதே வந்து கிளைகள் ஆய் இல் தோன்றி
- வாளாதே போவரான் மாந்தர்கள் - வாளாதே ()வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே
- சேக்கை மரனொழியச் சேணீங்கு புட்போல () சேக்கை மரன் ஒழியச் சேண் நீங்கு புள் போல
- யாக்கை தமர்க்கொழிய நீத்து. (10) யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து.
- பதவுரை
- மாந்தர்கள்= மனிதர்கள்,
- கேளாது= கேளாமல்,
- வந்து= வந்து,
- கிளைகள் ஆய்= உறவினர்களாய்,
- இல்= மனைவாழ்க்கையில்,
- தோன்றி= பிறந்து,
- வாளாதே= சொல்லாமலே,
- மரன்= மரத்தில்,
- சேக்கை= கூட்டை,
- ஒழிய= விட்டு,
- சேண்= தூரத்தில்,
- நீங்கு= நீங்கும்,
- புள் போல= பறைவையைப் போல,
- யாக்கை= உடலை,
- தமர்க்கு= உறவினர்களுக்கு,
- ஒழிய நீத்து= ஒழித்துவிட்டு,
- வாளாது= சொல்லாது,
- போவர்= இறந்துபோவார்கள்.
- கருத்துரை
- மனிதர்கள் மனைவாழ்க்கையிற் பிறந்து தங்கள் உடலை உறவின்முறையார்களுக்கு ஒழித்துவிட்டு இறந்து போவார்கள்.
- விசேடவுரை
- மாந்தர்கள்- எழுவாய், போவர்- பயனிலை.
யாக்கை நிலையாமை முற்றிற்று
தொகுபார்க்க
தொகு- நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
- நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை
- நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
- நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை
- நாலடியார் 6-ஆம் அதிகாரம் - துறவு
- நாலடியார்
- [[]]
- [[]]
- [[]]
- [[]]
- [[]] :[[]] :[[]]