நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரையுடன்

கடவுள் துணை

சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார்

தொகு

உரை: களத்தூர் வேதகிரி முதலியார்

தொகு

சென்னை

1940

முகவுரை

தொகு

நாலடியார் என்பதற்கு நான்கு அடிகளையுடைய வெண்பாவாலாகிய நூல் என்பது பொருள். ஈரடிகளையுடைய குறள் வெண்பாக்கள், திருக்குறளை உணர்த்தியவாறு போல, நாலடிகளையுடைய வெண்பாக்கள் இந்நூலை உணர்த்தி நின்றது. (இப்பெயர்க் காரணத்தாலும் திருக்குறளோடு இதற்கு ஒற்றுமை தோன்றுமாறு காண்க.) நாலடி - பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழி்த்தொகைக் காரணப்பெயர்; நான்காகிய அடிகளையுடையது என விரியும்; இது வெண்பாவை உணர்த்திற்று, அவ்வெண்பா தன்னாலாகிய நூலுக்குக் கருவியாகுபெயர். 'நாலடி' என்பது இங்கு நாலடிகளையுடைய பிற பாக்களைக் குறியாமற் சிறப்புப்பற்றி வெண்பாவையே குறித்து நின்றது. சிறப்பாவது-வெண்பாக்களுள், "அந்தணர் சாதிப்பா" என முதன்மையாக எடுத்தோதப்பட்டமையும், நீதி நூல்களில் மிகுதியும் பயின்றுவருந் தன்மையும், திருக்குறளுக்கு இரண்டாவதாக எண்ணப்படும் பெருமையு முதலாயின என்க. நாலடி என்பது பொதுப்படக் கூறினமையால் இதனுட் பயின்றுள்ள நேரிசை, இ்ன்னிசை வெண்பாக்களைக் கொள்க. "நாலடியார்" என்பதில் 'ஆர்' விகுதி "திருக்கோவையார், "திருவுந்தியார்," "திருக்களிற்றுபடியார்," "சிவஞான சித்தியார்," என்பவற்றிற்போல உயர்வு குறிக்கவந்தது. நாலடி வெண்பாக்களை உடைமையேயன்றி, வையை நதியில் விடப்படட ஏடுகளுள் இந்நானூறு பாடல்களும், நீர்நிலைக்குமேல் நாலடி உயரம் நின்றன என்னுங் காரணம்பற்றியும், "நாலடியார்" என்னும் பெயர் இந்நூலுக்கு வந்ததெனவுங் கூறுவர். இது சாதாரணமாய் நாலடி நானூறு எனவும், வேளாண் வேதம் எனவும் வழங்கும்.

இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்றென்பதை,

"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி யென்பவே
கைந்நிலையோ டாங்கீழ்க் கணக்கு."

-என்ற செய்யுளாலறிக.

பதினெண் கீழ்க்கணக்கின் நூல்களாவன:

1. நாலடியார் 2. நான்மணிக்கடிகை (நால் நாற்பது) 3. இனியவை நாற்பது 4. இன்னா நாற்பது 5. கார் நாற்பது 6.களவழி நாற்பது 7. ஐந்திணை ஐம்பது (நால் ஐந்திணை) 8.ஐந்திணை எழுபது 9. திணைமொழி ஐம்பது 10. திணைமாலை நூற்றைம்பது 11. முப்பால் (திருக்குறள்) 12. திரிகடுகம் 13. கோவை (ஆசாரக்கோவை) 14. பழமொழி 15. மாமூலம் (சிறுபஞ்ச மூலம்) 16. காஞ்சி (முதுமொழிக் காஞ்சி) 17. ஏலாதி 18. கைந்நிலை என்பன.

பன்னிரு பாட்டியல்

கீழ்க்கணக்கின் இலக்கணம்

"அடிநிமிர் வில்லாச் செய்யுட் டொகுதி
யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வகை
திறம்பட வருவது கீழ்க்கணக் காகும்."

இவற்றுள் கோவை, காஞ்சி என்பன திருக்கோவையாரும், மதுரைக்காஞ்சியும் எனவும், முப்பால்- திருக்குறள் அல்லாத மற்றொரு நூல் எனவும், ஐந்தொகை எனப்பாடங் கொண்டு, அவை வேறு ஐந்து நூல்களெனவுங் கூறிப் பதினெண் கீழ்க்கணக்குத் தொகையை முடிப்பாராயினும், அவ்வாறு கூறுதல் பொருந்தாமை மேற்போந்த சூத்திரத்தான் உய்த்துணர்க. இவை கீழ்க்கணக்கு என்றதனால் மேற்கணக்கும் உளதென்றறிக. விரிப்பிற் பெருகும்.

நூலாசிரியர்
சமண முனிவர்கள். இவர்கள் பாண்டி நாட்டின்கண் மதுரைமாநகரத்து உக்கிரப்பெருவழுதி என்னும் அரசனால் ஆதரிக்கப்பட்ட புலவர்கள்.
இவரது சமயம்
ஆருகதம். அஃதாவது, அருகக்கடவுளை வழிபடும் மதம். இஃது இந்நூலுள் ஆருகத மதத்துக்கு இன்றியமையாததாய்த் துறவறவியலை முதற்கண் கூறியுள்ளமையாலும் இனிது விளங்கும்.
இவர்களிருந்த காலம்
சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், திருக்குறள், பத்துப்பாட்டு, புறநானூறு முதலிய சிறந்த காப்பியஙகட்கு உரைசெய்தருளிய நச்சினார்ககினியர், பரிமேலழகர் முதலிய ஆசிரியர் தத்தம் உரைகளில் இந்நூலினின்று மேற்கோள் எடுத்தாண்டமையானும், பதினெண் கீழ்க்கணக்கு நூற்றொகையுள் இதனைச் சங்கத்தார் சிறப்பாகக் கொண்டிருத்தலானும், இந்நூல் இயற்றியோர் காலம் கடைச்சங்கத்தார் காலம் எனல் வேண்டும். எனவே, இற்றைக்குச் சற்றேறத்தாழ இரண்டாயிர வருடங்களிற் குறையாது.
இவரது காலத்திருந்த புலவர்கள்
கடைச்சங்கத்து நூலாராய்ந்த புலவர் நாற்பத்தொன்பதின்மரும் பிறருமாம்.
நாலடியாரின் வரலாறு
முன்னொரு காலத்தில் சமணமுனிவர் எண்ணாயிரவர்கள் கொடிய பஞ்சத்தால் தேசம் விட்டுப் பாண்டி நாடடைந்து அந்நாட்டரசனால் ஆதரிக்கப்பட்டு வந்தனரென்றும், அவர்கள் சிலகாலம் சென்றபின்பு பஞ்சம் நீங்கித் தேசஞ் செழிப்படைந்ததறிந்து, தங்கள் ஊருக்குப்போக விடைதரல் வேண்டுமென்று பாண்டியனைக் கேட்டனரென்றும், மகாராஜா பல சாஸ்திரங்களிலும் வல்ல புலவர்கள் இருப்பது தனது இராஜசபைக்கு ஓர் அணியெனக் கருதியிருந்தனன் ஆதலால், அவர்கள் தன்னைவிட்டு நீங்க மனமில்லாதவனாய் அவர்கள் வேண்டுகோளுக் கிணங்கவில்லை யென்றும், அதனால் முனிவர்கள் ஒருநாள் இரவில் யாருமறியாதபடி பாண்டிநாட்டை விட்டு அகன்றனரென்றும், பொழுது விடிந்தபின் அம்முனிவர்கள் போனவழி தெரியாமல் திகைத்து அவர்கள் உறைவிடங்களைச் சோதனை செய்யும் பொழுது ஒவ்வொரு முனிவர்களின் [sic/உஉ]ஆசனத்தின் கீழ் ஒவ்வொரு பாடலெழுதிய சீட்டு வைக்கப்பட்டிருந்ததென்றும், அப்பாடல்கள் அநேகமாயும், ஒன்றுக்கொன்று கருத்தில் பொருத்தமில்லாமல் முரணுமாயு மிருந்தமையால் அவை அரசனது உத்திரவின்படி வைகையில் எறியப்பட்டனவென்றும், அவற்றுள் நானூறு பாடல்கள் எதிர் ஏறிக் கரைசேர்ந்தன என்றும், அவற்றைப் பாண்டியன் ஒரு நூலாக்கிநாலடியார் எனப் பெயரிட்டு வழங்கினனென்றும், எஞ்சிய பாடல்களில் கரை சேர்ந்தனவாகிய சில, "பழமொழி" "அறநெறிச்சாரம்" என்கிற் பெயர்களில் வழங்கி வருகின்றன என்றுஞ் சொல்லுகின்றனர்.

இதனை,

"மன்னன் வழுதியர்கோன் வையைப் பேராற்றின்
எண்ணி யிருநான்கோ டாயிரவர்-உன்னி
எழுதியிடு மேட்டி லெதிரே நடந்த
பழுதிலா நாலடியைப் பார்." -என்னும் பழைய வெண்பாவான் அறியத்தகும்.

இனி, இவ்வாறன்றி, மூன்றாஞ்சங்கம் ஸ்தாபித்ததற்கு முன்பு ஒருகாலத்தில், "எட்டுமலைச் சாரலில் சமண முனிவர்கள் எண்ணாயிரவர்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் தனித்தனி ஒவ்வொரு வெண்பாப் பாட, அவை பற்பலவாயின. அவற்றைச் சேர்த்துப் பார்க்கும்பொழுது, அவைகள் ஒரே விஷயத்தை ஒரே கருத்தால் விரித்துக்காட்டுகிற பல பாடல்கள் காணப்பட்டன. அவற்றுள் ஒரே விஷயத்தினை ஒவ்வொரு கருத்தால் தனித்தனி கூறும் நானூறு பாடல்களைப் பொறுக்கிச் சேர்த்து நாற்பது அதிகாரமாக முடித்ததாம்" எனக் கூறுவது முண்டு.

இந்நூல் நுதலும் பொருள்
இவ்வுலகத்தில் இல்வாழ்க்கையில் நின்றடையலாகும் இம்மைப் பயன்களையும், இந்திராதி தேவர்களுடைய பதவிகளாகிய சுவர்க்காதி லோகங்களில் நுகரலாகும் மறுமைப்பயன்களையும் அடைவதற்குரிய உயிர்கட்கு உறுதியென உயர்ந்தோராற் கொள்ளப்பட்ட பொருள் நான்கு. அவை: அறம், பொருள், இன்பம், வீடு என்பன. இவையே தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்று வடநூலார் கூறும் சதுர்வித புருஷார்த்தங்கள். இவற்றுள் 'வீடு' என்பது, சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத்தாகலின்,
"நன்றா ஞாலங் கடந்துபோய் நல்லிந் திரிய மெல்லாநீத்
தொன்றாய்க் கிடந்த வரும்பெரும்பா லழும்பி லதனை யுணர்ந்துணர்ந்து
சென்றாங் கின்ப துன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால்
அன்றே யப்போ தேவீடு மதுவே வீடு வீடாமே." எனவும்,
"அற்றது பற்றெனி லுற்றது வீடு" எனவும்,
"பரனைநினைந் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு," எனவும், அறிந்தார் உரைத்தருளியபடி, துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதே யன்றி, இலக்கண வகையற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன் அஃதொழிந்த ஏனைய மூன்றுமேயாம்.

அவற்றுள் அறமாவது: இம்மை-மறுமை-வீடு என்னும் மும்மையும் தரும் முறையுடையதாய், மநு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும். இம்மூன்றனையும் முறையே ஆசாரம், வியவகாரம், பிராயச்சித்தம் என்பர் வடநூலார்.

அவற்றுள் ஒழுக்கமாவது: அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று (நிலை-ஆசிரமம்; அவை: பிரமசரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், ஸந்யாஸம் என்பன) அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.

வழக்காவது: ஒரு பொருளைத் தனித்தனியே எனது என்றிருப்போர், அது காரணமாகத் தம்முள் மாறுபட்டு அப்பொருண்மேற் செல்வது; அது கடன்கோடன் முதற் பதினெட்டுப் பதத்தாம்.

விவகாரம் பதினெட்டாவன: 1.கடன்கோடல் 2.உபநிதி 3.கூடிமேம்படல் 4.நல்கியதை நல்காமை 5.ஒப்பிப் பணிசெய்யாமை 6.கூலிகொடாமை 7. உடையனல்லான் விற்றல் 8.விற்றுக்கொடாமை 9. கொண்டுள்ள மொப்பாமை 10. கட்டுப்பாடு கடத்தல் 11. நில வழக்கு 12. மாதராடவர் தருமம் 13.தாய பாகம் 14. வன்செய்கை 15.சொற்கொடுமை 16.தண்டக் கொடுமை 17.சூது 18.ஒழிபு - எனஇவை. இவற்றின் விவரங்களைக் கேட்டுணர்க.

தண்டமாவது: அவ்வொழுக்க நெறியினின்றும் தவறினோரை அந்நெறியில் நிறுத்துதற்பொருட்டு நடுவு நிலைமையாய் ஆராய்ந்து அந்தந்தக் குற்றத்திற்குத் தக்கவாறு தண்டித்தல். இவை மூன்றனுள் வழக்கும் தண்டமும் உலகத்தை நல்வழியில் நடத்துதற்கே பயன்படுவன வல்லது, ஒழுக்கம் போல மக்களுயிர்க்கு நன்மைசெய்யுஞ் சிறப்புடையன ஆகாமையாலும், அவைதான் நூல்களாலே யன்றி, அறிவின் மிகுதியாலும், தேசத்தின் இயற்கையாலும் அறியப்படுதலாலும், அவ் வழக்குத் தண்டஙகளை யொழித்து,

"நாலு மிரண்டும் சொல்லுக்குறுதி" எனவும்,
"நாலடி வள்ளுவ ராமே யிப்பாலை நடந்தபெருங்
காலடி மேலடி மானடி யேகட்டுரலிற் பட்ட
பாலடி சில்வெண்ணெ யுண்டோ னரங்கன் பனிவரையில்
வேலடி முள்ளுக் குபாயமிட் டேகு விரகுநன்றே."

-என்னும் உடன்போக்குத்துறை செய்யுளில், தலைவியை உடன்கொண்டு சென்ற தலைவன் அவளது காலில் முட்கள் தாக்குறாவண்ணம் தான் முன்னேசெல்லத் தனது அடிச்சுவட்டின்மீது தலைவி அடிவைத்து நடக்க, அந்நாலடியும் ஈரடியாய்த் தோன்றியதற்கு நாலடியாரையும் திருக்குறளையும் உவமமெடுத்து, அவரது உள்ளன்பின் ஒற்றுமைநிலை கூறவந்த கவி, அவரது நாலடியும் ஈரடியாயின எனச் சாதுரியம்படவுரைத்து, நாலடிவள்ளுவராமே, எனவும், நாலடியாருக்கும் திருக்குறளுக்கும் உள்ள ஒற்றுமையைக் குறிப்பாய்க் குறிப்பாற் கூறினமையாலும், அத்திருக்குறளிற்போல அதனோடு ஒற்றுமைப்பட இந்நூலிலும் சிறப்புடைய ஒழுக்கமே அறமென எடுத்துக் கொள்ளப்பட்டது. அவ்வறமும் பிரமசரிய முதலிய நால்வகை நிலையினையுடையதாய், வருணந்தோறும் வேறுபாடுடைமையயாற் சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகளை யொழித்து, எல்லார்க்கும் ஒப்பமுடிதலின் பெரும்பான்மையாகிய பொதுவியல்புபற்றி இல்லறம் துறவறமென இருவகைநிலையாற் கூறப்பட்டது. அவற்றுள் இல்லறமாவது இம்மை மறுமை யின்பங்களைப் பயத்தற்கு உரிய இல்வாழ்க்கைநிலைக்குச் சொல்லுகின்ற நெறியில்நின்று அவ்வில்வாழ்க்கை நல்வாழ்க்கையாமாறு அதற்குத் துணையாகிக் கற்புடைய நல்லவளாகிய இல்லவளோடுஞ் செய்யப்படும் தருமமாம். துறவறமாவது மேற்கூறிய இல்லறத்தின் வழுவாதொழுகி மெய்யுணர்வு உடையராய், பல்வகைத் துன்பத்திற் கிடனாகிப் பிறப்பையஞ்சி அந்தமில் பேரின்பத்தாய விடுபெறற் பொருட்டு இருவகைப் பற்றும் முற்றும் அற்றுநின்ற துறவிகட்குரித்தாகிய தருமமாம். இல்லறம் துறவறம் என்னும் இவ்விருவகை நிலையுள் இல்லறம், துறவறம் போல உண்டிசுருக்கல் முதலிய துன்பமுடையதாகாமல் துறவறத்திற்கும் ஒருவகைக் காரணமாயிருத்தல் பற்றி இல்லறம் முன்னும் துறவறம் பின்னுமாகத் திருக்குறளில் வைத்துக் கூறப்பட்டிருப்பினும், இந்நூல் அவ்வாறின்றித் துறவறம் அழிவில்லாததும் அழிவில்இன்ப முடையதுமான முத்தி பெறுதற்கு ஏதுவாதலால் அசசிறப்புப் பற்றி அது முன்னும், இல்லறம் துறவறம்போல வீடுபேற்றிற்குக் காரணம் ஆகாமையால் அச்சிறப்பின்மைபற்றி அது பின்னுமாக நிறுத்திக் கூறப்பட்டன.

இந்நூலில் அறத்துப்பாலை முதற்பதின்மூன்று அதிகாரங்களாற் கூறத்தொடங்கி (இந்நூலை ஆக்கியோர் சமணராதலின், அவரது சமயக் கோட்பாட்டுக்கிணங்க) முத்திக்குக் கருவியான துறவறத்தை முதல் ஏழதிகாரங்களாலும், அதற்கு எதிர்நிலையாகிய இல்லறத்தை அதன்பின் ஆறு அதிகாரங்களாலும் கூறிப், பதினான்காம் அதிகாரந் தொடங்கி இருபத்தாறு அதிகாரங்களாற் பொருட்பாலைக் கூறப்புகுந்து, கல்வி முதல் கற்புடை மகளிரீறாக அதனை முடித்து, காமத்துப் பாலை ஓரதிகாரத்தாலமைத்தனர். இது காரண காரிய முறைப்படி ஓத்து முறை வைக்கப்பட்டது.

இந்நூலின் பயன்: அரசர், அந்தணர், தாய், தந்தை, ஆசிரியர், நட்பினர், உறவினர், மேலோர், கீழோர் முதலாயினோருடைய தன்மைகளையறிந்து அவர்மாட்டுத் தக்கவாறொழுகி, இம்மையில் இன்பம் பெறுதலும், உடல் பொருள் நிலையாமையை யுணர்ந்து அவற்றில் நசையற்றுத் துறவொழுக்க நெறி யறிந்து முத்தி பெறுதற்கு உபாயந் தேடிக்கொள்ளலுமாம்.


வேறு குறிப்புகள்

தொகு

இந்நாலடியாரிற் கூறப்பட்ட விஷயங்கள் பலதேயத்தாரும் பல மதத்தாரும் கொண்டொழுகலாம்படி பொதுவாயிருத்தலால் இந்நூல் வேறு பாஷைகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வழங்குகின்றது. இது மநுமுதலிய ஸ்மிருதிகளிற் கூறியுள்ள நீதிகளையும், சமண நூல்களிற் கூறியுள்ள நீதிமுறைகளையுந் தழுவி யிருக்கின்றது. திருக்குறளிற் பகுக்கப்பட்டுள்ளதுபோல் இந்நூலின் இயல் அதிகாரங்களைப் பாகுபாடு செய்தவர் பதுமனார் என்னும் ஒரு சமணவித்வான்; அவர் இந்நூலுக்கு உரையுஞ் செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அவருடைய உரையென இக்காலத்து வழங்கும் ஒரு பொழிப்புரையின் போக்கை நோக்குமிடத்து அஃது அவரதுதான் என்று துணிவதற்குக் கூடவில்லை. இஃதன்றி, அக்காலத்திருந்த மற்றொரு சமணவித்வானும் ஓர் உரை செய்திருப்பதாகக் கேள்வி. இந்நூலை இயற்றியோர் சமணராதலின் அவர் மதத்திற்கு இன்றியமையாதனவாகிய யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வ நிலையாமை, பிறர்மனை நயவாமை முதலியவை இதனுள் வற்புறுத்திக் கூறப்படுகின்றன.

இந்நூலினது பெருமை, உலகுய்யத்தோன்றி நிரம்பிய புலமைத்திறம் படைத்த நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலிய பண்டை யுரையாசிரியர்கள் தாம் தாம் இயற்றிய சிறந்த காப்பிய உரைகளில் இந்நூலைப் பல இடங்களில் எடுத்து மேற்கோள் காட்டியுள்ளமையானும், திருக்குறளோடு ஒரு கோவையாக வைத்து வழங்கப்படலானும் உணர்க. இது நானூறு பாடல்களை யுடையதென்பதையும், இதனை இயற்றினோர் எண்ணாயிரவரென்பதனையும், மற்றும் இதன் பெருமைகளையும் அடியில்வரும் செய்யுட்களானும் அறிக.

"எண்ணா யிரவ ரிசைத்தவெண்பா நானூறும்
கண்ணமிந் நாலடியைக் கற்றுணரத்- தண்ணார்
திருக்குருகூர் மாறனையே தேர்ந்துமறை தேர்ந்த
திருக்குருகூர் மாறனையே தேர்."
"நானூறும் வேதமா நானூறு நானூறாம்
நானூறுங் கற்றற்கு நற்றுணையா- நானூறும்
பண்மொழியாள் பாகம் பகிர்ந்து சடைக்கரந்த
கண்ணுதலான் பெற்ற களிறு."
"வெள்ளாண் மரபுக்கு வேதமெனச் சான்றோர்கள்
எல்லாருங் கூடி யெடுத்துரைத்த- செல்லாய்ந்த
நாலடி நானூறு நன்கினிதா வென்மனத்தே
சீலமுட னிற்க தெளிந்து."


முற்றும்

தொகு
பார்க்க
நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரை

1.அறத்துப்பால்: 1.துறவறவியல்

நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை
நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை
நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை
நாலடியார் 6-ஆம் அதிகாரம் - துறவு
நாலடியார் 7-ஆம் அதிகாரம் - சினமின்மை

அறத்துப்பால்: 2.இல்லறவியல்

நாலடியார் 8-ஆம் அதிகாரம்-பொறையுடைமை
நாலடியார் 9-ஆம் அதிகாரம்-பிறர்மனைநயவாமை
நாலடியார் 10-ஆம் அதிகாரம்-ஈகை
நாலடியார் 11-ஆம் அதிகாரம்-பழவினை
நாலடியார் 12-ஆம் அதிகாரம்-மெய்ம்மை
நாலடியார் 13-ஆம் அதிகாரம்-தீவினையச்சம்

2.பொருட்பால்: 1.அரசியல்

நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி
நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு
நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்
நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை
நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்
நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை
[[]]