பக்கம்:சோழர் வரலாறு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

43



பாய்வதைப் போலப் பாய்ந்து கடும்போர் புரிந்து பகைவரைப் புறங்காட்டச் செய்தான்.[1] (5) பின்னர் அக்கோசர் மோகூரைத் தாக்கினர். மோகூர் பணிந்திலது, அப்பொழுது ‘வடுகர்’ படையை முன் விட்டுப் பின் புதிதாக வந்த (வம்ப) மோரியர் - பெரிய தேர்களையுடைய மோரிய வீரர் மோகூரைத் தாக்கினர்; முடிபு தெரிந்திலது.[2] இப்படையெடுப்பில் மோரியர், தம் வரவிற்குத் தடைசெய்த மலையை அல்லது பள்ளத்தாக்கை ஒழுங்கு செய்து வந்தனர் என்பது தெரிகிறது.[3] இம்மோகூர் தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் ஆத்தூர்க் கணவாய்க்கு அண்மையில் உள்ள மோகூராக இருக்கலாம் என்று அறிஞர்[4] கருதுகின்றனர். (6) இங்ஙனம் தென் ஆர்க்காட்டுக் கோட்டம் வரை வந்த வடவடுகரான கோசரை இளஞ் சேட்சென்னி என்னும் சோழன் எதிர்த்து வாகை புனைந்தான்;[5] மேலும் இவன், குறைவினையை முடிப்பதற்காகப் (அரை குறையாகப் பகைவரை முறியடித்து அத்துடன் விடாமல் அவர்களை முற்றிலும் முறியடிக்க) பாழி நகர் வரை பகைவரைத் தொடர்ந்து சென்று, வடுகர் தங்கி இருந்த பாழியை எறிந்து, வம்பவடுகர் தலைகளை அறுத்து அழித்தான். இங்ங்னம் காவல் மிகுந்த ‘பாழி’யை வென்ற காரணம் பற்றி இச்சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி எனப்பட்டான்.[6]

மோரியர் தோல்விக்குக் காரணம்

இங்ஙனம் வலி மிக்க சோழன் போர் தொடுத்து வென்றமையாற்றான், மோரியர் படை நிலைகுலைந்து


  1. புறம் 261, 281
  2. அகம் 196, 262.
  3. அகம் 69, 251, 281, புறம், 175.
  4. K.A.N. Sastry’s ‘Cholas’, Vol. 1.p. 28.
  5. அகம் 205, 378.
  6. அகம் 375, புறம் 378.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/45&oldid=480445" இலிருந்து மீள்விக்கப்பட்டது