அகநானூறு/261 முதல் 270 முடிய

அகநானூறு பக்கங்கள்


2. மணிமிடை பவளம்

தொகு

261 கானப் பாதிரிக் கருந்தகட்டு ஒள்வீ
வேனில் அதிரலொடு விரைஇக், காண்வர,
சில்ஐங் கூந்தல் அழுத்தி, மெல்லிணர்த்
தேம்பாய் மராஅம் அடைச்சி, வான்கோல்
இலங்குவளை தெளிர்ப்ப வீசிச், சிலம்புநகச் 5
சிலமெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின்
அணிமாண் சிறுபுறம் காண்கம்; சிறுநனி
ஏகு' என, ஏகல் நாணி, ஒய்யென
மாகொல் நோக்கமொடு மடம்கொளச் சாஅய்,
நின்றுதலை இறைஞ்சி யோளே; அதுகண்டு, 10
யாமுந் துறுதல் செல்லேம், ஆயிடை
அருஞ்சுரத்து அல்கி யேமே- இரும்புலி
களிறுஅட்டுக் குழுமும் ஓசையும், களிபட்டு
வில்லோர் குறும்பில் ததும்பும்,
வல்வாய்க் கடுந்துடிப் பாணியும் கேட்டே. 15

262 முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப்,
பகடுபல பூண்ட உழவுறு செஞ்செய்,
இடுமுறை நிரம்பி, ஆகுவினைக் கலித்துப்,
பாசிலை அமன்ற பயறுஆ புக்கென,
வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து, அருளாது, 5
ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
மறம்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
செருஇயல் நல்மான் திதியற்கு உரைத்து, அவர் 10
இன்உயிர் செகுப்பக் கண்டு, சினம் மாறிய
அன்னி மிஞிலி போல, மெய்ம்மலிந்து,
ஆனா உவகையேம் ஆயினெம் - பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம்திகழ் சிலம்பின்
நுண்பல துவலை புதல்மிசை நனைக்கும் 15
வண்டுபடு நறவின் வண்மகிழ்ப் பேகன்
கொண்டல் மாமலை நாறி,
அம்தீம் கிளவி வந்த மாறே. 18

263 தயங்குதிரைப் பெருங்கடல், உலகுதொழத் தோன்றி,
வயங்குகதிர் விரிந்த, உருகெழு மண்டிலம்
கயம்கண் வறப்பப் பாஅய், நல்நிலம்
பயம்கெடத் திருகிய பைதுஅறு காலை,
வேறுபல் கவலைய வெருவரு வியன்காட்டு, 5
ஆறுசெல் வம்பலர் வருதிறம் காண்மார்
வில்வல் ஆடவர் மேலான் ஒற்றி,
நீடுநிலை யாஅத்துக் கோடுகொள் அருஞ்சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு,
அவள் துணிவு அறிந்தனென் ஆயின், அன்னோ! 10
ஒளிறுவேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்னஎன் வளநகர் விளங்க,
இனிதினிற் புணர்க்குவென் மன்னே - துனிஇன்று
திருநுதல் பொலிந்தவென் பேதை
வருமுலை முற்றத்து ஏமுறு துயிலே! 15

264 மழையில் வானம் மீன்அணிந் தன்ன,
குழையமல் முசுண்டை வாலிய மலர,
வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப்
பெரிய துடிய கவர்கோற் கோவலர்,
எல்லுப்பெயல் உழந்த பல்லான் நிரையொடு, 5
நீர்திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர;
நனிசேண் பட்ட மாரி தளிசிறந்து,
ஏர்தரு கடுநீர் தெருவுதொறு ஒழுகப்,
பேரிசை முழக்கமொடு சிறந்துநனி மயங்கிக்,
கூதிர்நின் றன்றால்; பொழுதே! காதலா 10
நம்நிலை அறியார் ஆயினும், தம்நிலை
அறிந்தனர் கொல்லோ தாமே- ஓங்குநடைக்
காய்சின யானை கங்குல் சூழ,
அஞ்சுவர இறுத்த தானை
வெஞ்சின வேந்தன் பாசறை யோரே? 15

265 புகையின் பொங்கி, வியல்விசும்பு உகந்து,
பனிஊர் அழற்கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ்வரை மானும் கொல்லோ?
பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக், கங்கை 5
நீர்முதற் கரந்த நிதியம் கொல்லோ?
எவன்கொல்? வாழி, தோழி! வயங்கொளி
நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல்,
குழற்குரல், பாவை இரங்க, நத்துறந்து,
ஒண்தொடி நெகிழச் சாஅய்ச், செல்லலொடு 10
கண்பனி கலுழ்ந்துயாம் ஒழியப், பொறை அடைந்து,
இன்சிலை எழிலேறு கெண்டிப், புரைய
நிணம்பொதி விழுத்தடி நெருப்பின் வைத்துஎடுத்து,
அணங்கரு மரபின் பேஎய் போல
விளரூன் தின்ற வேட்கை நீங்கத், 15
துகளற விளைந்த தோப்பி பருகித்,
குலாஅ வல்வில் கொடுநோக்கு ஆடவர்
புலாஅல் கையர், பூசா வாயர்,
ஒராஅ உருட்டுங் குடுமிக் குராலொடு
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும் 20
செந்நுதல் யானை வேங்கடம் தழீஇ,
வெம்முனை அருஞ்சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே! 23

266 கோடுற நிவந்த நீடுஇரும் பரப்பின்
அந்திப் பராஅய புதுப்புனல், நெருநை,
மைந்துமலி களிற்றின் தலைப்புணை தழீஇ,
நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல்
இளந்துணை மகளிரொடு ஈர்அணிக் கலைஇ, 5
நீர்பெயர்ந்து ஆடிய ஏந்துஎழில் மழைக்கண்
நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலை யாகிக்,
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண்இழந்து,
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே
யாழ்இசை மறுகின் நீடூர் கிழவோன் 10
வாய்வாள் எவ்வி ஏவன் மேவார்
நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர்
அரிமண வாயில் உறத்தூர் ஆங்கண்,
கள்ளுடைப் பெருஞ்சோற்று எல்இமிழ் அன்ன,
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனிஅஃது 15
அவலம் அன்றுமன், எமக்கே; அயல
கழனி உழவர் கலிசிறந்து எடுத்த
கறங்குஇசை வெரீஇப் பறந்த தோகை
அணங்குடை வரைப்பகம் பொலியவந்து இறுக்கும்
திருமணி விளக்கின் அலைவாய்ச்
செருமிகு சேஎயொடு உற்ற சூளே! 21

267 'நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்புகலந்து,
அறாஅ வஞ்சினம் செய்தோர், வினைபுரிந்து
திறம்வேறு ஆகல் எற்று?' என்று ஒற்றி,
இனைதல் ஆன்றிசின், நீயே; சினைபாய்ந்து.
உதிர்த்த கோடை, உட்குவரு கடத்திடை, 5
வெருக்குஅடி அன்ன குவிமுகிழ் இருப்பை,
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான்பூ
மயிர்க்கால் எண்கின் ஈர்இனம் கவர,
மைபட் டன்ன மாமுக முசுவினம்
பைதுஅறு நெடுங்கழை பாய்தலின் ஒய்யென 10
வெதிர்படு வெண்ணெல் வெவ்அறைத் தாஅய்,
உகிர்நெறி ஓசையிற் பொங்குவன பொரியும்
ஓங்கல் வெற்பின் சுரம்பல இறந்தோர்
தாம்பழி உடையர் அல்லர்; நாளும்
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்குவினை 15
வால்ஏர் எல்வளை நெகிழ்த்த,
தோளே!- தோழி - தவறுஉடை யவ்வே! 17

268 அறியாய்- வாழி, தோழி!- பொறியரிப்
பூநுதல் யானையொடு புலிபொரக் குழைந்த
குருதிச் செங்களம் புலவுஅற, வேங்கை
உருகெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
மாமலை நாடனொடு மறுஇன்று ஆகிய 5
காமம் கலந்த காதல் உண்டெனின்,
நன்றுமன்; அதுநீ நாடாய், கூறுதி;
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்,
யான் அலது இல்லை, இவ் உலகத் தானே-
இன்னுயிர் அன்ன நின்னொடுஞ் சூழாது, 10
முளைஅணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த
பெரும்பெயர் எந்தை அருங்கடி நீவிச்,
செய்துபின் இரங்கா வினையொடு
மெய்அல் பெரும்பழி எய்தினென் யானே! 14

269 தொடிதோள் இவர்க! எவ்வமுந் தீர்க!
நெறிஇருங் கதுப்பின் கோதையும் புனைக!
ஏறுடை இனநிரை பெயரப்; பெயராது
செறிசுரை வெள்வேல் மழவர்த் தாங்கிய
தறுக ணாளர் நல்லிசை நிறுமார், 5
பிடிமடிந் தன்ன குறும்பொறை மருங்கின்,
நட்ட போலும் நடாஅ நெடுங்கல்
அகலிடம் குயின்ற பல்பெயர் மண்ணி,
நறுவிரை மஞ்சள் ஈர்ம்புறம் பொலிய
அம்புகொண்டு அறுத்த ஆர்நார் உரிவையின் 10
செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி
வரிவண்டு ஆர்ப்பச் சூட்டிக் கழற்கால்
இளையர்பதிப் பெயரும் அருஞ்சுரம் இறந்தோர்,
தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்,
பொலங்காசு நிரைத்த கோடுஏந்து அல்குல் 15
நலம்கேழ் மாக்குரல் குழையொடு துயல்வரப்,
பாடுஊர்பு எழுதரும் பகுவாய் மண்டிலத்து
வயிர்இடைப் பட்ட தெள்விளி இயம்ப
வண்டற் பாவை உண்துறை தரீஇத்,
திருநுதல் மகளிர் குரவை அயரும் 20
பெருநீர்க் கானல் தழீஇய இருக்கை,
வாணன் சிறுகுடி, வணங்குகதிர் நெல்லின்
யாணர்த் தண்பணைப் போதுவாய் அவிழ்ந்த
ஒண்செங் கழுநீர் அன்ன நின்
கண்பனி துடைமார் வந்தனர் விரைந்தே. 25

270 இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம்,
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து
இனமீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும்
மெல்லம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே;
சேயிறாத் துழந்த நுரைபிதிர்ப் படுதிரை 5
பராஅரைப் புன்னை வாங்குசினைத் தோயும்
கானல் பெருந்துறை நோக்கி, இவளே,
கொய்சுவற் புரவிக் கைவண் கோமான்
நல்தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன,
அம்மா மேனி தொல்நலம் தொலைய, 10
துஞ்சாக் கண்ணள் அலமரும், நீயே,
கடவுள் மரத்த முள்மிடை குடம்பைச்
சேவலொடு புணராச் சிறுகரும் பேடை
இன்னாது உயங்கும் கங்குலும்,
நும்ஊர் உள்ளுவை; நோகோ, யானே. 15

"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/261_முதல்_270_முடிய&oldid=480934" இலிருந்து மீள்விக்கப்பட்டது