பக்கம்:நற்றிணை 1.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடிய சான்றோர்கள்

417


நயமாகக் கூறுவதாக இவர் இச் செய்யுளாற் காட்டுகின்றனர். 'உயிரினும் சிறந்த நாண்" என்றது, நாணத்தை அந்நாட் பெண்டிர் பேணிய சிறப்பை உணர்த்துவதாகும். பூக்கோட் காஞ்சியாக அமைந்த இவரது புறநானூற்றுச் செய்யுளும் சிறந்த பொருள்நயங் கொண்டதாகும்.

பரணர் 6, 100

சங்கத் தொகை நூற்களுள் இவர் பெயராற் காணப்படுவன எண்பத்தைந்து செய்யுட்களாகும். இவர் கபிலரோடு நட்புடையவராயிருந்தவர். வையாவிக்கோப் பெரும் பேகனின் காலத்தவர்; அக் காலத்துச் செய்திகள் பலவற்றையும் தம் செய்யுட்களுள் அமைத்துப் பாடியவர். இவரது செய்யுட்களுள் பல செய்திகளைக் கண்டு அக்கால வரலாற்றின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ளலாம். இச் செய்யுட்களுள் ஓரியது கொல்லிக் கானத்தையும். மலையமானின் போர்த்திறத்தையும் இவர் கூறுகின்றனர். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பத்துப்பாடல்களாற் பாடி (ஐந்தாம் பத்து) உம்பற்காட்டு வாரியையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றவரும் இவரே. இவர் வரலாறு விரிவாக அறிவதற்கு உரியதொன்றாகும்.

பராயனார் 155

தலைவன் தலைவியைப் பராயதாக அமைந்துள்ள இச்செய்யுளால் இவர் இப்பெயரைப் பெற்றனர் போலும்! தலைவியது ஊடலை நீக்கக் கருதின தலைவன், அவளைப் பணிந்து பராய், அவளது முள்ளெயிற்று முறுவல் திறந்தது கண்டு இன்புறும் செவ்வி பெரிதும் சுவையுடையதாகும்.

பாரதம் பாடிய பெருந்தேவனார் (கடவுள் வாழ்த்து)

பாரதக் கதையைத் தமிழ்ச் செய்யுளாற் பாடியவர்; பெருந்தேவன் என்னும் பெயரினர்; இந் நற்றிணையின் காப்புச் செய்யுளைச் செய்தவர். இப்போது வழங்கும் பாரத வெண்பாப் பகுதிகள் இவருக்குப் பிற்பட்ட பெருந்தேவனார் ஒருவராற் செய்யப் பெற்றனவாகும். புறத்திரட்டுள் காணப்படும் பழம்பாரதச் செய்யுட்களை இவரதாகக் கொள்ளலாம். இந்நற்றிணையின் 83ஆம் செய்யுளைச் செய்த பெருந்தேவனார் இவரிலும் வேறான மற்றொருவர் ஆவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/418&oldid=1731075" இலிருந்து மீள்விக்கப்பட்டது