பேரிசைச் சூத்திரம்
பேரிசைச் சூத்திரம் - மூலமும் உரையும்
தொகுநூலாசிரியர்: அகத்தியனார்
தொகுஉரையாசிரியர்: ச.பவாநந்தம் பிள்ளை அவர்கள்
தொகு1. மொழியுளத் தாலறி யாச்சிவ வுணர்வாற் () மொழி உளத்தால் அறியாச் சிவ உணர்வால்
- றனியியன் மறைமுன் சாவாக் கல்வியாய் ()தனி இயல் மறை முன் சாவாக் கல்வியாய்
- ஐந்தக் கரத்தி லமையுந் தமிழ்மொழி () ஐந்து அக்கரத்தில் அமையும் தமிழ் மொழி
- ஒலிவடி வாகி யுலவு மநாதியில். () ஒலி வடிவு ஆகி உலவும் அநாதியில்.
- பதவுரை
- மொழியால் = வாக்கினாலும்,
- உளத்தால் = மனத்தினாலும்,
- அறியா = தெரியாத,
- சிவ உணர்வால் = பேரறிவால்,
- தனி இயல் = தனித்து நடைபெறுகின்ற,
- மறை முன் = வேதங்களுக்கு அநாதியாயும்,
- சாவாக் கல்வியாய் = எக்காலத்தும் மாயும்தன்மை இல்லாததாயும்,
- ஐந்து அக்கரத்தில் = றகார னகார ழகார எகார ஒகாரங்களாகிய ஐந்தனையும் தனக்குச் சிறப்பெழுத்துக்களாகக் கொண்டு,
- தமிழ் மொழி அமையும் = தமிழ்மொழி பொருந்தும் (அம்மொழி),
- அநாதியில் = முந்தி,
- ஒலி வடிவாகி = சத்தமாத்திரத் தன்மைத்தாய்,
- உலவும் = பரவியிருந்ததென்க.
2. அம்மு தற்சிவம் அமைக்குஞ் சேய்க்கும் () அ முதல் சிவம் அமைக்கும் சேய்க்கும்
- உயிர்கள் ஞானத் துவந்தாங் கொளிர ()உயிர்கள் ஞானத்து உவந்தாங்கு ஒளிர
- உரைத்த தக்கரக் கால மாகும். () உரைத்தது அக்கரக் காலம் ஆகும்.
- பவாநந்தர் பதவுரை
- அம் முதல் சிவம் = முழுமுதற் கடவுள்,
- உயிர்கள் = அநாதிமல பெத்தராகிய மக்கள்,
- ஞானத்து உவந்து ஆங்கு ஒளிர = அறிவில் கலந்து விளங்க,
- அமைக்கும் = பார்வதிக்கும்,
- சேய்க்கும் = முருகக் கடவுளுக்கும்,
- உரைத்தது = சொல்லியருளினது,
- அக்கரக் காலம் ஆகும் = எழுத்துக்களினது உற்பத்திக் காலமாம்.
- அறிவிற் கலந்து ஒளிர எனவே அநாதிமலபெத்தம் பெறப்பட்டது.
3. மகத்துவ ஞான சித்துவல் லவனாம் () மகத்துவ ஞான சித்து வல்லவன் ஆம்
- அகத்தியன் றவத்தா லருந்தமிழ் பெற்றிங் () அகத்தியன் தவத்தால் அருந்தமிழ் பெற்று இங்கு
- கியலிசை நாடகங் களுக்கீ ராறின் () இயல் இசை நாடகங்களுக்கு ஈர் ஆறின்
- இயலாய் வகுத்த திலக்கணக் காலம். ()இயலாய் வகுத்தது இலக்கணக் காலம்.
- பவாநந்தர் பதவுரை
- மகத்துவ ஞான சித்து வல்லவனாம் = பேரறிவினோடு உலகவியல்பு நன்கு உணர்ந்தோன் ஆகிய,
- அகத்தியன் = அகத்திய மகா முனிவர்,
- தவத்தால் = அருட்பேற்றினாலே,
- அருந்தமிழ் பெற்று = கிடைத்தற்கு அரிய தமிழ் மொழியினை (குன்றம் எறிந்த குமரவேளால் செவியுறுத்தப்) பெற்று,
- இங்கு = இவ்வுலகில்,
- இயல் இசை நாடகங்களுக்கு = இயலிசை நாடகம் என்னும் முத்தமிழ்க்குரிய,
- ஈர்ஆறின் = பன்னிரண்டாகிய,
- இயலாய் வகுத்தது = இலக்கணங்களாக வகுத்தருளியதே,
- இலக்கணக் காலம் = தமிழ் இலக்கணம் ஏற்பட்ட காலமாகும்.
4. மோனையாந் தெய்வத் தமிழ்மொழி நிறீஇய () மோனை ஆம் தெய்வத் தமிழ் மொழி நிறீஇய
- சங்கத் தலைவர்கள் தலைமை பூண்டங் () சங்கத் தலைவர்கள் தலைமை பூண்டு அங்கு
- கறம்வள ரவையில் அரங்கே றியநாள் () அறம் வளர் அவையில் அரங்கு ஏறிய நாள்
- வழுதியர் வளர்த்தது சங்க காலம். ()வழுதியர் வளர்த்தது சங்க காலம்.
- பவாநந்தர் பதவுரை
- சங்கத்தலைவர்கள் தலைமை பூண்டு = சங்கப் புலவர்கள் தமிழ்த்தலைமை பெற்று,
- நிறீஇய = (வழூஉக்களைந்து) வளர்த்த,
- மோனை ஆம் தெய்வத் தமிழ்மொழி = அநாதியாகிய தெய்வத்தன்மை வாய்ந்த தமிழ்மொழி,
- அங்கு = பாண்டிநாட்டில்,
- அறம் வளர் அவையில் = அறம் முதலிய உறுதிப்பொருள்களே கூறுகின்ற சங்கத்தில்,
- அரங்கேறிய நாள் = அறிவுடையோரான் ஏற்றுக்கொள்ளப்பெற்ற ஞான்று,
- வழுதியர் வளர்த்தது = பாண்டி மன்னர் பரிபாலித்ததே,
- சங்க காலம் = சங்க காலமாகும்.
- தலைமை இரண்டனுள் முன்னது புலமையின் மேற்று, பின்னது பாண்டியனவையத்துப் பூண்ட தலைமைப்பாடு. முன் தலைமைக்குத் தமிழின் வன்மை அதிகாரத்தாற் பெறப்பட்டது. உடன் எண்ணப்பட்ட உறுதிகள் நான்கனுள், செய்யுளாதலின் தலைமைபற்றி அறமே கூறிற்றாயினும், இனம் பற்றி ஏனை மூன்றும் கொள்ளப்படும்.
5. சித்தெலா நிறைந்து சித்தா யமர்ந்த () சித்து எலாம் நிறைந்து சித்து ஆய் அமர்ந்த
- தேசிகர் மரபில் சிறந்து விளங்கும் () தேசிகர் மரபில் சிறந்து விளங்கும்
- மடாதி பதிகளா மாண்பமை ஞானியர் () மடாதிபதிகளாம் மாண்பு அமை ஞானியர்
- அளவிற் படுவதவ் வதீன காலம். ()அளவில் படுவது அவ் அதீன காலம்.
- பவாநந்தர் பதவுரை
- சித்து எலாம் நிறைந்து = ஞானகுணங்கள் எல்லாம் நிறையப்பெற்று,
- சித்து ஆய் அமர்ந்த = அறிவுருவாய் அமர்ந்த,
- தேசிகர் மரபில் = ஆசாரிய சந்நதியில்,
- சிறந்து விளங்கும் = மேம்பட்டு விளங்கும்,
- மடாதிபதிகள் ஆம் = மடாதிபதிகளாகிய,
- மாண்பு அமை = பெருமை அமைந்த,
- ஞானியர் = ஞானியரது,
- அளவில் = அளவாக,
- படுவது = பொருந்தியிருப்பது,
- அ = அந்த,
- அதீன காலம் = ஆதீன காலம் ஆம்.
- அவ்வதீனகாலம் அளவிற்படுவது என முடிக்க. மடாதிபதிகள் காலம் மட்டும் தமிழ் நிலைகுலையாதிருந்தது என்றபடி.
6. கொல்லா விரதம் பூண்ட நலத்தோர் () கொல்லா விரதம் பூண்ட நலத்தோர்
- அறிவா னிறைந்த வறமாண் புடையோர் () அறிவால் நிறைந்த அற மாண்பு உடையோர்
- தமிழின தருமை தனியா யுணர்ந்தோர் (01) தமிழினது அருமை தனியாய் உணர்ந்தோர்
- கருவிநூற் காவியங் கழறும் பெரியோர் () கருவி நூல் காவியம் கழறும் பெரியோர்
- கால கதியாற் கடைநிலைப் படுவோர் ()கால கதியால் கடைநிலைப் படுவோர்
- தம்வயப் படுவது சமண காலம். () தம் வயப்படுவது சமண காலம்.
- பவாநந்தர் பதவுரை
- கொல்லா விரதம் = கொல்லாமையாகிய விரதத்தை,
- பூண்ட = மேற்கொண்ட,
- நலத்தோர் = நன்மையையுடையவர்,
- அறிவால் நிறைந்த = ஞானத்தால் நிரம்பப் பெற்ற,
- அம்மாண்பு உடையோர் = அறநெறியாகிய மாட்சிமையுடையவர்,
- தமிழினது அருமை = தமிழ்மொழியின் அருமையை,
- தனியாய் உணர்ந்தோர் = நிகரற அறிந்தவர்,
- கருவி நூல் காவியம் கழறும் பெரியோர் = கருவி நூல்களையும், காவியங்களையும் சொன்ன பெரியவர்,
- கால கதியால் = கால மாறுபாட்டால்,
- கடைநிலைப்படுவோர் தம் = குன்றிய சமயத்தினால் கடைப்பட்டவர்களாகிய சமணர்களது,
- வயப்படுவது = வசத்ததாகி வளர்க்கப்பெற்றது,
- சமண காலம் = சமணகாலம் ஆகும்.
7. தெய்வ மறையாம் செந்தமிழ்ப் பிதாமொழி () தெய்வ மறை ஆம் செந்தமிழ்ப் பிதா மொழி
- ஆரிய நங்கையோ டணைந்து கலந்து () ஆரிய நங்கையோடு அணைந்து கலந்து
- காவிய நடையால் கவிகள் பொழிய ()காவிய நடையால் கவிகள் பொழிய
- பொலிவுபெற் றிருப்பது புராண காலம். () பொலிவு பெற்று இருப்பது புராண காலம்.
- பவாநந்தர் பதவுரை
- செந்தமிழ் = செவ்விய தமிழாகிய,
- தெய்வ மறை ஆம் = தெய்விகமுள்ள மறைபோலும்,
- பிதா மொழி = பிதுர்ப் பாஷையானது,
- ஆரிய நங்கையோடு = ஆரியமாகிய பெண்ணோடு,
- அணைந்து கலந்து = தழுவிக் கூடி,
- காவிய நடையால் = காவிய நடையினால்,
- கவிகள் பொழிய = கவிகளைப் பொழியும்படி,
- பொலிவு பெற்று இருப்பது = விளக்கம் அடைந்திருப்பது,
- புராண காலம் = புராண காலம் ஆகும்.
8. தமிழினை யறியார் சார்பினிற் பட்டுப் () தமிழினை அறியார் சார்பினில் பட்டுப்
- பெருமை முற்றும் பிறழ்ந்து நோய்பட்டு () பெருமை முற்றும் பிறழ்ந்து நோய் பட்டு
- அந்நியர் வசப்பட் டழிந்து பிற்பட் () அந்நியர் வசப் பட்டு அழிந்து பிற்பட்டு
- டாதர விலாம லாகுங் காலத் ()ஆதரவு இலாமல் ஆகும் காலத்து
- தறனிகழ் அதம காலம் சென்றபின் () அறன் இகழ் அதம காலம் சென்ற பின்
- உண்மதச் செல்வரும் உயர்ஞா னியரும் () உள் மதச் செல்வரும் உயர் ஞானியரும்
- கொல்லா விரதங் கொளுமந் தணரும் () கொல்லா விரதம் கொளும் அந்தணரும்
- உலகிற் பரவி யுவந்தாங் கொளிரவும் ()உலகில் பரவி உவந்து ஆங்கு ஒளிரவும்
- தமிழே சிவமாய்த் தழைத்து வளரவும் () தமிழே சிவம் ஆய்த் தழைத்து வளரவும்
- அற்புதச் சிற்சபை யண்ணல் விளையாட் () அற்புதச் சிற் சபை அண்ணல் விளையாட்டு
- டருளாற் றழைக்கு மதுசத் தியமே. () அருளால் தழைக்கும் அது சத்தியமே. (எதிர்காலம்)
- பவாநந்தர் பதவுரை
- தமிழினை அறியார் = (புராணகாலத்தின் பின்) தமிழ்மொழி தன்னை அறியாதவரது,
- சார்பினில் பட்டு = வசமாகி,
- பெருமை முற்றும் பிறழ்ந்து = பெருமை முழுதும் மாறுபட்டு,
- நோய் பட்டு = பல இடையூறுகளால் மெலிந்து,
- அந்நியர் வசப்பட்டு அழிந்து = பிறர் வசப்பட்டழிந்து,
- பிற்பட்டு = பிறகிட்டு,
- ஆதரவு இல்லாமல் ஆகும் காலத்து = பற்றுக்கோடில்லாமல் குலையும் காலத்தில்,
- அறன் இகழ் அதம காலம் சென்ற பின் = தருமநெறி இழிக்கப்படுவதாகிய பொல்லாக் காலம் கழிந்த பின்பு,
- உள் மதச் செல்வரும் = உட்சமயச் செல்வரும்,
- உயர் ஞானியரும் = உயர்ந்த ஞானவான்களும்,
- கொல்லா விரதம் கொள்ளும் = கொல்லாமையாகிய விரதத்தை மேற்கொண்ட,
- அந்தணரும் = வேதியரும்,
- உலகில் பரவி = உலகத்தில் நிறைந்து,
- உவந்து ஒளிரவும் = களிக்குமாறு உலகில் விளங்கவும்,
- தமிழே = அத்தமிழ் மொழிதானே,
- சிவமாய் = மங்களகரமாய்,
- தழைத்து வளரவும் = செழித்து ஓங்கவும்,
- அற்புதம் = ஆச்சரியகரமாகிய,
- சிற்சபை = ஞானசபையில் உள்ள,
- அண்ணல் = சிவபெருமானது,
- விளையாட்டு = திருவிளையாடலானது,
- அருளால் = திருவருளால்,
- தழைக்கும் = செழிக்கும்,
- அது = அச்செய்திதான்,
- சத்தியமே = உண்மையேயாம்.
- தமிழ்மொழி அதிகாரத்தாற் பெறப்பட்டது. தமிழே என்பதன் ஏகாரம் உலகின் மற்ற எல்லா மொழிகளினும் சிறந்து வளம்பெறும் தன்மைத்தான் என உணர்த்தலின் பிரிநிலையாம். தேற்றுமும் ஆம் என்க.
9. தமிழ்சிவ மினிமை யெனுந்தனிப் பொருளாம் ()தமிழ் சிவம் இனிமை எனும் தனிப் பொருள் ஆம்
- அமிழ்தெனும் அநாதி யியற்கையாய்ப் பன்னிரு () அமிழ்து எனும் அநாதி இயற்கையாய்ப் பன் இரு
- கலையினை யுடைய கதிரவ னென்னத் () கலையினை உடைய கதிரவன் என்னத்
- தலைமையா யமைந்த தனியியற் பிதாமொழி. () தலைமையான் அமைந்த தனி இயல் பிதா மொழி.
- பவாநந்தர் பதவுரை
- பன்னிரு கலையினையுடைய கதிரவன் என்ன = பன்னிரண்டு கலைகளால் (புறவிருளைச் சீக்கும்) தலைமைப் பாட்டினையுடைய சூரியனே போல,
- தலைமையாய் அமைந்த = (பன்னிரண்டு கொடுந்தமிழானும் அறியாமையைப் போக்கும்) தலைமைப்பாட்டினைக் கொண்ட,
- அமிழ்து எனும் தமிழ் = செந்தமிழ் மொழியாகிய,
- தனி இயல் = தனிமை என்னும் இயல்வாய்ந்த,
- பிதா மொழி = முன்மொழி,
- அநாதி இயற்கையாய் = ஏனை மொழிகளுக்கு முந்தியதாய்,
- தனிப் பொருளாம் = என்றும் அழியா இயல்பிற்றாய ஒப்பற்ற பொருளை உள்ளீடாகக் கொண்டதாகும்.
10. சோதியாங் கசடத பக்கள் தோற்றத்தைக் () சோதி ஆம் க ச ட த பக்கள் தோற்றத்தைக்
- காதிநன் னான்காய்க் கணித்துக் காட்டி ()காதி நன்னான்கு ஆய்க் கணித்துக் காட்டி
- உதாத்த முதலிய வோசையுள் ளனவாய் () உதாத்தம் முதலிய ஓசை உள்ளனவாய்
- நிதானித் தணிபெற நிலைக்கச் செய்து () நிதானித்து அணி பெற நிலைக்கச் செய்து
- மற்றைய வெழுத்தையவ் வாறே யியற்றப் () மற்றைய எழுத்தை அவ்வாறே இயற்றப்
- பெற்றிலா மையினாற் பெரிதுளம் வாடினர் ()பெற்று இலாமையினால் பெரிது உளம் வாடினர்
- இனிய ழகாரம் எமக்கிங் குரித்தெனாக் () இனிய ழகாரம் எமக்கு இங்கு உரித்து எனாக்
- கனிவொடு காட்டாக் கள்ளமென் சொல்வேம் ()கனிவொடு காட்டாக் கள்ளம் என் சொல்வேம்
- வாதிக ளாகி வழக்குப் பேசும் () வாதிகள் ஆகி வழக்குப் பேசும்
- ஆதிச் செயற்கை மொழியதா மாரியஞ் () ஆதிச் செயற்கை மொழியதாம் ஆரியம்
- சோடச கலையாய்த் துலங்குறு சந்திரன் () சோடச கலையாய்த் துலங்கு உறு சந்திரன்
- மாடகத் தோங்கு மாதுரு மொழியே. () மாடகத்து ஓங்கும் மாதுரு மொழி ஏ.
- பவாநந்தர் பதவுரை
- சோதி ஆம் = (மற்றைய எழுத்துக்களினும்) விளக்கம் பெறும்,
- க ச ட த பக்கள் தோற்றத்தை = க, ச, ட, த, ப என்னும் எழுத்துக்களின் உற்பத்தியை,
- காதி = முயன்று,
- நன்னான்காய் = ஒவ்வோரெழுத்தினுக்கு நான்கு ஓசையினைக் கொண்டதாக,
- கணித்துக் காட்டி = கணக்கிட்டுக் காட்டியது அன்றியும்,
- உதாத்தம் முதலிய ஓசை உள்ளனவாய் = உதாத்தம் முதலிய சுரபேதங்களைக் கொண்டதாக,
- நிதானித்து = நிருத்தமுறையானே கவனித்து,
- அணி பெற = அழகு உண்டாக,
- நிலைக்கச் செய்து = நிலைநாட்டி வைத்ததன்றியும்,
- மற்றைய = மற்றும் உள்ளனவாகிய,
- எழுத்தை = அக்கரங்களை,
- அவ்வாறே இயற்ற = அம்முறையே உதாத்தம் முதலியவைகளைக் காட்டி முடிக்க,
- பெற்றிலாமையினால் = கூடாமையால்,
- பெரிது உளம் வாடினர் = (அவ்வடமொழிக்கு உரியவர்) மிகவும் மனம் நைந்தனர்;
- இனிய = (தமிழ்மொழிக்கே) சிறந்த,
- ழகாரம் = ழகரம் என்னும் எழுத்தும்,
- எமக்கு இங்கு உரித்து எனா = எமக்கு இங்கு உரியதாகுமென்று,
- கனிவொடு = அன்போடு,
- காட்டா = காட்டாமல் மறைத்த,
- கள்ளம் = வஞ்சனையை,
- என் சொல்வோம் = யாதென்று கூறுவோம்.
- வாதிகள் ஆகி = வழக்குத் தொடுப்பவர் ஆகி,
- வழக்குப் பேசும் = வீண் வாதம் ஆடுகின்ற,
- ஆதிச் செயற்கை மொழியதாம் ஆரியம் =ஆதியின் உதாத்தம் முதலியவைகளைச் செயற்கையாகக் கொண்ட மொழியாகிய ஆரியமானது,
- சோடச கலையாய் = பதினாறு கலைகளோடு கூடி,
- துலங்குறு சந்திரன் மாடு = விளங்குகின்ற சந்திரன் போல,
- அகத்து ஓங்கும் = கற்போரது உள்ளத்தில் விளங்குகின்ற,
- மாதுரு மொழி = தாய்மொழி ஆகும்.
- உதாத்தம் முதலிய என்றது, உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம், ப்ரசயம் என்பன. இவற்றை முறையே தமிழ் நூலோர் எடுத்தல், படுத்தல், நலிதல், உழைப்பு என்பர்.
மதிவாணர் வெண்பா
11. எழுத்தொடு சொற்பொருள் யாப்பணி யென்னா ()எழுத்தொடு சொல் பொருள் யாப்பு அணி என்னா
- வழுத்துஞ் சுருதிசுரம் வண்ணம் - அழுத்துந் () வழுத்தும் சுருதி சுரம் வண்ணம் - அழுத்தும்
- தனியொத்துப் பாவம் சரச மிரசம் () தனி ஒத்துப் பாவம் சரசம் இரசம்
- பனிரண் டிலக்கணமாம் பார். () பனிரண்டு இலக்கணம் ஆம் பார்.
- பவாநந்தர் பதவுரை
- இலக்கணம் = இலக்கணமானது,
- எழுத்தொடு = எழுத்திலக்கணத்துடன்,
- சொல் பொருள் யாப்பு அணி என்னா = சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் என்றும்,
- வழுத்தும் = சொல்லப்பட்ட,
- சுருதி = சுருதியிலக்கணம்,
- சுரம் = சுரவிலக்கணம்,
- வண்ணம் (என்னா) = இராகவிலக்கணம் என்றும்,
- அழுத்தும் = அழுத்துதற்குரிய,
- தனி = ஒப்பற்ற,
- ஒத்து = தாள இலக்கணம்,
- பாவம் = பாவனை இலக்கணம்,
- சரசம் = அலங்கார இலக்கணம்,
- இரசம் (என்னா) = நவரசவிலக்கணம் என்றும் சொல்லுமாறு,
- பன்னிரண்டு ஆம் = பன்னிரண்டு வகையினை உடைத்தாம்.
- பொழிப்புரை
- இயற்றமிழுக்கு உரிய எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணமும்; இசைத்தமிழுக்குரிய சுருதி, சுரம், இராகம் என்னும் மூன்றிலக்கணமும்; நாடகத்தமிழுக்கு உரிய தாளம், பாவனை, அலங்காரம், நவரசமென்னும் நான்கிலக்கணமும் என்று சொல்லுமாறு முத்தமிழுக்குரிய இலக்கணமானது பன்னிரண்டு வகையினை உடைத்தாம்.
- இயலிசை நாடகம் என்னும் முத்தமிழில், முன்னது ஏனையிரண்டினும் சிறந்தது என்பது தோன்ற என்னா எனும் இடைச்சொல் கொடுத்துப் பிரித்து ஓதினார்.
நாடகம்
¶ இயலிசை யுடன்பா வனையலங் காரம், ()இயல் இசை உடன் பாவனை அலங்காரம்
- தாள மிரதந் தழைப்பன நாடகம். () தாளம் இரதம் தழைப்பன நாடகம்.
- பவாநந்தர் பதவுரை
- இயல் = இலக்கணம்,
- இசை = சங்கீதம்,
- உடன் = இவற்றுடன்,
- பாவனை = அபிநயம்,
- அலங்காரம் = அழகின் இலக்கணம்,
- தாளம் = தாள இலக்கணம்,
- இரதம் (ரஸம்) = நவரச இலக்கணம் (ஆகிய இவை),
- தழைப்பன = மிகுந்திருப்பன, (எவையோ அவை)
- நாடகம் = நாடகம் எனப்படும்.
விலாசம்
¶ நாட கத்திடை வாசகம் வினாவிடையாய் ()நாடகத்து இடை வாசகம் வினா விடையாய்
- மேவி நடையுறு வனவிலாச மென்பர். () மேவி நடையுறுவன விலாசம் என்பர்.
- பவாநந்தர் பதவுரை
- நாடகத்து இடை = நாடகத்தில்,
- வாசகம் = வசனம்,
- வினா விடையாய் = கேள்வியும் உத்தரமுமாய்,
- மேவி = பொருந்தி,
- நடையுறுவன = நடைபெற்று வழங்குவன,
- விலாசம் என்பர் = விலாசம் என்று சொல்லுவர் இசைநாடக இலக்கணம் உணர்ந்தோர்.
வாசகப்பா
¶ ஆசிரி யப்பா கலந்த வாசகம் () ஆசிரியப்பா கலந்த வாசகம்
- வாசகப் பாவென வழுத்தினர் புலவர். () வாசகப் பா என வழுத்தினர் புலவர்.
- பவாநந்தர் பதவுரை
- ஆசிரியப்பா = அகவற்பாவுடன்,
- கலந்த = கூடின,
- வாசகம் = வசனமானது,
- வாசகப்பா என = வாசகப்பா ஆகும் என்று,
- புலவர் = அறிவுடையோர்,
- வழுத்தினர் = சொல்லினர்.
[¶ இம்மூன்று சூத்திரங்களும் அகத்தியனார் செய்தனவென்ப. மற்ற விஷயங்களை இசைநாடக விளக்கத்திற் கண்டுகொள்க.]
()
()
பார்க்க
தொகுபேரிசைச் சூத்திரம்மூலமும் உரையும்