4. பன்மொழியாக்கப் படலம்

பேரகத்தியம்

தொகு

ஆசிரியர்: அகத்தியனார்

தொகு

உரையாசிரியர்: ச.பவாநந்தம் பிள்ளை அவர்கள்

தொகு

முதலாவது எழுத்திலக்கணக் காண்டம்

தொகு

4. பன்மொழியாக்கப் படலம்

தொகு

அஃதாவது - புணர்ச்சி அறிவிக்குமுன் பல சொற்களின் ஆக்கத்தை உணர்த்தும் படலம்.


129. மொழிந்த வெழுத்தான் மொழிவதே மொழியாம். (01) () மொழிந்த எழுத்தான் மொழிவதே மொழி ஆம்.

பவாநந்தர் உரை
இஃது மொழியாமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
மொழிந்த எழுத்தான் = (முன்) சொன்ன எழுத்தினால்,
மொழிவதே = சொல்லுவதே,
மொழி ஆம் = சொல்லாகும்.
பொழிப்புரை
(முன்) சொன்ன எழுத்துக்களாற் சொல்லுவதே சொல்லாகும்.
ஓரெழுத்தொருமொழி

130. உயிர்நெட் டெழுத்தே ழோரெழுத் தொருமொழி. (02) () உயிர் நெட்டெழுத்து ஏழ் ஓர் எழுத்து ஒரு மொழி.

பவாநந்தர் உரை
இஃது ஓரெழுத்தொருமொழி இவை என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
உயிர் நெட்டெழுத்து ஏழ் = உயிர் நெட்டெழுத்துக்கள் ஏழும்,
ஓர் எழுத்து ஒரு மொழி = ஓரெழுத்து ஒரு மொழிகளாம்.
பொழிப்புரை
உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் ஓரெழுத்து ஒரு மொழிகளாம்.

உதாரணம்: ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஔ.

ஆ= பசு, ஈ= ஒரு சிறு பறவை, ஊ = இறைச்சி, ஏ = அம்பு, ஐ = அழகு, ஓ = மதகுநீர் தாங்கும் பலகை, ஔ = சுட்டுப்போலி; இஃது அவ் என்னுஞ் சுட்டுக்கு ஒருபுடை ஒப்புமையான் வருவது.


131. குற்றெழுத் தைந்து மொழிநிறைந் தியலா. (03) () குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைந்து இயலா.

பவாநந்தர் உரை
இஃது ஓரெழுத்து ஒருமொழி ஆகாதன இவை என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
குற்றெழுத்து ஐந்தும் = உயிர்க் குற்றெழுத்துக்கள் ஐந்தும்,
மொழி நிறைந்து இயலா = ஓரெழுத்து ஒருமொழிகள் ஆகா.
பொழிப்புரை
உயிர்க்குற்றெழுத்துக்கள் ஐந்தும் ஓரெழுத்துஒருமொழிகள் ஆகா.


132. க ச த ந ப ம வ வருக்கமவ் வாறாம். (04) () க ச த ந ப ம வ வருக்கம் அவ்வாறு ஆம்

பவாநந்தர் உரை
இஃது ககர முதலாகிய ஏழு வருக்கத்திலும் தனித்தனி அவ்வாறு எழுத்துக்கள் ஓரெழுத்தொருமொழிகள் ஆம் என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
க ச த ந ப ம வ வருக்கம் = ககர முதல் வகரம் இறுதியாக உள்ள இவ்வேழு வருக்கத்திலும்,
அவ்வாறு ஆம் = தனித்தனி அவ்வாறு எழுத்துக்கள் ஓரெழுத்து ஒருமொழிகள் ஆகும்.
பொழிப்புரை
ககர முதல் வகரம் இறுதியாகவுள்ள இவ்வேழு வருக்கத்திலும் தனித்தனி அவ்வாறெழுத்துக்கள் ஓரெழுத்தொரு மொழிகள் ஆகும்.
உதாரணம்:
கா = சோலை கு = பூமி கூ = கூவென்னேவல் கை = ஓர் அவயவம் கோ = அரசன் கௌ =கௌவென்னேவல்.
சா = சாவென் ஏவல் சீ = சீயென் ஏவல் சு = நன்மை சே= எருது சை = இகழ்ச்சிக் குறிப்பு சோ = அரண்
தா = கொடுவென் ஏவல் தீ = நெருப்பு து = துவ்வென் ஏவல்/ உண் தூ = பரிசுத்தம் தே = தெய்வம் தை= தெய்வம்
நா = நாக்கு நீ = நீயென் ஏவல் நே = அன்பு நை = நையென் ஏவல் நொ = துன்பப் படு நோ = துன்பம்
பா = பாடல் பீ = மலம் பூ = மலர் பே = நுரை பை = பாம்பின் படம் போ = போவேன் ஏவல்
மா = ஓர் மரம் மீ = மேலிடம் மூ = மூவென் ஏவல் மே = அன்பு மை = மேகம் மோ = மோவென் ஏவல்
வா = வாவென் ஏவல் வி = அதிகம், இன்மை முதலியவற்றை உணர்த்தும் ஓர் உபசர்க்கம் வீ = மலர் வே = வேவென் ஏவல் வை = கூர்மை வௌ = வௌவென் ஏவல்
நால்வகை மொழிகள்


133. மொழியே, () மொழியே,

பெயர்வினை யிடையுரி நான்கென மொழிப. (05) () பெயர் வினை இடை உரி நான்கு என மொழிப.
பவாநந்தர் உரை
இஃது மொழிகள் நால்வகையாம் என்பது உணர்த்துகின்றது
பதவுரை
மொழி = மொழிகள்,
பெயர் = பெயர்ச்சொல்லும்,
வினை = வினைச்சொல்லும்,
இடை = இடைச்சொல்லும்,
உரி = உரிச்சொல்லும் ஆக,
நான்கு என மொழிப = நான்குவகை என்று சொல்லுவர் புலவர்.
பொழிப்புரை
மொழிகள் பெயர்ச்சொல்லும், வினைச்சொல்லும், இடைச்சொல்லும், உரிச்சொல்லும் ஆக நான்குவகை என்றுசொல்லுவர் புலவர்.
மொழிப என்னும் வினைக்கு வினைமுதல் வருவித்து உரைக்கப்பட்டது.
பெயர்ச்சொல்

134. பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிற்பெயர். (06) () பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் பெயர்.

பவாநந்தர் உரை
இஃது பெயர்ச்சொற்கள் இன்னவென்பது உணர்த்துகின்றது
பதவுரை
பொருள் = பொருளும்,
இடம் = இடமும்,
காலம் = காலமும்,
சினை = சினையும்,
குணம் = குணமும்,
தொழில் = தொழிலும் (ஆகிய இவ்வாறும்),
பெயர் = பெயர்ச்சொற்களாம்.
பொழிப்புரை
பொருளும் இடமும் காலமும் சினையும் குணமும் தொழிலும் (ஆகிய இவ்வாறும்) பெயர்ச்சொற்களாம்.


வினைச்சொல்


135. வினைபல நிகழினும் வினைச்சொ லென்க. (07) () வினை பல நிகழினும் வினைச் சொல் என்க

பவாநந்தர் உரை
இஃது வினைச்சொல்லாமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
வினை = வினைகள்,
பல நிகழினும் = பலவாக நடப்பினும், (அவை யாவும்),
வினைச்சொல் என்க = வினைச்சொல்லேயென்று சொல்லுக.
பொழிப்புரை
வினைகள் பலவாக நடப்பினும் அவை யாவும் வினைச்சொல்லே யென்று சொல்லுக.


இடைச்சொல்


136. பெயர்வினை யிடத்துப் பிறப்ப திடைச்சொலே. (08) ()பெயர் வினை இடத்துப் பிறப்பது இடைச் சொலே.

பவாநந்தர் உரை
இஃது இடைச்சொல்லாமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
பெயர் வினை இடத்துப் பிறப்பது = பெயரினிடமாகவும் வினையினிடமாகவும் பிறப்பது,
இடைச்சொல் = இடைச்சொல்லாகும்.
பொழிப்புரை
பெயரினிடமாகவும், வினையினிடமாகவும் பிறப்பது இடைச்சொல்லாகும்.
உரிச்சொல்

137. பெயர்வினைக் குணங்களைப் பெருக்குவ துரிச்சொலே. (09) () பெர் வினைக் குணங்களைப் பெருக்குவது உரிச்சொல் ஏ.

பவாநந்தர் உரை
இஃது உரிச்சொல்லாமாறு உணர்த்துகின்றது
பதவுரை
பெயர் வினைக் குணங்களை = பெயரின் குணங்களையும் வினையின் குணங்களையும்,
பெருக்குவது = விளக்கிச் சொல்வது,
உரிச்சொல் = உரிச்சொல்லாம்.
பொழிப்புரை
பெயரின் குணங்களையும் வினையின் குணங்களையும் விளக்கிச் சொல்வது உரிச்சொல்லாம்.


138. பெயரிரு திணையைம் பான்மூ விடம்பெறும். (10) () பெயர் இரு திணை ஐம்பால் மூ இடம் பெறும்.

பவாநந்தர் உரை
இஃது பெயர்ச்சொல்லானது இருதிணை ஐம்பால் மூவிடங்களைப் பெறும் என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
பெயர் = பெயர்ச்சொற்கள்,
இருதிணை = இருதிணையையும்,
ஐம்பால் = ஐம்பாலினையும்,
மூவிடம் = மூன்றிடத்தையும்,
பெறும் = பெற்று நடக்கும்.
பொழிப்புரை
பெயர்ச்சொற்கள் இருதிணையையும், ஐம்பாலினையும், மூன்றிடத்தையும் பெற்று நடக்கும்.
இருதிணை - உயர்திணை, அஃறிணை என்பன. இவற்றுள் மக்கள் தேவர் நரகர்களை உணர்த்துவது உயர்திணை; விலங்கு முதலிய உயிருள்ளனவும் கல் முதலிய உயிரில்லனவுமாகிய பொருள்களை உணர்த்துவது அஃறிணை.
ஐம்பாலாவன: உயர்திணை - ஆண்பால் பெண்பால் பலர்பால்களும், அஃறிணை - ஒன்றன்பால் பலவின்பால்களுமாம்.
மூவிடமாவன - தன்மையிடம் முன்னிலையிடம் படர்க்கையிடம் என்பனவாம்.
மொழிவகை

139. தனிமொழி யிணைமொழி துணைமொழி பொதுமொழி () தனி மொழி இணை மொழி துணை மொழி பொது மொழி

கணமொழி தணமொழி கலப்புறு மொழியேழ். (11) ()கண மொழி தண மொழி கலப்பு உறு மொழி ஏழ்
பவாநந்தர் உரை
இஃது மொழிவகையினை உணர்த்துகின்றது
பதவுரை
தனிமொழி = தனிமொழி எனவும்,
இணை மொழி = இணைமொழி எனவும்,
துணை மொழி = துணைமொழி எனவும்,
பொது மொழி = பொதுமொழி எனவும்,
கண மொழி = கணமொழி எனவும்,
கலப்புறு மொழி = கலப்புறுமொழி எனவும்,
ஏழ் = (மொழியானது) ஏழுவகையினை உடையதாம்.
பொழிப்புரை
தனிமொழி, இணைமொழி, துணைமொழி, பொதுமொழி, கணமொழி, கலப்புறுமொழி என (மொழியானது) ஏழுவகையினை உடையதாம்.
கலம், நீர் என்பன தனிமொழி.
தேரன், ஊரன் என்பன இணைமொழி.
மூவர் வந்தார், வேந்தர் வந்தார் என்பன துணைமொழி.
தங்கை, வேங்கை என்பன பொதுமொழி.
முனிவர், தேவர் என்பன கணமொழி.
இந்திரன், சந்திரன் என்பன தணமொழி.
ஆண், பெண் என்பன கலப்புறுமொழி.
இவை முறையே, பிரிக்கப்படாமலும், பிரிக்கப்பட்டும், தொடர்ந்து வந்தும், இருபொருள் கொண்டும், பன்மையைக் காட்டியும், ஒருமையைக் காட்டியும், இருதிணையிலும் கலந்து வந்தும் இப்பெயர் பெற்றன.


மொழிகளின் எழுத்து வரையறை

140. மொழியே, () மொழியே,

ஓரெழுத் தாதியா வொன்பதெழுத் தந்தமாம். (12) () ஓர் எழுத்து ஆதியா ஒன்பது எழுத்து அந்தம் ஆம்.
பவாநந்தர் உரை
இஃது மொழிகளின் எழுத்து வரையறை உணர்த்துகின்றது.
பதவுரை
மொழி = மொழிகள்,
ஓர் எழுத்து ஆதியா = ஓரெழுத்து முதலாக,
ஒன்பது எழுத்து அந்தம் = ஒன்பதெழுத்து முடிவாக,
ஆம் = வரும்.
பொழிப்புரை
மொழிகள் ஓரெழுத்து முதலாக ஒன்பதெழுத்து முடிவாக வரும்.
இம்மொழிகளுள், பகாப்பதங்கள் இரண்டெழுத்து முதலாக ஏழெழுத்து ஈறாகவும், பகுபதங்கள் இரண்டெழுத்து முதலாக ஒன்பதெழுத்து ஈறாகவும் வரும்.

உதாரணம்: அணி, கலம், பொருப்பு, அருப்பம், குங்கிலியம், உத்திரட்டாதி - இவை பகாப்பதங்கள்.

கூனி, கூனன், குழையன், பொருப்பன், அம்பலவன், அரங்கத்தான், உத்திராடத்தான், உத்திரட்டாதியான் - இவை பகுபதங்கள்.


பேரகத்தியம் எழுத்திலக்கணக் காண்டம் நான்காவது பன்மொழியாக்கப் படலம் முற்றிற்று


பார்க்க
தொகு

பேரகத்தியத்திரட்டு

பேரகத்தியச் சூத்திரம்

1. எழுத்துப் படலம்

2. எழுத்துற்பத்திப் படலம்

3. எழுத்து வரன்முறைப் படலம்

4. பன்மொழியாக்கப் படலம்

5. வடமொழிப் படலம்


[[]]

"https://ta.wikisource.org/w/index.php?title=4._பன்மொழியாக்கப்_படலம்&oldid=1035275" இலிருந்து மீள்விக்கப்பட்டது