2. எழுத்துற்பத்திப் படலம்

பேரகத்தியம்

தொகு

ஆசிரியர்: அகத்தியனார்

தொகு

உரையாசிரியர்: ச.பவாநந்தம் பிள்ளை அவர்கள்

தொகு

முதலாவது எழுத்திலக்கணக் காண்டம்

தொகு

2. எழுத்துற்பத்திப் படலம்

தொகு
அஃதாவது - எழுத்தினது பிறத்தலை உணர்த்தும் படலம்.


61. ஆத னநாதியு முதாநனா தியுமா ()ஆதன் அநாதியும் உதாநன் ஆதியும் ஆ

நாதமுரங் கண்டந் தலையிட முற்றுப் () நாதம் உரம் கண்டம் தலை இடம் உற்று
பல்லிதழ் நாமூக் கணமைந் தொழிலா () பல் இதழ் நா மூக்கு அணம் ஐ தொழிலால்
லெல்லா வெழுத்தும் பிறக்கு மென்ப. (01) எல்லா எழுத்தும் பிறக்கும் என்ப.(௧)
பவாநந்தர் உரை
இஃது எல்லா வெழுத்துக்களும் பிறக்குமாறு இதுவென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
ஆதன் = உயிர்,
அநாதியும் = அநாதியாகவும்,
உதாநன் = உதாநவாயு,
ஆதியும் ஆ = ஆதியாகவும் (நின்றெழுகின்ற),
நாதம் = நாதமானது,
உரம் = மார்பு,
கண்டம் = கண்டம்,
தலை = தலை,
இடம் = (ஆகிய) இம்மூவிடங்களையும்,
உற்று = பொருந்த,
பல் = பல்,
இதழ் = இதழ்,
நா = நா,
மூக்கு = மூக்கு,
அணம் = அண்ணம்,
ஐந்தொழிலால் = (ஆகிய) இவ்வைந்தின் தொழில்களால்,
எல்லா எழுத்தும் = எழுத்துக்களெல்லாம்,
பிறக்கும் என்ப = பிறக்குமென்று சொல்லுவர் (அறிஞர்).
பொழிப்புரை
உயிர் அநாதியாகவும், உதாநவாயு ஆதியாகவும் நின்று எழுகின்ற நாதமானது, மார்பு கண்டம் தலை ஆகிய இம்மூவிடங்களையும் பொருந்த, பல் இதழ் நா மூக்கு அண்ணம் ஆகிய இவ்வைந்தின் தொழில்களால் எழுத்துக்களெல்லாம் பிறக்கும் என்று சொல்லுவர் அறிஞர்.

நாதம் - ஒலி; அண்ணம் - மேல்வாய். உற்று - செயவென் எச்சத்திரிபு: காரணப்பொருட்டு.


62.ஆவி யிடைமை யிடமிட றாகு ஆவி இடைமை இடம் மிடறு ஆகும்

மேவு முரம்வலி மெல்லின மூக்காம். (02) () மேவும் உரம் வலி மெல் இனம் மூக்கு ஆம். (௨)
பவாநந்தர் உரை
இஃது உயிர் முதலிய எழுத்துக்கள் இவ்விவ்விடத்திற் பிறக்கும் என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
ஆவி = உயிரும்,
இடைமை = இடையின மெய்களும்,
இடம் = (ஆகிய இவற்றிற்குப்) பிறப்பிடம்,
மிடறு ஆகும் = கண்டமாகும்;
வலி = வல்லின மெய்கள்,
உரம் மேவும் = மார்பைத் தமக்குப் பிறப்பிடமாகப் பெறும்;
மெல்லினம் = மெல்லின மெய்களுக்கு,
மூக்கு = மூக்கு,
ஆம் = பிறப்பிடம் ஆகும்.
பொழிப்புரை
உயிரும் இடையின மெய்களும் ஆகிய இவற்றிற்குப் பிறப்பிடம் கண்டம் ஆகும்; வல்லின மெய்கள் மார்பைத் தமக்குப் பிறப்பிடமாகப் பெறும்; மெல்லின மெய்களுக்கு மூக்குப் பிறப்பிடமாகும்.
ஆவி (உயிர்) போறலின் ஆவி என்றார்; இஃது உவமவாகு பெயர்.


63. அவற்றுள், () அவற்றுள்,

அஆ இரண்டு மங்காந் தியலும். (03) () அ ஆ இரண்டும் அங்காந்து இயலும். (௩)
பவாநந்தர் உரை
இஃது அகர ஆகாரங்கள் இன்ன முயற்சியாற் பிறக்கும் என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
அவற்றுள் = அவ்வெழுத்துக்களுள்,
அ ஆ இரண்டும் = அகர ஆகாரங்களாகிய இரண்டும்,
அங்காந்து = வாய்திறக்க,
இயலும் = பிறக்கும்.
பொழிப்புரை
அவ்வெழுத்துக்களுள் அ ஆ என்னும் இவ்விரண்டும் வாய்திறத்தலாற் பிறக்கும்.
அங்காத்தல் - வாய்திறத்தல். அங்காந்து செயவென் எச்சத் திரிபு; இது காரணப்பொருட்டு.


64. இஈஎஏ ஐ அங் காப்புட () இ ஈ எ ஏ ஐ அங்காப்பு உடன்

னண்பன் முதனா விளிம்புற லுடைய. (04) ()அண் பல் முதல் நா விளிம்பு உறல் உடைய. (௪)
பவாநந்தர் உரை
இஃது இகர முதலி ஐந்தன் முயற்சிப் பிறப்பு உணர்த்துகின்றது.
பதவுரை
இ ஈ எ ஏ ஐ = இ ஈ எ ஏ ஐ என்னும் இவ்வைந்தும்,
அங்காப்புடன் = வாய்திறத்தலோடு,
அண் பல் = மேல்வாய்ப் பல்,
முதல் நா விளிம்பு = அடி நாவின் ஓரத்தை,
உறல் உடைய = பொருந்தலாற் பிறத்தலை யுடையன.
பொழிப்புரை
இ ஈ எ ஏ ஐ என்னும் இவ்வைந்தும் வாய் திறத்தலோடு மேல்வாய்ப் பல் அடிநாவின் ஓரத்தைப் பொருந்தலாற் பிறத்தலையுடையன.
அங்காப்பு - தொழிற்பெயர்.

65. உ ஊ ஒ ஓ ஔ விதழ்குவிந் தியலும். (05) () உ ஊ ஒ ஓ ஔ இதழ் குவிந்து இயலும். (௫)

பவாநந்தர் உரை
இஃது உகர முதலிய ஐந்தன் முயற்சிப் பிறப்பு உணர்த்துகின்றது.
பதவுரை
உ ஊ ஒ ஓ ஔ = உ ஊ ஒ ஓ ஔ என்னும் இவ்வைந்தும்,
இதழ் குவிந்து = இதழ் குவிய,
இயலும் = பிறக்கும்.
பொழிப்புரை
உகர முதலிய ஐந்தும் இதழ் குவிதலாற் பிறக்கும்.
குவிந்து செயவென் எச்சத் திரிபு.

66. ககார ஙகார முதனா முதலணம். (06) () ககாரம் ஙகாரம் முதல்நா முதல் அணம். (௬)

பவாநந்தர் உரை
இஃது ககார ஙகாரங்களின் முயற்சிப் பிறப்பு உணர்த்துகின்றது.
பதவுரை
ககார ஙகாரம் = ககார ஙகாரங்கள்,
முதல் நா = அடிநாவும்,
முதல் அணம் = அடியண்ணமும் (ஆகிய இவற்றின் முயற்சியாற் பிறக்கும்).
பொழிப்புரை
ககார ஙகாரங்கள் அடிநாவும், அடியண்ணமும் ஆகிய இவற்றின் முயற்சியாற் பிறக்கும்.
ஆகிய இவற்றின் முயற்சியாற் பிறக்கும் என்பது இசையெச்சம். பின் வருவனவற்றிற்கும் இங்ஙனமே கொள்க.

67. சகார ஞகார மிடைநா விடையணம். (07) () சகாரம் ஞகாரம் இடை நா இடை அணம். (௭)

பவாநந்தர் உரை
இஃது சகார ஞகாரங்களின் முயற்சிப் பிறப்பு உணர்த்துகின்றது.
பதவுரை
சகார ஞகாரம் = சகார ஞகாரங்கள்,
இடைநா இடை அணம் = இடைநாவும் இடையண்ணமும் (பொருந்துதலாற் பிறக்கும்).
பொழிப்புரை
சகார ஞகாரங்கள் இடைநாவும் இடையண்ணமும் பொருந்துதலாற் பிறக்கும்.


68. டகார ணகார நுனிநா நுனியணம். (08) ()டகாரம் ணகாரம் நுனி நா நுனி அணம்.(௮)

பவாநந்தர் உரை
இஃது டகார ணகாரங்களின் முயற்சிப் பிறப்பு உணர்த்துகின்றது.
பதவுரை
டகாரம் ணகாரம் = டகார ணகாரங்கள்,
நுனி நா நுனி அணம் = நுனி நாவும் நுனி அண்ணமும் (பொருந்துதலாற் பிறக்கும்).
பொழிப்புரை
டகார ணகாரங்கள் நுனிநாவும் நுனியண்ணமும் பொருந்துதலாற் பிறக்கும்.


69. அண்பல் லடிநா முடியுறத் தநவாம். (09) () அண் பல் அடி நா முடி உறத் த ந ஆம்.(௯)

பவாநந்தர் உரை
இஃது தகார நகாரங்களின் முயற்சிப் பிறப்பு உணர்த்துகின்றது.
பதவுரை
அண்பல் அடி = மேற்பல்லடியை,
நா முடி உற = நாவின் நுனி பொருந்துதலால்,
த ந ஆம் = தகார நகாரங்கள் பிறக்கும்.
பொழிப்புரை
மேற்பல்லடியை நாவினுனி பொருந்துதலால் தகார நகாரங்கள் பிறக்கும்.
முடி - நுனி.


70. இரண்டிதழ் பொருந்தப் பகரமக ரம்வரும். (10) () இரண்டு இதழ் பொருந்த பகரம் மகரம் வரும்.(௰)

பவாநந்தர் உரை
இஃது பகர மகரங்களின் முயற்சிப் பிறப்பு உணர்த்துகின்றது.
பதவுரை
இரண்டு இதழ் பொருந்த = இரண்டு இதழ்களும் ஒன்றோடொன்று பொருந்துதலால்,
பகர மகரம் வரும் = பகர மகரங்கள் பிறக்கும்.
பொழிப்புரை
இரண்டிதழ்களும் ஒன்றோடொன்று பொருந்துதலால், பகர மகரங்கள் பிறக்கும்.
இரண்டிதழ் - மேலிதழ் கீழிதழ்.


71. முதனா முதலண முயற்சியின் யவ்வரும். (11) () முதல் நா முதல் அணம் முயற்சியின் யவ்வரும். (௧௧)

பவாநந்தர் உரை
இஃது யகரத்தின் முயற்சிப் பிறப்பு உணர்த்துகின்றது.
பதவுரை
முதல் நா முதல் அண்ணம் = அடிநாவும் அடிஅண்ணமும் (ஆகிய இவற்றின்),
முயற்சியின் = முயற்சியால்,
ய = யகரம்,
வரும் = பிறக்கும்.
பொழிப்புரை
அடிநாவும் அடியண்ணமும் ஆகிய இவற்றின் முயற்சியால், யகரம் பிறக்கும்.


72. அண்ண முடிநா வருடரழ வருவன. (12) ()அண்ணம் முடி நா வருட ர ழ வருவன. (௧௨)

பவாநந்தர் உரை
இஃது ரகர ழகரங்களின் முயற்சிப் பிறப்பு உணர்த்துகின்றது.
பதவுரை
அண்ணம் = மேல்வாயை,
முடிநா = நுனிநாவால்,
வருட = தடவுதலால்,
ர ழ = ரகர ழகரங்கள்,
வருவன = பிறப்பனவாம்.
பொழிப்புரை
மேல்வாயை நுனிநாவானது தடவுதலால், ரகர ழகரங்கள் பிறப்பனவாம்.


73. அண்பல் லடியைநா விளிம்பொற்ற லவ்வரும். (13) () அண் பல் அடியை நா விளிம்பு ஒற்ற ல வரும்.(௧௩)

பவாநந்தர் உரை
இஃது லகரத்தின் முயற்சிப் பிறப்பு உணர்த்துகின்றது.
பதவுரை
அண்பல் அடியை = மேற்பல் அடியை,
நாவிளிம்பு ஒற்ற = நாவின் ஓரமானது வீங்கி ஒற்றுதலால்,
ல = லகரம்,
வரும் = பிறக்கும்.
பொழிப்புரை
மேற்பல்லடியை நாவின் ஓரமானது வீங்கி ஒற்றுதலால், லகரம் பிறக்கும்.
அடியையொற்ற என இயையும்.


74. அண்பன் முதலைநாத் தடவ ளவ்வரும். (14) () அண் பல் முதலை நா தடவ ள வரும். (௧௪)

பவாநந்தர் உரை
இஃது ளகரத்தின் முயற்சிப் பிறப்பு உணர்த்துகின்றது.
பதவுரை
அண் பல் முதலை = முன்னம்பல்லடியை,
நா தடவ = நாவிளிம்பு வீங்கித் தடவுதலால்,
ள = ளகரம்,
வரும் = பிறக்கும்.
பொழிப்புரை
மேற்பல் அடியை நாவிளிம்பு வீங்கித் தடவுதலால் ளகரம் பிறக்கும்.


75. மேற்பல்லை யிதழுற மேவும் வகரமே. (15) (01) மேல் பல்லை இதழ் உற மேவும் வகரமே (௧௫).

பவாநந்தர் உரை
இஃது வகரத்தின் முயற்சிப் பிறப்பு உணர்த்துகின்றது.
பதவுரை
மேல் பல்லை = மேற்பல்லினை,
இதழ் உற = இதழ் பொருந்துதலால்,
வகரம் = வகரமானது,
மேவும் = பிறக்கும்.
பொழிப்புரை
மேற்பல்லினை இதழ் பொருந்துதலால் வகரமானது பிறக்கும்.


76. அணரி நுனிநா வணைய ற ன வரும். (16) () அணரி நுனி நா அணைய ற ன வரும். (௧௬)

பவாநந்தர் உரை
இஃது றகர னகரங்களின் முயற்சிப் பிறப்பு உணர்த்துகின்றது.
பதவுரை
அணரி = அண்ணத்தை,
நுனிநா அணைய = நுனிநாப் பொருந்துதலால்,
ற ன வரும் = றகர னகரங்கள் பிறக்கும்.
பொழிப்புரை
அண்ணத்தை நுனிநாப் பொருந்துதலால், றகர னகரங்கள் பிறக்கும்.
அணரி= அண்ணம் (மேல்வாய்).


77. ஆய்தக் கிடஞ்சிர மங்கா முயற்சியாம். (17) () ஆய்தக்கு இடம் சிரம் அங்கா முயற்சி ஆம். (௧௭)

பவாநந்தர் உரை
இஃது ஆய்தத்தின் இடப்பிறப்பும் முயற்சிப்பிறப்பும் உணர்த்துகின்றது.
பதவுரை
ஆய்தக்கு = ஆய்தத்திற்கு,
இடம் = பிறப்பிடம்,
சிரம் = தலையாம்;
முயற்சி = முயற்சியானது,
அங்கா ஆம் = வாய் திறத்தலாம்.
பொழிப்புரை
ஆய்தத்திற்குப் பிறப்பிடம் தலையாம், முயற்சியானது வாய்திறத்தலாம்.
ஆய்தக்கு, அத்துச் சாரியை பெறாது, குவ்வுருபு ஏற்றது. அங்கா - முதனிலைத் தொழிற்பெயர்.


78. தலைமையக் கரம்போற் சார்பெழுத் துற்பவம் (18) () தலைமை அக்கரம் போல் சார்பு எழுத்து உற்பவம். (௧௮)

பவாநந்தர் உரை
இஃது சார்பெழுத்தின் பிறப்பு இத்தன்மைத்து என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
தலைமை அக்கரம் போல் = முதல் எழுத்துப் போலவே,
சார்பெழுத்து = சார்பெழுத்துக்களின்,
உற்பவம் = பிறப்பும் ( எனக் கொள்க).
பொழிப்புரை
முதலெழுத்துப் போலவே சார்பெழுத்துக்களின் பிறப்பும் எனக் கொள்க.
சார்பெழுத்துக்களுக்குத் தத்தம் முதலெழுத்துக்களின் இடப்பிறப்பு முயற்சிப்பிறப்புக்களே இடமாம் என்பது இதனால் கூறப்பட்டது.


79. தத்தமிற் றிரிபே சிற்சில வுளவாம். (19) () தம் தமில் திரிபே சில் சில உள ஆம். (௧௯)

பவாநந்தர் உரை
இஃது எழுத்துக்கள் தத்தமிற் சிறிது வேறுபாடுள்ளன என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
தத்தமில் = எழுத்துக்கள் தமக்குள்ளே,
சிற்சில திரிபு = சிற்சில வேறுபாடுகள்,
உள ஆம் = உள்ளனவாம்.
பொழிப்புரை
எழுத்துக்கள் தமக்குள்ளே சிற்சில வேறுபாடுகள் உள்ளனவாம்.
எழுத்துக்கள் என்பது அதிகாரத்தால் வருவிக்கப்பட்டது.


80. எடுத்தல் படுத்த னலிதல் விலங்க () எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல்

லாக நான்கே யெழுத்தி னோசை. (20) ()ஆக நான்கே எழுத்தின் ஓசை. (௮௦)
பவாநந்தர் உரை
இஃது எழுத்துக்களின் ஓசை இத்தனை வகையாம் என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
எழுத்தின் ஓசை = எழுத்துக்களின் ஓசையானது,
எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல் ஆக = எடுத்தல் முதலாக,
நான்கு = நால் வகையாம்.
பொழிப்புரை
எழுத்துக்களின் ஓசையானது எடுத்தல் முதலாக நால்வகையாம்.
எடுத்தல் - எடுத்துச் சொல்லுதல், படுத்தல் - தாழ்த்திச் சொல்லுதல், நலிதல் - நடுத்தரமாய்ச் சொல்லுதல், விலங்கல் - வருந்திச் சொல்லுதல்.


பேரகத்தியம், எழுத்திலக்கணக் காண்டம் இரண்டாவது எழுத்துற்பத்திப்படலம் முற்றிற்று


பார்க்க
தொகு

பேரகத்தியத்திரட்டு

பேரகத்தியச் சூத்திரம்

1. எழுத்துப் படலம்

3. எழுத்து வரன்முறைப் படலம்

4. பன்மொழியாக்கப் படலம்

5. வடமொழிப் படலம்