பேரகத்தியத்திரட்டு
பேரகத்தியத் திரட்டு
தொகுமூலமும் உரையும்
தொகுஉரையாசிரியர் மற்றும் பதிப்பாசிரியர் ச.பவாநந்தம் பிள்ளை அவர்கள்
தொகு
‘வினாதல், வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடம்நனி இகக்கும்’
எஸ். பி. ஸி. கே. அச்சுக்கூடம்
1912முகவுரை
இவ்வுலகின்கண் பற்பல மொழிகள் வழங்கப் பெறுகின்றன. அவற்றுள் சில ஒலிவடிவினைமட்டும் பெற்றிருக்கின்றன. பல ஒலிவடிவோடு வரிவடிவினையும் அடைந்துள்ளன. நம் தமிழ் மொழியோ ஒலிவடிவு, வரிவடிவு இரண்டனையும் பெற்று நிலவுகின்றது. தமிழ் மொழியின் வரலாற்றைக் கூற இரண்டு புராணக்கூற்றுக்கள் உள. அவைதாம்-
1. அகத்திய முனிவர் கச்சியம் பதியிலிருந்த வடமொழி வாணரோடு மாறுபட்டு, அம்மொழிக்கு இணையான மற்றொன்றனை யருளுமாறு முருகக்கடவுளை இரப்பு, அக்கடவுள், இவ்விரக்கம் அறிவின்பாலதாகலின் இவற்கருள் செய்தும் எனத் திருவுளங் கொண்டு, ஓர் இடத்தைச் சுட்டி, ‘அன்ப! இம்மூலைக்கண் உள்ளது; சென்று கொள்க’ எனலும், முனிவரர் விரைந்தோடி ‘தமிழ், தமிழ்!’ எனக்கூவி, அவ்வோலைச் சுவடிகளை வாரிக்கொண்டு வெளிப்போந்து, முருகக்கடவுளை வணங்கி விடைபெற்று, தமிழ் மொழியை இவ்வுலகின்கண் நிலவ வைத்தனர் என்ப.
2. சிவபெருமான் பார்வதியாரைத் திருமணங்கொண்ட காலத்து, முனிவர் அனைவோருந் திரண்டு, வடக்கின்கண்ணுள்ள இமயமலையை யடைதலும், வடதிசை பொறையாற்றாது தாழவும், தென்றிசை பொறையின்றி மேலெழவுங் கண்ட பெருமான் அகத்தியரை நோக்கி, ‘நீ விரைந்து சென்று, தென்றிசைக்கணுள்ள பொதியையில் தங்குக’ எனலும், முனிவர் அவ்வருண் மொழியைச் சிரமேற்கொண்டு, ‘எம்பெருமானே! தமிழ் மொழி தலைசிறந்து விளங்கும் அத்திசைக்கண் அடியேன் சென்று வாழ்ந்திருத்தல் எங்ஙனம்?’ என்று விண்ணப்பஞ்செய்து, அம்மொழியைச் சிவபெருமான் அருளப்பெற்று, சந்தனப்பொதியை யடைய, பூமி சமனுறக்கண்டு மகிழ்ந்து, ஆண்டே வதிந்து, தமிழ்மொழியை நன்கு ஆராய்ந்து இலக்கணமும் செய்து வைத்தனர் என்ப. இவை போல்வன இன்னும் பல.
இக்கூற்றுக்களின் உண்மை எவ்வாறாயினும் தமிழ்மொழி அகத்தியனாருக்கு முன்னரே இந்நாட்டின்கண் நின்று நிலவிற்று என்பது பொய்ம்மையாகாது.
இதுநிற்க, அகத்திய முனிவரே தமிழ்மொழியைப் படைத்துத் தந்தனர் என்றுகூறி, ‘அகத்தியன் பயந்த செஞ்சொலாரணங்கு’ என்பது போன்ற மேற்கோள்களைக் காட்டுவர் ஒரு சாரார். அவர் வடமொழிக்கண்கொண்ட பேரபிமானமும், சரித்திர ஆராய்ச்சியின்மையுமே அதற்குப் போந்த காரணங்களாம். இனி, அவர்கூற்றுப் போலியாமாறு காட்டுதும். அகத்தியனார் வடமொழி வாணரோடு மாறுபட்டு முருகக் கடவுளை வேண்ட, அப்பெருமான் ஓரிடத்தைச் சுட்டி, ‘அதனை எடுக்க,’ என்றார் என்பவாகலின், அம்மொழி முன்னரே சேமத்தில் இருந்ததென்பதும், சிவபெருமான் தென்றிசையிற் செல்க என்புழி, அகத்தியனார், ‘ஐய! ஆண்டு வழங்கும் தமிழ்மொழியை அடியேன் சிறிதும் அறியேனே என்றிரந்து, அம்மொழியைச் சிவபெருமான் அருளாற் பெற்றனர் என்பவாகலின் அம்மொழி அகத்தியனாருக்கு முன்னரே இந்நாட்டின்கண் வழக்காற்றிலிருந்ததென்பதும் வெள்ளிடைமலைபோல் விளங்குகின்றது. இவையனைத்தும் ஒருவாறாக, அகத்தியனாரே தம் இலக்கணத்துள்,
‘இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே
எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே
எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல
இலக்கி யத்தினின் றெடுபடும் இலக்கணம்’
என்றாராகலின். அகத்தியனார் தாம் இலக்கணம் செய்வதன்முன்னரே தமிழ் மொழி இந்நிலத்தில் நின்று நிலவியது என்பது போதரும். மற்றும் அகத்தியர் தமிழ் மொழியை அவலோகித முனிவர்பாற் கற்றுணர்ந்தாரென்னும் அருகர் கூற்றும் இதனை வலியுறுத்தும்.
இனி, அகத்தியர் தமிழ் மொழியை நன்கு பயின்று, அம்மொழிக்கு வேண்டிய ஆதரவுகளைப் போதவும் தேடி வைத்தனர் என்பது பொய்ம்மையாகாது. ஆயினும் அகத்தியர் காலத்துக்கு முன்பு இருந்த இலக்கியம் ஒரு சிறிதும் இக்காலத்தே கிடைத்திலது. அகத்தியனாரும் இலக்கணமாத்திரம் செய்தருளினார் என்று கேள்விப்படுகின்றோம். இலக்கியம் யாவும் நமக்குக் கிடைத்திலது. சிற்சில வைத்திய நூல்கள்மட்டும் அகத்தியர் பெயரால் வழங்குகின்றன. அவற்றின் உண்மை அவற்றைக் காணும் நல்லறிவாளர் அகத்திற்கே புலனாகும்.
அகத்தியரது வரலாறு, காலம் முதலியவற்றை வரையறுத்துக் கூறும்வகை சிறிதும் இல்லாதொழியினும், கர்ணபரம்பரையாகச் சிற்சில கதைகள் வழங்குகின்றன. அகத்தியர் இமயமலைக்கும் விந்தியமலைக்கும் இடையில் உள்ள ஆரியவர்த்தம் என்னும் தேசத்தில் இருந்தவர். இவர் விதர்ப்பநாட்டின் மன்னன் மகளாகும் உலோபாமுத்திரை என்பவளை மணந்து சித்தன் என்னும் ஒரு மைந்தனைப் பெற்றனர் என்ப. இவர் முதற்சங்கத்துப் புலவர்கள் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மரில் ஒருவர் என்பது இறையனா ரகப்பொருளுரையில் காண்க.
தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கங்கள் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்கமிருந்தார் அகத்தியனாருந், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றமெறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனுமென இத்தொடக்கத்தார் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மர் என்பது. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினாரென்பது. அவர்களாற் பாடப்பட்டன வெத்துணையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையுமென இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தா ரென்பது. அவர்களைச் சங்கமிரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோனீறாக எண்பத்தொன்பதின்ம ரென்ப. அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டிய ரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல்கொள்ளப் பட்ட மதுரை யென்ப. அவர்க்கு நூல் அகத்திய மென்ப.
இனி, இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், தொக்காப்பியனாரும் இருந்தையூர்க் கருங்கோழியும், மோசியும், வெள்ளூர்க் காப்பியனும் சிறுபாண்டரங்கனும் திரையன் மாறனும் துவரைக் கோமானும் கீரந்தையுமென இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்ம ரென்ப. அவருள்ளிட்டு மூவாயிரத் தெழுநூற்றுவர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும் குருகும் வெண்டாளியும் வியாழமாலை யகவலு மென இத்தொடக்கத்தன என்ப; அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் மாபுராணமும் இசைநுணுக்கமும் பூதபுராணமு மென இவை; அவர் மூவாயிரத்தெழுநூற்றி யாண்டு சங்கமிருந்தா ரென்ப; அவரைச் சங்கமிரீஇயினார் வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திருமாற னீறாக ஐம்பத்தொன்பதின்ம ரென்ப; அவருட் கவியரங்கேறினார் ஐவர் பாண்டிய ரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்பது. அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது.
இனிக் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறுமேதாவியாரும், சேந்தம்பூதனாரும், அறிவுடையானாரும், பெருங்குன்றூர்க்கிழாரும், இளந்திருமாறனும், மதுரையாசிரியர் நக்கீரனாரும், மருதனிளநாகனாரும், கணக்காயனார்மகனார் நக்கீரனாருமென இத்தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்ம ரென்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினாரென்பர். அவர்களாற் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும் வரியும் பேரிசையும் சிற்றிசையுமென்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமு மென்ப; அவர் சங்கமிருந்து தமிழராய்ந்தது ஆயிரத்தெண்ணூற் றைம்பதிற்றி யாண்டென்ப; அவர்களைச் சங்கமிரீஇயினார் கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி யீறாக நாற்பத்தொன்பதின்ம ரென்ப; அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரை யென்ப; அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டிய ரென்ப.
அகத்தியனார்பால் வைத்தியம் கற்றுணர்ந்த மாணவர் பலராயினும், இலக்கணம் கற்றுணர்ந்தவர் பன்னிருவ ரென்பது நன்கு புலப்படுகின்றது. அவர்தாம்-
1. தொல்காப்பியர்
2. அதங்கோட்டாசான்
3. பனம்பாரனார்
4. அவிநயனார்
5. காக்கைபாடினியார்
6. நற்றத்தனார்
7. துராலிங்கர்
8. வையாபிகர்
9. வாய்ப்பியர்
10. கழராம்பர்
11. செம்பூட்சேய்
12. வாமனர்
என்ற இவராவர். இப்பன்னிருவரும் சேர்ந்து புறப்பொருட் பன்னிருபடலம் என்னும் நூல் ஒன்றினை யாத்தனர் என்று கூறுப. அன்றி இவருள், நால்வர் தத்தம் பெயரானே ஒவ்வோரிலக்கண நூல் செய்தனர். அவை:
1. தொல்காப்பியர் - தொல்காப்பியம்
2. அவிநயனார் - அவிநயம்
3. காக்கைபாடினியார் - காக்கைபாடினியம்
4. நற்றத்தனார் - நற்றத்தம்
என்பன.
அகத்தியனார் வடமொழியினும் வல்லுநர் என்பது அம்மொழியில் அவர் இயற்றிய அஷ்டகம் என்னும் அரியநூலால் இனிது விளங்கும். அகத்தியர் ஏறக்குறைய இருநூற்றைந்து வைத்திய சாஸ்திரங்கள் இயற்றின ரென்பவாயினும் இக்காலத்தை அவர் பெயரான் வழங்குவன:- வைத்தியக்கும்மி, குணவாகடம், வைத்தியசாரம், நயனசாரம், அவிழ்தசாரம், சிந்தூரமஞ்சரி, அமுத கலைக்கியானம், பஞ்சகாவிய நிகண்டு, கன்மகாண்டம், பூரணசூத்திரம், சங்குசுத்தி முதலிய சிலவாம். அகத்தியனார் தம்பெயரானே தமிழ் மொழிக்குப் பன்னீராயிரம் சூத்திரங்கொண்ட இலக்கணநூல் ஒன்றினைச் செய்தனர். அது இருபகுதியினதாகி - பேரகத்தியம், சிற்றகத்தியம் எனப் பெயர் பெறும்.
அகத்திய முனிவர் மாணவர் பன்னிருவரில் தலைநின்றவராய தொல்காப்பியர்மீது முனிவர் ஏதோ காரணம்பற்றி முனிவுகொண்டு சபித்தார் எனவும், தொல்காப்பியர் வெகுண்டு தமது ஆசிரியர் அரிதினியற்றிய இலக்கண நூல் அழிந்துபட வென எதிருறச் சபித்தனர் எனவும், கர்ணபரம்பரையாக ஒரு கதை வழங்குகின்றது. அக்காரணம் பற்றியோ, வேறு எக்காரணம் பற்றியோ அந்த அகத்தியம் இறந்துபட்டது.
தொல்காப்பியம்
தொகுபின்னர், தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியமே இந்நாள்காறும் நின்று நிலவுவதாயிற்று. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் முப்பகுதியினை யுடையது. பொருளதிகாரத்தில் அகப்பொருள் புறப்பொருளேயன்றி யாப்பு, அணிகளும் இடம்பெற்றுள்ளன. இத்தொல்காப்பியம் 1612 சூத்திரங்களை யுடையது. தொல்காப்பியர் அகத்தியனார் அடைவுகளை முற்றக் கற்றுணர்ந்ததே யன்றி, அவரோடு மாறுபட்ட பின்னர், வடமொழி வாணரோடு கலந்தும் தம் நூலினை யாத்தனரென்பது† ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியம்,’ என்பதனால் விளங்குகின்றது.
[† வடவேங்கடந் தென்குமரி
யாயிடைத்,
தமிழ்கூறு நல்லுல கத்து
வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி
னெழுத்துஞ் சொல்லும் பொருளு நாடிச்
செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவ
னிலந்தரு திருவிற் பாண்டி னவையத்
தறங்கரை நாவி னான்மறை முற்றிய
வதங்கோட் டாசாற் கரிறபத் தெரிந்து
மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பி னைந்திர நிறைந்த
தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.
என்னுமிப் பாயிரச் சூத்திரம், தொல்காப்பியத்தைப் பாண்டியன் அவைக்களத்தில் அதங்கோட் டாசிரியர் கேட்ப அரங்கேற்றிய காலத்தே பனம்பாரனார் கூறியதென்பதைத் தொல்காப்பியப் பாயிரத்துட் காண்க.]
தொல்காப்பியத்திற்கு உரையிட்டார் ஐவர். அவருள் இளம்பூரணர் எழுத்ததிகாரத்திற்கும் சொல்லதிகாரத்திற்கும், சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கும், பேராசிரியர் பொருளதிகாரத்திற்கும், நச்சினார்க்கினியர் நூல் முழுவதற்கும் உரைகண்டனர். கல்லாடரும் தொல்காப்பியத்திற்கு உரை செய்தனர் என்ப. இவருரை சொல்லதிகாரத்திற்கு மட்டும் கிடைத்துளது.
வெண்பாமாலை:- இது ஐயனாரிதனார் செய்த புறப்பொருள் இலக்கணநூல். இவர், தொல்காப்பியர் முதலிய பன்னிருவர் செய்த ‘பன்னிரு படலம்’ என்பதனைத் தம் நூலுக்கு ஆதரவாகக் கொண்டனர் என்பது, “துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதல், பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த, பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன்” என்னும் இந்நூற் சிறப்புப்பாயிரத்தான் விளங்கும். இந்நூலுக்குப் பழையவுரை யொன்றுண்டு. அஃது செயங்கொண்ட சோழமண்டலத்து மேற்கானாட்டு மாகறூர்க்கிழான் சாமுண்டி தேவநாயகன் செய்தது. இக்கூற்று,
ஒப்பரிய மாகற லூரான் கிழாரதிபன்
செப்பரிய தெய்வநாய கன்றெரிந்து - தப்பரிய
வெண்பாமா லைதனக்குத் தக்க விருத்தியினை
நண்பா லுரைத்தா னவின்று.
என்னும் வெண்பாவால் வலியுறா நிற்கும்.
அகப்பொருள் விளக்கம்:- இது நாற்கவிராச நம்பி இயற்றியது. இது அகப்பொருள் இலக்கணங்களைச் சுருங்கக் கூறுவதோர் அரிய நூல்.
யாப்பருங்கலம்:- இது குணசாகரர் இயற்றியது. இது நூற்பாவகவல் எனப்படுஞ் சூத்திரயாப்பில் அமைந்து யாப்பிலக்கணத்தை விளக்குமுற வுணர்த்துவது. யாப்பருங்கலக் காரிகைக்கு முதனூலாயுள்ளது. இதற்குச் சிறந்ததோர் விருத்தியுரை யுண்டு. விரைவில் வெளிவரும்.
யாப்பருங்கலக் காரிகை:- இது அமுதசாகரர் இயற்றியது. இதுவும் யாப்பிலக்கணமுணர்த்துங் கலித்துறைகளான் இயன்றது.
வெண்பாப் பாட்டியல்:- இதனை இயற்றியவர் வச்சணந்தி. இதில் செய்யுளுக்கு வேண்டிய பொருத்தங்கள் பத்தும் தெள்ளிதின் விளங்கக் காலாகும்.
தண்டியலங்காரம்:- இது அணியிலக்கணத்தை அழகுபெறக்கூறுவது. பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என்னும் மூன்று இயல்களையுடையது. இதனை இயற்றியவர் தண்டியாசிரியர்.
நேமிநாதம்:- இது எழுத்தும் சொல்லும் உணர்த்துவதோர் இலக்கண நூல். இது குணவீரபண்டிதர் இயற்றியது.
வீரசோழியம்:- இதன் ஆசிரியர் புத்தமித்திரர். இது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலகணங்களையும் உணர்த்தும் ஒரு சிறு நூல்.
நன்னூல்:- இது பவணந்தி முனிவர் செய்தது. இவர் தொல்காப்பியத்தை முதனூலாகக் கொண்டு தம்காலத்தில் வடமொழி இலக்கணங்களையும் தழுவி சுருங்கச் செய்தனர். இதில் எழுத்தும் சொல்லுமே காணக் கிடைக்கும். இதற்கு சமணமுனிவர் ஒருவர் உரை செய்தனர். இதனை நூலாசிரியரே செய்தனர் என்றுங் கூறுப. பின்னர் சங்கர நமச்சிவாயப் புலவர் என்பார் அந்நன்னூலுக்கு விளக்கமாக ஒரு விருத்தியுரை செய்தனர். அதனைச் சிவஞான யோகிகள் திருத்திச் செப்பஞ்செய்து குன்றின்மேலிட்ட விளக்காக்கினர்.
இலக்கண விளக்கம்:- தொல்காப்பி்யம் அருகி வழங்குதலும், நன்னூல் சின்னூலாயிருத்தலுங் கண்டு தருமபுர ஆதீனத்து வைத்தியநாத தேசிகர் செய்த இவ்விலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து பகுதியினையும் உடையது. இவரும் புதியன கொள்ளும் முறையான் தம்காலத்து வழக்காறு நோக்கி வடமொழி இலக்கணத்தையுந் தழுவிக் கொண்டனர். இவர் தாமே இதற்கோ ருரையுஞ் செய்தனர்.
பிரயோக விவேகம்:- மூலமும் உரையுஞ் செய்தவர் சுப்பிரமணிய தீட்சதர். இது வடமொழி யிலக்கண அமைதிகளை விளங்கக் காட்டுவது.
இலக்கணக் கொத்து:- இது திருவாவடுதுறை சாமிநாத தேசிகர் இயற்றியது. தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களிலும், இலக்கியங்களிலும் அருகிவரும் விதிகளைத் தழுவியும், வடநூல் இலக்கணங்களைத் தழுவியும் செய்தது. இந்நூற்கு இவரே உரையுஞ் செய்து போந்தனர்.
இலக்கண விளக்கச் சூறாவளி:- இது ஆசிரியர் சிவஞான யோகிகள் எழுதியது. இது இலக்கண விளக்கம் என்னும் நூலிலுள்ள குற்றங்களைக் காட்டுவதோர் கண்டன நூல்.
மேற்கண்ட அடைவுகளானும் அமைதிகளானும் அகத்தியமே தலை சிறந்தது என்பது விளங்கும். அவ்வகத்தியந் தானும் பேரகத்தியம் சிற்றகத்தியம் என இருவகையதென்று மேற்கூறினாம். அது பதினாயிரத்தின் மிக்க சூத்திரமுடையதெனவே இயல், இசை, நாடகமாய முப்பெருந் தமிழுக்கும் இலக்கணம் வகுத்தாராதல் வேண்டும். அத்தகைய அரிய பெருநூல் இறந்துபட்டது நம் தமிழ் மக்கள் செய்த தவக்குறையே.
இனி, அகத்தியச் சூத்திரங்களெனச் சிதைந்து ஆங்காங்குச் சில வழங்குவனவாயின. அவற்றிற் சில சூத்திரங்களை வித்வான்- களத்தூர்- வேதகிரி முதலியார் சுமார் அறுபது யாண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டனர். சில தொல்காப்பியம் நன்னூல் முதலிய இலக்கண உரைகளினும் காணப்படுகின்றன. வேதகிரி முதலியார் தம்மிடத்து மூவாயிரம் சூத்திரங்கள் கிடைத்துள்ளனவென்று சொல்லி நூற்றறுபத்தைந்து சூத்திரங்களே வெளியிட்டனர். மற்றைச் சூத்திரங்களும் கிடைக்குமென்று பலகாலும் பல்வேறிடங்களினும் முயன்றும் கிடைத்தில. பின்னும் பதினாறு சூத்திரங்கள் கிடைத்தன. அவற்றையுங்கொண்டு தொகுத்து வெளியிடலாயினேன்.
கிடைத்த மட்டில் இந்நூலின் சூத்திரங்களின் அமைப்பை உற்றுநோக்குழி இது அகத்தியனார் செய்த தென்பதற்கு மேற்கண்ட வேதகிரி முதலியார் கூற்றேயன்றி வேறு ஆதரவு கிடைத்திலது. அகத்தியம் என்னும் நூல் ஒன்று நிலவுகின்றது என்று எண்ணியிருப்பார்க்கு மனவமைதி யுண்டாமாறு அதனை வெளியிடத் துணிந்தேன். இச்சூத்திரங்களுக்குத் தெள்ளிதிற் பொருள் விளங்குமாறு உதாரணங்களுடன் ஓர் உரையும் வரைந்துள்ளேன்.
மற்றும் இந்நூலை அச்சிடமுயன்று வருங் காலத்தே வேறு சூத்திரங்கள் அடங்கிய சில பிரதிகள் கிடைத்தன. அவற்றுள் ஒன்றின் தலைப்பில் “அகத்தியத் தருக்க சூத்திரம்” என்று வரையப்பட்டுள்ளது. இப்பிரதியிற் கண்ட இருபது சூத்திரங்களும் தருக்கத்தின் பாற்படுவன. அவ்விருபது சூத்திரங்களுக்கும் பல வடமொழித் தருக்க நியாயங்களை மேற்கோள் காட்டி ஒரு விருத்தியுரை செய்துள்ளேன். அதுவும் விரைவில் வெளிவரும். மற்றவை இன்னவெனத் தேறாதிடர்ப்படுகையில் சிலர் அவை அகத்தியனார் உத்தரவின்படி அவர் மாணவரில் ஒருவராகிய கழராம்பர் இயற்றியருளிய “பேரிசைச் சூத்திரங்கள்” என்றனர். அதன் உண்மை இவ்வளவிற்றென்று துணிதற்கில்லேனாயினும், அவையனைத்தும் நம் தமிழ்மொழியின் சிறப்புகளையும் காலங்களையும் வகுத்துக் காட்டலின் அவற்றிற்கும் ஓர் உரை எழுதி இந்நூலின் இறுதியிற் சேர்த்துள்ளேன்.
உத்தியோகமுறையில் அரிதிற் கிடைத்த அவகாச காலங்களில் இதனில் ஈடுபட்டுத் தொகுத்து வரைந்து வெளியிட்டதாமாகலின் பிழைகள் மலிந்திருத்தலுங் கூடும். நல்லறிவளார் அவற்றை யெமக்குத் தெரிவிப்பாராயின் இரண்டாம் பதிப்பில் திருத்திக் கொள்வேன்.
இந்நூல் இனிது முடியுமாறு தோன்றாத் துணையாக இருந்தருளிய எல்லாம் வல்ல முழுமுதற்கடவுளை மனமொழி மெய்களால் வணங்குகின்றேன்.
பார்க்க
தொகு
பேரிசைச் சூத்திரம்மூலமும் உரையும்