மாவீரர் மருதுபாண்டியர்/கிளர்ச்சியின் தொடர்ச்சி



8

கிளர்ச்சிகளின் தொடர்ச்சி

இராமநாதபுரம் கோட்டையிலிருந்து மதுரையை அடைந்த கர்னல் அக்கினியூவின் உள்ளம் சிவகங்கைச் சீமைக்குள் புகுவதற்கு துடித்துக் கொண்டு இருந்தது. மலபார் பகுதியில் இருந்து பலமான ஆயுதப் படையணிகளின் உதவியை எதிர்பார்த்து காத்து இருந்தான். கோவை, திண்டுக்கல், வழியாகத் திருப்பத்துாருக்கு வரும் வழியில் மலபார் அணிக்கு திண்டுக்கல் சீமையில் பலத்த எதிரிப்பு இருந்தது. பல இடங்களில் கிளர்ச்சிக்காரர்களுடன் மோதி பெருமளவு சேதாரங்களைப் ஏற்படுத்திவிட்டு அந்த அணி நத்தம் அடைந்தது. அங்கு தொண்டமானது துரோகக் கும்பல் கும்பெனியாாது அணிகளுடன் சேர்ந்து கொண்டது. பின்னர், அவர்கள் சிவகங்கைச் சீமை, பிரான்மலைக் கோட்டையைப் பிடித்துவிட்டு திருப்பத்துார் சென்றுவிடலாம் என்ற எளிதான நினைப்பில் பிரான் மலையைத் தாக்கினர்.[1] ஆனால் ஏமாந்து போய் கிளர்ச்சிக்காரர்களிடம் சரியான உதை பெற்று நத்தத்திற்கே திரும்பினர். மற்றொரு முயற்சியை மேற்கொண்டு மணப்பச்சேரி வரை முன்னேறினர். ஆனால் சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் தலைமையிலான கிளர்ச்சிக்காரர்களால் மீண்டும் நத்தத்திற்கு தூரத்தியடிக்கப்பட்டனர். இப்பொழுது கும்பெனி அணிகள் பிரான்மலையைக் கைப்பற்றும் திட்டத்தைக் கைவிட்டு சத்துரு சங்காரக்கோட்டை வழியாகத் திருப்பத்துரை அடைவதற்கு காட்டுப்பாதையொன்றைத் தேர்வு செய்தனர். கிளர்ச்சிக்காரர்களது ஏவுகனை (ராக்கெட்) வெடிகளில் இருந்து கும்பெனிப்படை கர்னல் இன்னிங்ஸ் தப்பித்து திருப்பத்துரை அடைந்தான்.

[2] திருப்பத்தூர் கோட்டை

இந்தக் கோட்டை அமைப்பு பற்றி சரியான விவரங்கள் இல்லை. ஏழாவது நூற்றாண்டில் இந்த ஊரில் கோவில் கொண்டுள்ள திருத்தளிநாதரைத் தரிசித்து அப்பர், சம்பந்தர், பாடிய தேவாரங்கள் உள்ளன. அடுத்து இந்தக்கோயிலில் உள்ள எட்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன்மாறன் சடையனது வட்ட எழுத்து கல்வெட்டுக்களும் இந்த ஊரின் பழமையைப் பறைசாற்றுவனவாக உள்ளன. மற்றும் ராஜராஜசோழன், மாற வர்மன் சுந்தரபாண்டியன் கி. பி. 1216 - 38 மாறவர்மன் பராக்கி ரமன் பூரீவல்லயன் வீரபாண்டிய குலசேகரனது திருப்பணிகளைக் குறிக்கும் தொண்ணுற்றுஎட்டு கல்வெட்டுக்களும் அங்கு உள்ளன. என்றாலும் பதினான்காம் நூற்றாண்டின் துவக்கத்தில் மதுரை சுல்தானது ஆட்சியை எதிர்த்துப் போராடிய சூரக்குடி விசயாலய தேவன் இந்தக்கோட்டையை அமைத்து இருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது. பின்னர் இந்தக்கோட்டை இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களது முக்கியமான அரண்களில் ஒன்றாக அமைந்து இருந்தது இதனை திருச்சிராப்பள்ளி வழியாக தெற்கே செல்லும் மதுரைப்பெருவழியில் இந்தக்கோட்டை அமைந்து இருந்ததால், ராணுவ முக்கியத்துவம் மிகுந்து இருந்தது. அதனால் பிரான் மலைப் போரில் தோல்விகண்ட பரங்கிகள், திருப்பத்தூர் பகுதிக்குப் பின்னடைந்து, திருப்பத்தூர் கோட்டையைப் பிடிப்பதில் அக்கரை செலுத்தினர். கர்னல் அக்கினியூ, திருப்பத்தூருக்கு வடக்கே ஆறுகல் தொலைவில் பாளையம் இறங்கி தாக்குதலைத் தொடுத்தான்.

ஏற்கனவே கோட்டைச் சுவர்கள் பழுது பார்க்கப்படாமல் இருந்த காரணத்தினால் பரங்கிகளது பீரங்கி குண்டுகள் எளிதாக வடக்கு கிழக்குச் சுவர்களை வெடித்துப் பிளக்கச் செய்தன. கிளர்ச்சிக்காரர்கள் மிகுந்த வீரத்துடன் போராடினர், முதன்முறையாக "ராக்கெட்" வகை குண்டுகளையும், இந்தப்போரில் பயன்படுத்தினர். என்றாலும் பரங்கிகளது வெடிகுண்டு வீச்சு, மிகவும் உக்கிரமாகவும் மிகுந்த அழிவை ஏற்படுத்தியதாகவும் இருந்தது. கிளர்ச்சிக்காரர்களால் இந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. 25-7-1801ல் கும்பெனியார்கோட்டையைப் பிடித்தனர். [3]கர்னர் அக்கினியூவின் போர் உத்திகளும் விரைவாகவும் உறுதியாகவும் செயல்பட்ட அவனது அணியின் உழைப்பும், கிளர்ச்சிக்காரர்களுக்குப் பெருத்த நாசத்தை ஏற்படுத்திவிட்டது. சிவகங்கைச்சீமைப் போரில் ஒரு புதிய திருப்பத்தைப் பரங்கியரின் இந்தவெற்றி சுட்டியது அத்துடன் கர்னல் அக்கினியூ மாற்றாரது வலிமையைத் தெரிந்து செயல்படுவதற்கும் இந்தப் போர் வாய்ப்பாக இருந்தது.

அடுத்து, கர்னல் அக்கினியூவின் தலைமையிலான கும்பெனிப் படைகள் சிவகங்கை நோக்கிப் புறப்பட்டன. வழியில் அவர்களைத் தாக்கிய கிளர்ச்சிக்காரர்கள் அணியைப் புறமுதுகிடச் செய்து விட்டு சிவகங்கைக்கு ஏழுகல் தொலைவில் உள்ள ஒக்கூரைப் பிடித்தான். பரந்தவெளியில் பாசறையை அமைத்தான். கிளர்ச்சிக்காரர்களது உயிர்நிலை போல அப்பொழுது விளங்கிய அரண்மனை சிறு வயலையும் காளையார்கோவில் கோட்டையையும் தாக்குவதற்குரிய திட்டத்தை வரைவதில் அங்கு ஈடுபட்டான். மூன்று நாட்களில் சின்னமருது சேர்வைக்காரரது அரண்மனை சிறுவயலில் கும்பெனிப்படைகள் நின்றன. கர்னல் அக்கினியூ. கர்னல் இன்ஸிக்கும், மேஜர் ஷெப்பர்டுக்கும் தாக்குதல் பற்றிய உத்திகளை விளக்கிக் கூறினான். அப்பொழுது அவர்கள் அரண்மனை சிறு வயல் கிராமத்திற்கு முன்னதாக பீரங்கி குண்டு போய் விழும் தொலைவில் நின்றனர்.

கும்பெனிப்படைகளை எதிர்பார்த்த கிளர்ச்சிக்காரர்கள் அரண்மனை சிறுவயல் கிராமத்திற்கு வடக்கே இரண்டுகல் தொலைவில் உள்ள பனங்காடு, புதர்கள், கண்மாய்க்கரைகளில் வசதியாக நிலைகொண்டு இருந்தனர். சரமாரியாக துப்பாக்கிக் குண்டு களைச்சுட்டு எதிரிகளது முன்னேற்றத்தைத் தடுக்க முயன்றனர். ஆனால் முன்னோடி அணியை நடத்திச்சென்ற மேஜர் ஷெப்பர்டு துப்பாக்கி குண்டுகளைப்பற்றி கவலைப்படாமல் மிகுந்த துணிச்சலுடன் முன்னேறினான். கிளர்ச்சிக்காரர்கள். தங்கள் துப்பாக்கியில் அடுத்த குண்டை வைத்து அழுத்தி சுடுவதற்கு கூட அவகாசம் தராமல், கண்மாய்க்கரை, பனங்காடு, முட்புதர், இவ்விதம் ஒன்றையடுத்து, ஒன்றாக மறைந்து சுட்ட கிளர்ச்சிக்காரர்கள் ஊரை நோக்கி பின்னடைந்தனர். மாலைவரை சுடுதல் நீடித்தது. லெப்டி. பூருஸ்லி மிகவும் மோசமாகக் காயமடைந்தான். ஒரு பரங்கி வீரன் கொல்லப்பட்டான். எட்டுப்பேர்காயம் அடைந்தனர். கூலிக்கு மாரடித்த சுதேசி வீரர்களில் இருவர் கொல்லப்பட்டனர். இருபத்து நான்குபேர் காயமடைந்து கிடந்தனர். இவர்களுக்கு கட்டுக்கட்டி பக்குவம் செய்வதில் இரவுப்பொழுது போயிற்று. கிளர்ச்சிக்காரர் தரப்பு சேதம் தெரியவில்லை.

அடுத்த நாள் (30. 7. 1801), மீண்டும் கிளர்ச்சிக்காரர்களது எதிர்ப்பை எதிர்பார்த்து கும்பெனியார் அணி அரண்மனை சிறு வயல் கிராமத்தை அடைந்தபொழுது, கிராமத்தில் மயான அமைதி குடிகொண்டு இருந்தது. அத்தனை வீடுகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு இருந்தன. சின்னமருது சேர்வைக் காரரது மாளிகையும் சிவத்த தம்பியின் இல்லமும் கம்பீரமாகக் காட்சியளித்தன. அங்கிருந்தோர் அனைவரும் தெற்கே அடர்ந்த காட்டிற்குள் நுழைந்துவிட்டனர்.[4]

பிரான்மலை

சிவகங்கைச் சீமையின் வடபகுதியில் அமைந்துள்ள திருப்பத்தூர் கோட்டையைப் பரங்கிகள் கைப்பற்றி தங்களது திருச்சிராப்பள்ளி, நத்தம் மதுரைப்பெருவழியின் நிலையான அங்கமாக அமைத்துக் கொண்டனர். அத்துடன் அந்தக் கோட்டைக்கும் அப்பால் உள்ள காவல்நிலையான பிரான்மலையையும் பிடிப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டனர். காரணம் சிவகங்கைக் கிளர்ச்சிக்காரர்களுக்கு திண்டுக்கல், விருபாட்சி, வாராப்பூர் பாளையக்காரர்களது உதவி கிடைக்கவிடாமல் தடுப்பதற்கு பிரான்மலை அரண் உதவும் என்பது அவர்கள் முடிவு, குறிப்பாக வாராப்பூர் போளையக்காரரான பொம்மைநாயக்கர் மருது சேர் வைக்காரர்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்து வந்ததுடன் நத்தம், பிரான்மலைப் பகுதிகளில் கிளர்ச்சிக்காரர்கள் வெற்றிகரமாகத் தாக்குதல்களை நடத்த மிகவும் உறுதுணையாக இருந்தார்.

ஜூன் மாதம் 17ம் தேதி பிரான்மலை அருகே கும்பெனிப் படையை எதிர்ப்பதற்கு கிளர்ச்சிக்காரர்கள் முனைந்து இருந்தனர். பொம்மையநாயக்கரது ஆட்களும் கிளர்ச்சிக்காரர்களும் ஆக ஐந்நூறு பேர் ஆயதபாணிகளாக தயார் நிலையில் நின்றனர்.[5] கர்னல் ஸ்டுவர்டு தலைமையிலான அணி பிரான்மலைக்கு மேற்கே இருந்து முன்னேறி வந்தது. அவர்களது குதிரை அணி இரண்டு பிரிவு களாகப் பிரிந்து தொடர்ந்து வரும் தூசுப்படைக்கு உதவியாகச் சென்றன. மைசூர் போருக்குச் சென்று திரும்பிய கர்னல் இன்னி nம் இந்தத் தாக்குதலில் கலந்து கொண்டான். கிளர்ச்சிக்காரர் களது ஆவேசத்தாக்குதலுக்கு முன்னர் ஒரு அடி கூட முன் செல்ல முடியாமல் தத்தளித்தனர். இறுதியில் நத்தத்திற்குப்பின் வாங்கி ஓடினர். [6] மீண்டும் 4-7-1801ல் மற்றொரு தாக்குதலை பரங்கிகள் தொடுத்தனர். இந்த முறையும் மறவர்களது மரண அடியைத்தாங்கிக் கொள்ள இயலாமல் பரங்கிகள் உயிர்தப்பி ஓட்டம் பிடித்தனர். ஆனால் 18.9-1801ம் தேதி அன்று பரங்கிகள் மற்றொரு பெரிய தாக்குதலை பிரான்மலையில் மேற்கொண்டனர். இந்த முயற்சிக்கு புதுக்கோட்டைத் தொண்டமானது கூலிப்படைகள் கும்பெனியாரது ஏழாவது ரெஜிமெண்ட்டின் முதலாவது அணியுடன் சேர்ந்து உதவினர்.[7] இந்தப் போரில் முடிவு கும்பெனியாருக்கு சாதகமாக அமைந்து விட்டது. கிளர்ச்சிக்காரர்கள் காரைக்குடி பகுதிக்குப் பின்வாங்கினர். அவர்கள் விட்டுச் சென்ற ஏராளமான ஆயுதங்கள் பரங்கியர் கையில் சிக்கின.

கள்ளரும், கள்ளர் தலைவரும்

மறவர்களைப் போன்றே கள்ளர்களும் போரிடும் பரம்பரையாக இருந்தனர். இந்த சமூகத்தினர் குறிப்பாக தெற்கு நாட்டுக் கள்ளர் (தஞ்சாவூர்) கீழ்நாட்டுக் கள்ளர் (மேலுர்)பிறமலை நாட்டுக் கள்ளர் (மதுரைக்கு மேற்கு) என வழங்கப்பட்டனர். இவர்கள் ஆங்காங்கு பல நாடுகளாகப் பிரிந்து அம்பலக்காரர் ஒருவர் தலைமையில் கட்டுப்பட்டு கூட்டு வாழ்க்கை நடத்தி வந்தனர்.[8] இவர்கள் நாட்டார் எனவும் வழங்கப்பட்டனர். இவர்களில் கீழ் நாட்டுக் கள்ளர்கள், எப்பொழுதும் எந்த அரசுக்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்கவில்லை. முன்னுறு ஆண்டுகாலம் தொடர்ந்து மதுரை நாயக்கர் மன்னர் ஆட்சியில் கூட அவர்கள் கட்டுப்படாமல் மதுரை நாயக்க மன்னர்களுக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தி வந்தனர். ஆற்காடு நவாப்பின் பிரதியாக மதுரையில் நிர்வாகம் நடத்திய கம்மந்துான்கான் சாகிபு தான் இந்த சமூகத்தினரை மிகவும் பயங்கரமாக அடக்கி ஒடுக்கி, அவர்களும், ஏனைய குடிமக்களைப் போன்று கண்ணியமான வாழ்க்கை நடத்துமாறு செய்தார். அவரது மறைவிற்குப் பிறகு மீண்டும் அந்த சமூகத்தினரின் செயல் முறைகள் மோசமாகிவிட்டன. சிவகங்கைப் பிரதானிகளாக பணியேற்ற மருது சேர்வைக்காரர்கள் தங்களது அண்டை நாட்டவர்கள் என்ற முறையிலும், தாங்கள் சார்ந்துள்ள முக்குலத்தின் மற்றொரு பிரிவினர் என்ற முறையிலும் மேலுரர் நாட்டுக் கள்ளர்களுடன் பொதுவாக தொடர்புகளைக் கொண்டிருந்தனர். அவர்களது தலைவர்களை சிவகங்கைக்கு வரவழைத்து பொன்னும், மணியும் வழங்கி சிறப்பித்தார். குறிப்பாக – காரிப்பட்டி, குனிய முத்துார் கள்ளர் தலைவர்கள் சிவகங்கைக்கு அடிக்கடி வருகை தந்து மருதுசேர்வைக்காரர்களது பிரதான விருந்தினராக விளங்கினர்.[9]


இந்தச் சூழ்நிலையில், அவர்களைத் தங்கள் அணிக்கு இழுப்பதற்கான முயற்சிகளில் பரங்கிகள் முனைந்தனர், சீமான் வீட்டைக் கொள்ளையிடச் செல்லும் திருட்டுக் கூட்டம், முதலில் சீமான் வீட்டுவாசலின் உள்ள நாயின் வாயைக் கட்டிவிடுவது வழக்கம். அதைப் போன்றதுதான் கொள்ளைக் கூட்டவான பரங்கியரது நடவடிக்கைகளும் சிவகங்கைச் சேர்வைக்காரர்களது செல்வாக்கை மடக்கி, பலவழிகளிலும் அவர்களை அடக்கி ஒடுக்குவதற்கு பரங்கியர் முனைந்து செயல்பட்டனர். அவைகளில் ஒன்று, சிவகங்கைச் சீமையின் வடக்கிலும், வடமேற்கு எல்லையில் அமைந்து இருந்த கள்ளர்நாட்டுத் தலைவர்களை தங்களுக்கே உரிய ராஜதந்திர சூழ்ச்சிகளைக் கையாண்டு அவர்களது நட்பு நிலையில் மாற்றத்தை உருவாக்கினர். கும்பெனித்தளபதி காரோல் தலைமை இடத்திற்கு அனுப்பிய கடிதம் கள்ளர்நிலை பற்றிய தகவலைக் கொடுக்கிறது.[10] மேலுர்நாடு குழப்பமாக இருப்பதாகவும், கள்ளர் தலைவர்களைச் சந்திக்குமாறு கேட்டுக் கொண்டதில், கீழ்வளவு. அன்னுர் நாட்டுத்தலைவர்கள் அவரது அழைப்பைப் புறக்கணித்துவிட்டனர். அவர்களது நடவடிக்கைகளை நோட்டமிடுமாறு நிலக்கோட்டை தாசில்தாருக்கு ஆணை பிறப்பித்து இருப்பதாக அந்தக் கடிதத்தில் கண்டு இருந்தது. அடுத்து கர்னல் இன்னிங்ஸ் மேலுருக்குச் சென்றான். கள்ளர் தலைவர்களைச் சந்தித்தான். சாதுரியமாகவும், நயந்துபேசியும், அவரது பேச்சைக் கேட்காதவர்களை மிரட்டியும் கும்பெனியாரது நடவடிக்கைகளுககு உதவுமாறும் சிவகங்கை சேர்வைக்காரர்களது அணிக்கு எவ்வித ஆதரவும் வழங்கக்கூடாது எனவும் அவர்களது “சத்தியத்தைப்” பெற்று வந்தான். இந்தக் கள்ளர்களிலும் “குள்ளன்” ஒருவன் - அர்ஜானப் பெருமாள் என்பவன் மிகுந்த விசுவாசத்துடன் சிவகங்கை சமீந்தாரை ஆதரிக்க முன் வந்தான்.[11]

பின்னர் கள்ளர்நாட்டில் கீழ்நாட்டிற்கும், தெற்குநாட்டிற்கும் இடைப்பட்ட கள்ளர் நாடான தொண்டமான் நாட்டின் தலைவரான புதுக்கோட்டைத் தொண்டமானையும் பரங்கிகள் அணுகினார்கள். சிவகங்கைக்கும் புதுக்கோட்டைக்கும் இடையில் நிலவிய உறவுகள் நேயமானதாக இல்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக, ஏற்கனவே கி. பி. 1755 ல் தஞ்சை அரசரது படையெடுப்பின் பொழுது தொண்டமான் சிவகங்கை அரசருக்கு எதிராக செயல்பட்டிருந்தார். ஆதலால் இந்தக் “கள்ளரை” கும்பெனியார் தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்வதில் சிரமம் எதுவும் இல்லை. தஞ்சாவூரில் கும்பெனியாரது பிரதிநிதியாக இந்த வில்வியம் பிளாக்பர்ன், புதுக்கோட்டைக்கு விரைந்து சென்றான். கள்ளர் தலைவரான விஜயரகுநாத தொண்டமானைச் சந்தித்துப் பேசினான். தொண்டமானும் கும்பெனியாரது பிரதிநிதியை அரசமரியாதைகளுடன் தர்பாரில் வரவேற்று உபசரித்தார். கும்பெனியாரது எதிரிகளைத் தமது சொந்த எதிரிகளாக கருதுவதாக, அன்னியோன்னிய உணர்வுடன் பேசினார். தம்மாலான எல்லா உதவிகளையும் வழங்குவதற்கு எப்பொழு தும் தயராக இருப்பதாக வாக்குறுதியும் வழங்கினார்.[12]

பாஞ்சாலங்குறிச்சிப் போரில் கும்பெனியாரிடம் தோல்வியுற்று உயிர்தப்பி, தமது சீமைக்காட்டில் தஞ்சம் புகுந்த கட்ட பொம்மு நாயக்கரைப் பிடித்துக் கொடுத்து, ஆங்கிலேயரிடம் கைக்கூலி பெற்றவர் புதுக்கோட்டைத் தொண்டமான். கைக்கூலி ரூபாய் பத்தாயிரமும், பட்டாடைகளும், அரபிக் குதிரையையும்,[13] அழகிய வாளையும், பரிசாக சென்னை கவர்னரிடமிருந்து அவர் பெற்று ஓராண்டுதான் ஆகி இருந்தது. “கும்பெனியாருக்குத் தேவைப்படும் எந்த சந்தர்ப்பத்திலும் தம்மை அர்ப்பணித்து நல்ல பெயர் சம்பாதிக்க வேண்டும் என்பதே இறைவனது சன்னிநிதானத்தில் தமது பிரார்த்தனை”[14] என ஏற்கனவே கும்பெனியாருக்கு தெரிவித்து இருந்த “தொண்டு உள்ளம் கொண்ட சீமான்” அல்லவா இந்த தொண்டமான்? அதற்கான வாய்ப்பு இப்பொழுது வந்து இருப்பதை நழுவ விடுவாரா என்ன?

தமது திருமணவிழா சம்பந்தமான நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு இருந்த அவர் பிளாக்பர்னது கோரிக்கையை நிறைவு செய்வதையே பெரிதாக எண்ணி அதில் கண்ணுங்கருத்துமாகக் இருந்தார். உடனடியாகத் தமது தளபதி முத்துக்குமாருபிள்ளை தலைமையில் மூவாயிரம் கள்ளர்களை நத்தத்தில் நிலைகொண்டிருந்த இன்னிஸிடம் அனுப்பிவைத்தார்.[15] திருமெய்யத்தில் உள்ள தமது கோட்டையை கும்பெனியர் தாராளமாக பயன்படுத்திக் கொள்வதற்கும் அனுமதித்தார். போர்த்தளவாடங்களைச் சேகரித்து வைத்துக் கொள்வதற்குள், சிவகங்கைச் சீமை கிளர்ச்சிக் காரர்களையும் அவர்களது சுற்றத்தாரையும் சிறையில் இட்டு சித்திரவதை செய்வதற்கும் இந்தக்கோட்டையை பின்னால் பரங்கிகள் பயன்படுத்தினர்.[16]

அதே சமயத்தில், திருநெல்வேலியில் இருந்த மேஜர் மக்காலேயை எட்டையாபுரம் பாளையக்காரரிடம் அனுப்பி கும்பெனி யாருக்கு விசுவாசமாக நடந்து கொள்ளுமாறும் எந்தக் காரணத்தைக் கொண்டும் சிவகங்கைப் பிரதானிகளுடன் எவ்வித தொடர்புகளும் வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் எச்சரித்தனர்.[17] மொத்தத்தில், சிவகங்கைச் சீமையைச் சுற்றிலும் உள்ள பாளை யக்காரர்களிடமிருந்து சிவகங்கைப் பிரதானிகள் உதவி பெறுவதைத் தடுக்கும் தங்களது முதல் கட்ட திட்டத்தை கும்பெனியார் இவ்விதம் நிறைவேற்றினர். ஆனால் சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் இவைகளையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் இல்லை. தங்களது கிளர்ச்சியையும் கைவிடவில்லை. மாறாக, மிகுந்த ஆரிவத்துடன் தங்களது பரங்கி எதிர்ப்புப் போரைத் தொடர்ந்து வந்தனர் .

ஏற்கனவே அவர்கள் மதுரைச் சீமையின் மேற்குப்பகுதியைப் பிடித்து வைத்து இருந்தனர். இன்னொரு பகுதியான பாவளியை இப்பொழுது கைப்பற்றினர். மேலும், திருமோகூர் கோட்டை எற்கனவே இவர்கள் கைகளில் இருந்ததால் கிளர்ச்சிக்காரர்கள் அடுத்து மதுரையைப் பிடிக்க முயன்றனர். ஊமைத்துரையின் தலைமையில் ஒரு அணி மதுரைக் கோட்டையைப் பிடிப்பதற்குச் சென்றது. ஆனால் மிகுந்த பாதுகாப்புடன் பரங்கியர் அங்கு இருந்ததால், கிளர்ச்சிக்காரர்கள் சிவகங்கைக்குத் திரும்பினர்.[18] இன்னொரு அணி - இரண்டாயிரம் பேர்களுடன், சின்ன மருது சேர்வைக்காரர் மகன் சிவத்த தம்பி தலைமையில், தொண்டி வழியாக வடக்கு நோக்கி சோழச்சீமைக்குள் சென்றது. பொன் பத்தி, அறந்தாங்கி, அதிரைக்குடி, பட்டுக்கோட்டை மாங்குடி ஆகிய ஊர்களைக் கடந்து நாகூர் சென்றது.[19] வழி நெடுகிலும் கிளர்ச்சிக்காரர்களுக்கு மக்கள் பேராதரவு வழங்கினர்.[20] நாகூரை முற்றுகையிட்ட இந்த அணியை கும்பெனியாரின் பிரதிநிதி கேப்டன், பிளாக்பர்ன் கடுமையாகத் தாக்கினான். கிளர்ச்சிக்காரர்களது முன்னேற்றம் தடைப்பட்டது. முயற்சி தோல்வியுற்றது. இந்தத் தோல்விக்கு தஞ்சை அரசரும் புதுக்கோட்டைத் தொண்டமானும் தான் காரணம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.[21]

கும்பெனி வீரர்களுக்குத் தேவைப்பட்ட வெடிமருந்து, உணவுப்பொருட்களை இந்த “இரண்டு விசுவாசிகளும்” வழங்கி உதவியதுடன், தங்களுடைய ஒற்றர்கள் மூலம் கிளர்ச்சிக்காரர்கள், அவர்களது ஆதரவாளர்கள் பற்றிய துப்புக்களைச் சேகரித்து அப்பொழுதைக்கப்பொழுது அனுப்பி வந்தனர்.[22] அறந்தாங்கி காட்டிற்குள் புகுந்து, இருந்த முன்னூறு கிளர்ச்சிக்காரர்களை விரட்டி அடிப்பதற்கு எழுநூறுவீரர்களைத் தொண்டமான் அனுப்பி வைத்தார். அவர்களது உதவியினால், பிளாக்பர்ன் கிளர்ச்சிக்காரர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துத் தாக்கினான்.

கிளர்ச்சிக்காரர்களது மற்றுமொரு அணி கோட்டைப்பட்டினத்தில் இருந்தது. அந்தப்பகுதி பாளையக்காரர் சிலரது உதவியுடன் அந்த அணி தஞ்சையை நோக்கிச் சென்றது. இந்த அணிக்கு பட்டூர் தலைமை தாங்கிச் சென்றார். இவர் ஏற்கனவே மயிலப்பனுடன் சேர்ந்து முதுகுளத்தூர் கமுதிப் போர்களில் பங்கு கொண்டவர். எதிர்ப்பட்ட சில பாளையக்காரர்களைத் தாக்கி, அவர்கள் பின்வாங்கி ஓடுமாறு செய்தார், இதனையறிந்த பிளாக்பர்ன், மேஜர் மேயர் தலைமையில் நான்கு அணிகளையும் ஆயிரம் கைக்கூலிகளையும் அனுப்பி வைத்தான். அறந்தாங்கி வழியாக அவர்கள் சிறுகம்பையூர் சென்றனர். அங்கிருந்து வாரூர் அருகே முகாமிட்டு இருந்த கிளர்ச்சிக்காரர்களுடன் மோதினர். கடுமையான சண்டை, ஐம்பது கிளர்ச்சிக்காரர்கள் தியாகிகள் ஆயினர். திடீரென அப்பொழுது மழை பெய்ததால் பரங்கிகள் தப்பினர்.[23] என்றாலும் தஞ்சை நோக்கிச் சென்ற பட்டூர் அணி துண்டிக்கப்பட்டதால் அவர்களது திட்டம் நிறைவேறவில்லை. ஆனால் அறந்தாங்கி காட்டில் அத்தியோடி என்ற இடத்தில் கிளர்ச்சிக்காரர்களிடம் அகப்பட்ட கும்பெனியாரது கூலிகள் படாத பாடுபட்டனர். சாப்பிடுவதற்கு ஒரு மணி அரிசி அவர்களுக்குக் கிடைக்கவில்லை. குதிரைகளுக்கு கூளமும் கூட கிடைக்காது தவித்தனர்.

கமுதிக்கோட்டை

21. 7. 1801 தேதி கமுதிக்கோட்டையை வெள்ளைமருது தலைமையிலான படைப்பிரிவு தாக்கியது. அப்பொழுது அந்தக் கோட்டையின் பாதுகாப்பு லெப்டினண்ட் கார்டு பொறுப்பில் இருந்து வந்தது. அவருக்கு உதவுவதற்கு இராமநாதபுரம் மறவர் அணியும் மூன்றாவது ரெஜிமெண்ட்டில் முதல் அணியும் அங்கு நிலைகொண்டு இருந்தன. ஒருவார முற்றுகைப்போரினால் பயன் ஏதும் ஏற்படாததால், வெள்ளைமருது அவசர அலுவலாக சிவகங்கை திரும்பினார். முற்றுகையைத் தொடருமாறு மீனங்குடி முத்துக்கருப்பத்தேவரைக் கோரி இருந்தார். மிகுந்த உற்சாகத்துடன் கிளர்ச்சிக்காரர்கள் அணி அங்கே தாக்குதலைத் தொடர்ந்தது. 13. 8. 1801ம் தேதியன்று வெள்ளைத் தளபதி கார்டு சமாதானம் கோரி வெள்ளைக்கொடியுடன் கோட்டைக் கொத்தளத்தில் நின்றுகொண்டு கிளர்ச்சிக்காரர்களது ஒப்புதல் கோரினான்.[24] அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத கிளர்ச்சிக்காரர்கள் அவரை சரணடையுமாறு நிர்ப்பந்தித்து வந்தனர். முற்றுகை தொடர்ந்தது. இதற்கிடையில் இந்த அணியினரில் சிலர், பழமனேரிக்குச் சென்று அங்கிருந்த கும்பெனிப்படையைத் துரத்தி அடித்தனர். அடுத்து திருச்சுழியையும் கைப்பற்றினர்.[25]

இந்தகைய தோல்விகளினால் பதட்டம் அடைந்த கும்பெனியார், இராமநாதபுரம் கோட்டையில் இருந்து அவசர உதவியாக அறுநூறு சுதேசி சிப்பாய்களையும் நாகலாபுரத்தில் இருந்து ஐந்நூறு எட்டப்பனது ஆட்களையும், மூன்று பவுண்டு பீரங்கிகள் இரண்டையும் மேஜர் மக்காலே தலைமையில் கமுதிக்கு அனுப்பி வைத்தனர். இப்பொழுது போர் மிகவும் உக்கிரமாக நடந்தது. மக்காலேயின் பிசாசுத் தாக்குதலுக்கு முன்னர் கிளர்ச்சிக்காரர்கள் எதிர்ப்பு எடுபடவில்லை. பள்ளிமடத்தில் இருந்த கிளர்ச்சிக்காரர்களும் கமுதி கோட்டைப் போரில் கலந்து கொள்ள ஓடோடி வந்தனர். ஆனால் அதற்குள் போரின் போக்கு மாறிவிட்டது. பரங்கிகளது கை ஓங்கிவிட்டது.

27-8-1801 ம் தேதி முற்பகல் கமுதி கோட்டை போர் நின்றது. கிளர்ச்சிக்காரர்களில் உயிர் தப்பியவர்கள் மிகவும் குறைவு காலமெலாம் வீரவணக்கம் செலுத்திப் போற்றும் வரலாற்றை அங்கு கிளர்ச்சிக்காரர்கள் படைத்தனர். கமுதி கோட்டைக்கு வடக்கே வெகு தொலைவு வரை பிணக்குவியல்கள் காணப்பட்டன. பிறந்த மண்ணின் மானங்காக்கப் போராடிய மறவர்களது மகத்தான தியாகத்தை நினைவு படுத்தும் வகைகளில் அந்தக் குவியல்கள் ஆங்காங்கு காணப்பட்டன. கிளர்ச்சிக்காரர் அணியைச் சேர்ந்த ஏழு “சேர்வைக்காரர்கள்” அந்தப் போரில் மடிந்தனர். இது ஒரு ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அத்துடன், அபிராமம் அருகில் நடந்த போரில் மட்டும் நானுாறு போராளிகள் பலியானார்கள்.[26]

இந்தப்போரில் பரங்கிகளது பீரங்கித் தாக்குதலைப் போன்று எட்டப்பனது எடுபிடிகள் தாக்குதலும் மிருகத்தனமாக இருந்தது. அத்துடன் மீனங்குடி முத்துக்கருப்பத்தேவரைப் பின்பற்றி கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி வந்த சித்திரங்குடி, ஆப்பனுார் நாட்டார்கள் போர் கடுமையாக நடக்கும் பொழுது போராளிகளைக் காலை வாரிவிட்டதுதான் கொடுமையிலும் கொடுமையாக இருந்தது.[27] பரங்கிகள் அணியில் இராமநாதபுரம் மறவர்கள் இருப்பதைப் பார்த்தவுடன் அவர்கள் மனம் மாறிவிட்டனர் போலும்!

கர்னல் மில்லரும் அவனது கூலிப்பட்டாளமும் கிளர்ச்சிக்காரர்களை சிக்கல் வரை பின் தொடர்ந்து விரட்டி பேரிழப்புக்களை உண்டாக்கினர். ஆனால் கிளர்ச்சிக்காரர்கள் தளர்ச்சியடையவில்லை. அவர்கள் இராமநாதபுரம் கோட்டையைத் தாக்கி மீட்பதற்குத் திட்டமிட்டனர். அப்பொழுது கேப்டன் மக்ளாயின் பொறுப்பில் கோட்டையின் பாதுகாப்பு திருத்தி அமைக்கப்பட்டு இருந்தது. தாக்குதலை ஊமைத்துரையும் பெரிய மருதுவின் மக்களும் மூவாயிரம் பேருடன் தொடருவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. காளையார்கோவில் கோட்டையிலிருந்து கிளர்ச்சிக்காரர்கள் அணியும் இராமநாதபுரம் சீமை எல்லையை அடைந்த பொழுது கூடுதலான பாதுகாப்பு உத்திகள் இராமநாதபுரத்தில் ஏற்பட்டு இருப்பதாகவும், கிளர்ச்சிக்காரர்கள் அணி தாக்குதலுக்குப் போதுமானது அல்ல என்றும் ஒற்றர்கள் செய்தி தெரிவித்ததால் கிளர்ச்சிக்காரர்கள் காளையார் கோவிலுக்குத் திரும்பினர்.[28]

இராமநாதபுரம் கோட்டையில் இருந்த கும்பெனியார் அணிகள், இராமநாதபுரத்திலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்தன. அதே நேரத்தில் அறந்தாங்கிப் பகுதியிலிருந்த கிளர்ச்சிக்காரர்களை கேப்டன் பிளாக்பர்ன் இராமநாதபுரம் சீமைக்குள் தெற்கு திசை எல்லைக்குள் நெருக்கித் தள்ளினான், சார்ப்பாய் என்ற ஊரில் பரங்கிகள் அட்டகாசம் செய்தனர். அறந்தாங்கி பகுதியில் கிளர்ச்சிக்காரர்கள் கை ஓங்குவதற்கு அங்குள்ள மக்கள் மிகவும் உதவி வந்தார்கள். பிளாக்பர்னது பயமுறுத்தலையும் மீறி இவர்கள் கிளர்ச்சிக்காரர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை வழங்கி வந்தனர்.[29] இதனால் கோபங்கொண்ட பிளாக்பர்ன் அந்தக் குடியிருப்பைப் சூரையாடிக் கொளுத்துமாறு தென்கொண்டான் என்ற துரோகிக்கு உத்திரவிட்டான். அப்பொழுது தென்கொண்டான் தலைமையில் எழுநூறு கைக்கூலிகள் இருந்தனர். பின்னர் இந்த அணியும் இராமநாதபுரம் கலெக்டர் திரட்டிய பதினாயிரம் பேர்கள் கொண்ட பெரும் படையுடன் சேர்ந்து கொண்டு இராமநாதபுரத்திற்கு வடக்கே உள்ள “நாடுகளில்” உள்ள இரண்டாயிரத்து ஐநூறு கிளர்ச்சிக்காரர்களை அழிப்பதில் முனைந்தனர். [30] இந்தக் கூலிப்படையின் முயற்சி முற்றுப்பெறாவிட்டாலும் ஆங்காங்கு உள்ள கிளர்ச்சிக்காரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வேட்டையாடினர். சிவகங்கைக்கு வடக்குப் பகுதியில் தொண்டமான் சீமை எல்லையில் காடுகளில் இவ்விதம் வேட்டையாடிப் பிடித்த நூறு குடும்பத்தினர் பற்றிய விவரத்தை தொண்டமான் கலெக்டருக்கு அனுப்பிவைத்தான்.[31] அவர்கள் அனைவரும் திருமயம் கோட்டையில் சிறைவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

ராஜசிங்கமங்கலம், அறுநூற்றி மங்கலம், திருவாடனை, ஓரியூர் ஆகிய இடங்களுக்குக் கூலிப்படை அனுப்பப்பட்டு கிளர்ச்சிக்காரர்கள் மீது நெருக்குதலை ஏற்படுத்தினர்.[32] ராஜசிங்கமங்கலம் நாட்டில் இத்தகைய நடவடிக்கைகளினால் வன்முறை தலைவிரித்து ஆடியது. கிளர்ச்சிக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். கிளர்ச்சியின் வேகம் குலைக்கப்பட்டது.[33] கிளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு மக்களை ஊக்குவித்து வந்த வீர இளைஞன் குமாரத்தேவனும் அவனுடைய மூன்று தோழர்களும் பிடிக்கப்பட்டு இரும்புச் சங்கிலியில் பிணைத்து வைக்கப்பட்டனர். தூக்க இயலாத அந்தச் சங்கிலியின் பளுவினால் அந்த இளைஞர்களது உடல் துவண்டு வாடியது. காட்டு மிராண்டித்தனமான இந்த அடக்கு முறைகளுக்கு உடந்தையாக, உதவியாக வன்னியத்தேவன் என்ற துரோகி இருந்து வந்தான்.[34]

குமாரத்தேவனையும் அவனது தோழர்களையும் “நீதி” விசாரணை செய்து தண்டனை வழங்க ஒரு குழுவை கும்பெனியார் நியமனம் செய்தனர். கர்னல் மார்ட்டின்ஸ், தாமஸ்கிரீன், பாரிஸ் என்ற பரங்கிகள் தான் அந்தக் குழுவினர்.[35] குற்றம் சாட்டுபவர்களும், குற்றங்களுக்காக நியாய விசாரணை நடத்தி, தண்டனை வழங்குபவர்களும் கும்பெனியார் நியாயம் எங்கே இருக்கிறது? இந்தக் குமாரத்தேவன் ராஜசிங்கமங்கலம் பகுதியில் கும்பெனியாரது ஆதிக்க வெறிக்கு எதிராகக் கிளர்ச்சிக்களை நடத்திய மாவீரன் என்ற விவரம் மட்டும் தெரிகிறது. அவனது நாட்டுப் பற்றுமிக்க நடவடிக்கைகளை விவரமாகத் தெரிந்து கொள்ள உதவும் ஆவணம் எதுவும் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரி யது. அவனுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கு என்று ஒரு குழுவினைக் கும்பெனியார் அமைத்ததிலிருந்து அந்த மாவீரனது போராட்டத்தினால் பரங்கிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகிறது. இந்த “நீதி விசாரணைக்குழு” கிளர்ச்சிக்காரர்களது சொத்துக்களைப் பறிமுதல் செய்து, கசையடிகள், நாடுகடத்தல் போன்ற மோசமான கொடும் செயல்களினால் “நீதியை” நிலை நாட்டியது. இராமநாதபுரம் உதவிக்கலெக்டரும், கர்னல் மில்லரும் இந்தத் தண்டனைகளை நிறைவேற்றி வந்தனர். இராஜ சிங்கமங்கலத்தைச் சேர்ந்த ஜகந்நாத ஐயன் என்ற கிளர்ச்சித்தலைவருக்கு ஓராயிரம் கசையடிகளை வழங்கி, அவரது அனைத்து சொத்துக்களையும் கும்பெனியார் உடமையாக்கியதுடன் ஆறுதல் பெறவில்லை. அவரை வங்கக்கடலுக்கும் அப்பால் நாடு கடத்தி மனநிறைவு பெற்றது. கும்பெனி நிர்வாகம்.[36]பிறந்த பொன்னாட்டின் மீது பாசம் கொண்டு அதனுடைய விடுதலைக்கு உழைத்தது. ஏகாதிபத்திய வெறியர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போரிட்டது.இவைதான் இந்த தியாகி புரிந்த “அக்கிரமங்கள்”.

இராமநாதபுரத்திற்கும் தொண்டிக்கும் இடைப்பட்ட இராமநாதபுரம் சீமைப்பகுதியில், கும்பெனியாரது ஆசைக்கனவுகளுக்கு எதிராக அணி சேர்த்து. கிளர்ந்து எழுந்த நாட்டுப்பற்று மிக்க நல்லவர்களின் பட்டியலில் இந்தக் குமாரத்தேவனும், ஜகநாத ஐய்யனும் சிறப்பிடம் பெற்று இருந்தனர் என்பதை அவர்கள் பெற்ற பரிசுகளில், இருந்து தெரியவருகிறது. அவர்கள் நடந்து சென்றபாதையில் நாட்டு விடுதலையில் நாட்டங்கொண்ட ஆயிரக்கணக்கானோர், ஏனைய தியாகிகளுடன் அணி திரண்டு ஆர்ப்பரித்து கும்பெனியாரை எதிர்த்துப் போராடிய பொழுது அடக்கு முறை கொடுமைகளுக்கு அஞ்சிய, நெஞ்சுரமும் நேர்மையும் இல்லாத கோழைகள் சிலரது துரோகமும் சுயநலமும், பாற்கடலில் கலந்த நஞ்சைப்போன்று விடுதலைப் போராட்டத்தை மிகவும் பாதித்தது. வெற்றிக்குப் பதிலாக வீழ்ச்சிக் கொடி காட்டியது. இந்தக் கயவர்களது கோழைத்தனத்தால் போராளிகளின் தாக்குதலும் முன்னேற்றமும் தடைப்பட்டதுடன் அவர்களது போராட்டத்திற்குத் தேவையான ஆயுதங்களும், வெடிமருந்தும் வெளியில் இருந்து பெறுவதும் இல்லாமல் போய்விட்டது. 

இலங்கையில் இருந்த டச்சுக்காரர்கள் இந்த ஆயுதங்களைக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி வந்தனர். தொண்டிக்கும் பம்பாய்க்கும் இடைப்பட்ட கடற்பகுதி வழியாக இச்சாதனங்கள் மறவர் சீமைக்குள் நுழைவதை தடுக்கக் கும்பெனியார் சூளர் என்ற பரங்கி தலைமையில் கண்காணிப்பு அணி ஒன்றை நியமித்து இருந்தனர். இவர்களுக்கு இந்தக் கோழைகள் இரகசியமாக துப்புகள் தெரிவித்து வந்ததால் கேப்டன் சூளரது அணி சுறுசுறுப்பாக இயங்கியது. தொண்டிப் பகுதியில், கிளர்ச்சிக்காரர்களின் ஆயுதப்படகுகளை அவன் கைப்பற்றி, அழிக்கவும் முடிந்தது.[37] சிவகங்கைச்சீமைப்போர் நீட்டிப்புக்கு தேவையான உயிர்ப் பொருளான வெடிமருந்துக்கு இப்பொழுது தட்டுப்பாடு ஏற்பட்டது. மறக்குடி மக்களது பழமையான ஆயுதங்களான வேல், வாள், வளரி, எறியீட்டி, குத்துவாள் ஆகியவைகளைக் கொண்டு துப்பாக்கியையும் பீரங்கியையும் துணைகொண்டு போராடும் கும்பெனியாரை எதிர்த்து எத்தனை நாட்களுக்குப் போராட முடியும்? சிவகங்கைக் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் இடர்ப்பாடு இது. என்றாலும், இலட்சியத்தில் இடைவிடாது இணைந்து இருந்த அவர்களது அக்கரையும் ஆவேசமும் இந்தக் குறைபாட்டினைப் பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை. அவர்களது போர்த் திறன் வெடிமருந்து ஒன்றில் மட்டும் புதைந்து இருக்கவில்லையே! உலகையே வெற்றி கொள்ளலாம் என்ற நினைப்பு ஏற்பட்டு விட்டால், உடல் அவர்களுக்கு பெருஞ்சுமையென எண்ணுவார்கள். அதில் பொருந்தியுள்ள புனித உயிரை வழங்கிப் புகழையும் சம்பாதிக்கும் பெரு விருப்பு உள்ளவர்கள் அவர்கள்.[38]

  1. 1 Military Consultations 285. (18-6-1801) pp. 4559-61
  2. 2 Military Consultations 286 (4-8-1801) pp. 5348-49.
  3. 3 Military Consultations vol. 286, (4-8-1801) pp. 5348-49
  4. 4. Col. Welsh: Military Reminiscences. (1831) vol. I pp 89-92
  5. Military Consultations vol. 285. A (18-6-1801) pp. 4980-81
  6. Military Consultations vol. 288 A (19-9-1801) p. 6859
  7. Military Consultations vol. 288 A (19-9-1801) p. 6859
  8. Francis. W: Madurai Gazeteer vol. 1 (1914)
  9. Madurai District Records vol. 1134, (29-5-1801).
  10. Madurai District Records vol. 1220, p.p. 106
  11. Ibid vol. 1182, (5-9-1801) p. 149.
  12. Military Consultations. vo1 - 85 A, (24-6-1801) p 5006 5010-13.
  13. Rajayyan Dr. K. History of Madurai (1974) p. 366,
  14. Board of Revenue Consultations, vol. 235, (14-9-1799) р. 8067.
  15. Military Consultations, vol. 285 (A) 22-6-1801 p.p. 5024-26.
  16. Ibid (24-6-1801) pp. 5030-32.
  17. Board of Revenue Consultations-vol. 235, (14-9-1799) р. 806.
  18. Military Consultations vol. 285 (A) (7-7-1801), р. 5051-52.
  19. Military Consultations vol. 296 (4-8-1801) p. 5380
  20. Military Consultations vol. 296 (11-8-1801) p. 5645.
  21. Military Consultations vol. 285-A (1–7-1801) p. 5034
  22. Ibid 12-8–1801 pp, 6900-6901
  23. Ibid 27-8-1801 pp. 6934-35
  24. Military Consultations vol. 285. A. pp. 6850-51
  25. Ibid. 286. 4.8.1801. pp. 5352-56
  26. Military Consultations vol. 286-pp 6854-56
  27. Military Consultations vol. 288(A) (27-8-1801) p. 6855
  28. Ibid vol. 288 (A), (21-9-1801), p. 6962
  29. Ibid vol. 288 (A) (15-9-1801), pp. 6844-45
  30. Military Consultations vol 288(A) 11-9-1801 pp. 6954-56
  31. Ibid p. 6959
  32. Ibid p. 6967
  33. Madurai District Records, vol 219 (20-9-1801) (24-9-1801)
  34. Ibid vol. 1134, (20-9-1801)
  35. Revenue Sundries. vol. 26, (20-9-1801)
  36. Madurai District Records vol. 1219. (25-10-1801)
  37. Military Consultations, vol. 288 (A) (10-9-1801).
    p p. 6857-58 (24-9-1801) p.p. 686о.
  38. ஜெயங்கொண்டார் கலிங்கத்துப்பரணி பாடல் எண். 354

    “உலகு கைப்படும் எனினும் அது ஒழிபவர்
        உடல் எமக்கு ஒரு சுமை என முனிபவர்
    உயிரை விற்று உறுபுகழ் கொள உழல்பவர்
        ஒருவர் ஒப்பவர். . . . . ...”