முடியரசன் தமிழ் வழிபாடு/018-049

18. தொன்மைத் தாயே


கா[1]வுக்குள் மலரை வைத்தாய்
கண்டுக்குள் சுவையை வைத்தாய்
பூவுக்குள் தேனை வைத்தாய்
பூமிக்குள் பொன்னை வைத்தாய்
ஆவுக்குள் பாலை வைத்தாய்
ஆர்வத்தில் ஊறும் என்றன்
பாவுக்குள் அனைத்தும் வைப்பாய்
பாருக்குள் முதன்மைத் தாயே.

கல்லுக்குள் தீயை வைத்தாய்
கனலுக்குள் வெம்மை வைத்தாய்
வில்லுக்குள் வீரம் வைத்தாய்
வேலுக்குள் கூர்மை வைத்தாய்
செல்லுக்குள்[2] இடியை வைத்தாய்
சிந்தைக்குள் பொங்கும் பாடற்
சொல்லுக்குள் அனைத்தும் வைப்பாய்
தொன்மைக்குள் தொன்மைத் தாயே.

[நெஞ்சு பொறுக்கவில்லையே]

  1. கா-பூங்கா
  2. செல்-முகில்