முடியரசன் தமிழ் வழிபாடு/019-049

19. தாள் பணிந்தேன்
கலி வெண்பா

 
....................................
....................................
காலத்தை வென்றவளே, கற்பனைக்கும் எட்டாமல்
ஞாலத்தில் நின்றொளிரும் நந்தா மணிவிளக்கே,
நெஞ்சத் திருக்கோவில் நின்றிருந் தெந்நாளும்
அஞ்சலெனச் சொல்லி அரவணைக்குந் தெய்வதமே,
நெஞ்சை அகலாக்கி நீங்காத அன்பென்னும்
பஞ்சைத் திரியாக்கிப் பற்றும் உணர்வை
எரியாக்கி ஏற்றும் எழில்விளக்கே, முன்னைப்
பெரியார்க்குந் தோன்றாப் பெருமை படைத்தவளே,
சங்கத்தார் நெஞ்சமெனுந் தண்பொழிலிற் கூடிமனம்
பொங்கத்தான் ஆடிவரும் புள்ளி எழில்மயிலே.
பாவாணர் நாவிற் பழகிப் பழகிநின்று
கூவாமற் கூவிக் குளிர்விக்கும் பூங்குயிலே,
அப்பாலும் இப்பாலும் ஆடித் திரியாமல்
தப்பேதுஞ் செய்யாமல் தக்க நெறிநடக்க
எப்போதும் நன்றுரைத் தெம்மைப் புரப்பதற்கு
முப்பாலைத் தந்து முறைப்படுத்தும் நற்றாயே,
மோதும் பகைதவிர்க்க மொய்ம்பு[1]டனே சென்றங்குத்
தூதுசொலி மீண்ட துணிவுடைய பாட்டரசி
அவ்வைப் பெருமாட்டி ஆண்டாண்டு வாழ்ந்திடவே
செய்வித்த பேராற்றல் சேரும் செழுங்கனியே,
கற்புக் கடம்பூண்ட கண்ணகியாம் பெண்மகளைப்
பொற்புடைய தெய்வமெனப் போற்றி வணங்குதற்குக்
கற்கோவில் அன்றெடுத்த நற்கோவின் பின்வந்த
சொற்கோவின் காப்பியத்துள் தோன்றிவரும் யாழிசையே,

சாலறிவன் வாணிகத்தான் சாத்தன்மணி மேகலையாம்
நூலதன்பால் இட்டுவைத்த நுண்புலமை வைப்புமுதல்
வற்றாது மேலும் வளஞ்சுரந்து கூடிவர
அற்றைநாள் கண்ட அமுத சுரபியே,
தேவன் திருத்தக்கன் செம்மையுறச் செய்தளித்த
பாவல்ல சிந்தா மணியிற் படரொளியே,
வன்பில் திணிக்காமல் வந்த வடமொழியைத்
தென்பாகக் கற்றுணர்ந்து தேர்ந்த ஒருகம்பன்
நாவிரித்த பாட்டில் நடம்பயின்று வந்தெங்கள்
காவிரித்தாய் வெள்ளம்போற் காணுங் கவிநலமே
பூவேந்திப் பொங்கிப் பொழிகின்ற தேனெடுத்து
நாவேந்தத் தந்தசுவை நன்றன் றெனவுரைக்கப்
பாவேந்துஞ் சொற்சுவையாப் பாடியவெண் பாவேந்தன்
பூவேந்தத் தந்த புகழேந்தி வந்தவளே,
சீர்கெட்டுப் பாடித் திருட்டுக் கவிபாடிப்
பேர்கெட்டுப் போனாலும் பேர்கவிஞன் என்றுரைத்துப்
பாட்டுத் தளையறுத்துப் பாடிவரின் கூத்தனதைக்
கேட்டுத் தலையறுத்தான் என்று கிளந்திடுவர்;
பாட்டுத் திறமறியாப் பாவலரைச் சீறியெழுந்
தோட்டுத் திறலுடையான் ஒட்டக்கூத் தன்பாவால்
வெற்றுக் கவியென்று வெட்டியும் பாடிடுவான்
உற்ற உயர்கவியென் றொட்டியும் பாடிடுவான்
வெட்டியும் ஒட்டியும் வேண்டும் படியுரைத்த
ஒட்டக்கூத் தன்பாட்டில் ஒட்டிவருங் காரிகையே,
பண்டைநாள் தொட்டுப் பகையாக வந்தவற்றைக்
கண்டு கலங்காமற் கண்டாய் களம்பலவும்
சென்றகள மெல்லாம் செயங்கொண்டாய் ஆதலினால்
இன்றும் பரணிபல ஏற்றுவரும் போர்முரசே,
தென்மலையில் தோன்றித் திரிகூட ராசன்றன்
சொன்மிடையும் பாட்டொலியிற் சொக்குகுற வஞ்சியே,

‘எல்லா மதங்களுமுண் டென்றாலும் ஓர்பகையும்
அல்லா மதமொன்றே ஆக்கிடுக மானிடமே,
கூறாய்ப் பிரியல்' எனக் கூறியிங்கு யாவரையும்
சீறா நலங்கொண்டு சேர்த்தணைக்குஞ் செந்தமிழே,
'சாதி சமயமென்று சண்டையிட்டு மாயாதீர்
சோதி வடிவொன்றே தூய இறை' என்று
வள்ளலருட் பாவில் வடித்தெடுத்த தேன்சுவையே,
உள்ளம் உருக்கி உணர்விக்கும் தெள்ளமுதே,
என்று புகழ்பாடி என்னம்மை தாள்பணிந்தேன்
........................................................................
........................................................................

[தமிழ் முழக்கம்]

  1. மொய்ம்பு - விருப்பம்