முடியரசன் தமிழ் வழிபாடு/025-049
தாயே போற்றி, தமிழே போற்றி;
நீயே உயிரென நினைவேன் போற்றி!
ஈன்ற உன்னை இனிதிற் காக்க
மூன்று கழகம் முந்தையர் கண்டனர்;
வழிவழி வந்தோர் வாழ்வுனக் களிக்க
எழிலுறு கழகம் இற்றையர் கண்டனர்;
வளமுற நின்னலம் வளர்த்து வருதலாற்
கழக வுணர்வுகள் கருத்திற் கலந்தன;
வருத்துமென் வாழ்வு வளமுறற் பொருட்டோ
கருத்திற் கலந்தன கழக வுணர்வுகள்?
வயிற்றைக் கழுவும் வழியெனக் கருதிலேன்
எயிற்றை[1]க் காட்டும் இழிகுணம் எனக்கிலை;
பழியுனக் குறுமேல் பாய்ந்ததைத் தடுக்கக்
கழகம் ஒன்றே களமெனக் கண்டேன்!
உன்னால் அன்றோ கழக வுணர்வுகள்
என்னுட் புகுந்தன இறுகப் பற்றின;
கழகப் பாவலன் யானுனைக் காப்பேன்
உளமுறும் உணர்வே வாழிய தமிழே!
[நெஞ்சிற்பூத்தவை]
- ↑ எயிறு - பல்