முடியரசன் தமிழ் வழிபாடு/031-049
தமிழேஉன் புகழ்பாட வாழ்வெடுத்தேன் - ஆசை
தணியாமல் இசைகூட்ட யாழெடுத்தேன்
-தமிழே
இமைமூடும் விழியாலே எதுகாண முடியும்?
எழில்யாழை உறைமூடின் எதுபாட இயலும்?
-தமிழே
நரம்பேழும் நலமாக முறுக்கேற வைத்தேன் -நீ
நரம்போடு விளையாடும் விரல்சோர வைத்தாய்
திறம்பாடி உயிர்வாழுங் குறியோடு நின்றேன் - நீ
திரும்பாமல் முகங்கோடி[1]ச் சிலையாக நின்றாய்
-தமிழே
சுமையாகத் துயர்வந்தே எனைமோதல் முறையா?
சுரம்பாடும் நரம்பொன்று பகையாதல் சரியா?
எமையாளுந் தமிழேஉன் புகழ்பாடத் தடையா?
இரங்காமல் இருக்கின்றாய் இதுதான் உன் விடையா?
-தமிழே
[பாடுங்குயில்]
- ↑ கோடி - திருப்பி, வளைந்து, சாய்ந்து