முடியரசன் தமிழ் வழிபாடு/038-049

38. வாழ்த்தி நிற்பேன்


கவிதைஎனுங் காதலிபால் உன்னைப் பெற்றேன்
          கண்ணம்மா! தமிழ்மகளே! முத்த மிட்டேன்
கவிவெறியோ கள்வெறியோ அறிய கில்லேன்
          கனவுலகில் பறக்கின்றேன் தரையில் நில்லேன்;
செவிபொருந்தும் விழிகண்ணீர் சிந்தக் காணின்
          செங்குருதி பீறிட்டென் னெஞ்சிற் கொட்டும்
புவிபுகழும் நீகலங்கப் பார்த்து நில்லேன்
          போர்தொடுப்பேன் உனைக்காப்பேன் வாழ்த்தி நிற்பேன்.

[கவியரங்கில் முடியரசன்]