முடியரசன் தமிழ் வழிபாடு/039-049
தென்னகத்துத் திருமகளே! கனியே! நெஞ்சில்
தித்திக்கும் கனிச்சாறே! சுளையே! தேனே!
என்னகத்து நின்றுநடம் ஆடும் பாவாய்!
எழிலரசி! எஞ்ஞான்றும் இளமைத் தோற்றம்
நின்முகத்துக் காண்கின்றேன் களிப்பில் மூழ்கி
நிகரில்லை நினக்கென்றே நிமிர்ந்து நோக்கி
உன்னலத்தைக் காதலித்தேன் உயிர்மூச் செல்லாம்
உனக்கென்றே வாழ்கின்றேன் தமிழ ணங்கே.
உனையீன்ற நாட்டுக்கு நன்றி சொல்வேன்
உனைவளர்த்த பெரியோர்க்கும் சொல்வேன் நன்றி
சுனையீன்ற நாண்மலரே! நின்னெழிற்குச்
சூட்டிமகிழ் அணிகலன்தாம் கணக்கில் உண்டோ ?
நனியிகந்த செல்வமகள் என்ற றிந்தும்
நானொருவன் ஏழையுனை நாடு கின்றேன்
எனையிகழேல் நீயின்றேல் நானும் இல்லை
என்னுயிரும் நினக்கென்றே இருக்கின் றேனே.
[முடியரசன் கவிதைகள்]