விளையாட்டு உலகம்/உயரம் உயர்கிறது!

உயரம்
உயர்கிறது!


சிறு கிராமம் ஒன்றில் பிறந்த சிறுமி ஒருத்திக்கு 'பாலட்' நடனக்காரியாக வேண்டும் என்பது ஆசை. லிக்னைட் வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைந்துள்ள அந்தக் கிராமப்பகுதியில், பட்டணத்திற்கு அப்பால் அமைந்துள்ள சிற்றூர் பகுதியில் நாட்டிய ஆசிரியைக்கோ, மற்றும் வசதிக்கோ எங்கே போவது?

தனது மூன்று சகோதரிகளுடன் ஆசைக் கனவுகளைப் பங்கிட்டுக் கொண்டதுதான் அவளுக்குத் திருப்தியாக இருந்தது. அவளது ஆசைகள் கனவுகளாகி செயல்வடிவம் பெறாமலே போய்விட்டதால், அந்தச் சிறுமி அந்த ஏக்கத்திலேயே ஆழ்ந்துபோய் விடவில்லை. சோர்ந்து விழவுமில்லை.

இயற்கையின் காற்று, நீர், வெளிச்சம், நெருப்பு எல்லோருக்கும் எளிதாகக் கிடைப்பதுபோல, விளையாட்டுதான் அவளுக்கும் மிக எளிதாகக் கிடைத்தது. விருப்பம் விளையாட்டில் அதிகமாக இருந்ததாலும், அது எளிதாகக் கிடைத்ததாலும், அதுவே அந்தச் சிறுமிக்கு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது.

குழந்தைகளுக்கான விளையாட்டுப் பள்ளியில் சேர்ந்துகொண்ட அச்சிறுமி, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக உடலால் மட்டுமல்ல, விளையாட்டுத் திறன்களிலும் வளர்பிறையாக வளர்ந்துகொண்டே வந்தாள். 800 மீட்டர் துரம் ஒடுதல், வேலெறிதல், இரும்புக்குண்டு எறிதல்போன்ற நிகழ்ச்சிகளில்தான் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் எழுச்சியும் இருந்ததே தவிர, வேறெதிலும் இல்லை.

சிறுமிக்குப் பயிற்சியளித்த எர்கார்டு மைக் எனும் பயிற்சியாளரே அறித்துகொள்ள முடியவில்லை அந்தச் சிறுமியின் ஆற்றலை 15 வயது நிரம்பியபோது, அந்த இளமங்கையின் உயரமோ 1.58 மீட்டர் உயரமே இருந்தது. அப்பொழுது அவள் தாண்டிக் காண்பித்த உயரமானது 1.65 மீட்டர் இருந்தது என்பது எல்லோருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது. அவளது பயிற்சியாளரும் உயரத் தாண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உற்சாகம் தரத்தொடங்கினாள்.

1972ஆம் ஆண்டு மியூனிக்கில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்து, போட்டியில் கலந்து கொண்டபோது, ஏழாவது இடத்தைத்தான் அடைய முடிந்தது. முதலாவதாக வந்த மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்தவரான வீராங்கனை, உல்ரிக் மேபோர்த் என்பவருக்கும் ஏழாவதாக வந்த மங்கைக்கும் இடையே இருந்த உயரமானது 7 சென்டி மீட்டர் வித்தியாசம் இருந்தது. உல்ரிக் தாண்டிய உயரம் 6 அடி 3; அங்குலம். (1.92)

‘ஏழாவதாக வந்து விட்டோமே, இனி எப்படி முன்னுக்கு வரமுடியும்’ என்ற தாழ்வு மனப்பான்மை கொண்டு விடவில்லே அந்த மங்கை. தாளாத முயற்சியையும் தனியாத ஆசையையும் பயிற்சியிலே பெருக்கத்தொடங்கிவிட்டாள்.

உழைப்பு விண்போகவில்லை. உண்மையான முயற்சி அவளைக் கைவிட்டுவிடவில்லை. உல்ரிக் தாண்டிய உயரத்தைவிட 2 சென்டி மிட்டர் உயரம் அதாவது-1.94 மீட்டர் உயரம் தாண்டி, உலக சாதனையை நிகழ்த்தினாள்-1974ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ந் தேதி பெர்லினில் நடந்த பந்தயத்தில்.

உலகத்தின் கண்களிலே உயர்ந்த சின்னமாகத் தோன்றத் தொடங்கினாள் அந்த மங்கை. 1974ஆம் ஆண்டிலேயே ரோம் நகரில் நடந்த பந்தயத்தில் 1. 95 மீட்டர் உயரம் தாண்டி மீண்டும் உலக சாதனையை மாற்றியமைத்தாள்.

‘உலக சாதனையை மாற்றி விட்டோம். இனி நம்மை யாரும் வெல்லமுடியாது’ என்று, துங்கித் தோற்ற முயல் எண்ணம் கொண்டுவிடவில்லை அவள். ‘தன்னை யாரும் வென்றுவிட்டால் என்ன செய்வது’ என்ற அடக்கமான அச்சத்திலே, தொடர்ந்து பயிற்சிகளைச் செய்துகொண்டே, தேகத்தை திறமையான நிலையிலே பாதுகாத்துக் கொண்டே வந்தாள். பந்தயங்களிலும் கலந்துகொண்டாள்.

1976ஆம் ஆண்டில் டிரஸ்டன் என்ற இடத்தில் 2.97 மீட்டர் உயரம் தாண்டி மூன்றாவது முறையாக உலக சாதனையைத் தீட்டினாள். அத்துடன் உயரத்தை நிறுத்தி கொள்ள முடிந்ததா? அதுதான் இல்லை.

பயிற்சி அளித்த வேகம், அவளை மேலும் உயரத்திற்குக் கொண்டு சென்று, குவலயத்தையே வியப்பில் மூழ்கடித்துவிட்டது.

1977ஆம் ஆண்டு, ஹெல்சிங்கி என்ற இடத்தில் பந்தயங்கள் கடந்தபோது, அந்த மங்கை நிகழ்த்திய அற்புத சாதனை இருக்கிறதே, அது யாருமே எதிர் பார்க்காத ஒன்றாகும். 2 மீட்டர் உயரம் தாண்டி உலகத்திலேயே முதல் வீராங்கனையாகும் பெரும்பேறு பெற்று விளங்கினாள்.

கிழக்கு ஜெர்மனியின் தென் கிழக்குப்பகுதி ஒன்றில் லிக்னேட் சுரங்கம் அமைந்துள்ள லோக்சா எனும் சிறு கிராமம் ஒன்றில் தொழிலாளர் குடும்பத்தில், நான்கு பெண்களில் ஒருத்தியாகப் பிறந்த ரோஸ்மேரி ஆக்கர்மான் எனும் வீராங்கனை, நன்றாக மனப்பாடம் செய்த பாட்டினைக்கூட தவறில்லாமல் ஒப்புவிக்கத் திணறி நின்ற காலம் ஒன்று. தாழ்வு மனப்பான்மையிலும், தன்னம்பிக்கை இல்லாமலும், வாழ்ந்துவந்த ரோஸ் மேரியின் தாழ்வு மனப்பான்மையை அகற்றி வளர்த்து தன்னம்பிக்கையை, தைரியத்தை ஊட்டியது. விளையாட்டுக்கள்தான்.

“விளையாட்டுக்கள் எனக்கு சுயக்கட்டுப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் உற்சாகமான உணர்வுகளையும் ஊட்டி, எனக்கு இனிய பல ஆற்றல்களை வழங்கின. அதன் மூலமே. என்னல் எனது அன்றாட பணிகளை, அரசாங்க வேலைகளை அழகாகவும் ஒழுங்காகவும் செய்யமுடிகிறது. எல்லோரிடமும் இனிதாகவும் அழகாகவும் பழகமுடிகிறது” என்று கூறும் ரோஸ்மேரியின் வார்த்தைகள், நமக்கெல்லாம் எவ்வளவு நம்பிக்கையை ஊட்டுகின்றன பார்த்தீர்களா?

உலகத்தின் ஒரு மூலையில் பிறந்த பெண்ணை, உலகத்தின் திலகமாக மாற்றிவைத்த பெருமை விளையாட்டுக்களையே சார்ந்திருக்க, நாம் மட்டும் ஏன் அதனைப் புறக்கணித்துக்கொண்டே போகிறோம் என்பது தான் நமக்கு புரியவே மாட்டேன் என்கிறது.

உயரம் உயர்கிறது! உயர்ந்துகொண்டு இருக்கிறது. உள்ளத்தில் அந்த வீராங்கனையின் வடிவம் பதிந்து, ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது! வெற்றியின் சின்னமல்லவா! உழைப்பின் வண்ணமல்லவா! உயர்கின்ற உயரத்தின் உயர்ந்த பட்டியலைப் பாருங்கள் புரியும்.

வருடம் வயது உயரம்
1966 14 1.46 மீ
1967 15 1.65 மீ
1968 16 1.71 மீ
1969 17 1.76 மீ
1970 18 1.77 மீ
1971 19 1.81 மீ
1972 20 1.85 மீ
1973 21 1.88 மீ
1974 22 1.95 மீ
1975 23 1.94 மீ
1976 24 1.96 மீ
1977 25 2.00 மீ