விளையாட்டு உலகம்/சக்தியின் சாதனை!

சக்தியின்
சாதனை!

அந்த இளைஞனுக்கு ஓட்டப் பந்தயங்களில் அவ்வளவாக அனுபவமில்லைதான். என்றாலும், இளமையின் வேகத்தில், கரைபுரண்டு காட்டாறாக ஓடுகின்ற உற்சாகத்தின் எழுச்சியில், தன் நாட்டிலே ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற்று, வெற்றி வீரனாகிவிட்டக் காரணத்தால், ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொள்கின்ற வாய்ப்பினையும் பெற்று விட்டான்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் 17வயது மாணவனுக்கு பெரிய வாய்ப்பு பார்த்தீர்களா! 1912ம் ஆண்டில், ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் எனும் இடத்திலே நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில்தான், அந்த இளைஞன் இவ்வரிய அதிர்ஷ்டம் நிறைந்த வாய்ப்பினைப் பெற்றான்.

அந்த இளைஞனுடன் அனுபவம் நிறைந்த இன்னொரு பெரிய வீரனும் இருந்தான். தான் ஓடுகின்ற 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் எப்படியாவது வென்று, தங்கப்பதக்கத்தைக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற தணியாத பேராவலுடன் அவன் தடுமாறிக் கொண்டிருந்தான். அந்த வீரனின் பெயர் மெல்வின் ஷெப்பார்டு (Melvin Shappard) என்பதாகும்.

பள்ளிக்கூட மாணவனை. ஜேம்ஸ் மெர்டித் எனும் அந்த இளைஞனே அருகில் அழைத்தான். அவன் காதருகில் தன்னுடைய திட்டத்தை மிகவும் ரகசியமாகக் கூறினன். விவரம் புரியாத ஜேம்ஸ் மெர்டித்தும், அனுபவம் உள்ள தன் தாயகத் தோழன் கருத்துக்குச் செவி கொடுத்ததும் இல்லாமல், சம்மதத்திற்கும் தலையாட்டி விட்டான். தன் தந்திரம் பலித்ததென்று மெல்வின் வெடிப்பார்டும் துள்ளித்திரிந்தான் மகிழ்ந்தான் . அந்த மகிழ்ச்சிக் கிடையே போட்டி நடைபெறும் நாளும் வந்தது.

போட்டி தொடங்குவதற்கு முன், பள்ளிக்கூட மாணவனைப் பார்த்தான் மெல்வின் வெடிப்பார்டு. சரியென்று கண்ணசைவில் சம்மதத்தைக் காட்டுவிட்டு, பந்தயத்திற்குத் தயாராகிவிட்டனர் இருவரும்.

நடக்க இருக்கின்ற பந்தய நிகழ்ச்சியோ 800 மீட்டர் ஒட்டம். அதில் ஒரே மூச்சில் விரைவாக ஒடுகின்றவர்களுக்கே வெற்றி கிட்டும். அதில், முதலாவதாக ஒடுகின்றவர்கள், தொடக்கத்திலேயே அசுர வேகத்தில் ஒடி கொஞ்ச துாரம் சென்றதும், களைத்துப் போய் ஒட முடியாமல், போட்டியிலிருந்தே விலகிப் போய் நின்று விடுவார்கள். அந்த வீரனைப் பின்பற்றிப் போகின்ற மற்ற வீரர்களும், விவரம் பின்னல் புரிந்து, வேதனையுடன் ஒட முடியாமல் ஒடி முடிப்பார்கள். இது அன்றடம் நடக்கக்கூடிய அவல நிகழ்ச்சியாகும்.

மெல்வின் வெடிப்பார்டினுடைய திட்டமும் இது தான். போட்டி தொடங்கிய உடனேயே, ஜேம்ஸ் மெர்டித் வெகு வேகமாக ஓடத் தொடங்கிவிடவேண்டும். எல்லோரும் அந்த வேகத்திற்கு இணையாக ஓடி, களைத்துப்போய் விடுவார்கள். ஆனால், தான் மட்டும் தன்னுடைய பயிற்சியில் கடைபிடித்த வேகத்துடனே ஓடி, முதலாவதாக வந்துவிட வேண்டும் என்பதுதான்.

ஜேம்ஸ் மெர்டித்துக்கும் தெரியும். இருந்தாலும், தன் தோழன் வெற்றி பெற்றால் தன் நாட்டுக்குத் தானே அந்தப் பெருமை போகிறது, தங்கப் பதக்கம் வருகிறது என்ற தாயகப் பற்றினால்தான் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டான்.

ஓட்டப் பந்தயம் தொடங்கிவிட்டது. ஏற்பாட்டின்படியே, ஜேம்ஸ் வேகமாக ஓடத் தொடங்கினான். எல்லோரும் அவன் பின்னே ஓடினார்கள். மெல்வினுக்கு மகிழ்ச்சிதான். அவனும் ஓடிக்கொண்டிருந்தான். தன் திட்டம் பலிக்கிறது என்ற தன்னம்பிக்கையில் ஓடிக் கொண்டிருந்தான்.

என்றுமில்லாத புதிய வேகத்தில் ஓட்டத்தைத் தொடங்கிய ஜேம்ஸ் மெர்டித்தும், ஓடிக்கொண்டேதான் இருந்தான். அதாவது, அனைவருக்கும் முன்னாலேதான் ஓடிக்கொண்டிருந்தான். ‘தான் களைத்துப் போவோம். பின் தங்கி விடுவோம். தன் தாயகத் தோழன் முதலாவதாக வந்துவிடுவான்’ என்ற நினைவுடன் தான் அவனும் ஒடிக் கொண்டேயிருந்தான்.

என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை, எந்த சக்தியின் துாண்டுதலோ தெரியவில்லை. அவன் களைக்கவுமில்லை, ஓட்டத்தில் சளைக்கவுமில்லை. பின் தங்கவும் இல்லை. முதலாவதாகவே ஓடி முடித்துவிட்டான். தங்கப் பதக்கத்தையும் பெற்றுவிட்டான்.

திட்டம்போட்ட ஷெப்பார்டு இரண்டாம் இடத்தையே பெற முடிந்தது. குறுக்கு வழியில் வெற்றி பெறலாம் என்று பகடைக்காய்போல் ஒரு வீரனைப் பயன்படுத்த, பலிகொடுக்க முனைந்த ஷெப்பார்டு தோற்று, இரண்டாம் இடத்தையே பெற முடிந்தது.

‘தான் தோற்றுப் போனலும் பரவாயில்லை, தனது நாட்டுக்கே தங்கப்பதக்கம் வரவேண்டும்’ என்று தியாகத்திற்குத் தயாரான அந்த அமெரிக்கப் பள்ளி மாணவனுக்கோ, தங்கப்பதக்கம் எதிர்பாராமலே கிடைத்துவிட்டது.

‘மனிதன் நினைக்கிறான். இறைவன் அழிக்கிறான்’ என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. ‘நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும். தீங்கினை நினைத்தால் தீங்கே பயக்கும்’ என்பதும் முதுமொழிதான். குறுக்கு வழிகள் முதலில் வெற்றி தருவதுபோல தோன்றினாலும், இறுதியில் நேர்மையே வெல்லும் என்ற உண்மையைத் தான் இறைவனது சக்தி அவ்வப்போது வெளிப்படுத்துகின்றது.

அத்தகைய அளவிடற்கரிய சக்தியின் சாதனையில் தான் இந்த அகிலமே நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. நல்லதையே நினைப்போம். நல்லதற்கே திட்டமிடுவோம். நல்ல பலனையே பெறுவோம்.

இந்த சிந்தனைக்கு விருந்தாகிய உத்தம வீரன் ஜேம்ஸ் மெர்டித் வென்றதையும், வெற்றி பெறக்கூடிய ஆற்றல்மிக்க மெர்வின், குறுக்கு வழியில் சென்றதால் தோற்ற நிலையையும் நினைத்து, நாம் நமது சக்தியினைக் கொண்டு சத்திய வழியில் சாதனை புரிவோம் என்று உறுதிகொள்வோம். இது நம்மால் முடியும்! முயன்றால் முடியாதது உண்டோ!