வேங்கடம் முதல் குமரி வரை 1/004-027

4. சிங்கபுரத்து நரசிங்கன்

மகாவிஷ்ணு எடுத்த தச அவதாரத்தில் நரசிம்ம அவதாரம் ஒன்று. மற்ற அவதாரங்களைவிடப் பார்ப்பவர் உள்ளங்களில் அச்சத்தை விளைவிக்கும் பயங்கரமான அவதாரம் அது. மனித உடலும் சிங்க முகமுமாக இருக்கும் உருவம் ஆதலால், பார்ப்பதற்கே அஞ்சுவோம், நாம். உபாசிப்பதற்கோ துணிவு வராது, நமக்கு.

பக்தன் பிரகலாதனுக்காக, இரணியனைச் சம்ஹரிக்கத் தூணைப் பிளந்து கொண்டு உதித்த மூர்த்தி, இரணியன் உடலைக் கிழித்து உதிரம் குடிக்கும் நிலையில், காண்போர் அஞ்சி நிலை குலைவதில் அதிசயம் இல்லைதானே? ஊன் கொண்ட வள் உகிரால் இரணியனை உடல் கிழித்த, நரசிம்ம அவதாரத்தைக் கவிச்சக்கரவர்த்தி கம்பன் மிகவும் அழகாகச் சொல்கிறான். பேரண்டம் முழுவதும் வியாபித்து இருக்கும் பரம்பொருள் தொட்ட தொட்ட இடமெல்லாம் தோன்றுவான் என்கிறான், பிரகலாதன்.

அதைக் கேட்டு ஏளனமாகச் சிரித்து விட்டு, 'இந்தத் தூணில் இருக்கிறானா? என்று கேட்கிறான், இரணியன். 'இந்தத் தூணில் மாத்திரம் என்ன, நீ சொல்கிறாயே, கடவுளாவது தெய்வமாவது என்று, அந்தச் சொல்லில் கூட அவன் இருக்கிறானே,' என்று வாதமிடுகிறான் பிரகலாதன். இந்த நிலையில் தூணை எற்றுகிறான், இரணியன், தூணில் பிறக்கிறான், நரசிம்மன். கம்பன் சொல்கிறான், அதை:

நசை பிறந்து இலங்கப் பொங்கி
நன்று நன்று என்ன நக்கு
விசைபிறந்து உருமு வீழ்ந்தது
என்ன ஓர் தூணின், வென்றி

இசைதிறந்து அமர்ந்த கையால்
எற்றினன் எற்ற லோடும்
திசைதிறந்து அண்டம் கீறிச்
சிரித்தது செங்கட் சீயம்!

செங்கட் சீயம் சிரித்த காட்சியே இத்தனை பயங்கரம் என்றால், சீறி எழுகின்ற சிங்கப்பிரானது திருவுருவம் எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம் அல்லவா?

இறைவனுடைய சக்திபூமியோடு மட்டும் நிற்பதல்ல, வான் முகடு முழுவதும், எட்டுத் திசைகளையும் தொட்டு நிற்கும் என்ற உண்மையைத்தானே இந்த மூர்த்தம் விளக்குகிறது. 'இந்த மூர்த்தி பயங்கர உருவத்தில்தான் இருக்க வேண்டுமா? சாந்த மூர்த்தியாக இருத்தல் கூடாதா?' என்று எண்ணியிருக்கிறார்கள் கலைஞர்கள்.

ஆதலால் நரசிம்மனது மடியிலே லக்ஷ்மியை இருத்தி, லக்ஷ்மி நரசிம்மனாகக் கண்டிருக்கிறார்கள். யோக நிலையில் இருந்து மக்களுக்கு எப்போதும் அருள் புரிபவனாகக் கற்பனை பண்ணி, யோக நரசிம்மனாக சிருஷ்டி பண்ணியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சாந்த நிலையிலே யோக நரசிம்மனாகக் கோயில் கொண்டிருக்கும் இடந்தான் சோழசிங்கபுரம் என்னும் சோழங்கிபுரம். ஆங்கிலத்தில் சோளிங்கர் என்ற பெயரோடு, வட ஆர்க்காடு மாவட்டத்திலே திருத்தணிகைக்கு மேற்கே இருபது மைல் தூரத்திலே இருக்கும் ஒரு பெரிய ஊர் அது.

இச் சோழங்கிபுரம் அன்று கடிகாசலம் என்ற பெயரோடு விளங்கியிருக்கிறது, கடிகை என்றால் வடமொழியில் ஒரு நாழிகை என்று பொருள். இந்த ஸ்தலத்தில் ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து, அங்குள்ள யோக நரசிம்மனைக் கண்டு வனங்கினால், முக்தி பெறலாம் என்பதன் காரணமாகவே, இத் திருப்பதி கடிகை என்று பெயர் பெற்றிருக்கிறது.

தொண்டை நாட்டிடையே, சோழ நாடு போல வளம் மிகுந்து, நரசிங்க மூர்த்தி தங்குவதற்கு வசதியான இடமாக இருப்பதனால், சோழ சிங்கபுரம் எனப் பெயர் பெற்றிருக்க வேண்டும்.

அது எல்லாம் இல்லை. இந்த ஊரில் சோழ மன்னன் ஒருவன் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தான். அதனாலேயே சோழலிங்கபுரம் என்று பெயர் பெற்றது. சோழலிங்கபுரமே நாளடைவில் சோழசிங்கபுரம் என்று மாறிற்று எனக் கூறுவாரும் உளர். இதை வலியுறுத்தச் சோழிசுவரர் கோயில் என்று ஊரின் நடுவில் இருக்கும் கோயில் ஒன்றையும் காட்டுவர்.

இதன் உண்மை எப்படி இருந்தாலும், சோழலிங்கேசுவரர் இன்று சோழ நரசிம்மனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டுக் கொஞ்சம் ஒதுங்கியே வாழ்கிறார். ஆதலால் நாமும் சோழ நரசிம்மருக்கே பிரதானம் கொடுத்து, சோழசிங்கபுரம் என்ற பெயராலேயே இந்த ஊரை அழைக்கலாம்.

இந்த யோக நரசிம்மனது கோயில் கிட்டத்தட்ட நானூறு அடி உயரமுள்ள ஒரு மலையின் மேல் இருக்கிறது. எந்தத் திக்கிலிருந்து கோயிலை நெருங்கினாலும், கோயிலும் மலையும் பத்து மைல் தூரம் வரை தெரியும். எங்கு சுற்றினாலும் திருத்தணி - சித்தூர் ரோடுக்கு வந்து, அதிலிருந்து பிரியும் பாதை வழியாக மலையடிவாரத்துக்கு வந்து சேரலாம்.

அடிவாரத்திலிருந்து மலையைப் பார்த்தால், அங்குள்ள கோயிலுக்கு ஏறமுடியுமா என்று பிரமித்து நிற்போம். காரணம் கோயில் இருக்கும் மலை உயரமானதென்று அல்ல. அந்த மலை மேல் நிற்கும் கோயிலோடு போட்டி போட்டுக் கொண்டு, கோயிலுக்கு முன்னாலே நீண்டு வளர்ந்து நிமிர்ந்திருக்கும் இன்னொரு குன்றுதான் அம் மலைப்பை ஏற்படுத்தும்.

இதைப் பற்றிக் கூட ஒரு கதை. பைரவேசுவரரது ஆணையின்படி, இந்தக் குன்று வளர்ந்து கொண்டே போயிற்றாம். அதன் வளர்ச்சி தேவலோகத்தை முட்டிவிடும் போல் இருக்கிறதே என்று எண்ணிய இந்திரன், பலராமனைக் கொண்டு, தடுத்து நிறுத்தினான். அதனால்தான் இம்மட்டமோடு நிற்கிறது என்பார்கள் அங்குள்ள மக்கள்.

ராயோஜி என்பவரால் மலை மேல் உள்ள கோயிலுக்கு ஏறப் படிக்கட்டுகள் கட்டப்பட்டன என்று தெரிகிறது. இந்தப் படிக்கட்டுகள் மிகவும் கரடுமுரடாகயிருந்ததைப் புதுப்பித்து அகலமான படிகள் அமைத்துள்ளனர்.

இந்த மலை மீதுள்ள யோக நரசிம்மனை அன்று திருமங்கை ஆழ்வார் கண்டு வணங்கியிருக்கிறார். இவர் தக்க பெருமை உடைய தயாளு என்று உணர்ந்திருக்கிறார். மேலும் வெல்லம் போல் இனிப்புள்ளகனியாக விளங்குகிறான், அனுபவிப்பவர்களுக்கு. ஆதலால் மிக்கான் என்றே இந்த மூர்த்தியை அவர் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

மிக்காளை, மறையாய் விரிந்த
விளக்கை, என்னுள்
புக்கானைப் புகழ் சேர்
பொலிகின்ற பொன்மலையை,

தக்கானைக் கடிகைத் தடங்
குன்றின் மிசை இருந்த
அக்காரக் கனியை
அடைந்து உய்ந்து போனேனே.

என்று பரவசத்தோடே பாடியிருக்கிறார். பிரபந்தப் பாடல்கள் நாலாயிரத்தில், கடிகாசல் நரசிம்பனைப் பற்றிய முழுப் பாடல் இது ஒன்று தான். ஒரு பாட்டு என்றாலும் ஒப்பற்ற பாட்டு. எத்தனை தரம் வேண்டுமானாலும் பாடிப் பாடி அனுபவிக்க வேண்டிய பாட்டு.

இத்தலத்திலே இத்துணைப் பெருமையுடைய தக்கானுக்கும் மிக்கானாக இன்னொரு மூர்த்தி இருக்கிறார், மற்றொரு சிறிய குன்றிலே, அவர்தான் யோக ஆஞ்சநேயர்.

இவரைக் காணப் பெரிய மலையை விட்டுக் கீழே இறங்க வேணும், அடிவாரத்தில் கொஞ்ச தூரம் நடக்க வேணும், படிகளின் வழியாய்ச் சுமார் இருநூறு அடி உயரமுள்ள மலை மீது திரும்பவும் ஏற வேணும். இங்குப் படிகள் எல்லாம் புதுப்பிக்கப் படவில்லை. இங்கேயும் கோயிலின் பிரதான வாயில் வடக்கு நோக்கியிருந்தாலும், சந்நிதி மேற்கு நோக்கியே இருக்கிறது. தம்முடைய தலைவனான நரசிம்மனை எதிர்நோக்கியவராய், தம்முடைய வீர உணர்ச்சியை யெல்லாம் அடக்கிக் கொண்டு, நரசிம்மனைப் போலவே யோக நிலையிலேதான் இருக்கிறார் இவர்.

யோக நரசிம்மனையாவது, மற்றும் சில தலங்களிலே கண்டு தொழலாம். யோக ஆஞ்சனேயரை இத்தலத்திலன்றி வேறு தலங்களில் காண முடியாது என்றே சொல்கிறார்கள்.

இவர் யோக மூர்த்தி மட்டும் அல்ல, அற்புதமான அஹிம்சா தர்மத்தை நிலை நிறுத்திய மூர்த்தியும் கூட. அன்று வட மதுரையை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் என்ற ஓர் அரசன் வேட்டை ஆடியிருக்கிறான். வேட்டையில் ஒரு பெண் மானைத் துரத்திக் கொண்டு, இந்த மலையை அடுத்த காட்டுக்கே வந்திருக்கிறான். மானின் மீது அம்பு தொடுக்க முனைந்தபோது, மான் இருந்த இடத்தில் ஒரு ஜோதி தோன்ற, அதைத் தொழுது வணங்கி, அன்று முதல் வேட்டையாடுவதையே நிறுத்தியிருக்கிறான்.

பின்னர் கும்போதரன் என்ற அரக்கனுடைய கொடுமையையும் ஒழித்து, இந்தப் பிரதேச மக்களையே காப்பாற்றி யிருக்கிறான். நரசிம்மனது; ஆணையின்படியே, ஆஞ்சநேயர் தான் ஜோதியாகத் தோன்றி, வட மதுரை மன்னனைச் சிறந்த அஹிம்சா வாதியாக ஆக்கியிருக்கிறார். இந்தச் சேவையை மெச்சியே, இவருக்குச் சங்கு, சக்கரமும் சதுர்ப்புஜமும் அருளி, இந்தத் தலத்தில் கோயில் கொண்டிருக்கச் செய்திருக்கிறான், நரசிம்மன்.

இதனாலெல்லாம் இந்த யோக ஆஞ்சநேயர் பிரசித்தி யடையவில்லை. மக்கள் பிணி தீர்க்கும் மருத்துவனாக அமைந்துதான் தக்க புகழை இன்று தமக்குத் தேடிக் கொண்டிருக்கிறார். மக்களின், அதிலும் பெண்களின் தீராத உடல் நோயை மாத்திரம் அன்றி, மன நோயையுமே தீர்த்து வைக்கிறார் இவர்.

பேய் பிசாசு பிடித்துள்ள பெண்களை இங்கு கூட்டி வந்து, மலை மேலுள்ள அனுமந்த தீர்த்தத்தில் முழுகி எழச் செய்து, அனுமார் சந்நிதியில் கொண்டு வந்து இருத்தி விட்டால் போதும். ஏதோ கொஞ்ச நேரம் ஆட்டம் போட்டாலும், அதன் பின் அமைதியாய்ப் படுத்துத் தூங்கி விடுகிறார்கள், பெண்கள். தூங்கி எழுந்தால் பிணி நீங்கி இருக்கிறது. பேயும் பிசாசும் மவையை விட்டு இறங்கியே ஓடியிருக்கிறது.

இப்படி மக்கள் பிணி தீர்க்கும் அருளாளனாக இருப்பதனால் தான், இன்றும் நூற்றுக் கணக்கான தேசாந்திரிகள் இங்கு வந்து, இங்குள்ள நரசிம்ம தீர்த்தம் முதலிய திருக்குளங்களிலே நீராடி, நியமங்களை யெல்லாம் அனுஷ்டிக்கிறார்கள். கார்த்திகை மாதத்தில் இந்த ஊரும், இக்குன்றுகளும், இக் கோயில்களும் ஜாம் ஜாம் என்றிருக்கும்.

இந்த யோக நரசிம்மரும், யோக ஆஞ்சநேயரும் நல்ல சிலா விக்கிரகங்கள். உற்சவ மூர்த்திகளாகச் செப்புச் சிலை வடிவில் இவர்கள் உருவாகவில்லை. ஆதலால் உற்சவமெல்லாம் இம் மலைகளை விட்டு ஒரு மைல் தொலைவில் ஊருக்கு மத்தியில் இருக்கும் பக்தவத்ஸலருக்குத்தான்.

இவர் யோக நிலையில் இல்லை. ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக நல்ல போக நிலையில் தான் இருக்கிறார். யோகமும் போகமும் ஒன்றிய நிலையில் மூர்த்திகளைக் கண்டு வணங்க வசதியாக இத் திருப்பதி அமைந்திருப்பது விசேஷம்தானே.

இந்தப் பக்தவத்ஸலர் கோயில் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப் பட்டிருக்க வேண்டும். விஸ்தாரமான வெளிப் பிராகாரங்கள், மண்டபங்கள் எல்லாம் நிறைந்திருக்கின்றன, இங்கே.

இந்தச் சோழசிங்கபுரம் பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசியில் ஒரு போர்க் களமாகவும் இருந்திருக்கிறது. 1881 ஆம் ஆண்டில் கூட் (Coote) என்ற படைத்தலைவன் தலைமையில் ஆங்கிலப் படையும் மைசூர் ஹைதர் அலியின் படையும் கை கலந்திருக்கின்றன.

இங்கு நடந்த போரில் மாண்ட மகமதிய சேனை வீரர்கள் இருவரது சமாதி இன்னும் இருக்கிறது, இங்கே, இவர்களைப் பற்றிய நினைவுச் சின்னமெல்லாம் இங்குள்ள சப்ரிஜிஸ்திரார் ஆபிசிலே நின்று கொண்டிருக்கிறது. சரியான இடம்தான். போரில் காட்டிய வீரத்தையெல்லாம் பதிந்து வைக்க, ஆவணக் களரியைவிடச் சிறந்த இடம் வேறு ஏது?