வேங்கடம் முதல் குமரி வரை 1/005-027

5. வள்ளிமலை வள்ளி

சென்ற சில வருஷங்களுக்கு முன் நான் பூனா நகரத்துக்குப் போயிருந்தேன். இரண்டு மூன்று நாட்கள் தங்கினேன். ஒரு நாள் காலை, அங்குள்ள தமிழ் அன்பர்கள் சிலரோடு நகரத்துக்குப் பக்கத்திலே உள்ள பார்வதி மலையில் உள்ள கோயில்களைப் பார்க்கச் சென்றேன். என் மனைவியும் உடன் வந்திருந்தாள்.

மலை பெரிய மலை இல்லை. திருத்தணி மலை உயரமே இருக்கும். ஆனால் அங்கு கட்டியிருப்பது போல் அழகான படிக்கட்டுகள் இல்லை, மண்டபங்களும் இல்லை. படிக்கட்டு விசாலமாக இருந்தது. படிக்கட்டு கட்டிய மராத்திய மன்னர்கள் குதிரை மேல் ஏறிக் கொண்டே மலை மேல் உள்ள கோவிலுக்குச் செல்வார்களாம்.

மலைச் சிகரத்தை அடைந்தவுடன் நாங்கள் கண்டது தேவ தேவன் கோயில். தேவர்கோ அறியாத, தேவ தேவனை வணங்கிவிட்டு, பக்கத்திலே இருக்கும் பண்டரிபுரம் விட்டல், பவானி அன்னை, மகாவிஷ்ணு முதலியவர்களது கோயில்களுக்குச் சென்றோம். கடைசியாகத் தேவ தேவன் கோயிலுக்கு வலப்புறமாக உள்ள ஒரு சிறு கோயில் வாசலுக்கு வந்து சேர்ந்தோம்.

கோயில் வாசலில் ஒரு பலகை. அதில் 'இந்தக் கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்!' என்று ஆங்கிலத்திலும் மராத்தியிலும் எழுதியிருந்தது. இதற்குக் காரணம் என்ன என்று என் உடன் வந்த நண்பர்களை விசாரித்தேன்.

'இங்கு கோயில் கொண்டிருப்பவன் கார்த்திகேயன். அவன் பிரம்மசாரிய விரதம் அனுஷ்டிக்கிறவன். ஆதலால் அவன் பெண்களையே பார்க்கிறதில்லை என்ற வைராக்கிய சித்தனாக இருக்கிறான்!' என்றார்கள். சரி என்று என் மனைவியைக் கோயிலுக்கு வெளியே நிறுத்தி விட்டு, நானும் அன்பர்களும் மட்டும் உள்ளே சென்றோம்.

உள்ளே கோயில் கொண்டிருப்பவன் நமக்கு மிகவும் அறிமுகமான ஆறுமுகன்தான். பளிங்கில் அமைந்திருந்த சிறிய உருவம். மயில் மேல் ஆரோகணித்திருந்தான் அவன். கார்த்திகைப்பெண்களான 'அறுவர் பயந்த ஆறு அமர் செல்வன்' அல்லவா? ஆதலால் அவனைக் கார்த்திகேயன் என்று அழைக்கிறார்கள், அங்கே.

ஆமாம் ஆறுமாமுகவன், தமிழ் நாட்டில் ஒன்றுக்கு இரண்டாக, வள்ளி தெய்வயானையை மணந்தவன் இங்கு மட்டும் பிரம்மசாரி என்று வேஷம் போடுவானேன் என்று எண்ணினேன். நண்பர்களைக் கேட்டேன். விடை கிடைக்கவில்லை.

அன்று மாலை பூனாத் தமிழ் அன்பர்கள் நடத்தும் கலைக் கழக விழாவிலே எனக்கு ஒரு பேச்சு. அங்குள்ள தமிழ் அன்பர்கள் திரளாக வந்திருந்தார்கள். விஷயம் விளங்கிற்று எனக்கு அப்போது. தமிழ் நாட்டுக் குறமகள் நம்பிராஜன் புத்திரி வள்ளியைக் கண்டு சொக்கி, அவள் காதலைப் பெற எவ்வளவோ தகிடுதத்தங்கள் செய்து, அந்த அழகியை மணம் புரிந்தவன், முக்காடிட்ட தலையோடும், வளையங்கள் அணிந்த மூக்கோடும் வரும் அந்த நாட்டுப் பெண்களைக் காணச் சகிப்பானா?

இதை அப்பட்டமாகச் சொல்ல முடியாமல்தான், சும்மா பிரம்மசாரி வேஷம் போட்டு, அங்குள்ளவர்களையெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான், ஆம். அவன் 'கலைபயில் புலவன் கார்த்திகேயன்' அல்லவா? ஏமாற்றுவதையே ஒரு கலையாகக் கற்றிருக்கிறான் என்று தோன்றிற்று, எனக்கு.

வள்ளியை வேலன் மணந்த வரலாறு நிரம்ப ரஸமான கதை. எவ்வளவோ காலமாக, காவியமாக, கதா காலக்ஷேபமாக எல்லாம் எத்தனையோ தடவை கேட்ட கதை. வள்ளி மலைக் கோயில் எத்தனையோ நாடக மேடைகளில், வெள்ளித் திரைகளிலெல்லாம் பார்த்தும் அலுக்காத கதை.

ஆனால் இந்த வள்ளி பிறந்த இடம்; அவள் ஆலோலம் பாடிய பரண், அவளை முருகன் கண்டு காதலித்து மணம் புரிந்து கொண்டதலம் எல்லாம் எங்கிருக்கின்றன என்று இன்று வரையில் நிச்சயமாக இல்லை. திருநெல்வேலி ஜில்லாவில், கன்னியாகுமரி செல்லும் வழியில் ஒரு வள்ளியூர் இருக்கிறது, அங்கு வள்ளி பிறந்து வளர்ந்ததாக வரலாறு இல்லை. திருச்செந்தூரில் வள்ளி ஒளிந்த குகை ஒன்று இருக்கிறது.

திருச்செந்தூரில் முருகன் நிகழ்த்தியது சூரசம்ஹாரம். அதற்குப் பரிசாகத் தேவேந்திரனிடம், அவன் மகள் தேவ சேனையை மனைவியாகப் பெற்றது திருப்பரங்குன்றத்திலே. மேலும், வள்ளியைக் கண்டு மையல் கொண்டு, அவள் தந்தை தமையன் முதலியோரைக் கண்டு ஓடி ஒளிந்தவன் முருகனே தவிர, முருகனைக் கண்டு வள்ளி ஒளிந்ததாகப் புராணக் கதை ஒன்றும் இல்லை. ஆதலால் 'மலைமேவு மாயக் குறமாதான' வள்ளியைத் திருநெல்வேலி ஜில்லா போசிகள், தங்கள் நாட்டுக்காரி அவள் என்று உறவு கொண்டாட முடியாதுதான்.

ஆதலால் 'முற்றாப் பசுங்கதிர் செவ்வேனல் காத்த அந்த நீல வள்ளி' அவள் பெயராலே வழங்குகின்ற வள்ளிமலையைச் சேர்ந்தவளாகத்தான் இருத்தல் வேண்டும். தெய்வ மகளான தேவசேனையை மணந்த பின், தணிகை சென்று அமைதியாகக் குடும்பம் நத்த விரும்பிய அந்த அருள் ஞான சக்திதரனிடம் ஒரு காதற் கலகத்தையே ஆரம்பித்து வைக்கிறார், நாரதர். 'தேனென்று பாகென்று உவமிக் கொணாத் தெய்வ வள்ளி' அவள் என்று ஆசையையே மூட்டுகிறார். அதோடு அவள் தணிகைக்கு அணித்தே உள்ள மலையில் வாழ்பவள் என்றும் சொல்கிறார்.

அவ்வளவு தான், புறப்பட்டு விடுகிறான் முருகன், கால் கடுக்க நடந்தே செல்கிறான். வேடுவப் பெண்ணை மணக்க விரும்பிய குமரன் வேடனாகவே வேஷம் போடுகிறான். வேட்டையாடி வந்த மானைத் தேடி வரும் வில்லனாக (வில்லை ஏந்தியவனாக) தினைப்புனம் காக்கும் வள்ளியை அணுகுகிறான். அவளிடம் காதல் மொழி பேசுகிறான்.

அவள் கோபித்துத் தந்தையையும் தமையன்மாரையும் அழைத்தபோது, அங்கேயே வேங்கை மரமாக நிற்கிறான். பின்னர், அவளது தந்தையாம் நம்பிராஜனையே கைக்குள் போட்டு, விருத்தனாக மாறி, கள்ளச் சிறுமியாம் வள்ளியை வேட்கிறான். அதுவும் பலன் தராதது கண்டு, தன் சகோதரன் விநாயகனையே தொழுது, யானையைக் காட்டிப் பயமுறுத்தி, அவள் தன்னைக் கட்டித் தழுவச் செய்கிறான். பின்னர், தன் மெய்யுருவை அவளுக்குக் காட்டி, அவளை மணம் புரிந்து கொள்கிறான்.

இப்படித்தான் திருத்தணிப் பதியில் வாழும் முருகன், குறமகள் மருவிய பெருமாளாக மாறுகிறான். ஞான சக்தியாக வேலேந்திய குமரன், கிரியா சக்தியான தெய்வயானையை மணந்த பின், இச்சா சக்தியான வள்ளியையும் மணந்து கொள்கிறான் என்று சொல்லுவது பொருத்தம்தானே?

இந்த வள்ளி பிறந்து வளர்ந்த இடம் தான் வள்ளி மலை. வள்ளிக் கிழங்கு தோண்டி எடுத்த இடத்தில் மகாலக்ஷ்மியின் அவதாரமான மான் வயிற்றிலே பிறக்கிறாள். அதனால் அவளைத் தேடி எடுத்த நம்பிராஜன் என்னும் வேடுவர் தலைவன், அவளை வள்ளி என்றே அழைக்கிறான். இந்த 'வள்ளி படர் சாரல் வள்ளி மலை சென்று, வள்ளியை மணந்து, வள்ளி மணவாளன் ஆகிறான் என்று அருணகிரியார் அறுதியிட்டு உரைக்கிறார்.

இந்த வள்ளிமலை சென்னை மாநிலத்திலே உள்ள வடஆர்க்காடு மாவட்ட எல்லையி லிருந்து எட்டிப் பிடிக்கும் தூரத்திலேதான் இருக்கிறது. சென்னை -பங்களூர் ரோட்டில் பெண்ணையாற்றின் கரையில் உள்ள திருவலம் என்னும் தலத்திலிருந்து வடக்கே பத்து மைல் தொலைவில் இருக்கிற சிறிய ஊர். திருத்தணிகைக்கு நேர் மேற்கே இருபது மைல் தூரத்தில் இருக்கிறது. மிக்க சிரமம் இல்லாமல், நல்ல ரோட்டிலே காரிலோ, பஸ்ஸிலோ இந்தக் கிராமத்திற்குச் சென்று சேரலாம். அடிவாரத்திலே இருக்கும் உற்சவ மூர்த்திகளைக் கண்டு வணங்கலாம்.

'இந்த உற்சவ மூர்த்திகளைக் காணவா இவ்வளவு தூரம் வந்தோம்? ஏதோ வள்ளி பிறந்த ஊர். வள்ளி தினைப்புனம் காத்த தலம் என்றெல்லாம் விஸ்தரித்தீரே!' என்று நீங்கள் கேட்பது எனது காதில் விழத்தான் செய்கிறது. அந்த வள்ளியை நல்ல கல்லுருவிலே காண மலை ஏறத்தான் வேண்டும். முந்நூறுக்கு மேற்பட்ட படிகள் அழகாகக் கட்டப் பட்டிருக்கின்றன. ஒரே ஒரு இடத்தில்தான் செங்குத்தான படிக்கட்டுகள். மற்றவை எல்லாம் ஏறுவதற்கு வசதியாகவே இருக்கும்.

படிக்கட்டுகளில் கட்டியிருக்கும் மண்டபங்களில் எல்லாம் தங்கி இளைப்பாறி, மலை முகட்டுக்கு வந்தால், கோயிலின் முன்வாயிலுக்கு வருவோம். கற்பூரக் கொப்பரை, துவஜ ஸ்தம்பம் முதலியவற்றோடு, குடை வரையாக அமைந்திருக்கும் கோயிலையுமே வலம் வரலாம். அப்படி வலம் வந்தால் திரும்பவும் கோயிலின் முகப்பிலே கல்லால் கட்டியிருக்கும் மண்டபத்துக்கே வருவோம். இந்த மண்டபம் கல்லும் சுண்ணாம்பும் கொண்டு கட்டியது. மற்றைய பகுதி மலையைக் குடைந்து அமைத்த குடைவரைக் கோயிலே.

முன் மண்டபத்தைக் கடப்பதற் குள்ளே இடப் பக்கம் திரும்பினால் கற்பாறையிலே ஒரு பெரிய குகை. அந்தக் குகைக்குள்ளே நிற்கிறாள் வள்ளி, கவண் வீசும் கயிற்றை ஏந்தி ஆலோலம் பாடும் நிலையில் அவளை உருவாக்கியிருக்கிறான் சிற்பி, அர்த்த சித்திரமாக (Bas relief). ஆம்! இந்த இடமேவள்ளி பிறந்த இடமாக இருக்க வேண்டும். இங்குதான் அவள் தினைப்புனம் காத்து நின்றிருக்க வேண்டும் என்பதில் இனிச் சந்தேகம் எழுவதற்கு நியாயமில்லை.

இனி, குடைவரைக் கோயிலுக்குள் நுழையலாம். அது மூன்று கட்டுகளாக இருக்கும். முதற்கட்டில் ஒரே இருட்டு, அந்தக் கட்டின் பாறைகளில் முட்டாமல், வலப்புறம் உள்ள வாயில் வழி நுழைந்தால், அதை விட உயரமான அடுத்த கட்டில் நுழையலாம். இங்கு நல்ல வெளிச்சம் வரக் கோயில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இங்கு எல்லோரும் வசதியாக நின்று தொழுவதற்குமே ஏற்பாடு செய்திருக் கிறார்கள்.

அடுத்த கட்டுத்தான் மூன்றாம் கட்டு. அது மற்றக் கட்டுகளை விட இன்னும் கொஞ்சம் உயரம். இந்தக் கட்டில் ஒரு வாயில். அந்த வாயிலுக்கு நேரே, வள்ளிமலை முருகன், வஞ்சனை இல்லாமல், வள்ளியோடு தெய்வயானையையும் பக்கத்தில் வைத்துக் கொண்டே, சிலை உருவில் நிற்கிறான். சின்னஞ்சிறிய வடிவமே என்றாலும், நல்ல அழகான வடிவம். திருத்தணியில் இல்லாத மயில் இங்கு இருக்கும். தன் தலைவன் கால் கடுக்க நடந்து சென்றிருக்கிறானே என்று அறிந்து, பறந்து வந்து சேர்ந்திருக்கும் போலும்!

இந்தக் கர்ப்ப கிருஹத்தின் உச்சியில் உள்ள பாறைமேல் விமானத்தைக் கட்டியிருக்கிறார்கள் குடைவரைக் கோயிலை உருவாக்கியவர்கள் பல்லவர்கள். விமானத்துக்கு முன் மண்டபம் கட்டியவர்கள் பின் வந்த நாயக்க மன்னர்கள். இந்த வள்ளிமலையிலே பல சுனைகள். அதில் ஒரு சுனையிலேதான் வள்ளி நீராடியிருக்கிறாள். அந்தச் சுனைக் கரையிலே வள்ளி அன்று மஞ்சள் உரைத்துத் தேய்த்துக் குளித்திருக்கிறாள். அந்த அடையாளத்தை எல்லாம் இன்றும் பார்க்கலாம்.

இது தவிர, மலை மேலே ஒரு பாறையிலே ஐந்தாறு சமண விக்கிரகங்கள். ஒரு காலத்தில் சமண முனிவர்கள் சிலர் தங்கியிருக்க வேண்டும், இங்கே. இவைகள்தாம் பின்னர் பஞ்ச பாண்டவர் படுக்கை என மக்களால் அழைக்கப் பட்டிருக்கின்றன.

கானச் சிறுமானை நினைந்து
ஏனற் புனமீது நடந்து
காதற் கிளியோடு மொழிந்து சிலைவேடர்

கானக்கனியாக வளர்ந்து
ஞானக் குறமாதை மணந்த

முருகனை இத்தலத்திலே வணங்குவதில் ஒரு தனி விசேஷம்.

தெய்வ மகளாகிய தேவசேனையைப் பரிசாகக் கொண்டு வந்து கொடுக்கிறான், தேவேந்திரன். ஆனால் தமிழ் மகளாகிய வள்ளியைத் தேடி ஓடி வந்து காதல் புரிந்து மணக்கிறான், குமரன். இது தமிழ்க் கடவுளான முருகன் தமிழ் மக்களிடத்து வைத்துள்ள அளப்பரிய அன்பினைத் தெளிவாக்குகிறது அல்லவா?

ஆதலால்தான் தமிழ் வருஷப் பிறப்பன்று இத்தலத்தில் திருப்படித் திருவிழா ஏற்பாடு செய்திருக்கிறார்கள், அடுத்த திருப்படித் திருவிழா நடக்கும் போது வள்ளிமலை சென்று விழாவில் சேர்ந்து வணங்கித் திரும்புங்கள் - வசதியுள்ளவர்கள் எல்லாம்.