வைகையும் வால்காவும்/உழைப்பு மழை

உழைப்பு மழை


செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃதனில் கூரியது இல்லெனச்- செய்தொழிகள்
எண்ணிறந்த ஆக்கியே எத்தர் செறுக்கறுத்தான்
மண்ணில் மதிஞன் லெனின். 73

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர், பலர் என்னை
முன் நின்று கல்நின் றவர்ஈதோ! இன்னும்
விழிமுன்நிற் பீரோ? பொதுமைப் பகைவீர்,
அழித்தானே 'சாரை' லெனின். 74

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்லை- தலைவன்
தொழிலாளர் தோழன், கொடுங்கோலின் காலன்,
வழிகாட்டி வென்றான் லெனின். 75

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு என்று - அடுத்த
உழைப்பாளர் மீள உடைமைபொது வாக்கி
மழையாய்ச் சுரந்தான் லெனின். 76