வைகையும் வால்காவும்/பாழ் மதத்தார்
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான், மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்; அதனால்-இத்தரையில்
ஒப்புரவுக் கொள்கை உயர்வறிந்து, மன்பதைக்கே
புத்துயிராய்ப் போந்தான் லெனின்.
21
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி;இலையேல்-பற்றும்
புரட்சித்தீ! பொங்கும் பொதுவுடைமை என்று
வரலா றமைத்தான் லெனின்.
22
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இலென்னும்- பொன்மொழி
மாநிலப் பாட்டாளி மக்களை ஒன்றாக்கி
மேநிலைக்கு மீட்டான் லெனின்.
23
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை, வளிவழங்கும
மல்லல்மா ஞாலம் கரி, ஆமாம்-தொல்லைபுரி
சாரும், முதலாளிச் சார்பினரும், பாழ்மதத்தார்
வேரும்இலை என்றான் லெனின்.
24