5. வடமொழிப் படலம்
பேரகத்தியம்
தொகுஆசிரியர்: அகத்தியனார்
தொகுஉரையாசிரியர்: ச.பவாநந்தம் பிள்ளை அவர்கள்
தொகுமுதலாவது எழுத்திலக்கணக் காண்டம்
தொகு5. வடமொழிப் படலம்
தொகுஅஃதாவது - வடமொழிகளும் வடமொழி புணரும் வகையும் உணர்த்தும் படலம்.
141. சநுக்கிரகஞ் சங்கத மவப்பிரபஞ்சநம் பாகதம் () சநுக்கிரகம் சங்கதம் அவப் பிரபஞ்சநம், பாகதம்
- மொழிநான் கென்றே மொழியப் படுமே. (01) () மொழி நான்கு என்றே மொழியப் படும் ஏ.
- பவாநந்தர் உரை
- இஃது வடசொல்லானது நால்வகையாம் என்பது உணர்த்துகின்றது.
- பதவுரை
- மொழி = சொல்லானது,
- சநுக்கிரகம் = சநுக்கிரகமும்,
- சங்கதம் = சங்கதமும்,
- அவப்பிரபஞ்சநம் = அவப்பிரஞ்சநமும்,
- பாகதம் = பாகதமும் ஆகிய,
- நான்கு என்று = நால்வகையாம் என்று,
- மொழியப்படும் = சொல்லப்படும்.
- பொழிப்புரை
- சொல்லானது சநுக்கிரகமும் சங்கதமும் அவப்பிரபஞ்சநமும் பாகதமும் ஆகிய நான்குவகையாம் என்று சொல்லப்படும்.
- சநுக்கிரகம் முதலிய நான்கும் வடசொற்கள்.
142. சநுக்கிரகஞ் சங்கதந் தேவர்மொழி யென்ப. (02) () சநுக்கிரகம் சங்கதம் தேவர் மொழி என்ப.
- பவாநந்தர் உரை
- இஃது மேற்கூறப்பட்ட நான்கனுள் சநுக்கிரகம், சங்கதம் என்னும் இரண்டும் இன்னார்க்கு ஆகும் என்பது உணர்த்துகின்றது.
- பதவுரை
- சநுக்கிரகம் சங்கதம் = சநுக்கிரகம், சங்கதம் என்னும் இரண்டும்,
- தேவர் மொழி என்ப = தேவர்மொழிகளாம் என்று சொல்லுவர் புலவர்.
- பொழிப்புரை
- சநுக்கிரகம் சங்கதம் என்னும் இவ்விரண்டும் தேவர்மொழிகளாம் என்று சொல்லுவர் புலவர்.
143. அவப்பிரஞ் சநமொழி யசேதனர்க் காகும். (03) () அவப்பிரஞ்சநம் மொழி அசேதனர்க்கு ஆகும்.
- பவாநந்தர் உரை
- இஃது அவப்பிரஞ்சநமொழி இன்னார்க்கு ஆகும் என்பது உணர்த்துகின்றது
- பதவுரை
- அவப்பிரஞ்சநமொழி = அவப்பிரஞ்சநமொழியானது,
- அசேதனர்க்கு ஆகும் = இழிசாதியார்க்கு உரியதாகும்.
- பொழிப்புரை
- அவப்பிரஞ்சந மொழியானது இழிசாதியார்க்கு உரியதாகும்.
- அசேதனர் - அறிவிலார் (சேதனம்=அறிவு). இழிஜனங்கள் அறிவிலிகள் ஆதலால் அவர்களை அசேதனர் என்றார்.
144. எல்லா நாட்டிலு மியல்வது பாகதம். (04) ()எல்லா நாட்டிலும் இயல்வது பாகதம்.
- பவாநந்தர் உரை
- இஃது பாகதம் ஆமாறு உணர்த்துகின்றது.
- பதவுரை
- எல்லா நாட்டிலும் = எல்லாத் தேயத்திலும்,
- இயல்வது = வழங்குவது,
- பாகதம் = பாகதமொழி எனப்படும்.
- பொழிப்புரை
- எல்லாத் தேயத்திலும் வழங்குவது பாகதமொழி எனப்படும். பாகதம் பிராகிர்தம் என்னும் வடமொழிச்சொல்.
- இயலல் = வழங்கல்.
145. பாகதம், () பாகதம்,
- தற்பவந் தற்சமந் தேசிய மெனப்படும் (05) () தற்பவம் தற்சமம் தேசியம் எனப்படும்.
- பவாநந்தர் உரை
- இஃது பாகதத்தின் வகையினை உணர்த்துகின்றது.
- பதவுரை
- பாகதம் = பாகதமானது,
- தற்பவம் = தற்பவம் என்றும்,
- தற்சமம் = தற்சமம் என்றும்,
- தேசியம் = தேசியம் என்றும்,
- எனப்படும் = மூவகையாகச் சொல்லப்படும்.
- பொழிப்புரை
- பாகதமானது தற்பவம், தற்சமம், தேசியம் என மூவகையாகச் சொல்லப்படும்.
146. ஆரியச் சிறப்பெழுத் தாற்பொதுச் சிறப்பா () ஆரியச் சிறப்பு எழுத்தால் பொது சிறப்பால்
- லானவீ ரெழுத்தா லமைவது தற்பவம். (06) () ஆன ஈர் எழுத்தால் அமைவது தற்பவம்.
- பவாநந்தர் உரை
- இஃது தற்பவத்தின் இலக்கணம் உணர்த்துகின்றது.
- பதவுரை
- ஆரியச் சிறப்பெழுத்தால் = ஆரியச் சிறப்பு எழுத்தாலும்,
- பொது சிறப்பால் ஆன ஈர் எழுத்தால் = பொதுவும் சிறப்புமாகிய இரண்டெழுத்தாலும்,
- அமைவது= தமிழிற் சிதைந்து வந்து அமைந்திருப்பது,
- தற்பவம் = தற்பவம் எனப்படும்.
- பொழிப்புரை
- ஆரியச் சிறப்பெழுத்தாலும், பொதுவும் சிறப்பும் ஆகிய இரண்டெழுத்தாலும் தமிழிற் சிதைந்துவந்து அமைந்திருப்பது தற்பவம் எனப்படும்.
உதாரணம்: சுகி, போகி - இவை சிறப்பு. அரன், அரி - இவை பொது.
ஆர்யம்-வடசொல். ஆரியச் சிறப்பெழுத்து - வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்து. பொதுச் சிறப்பு- வடமொழிக்கும் தென்மொழிக்கும் பொதுவும், வடமொழிக்குச் சிறப்பும் ஆகிய இருவகை எழுத்து.
147. ஆரியந் தமிழ்ப்பொது வாமொழி தற்சமம். (07) () ஆரியம் தமிழ் பொது ஆம் மொழி தற்சமம்.
- பவாநந்தர் உரை
- இஃது தற்சமத்தின் இலக்கணம் உணர்த்துகின்றது.
- பதவுரை
- ஆரியம் = ஆரியத்திற்கும்,
- தமிழ் = தமிழிற்கும்,
- பொது ஆம் = பொது எழுத்தால் ஆகிய,
- மொழி = மொழிகள்,
- தற்சமம் = தற்சமம் எனப்படும்.
- பொழிப்புரை
- ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொதுவெழுத்தால் ஆகிய மொழகள் தற்சமம் எனப்படும்.
உதாரணம்: அமலம், காரணம் - இவை பொது.
148. தேசியந் திசைச்சொ லென்று செப்புக. (08) () தேசியம் திசைச் சொல் என்று செப்புக.
- பவாநந்தர் உரை
- இஃது தேசியத்தின் இலக்கணம் உணர்த்துகின்றது.
- பதவுரை
- தேசியம் = தேசியம் என்பது,
- திசைச்சொல் என்று செப்புக = திசைச்சொல் என்று சொல்லுக.
- பொழிப்புரை
- தேசியம் என்பது திசைச்சொல் என்று சொல்லுக.
உதாரணம்: ஆய், அச்சன் என வரும். இவை முறையே தாய், தந்தை என்னும் பொருளன.
- பிறநாட்டு மொழிகளினின்று தமிழ்நாட்டில் வந்து வழங்கும் சொல். இச்சூத்திரத்தில் ‘செப்புக’ என்பதும் திசைச் சொல்லாதல் காண்க.
149. தீர்க்கங் குணம்விருத்தி சந்திமூ வகையாம். (09) ()தீர்க்கம் குணம் விருத்தி சந்தி மூ வகை ஆம்.
- பவாநந்தர் உரை
- இஃது சந்தியின் வகையை உணர்த்துகின்றது.
- பதவுரை
- தீர்க்கம் = தீர்க்கசந்தி என்றும்,
- குணம் = குணசந்தி என்றும்,
- விருத்தி = விருத்திசந்தி என்றும்
- சந்தி மூவகை ஆம் = சந்தியானது மூவகைப்படும்.
- பொழிப்புரை
- தீர்க்கசந்தி என்றும் குணசந்தி என்றும் விருத்திசந்தி என்றும் சந்தியானது மூன்று வகைப்படும்.
150. அ ஆமுன் அ ஆவரி லிரண்டுங் கெட்டாவாம். (10) () அ ஆ முன் அ ஆ வரில் இரண்டும் கெட்டு ஆ ஆம்.
- பவாநந்தர் உரை
- இஃது அகர ஆகார ஈற்றின்முன் அ ஆ வந்து புணருமாறு உணர்த்துகின்றது.
- பதவுரை
- அ ஆ முன் = வடமொழி அகர ஆகார ஈற்றின் முன்,
- அ ஆ வரில் = அகர ஆகாரங்கள் வந்தால்,
- இரண்டும் கெட்டு ஆ ஆம் = நிலைமொழி ஈறும் வருமொழி முதலுமாகிய இரண்டும் கெட,
- ஆ ஆம் = ஆகாரம் வரும்.
- பொழிப்புரை
- வடமொழி அகர ஆகார ஈற்றின்முன் அகர ஆகாரங்கள் வந்தால் நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் ஆகிய இரண்டும் கெட ஆகாரம் வரும்.
உதாரணம்: பாத அம்புஜம்-பாதாம்புஜம். சிவ ஆலயம் - சிவாலயம். சேநா அதிபதி - சேநாதிபதி, சதா ஆநந்தம் - சதாநந்தம்
151. இ ஈமுன் இ ஈவரி லிரண்டுங்கெட் டீயாம். (11) () இ ஈ முன் இ ஈ வரில் இரண்டும் கெட்டு ஈ ஆம்.
- பவாநந்தர் உரை
- இஃது இகர ஈகாரத்தின்முன் இ ஈ வந்து புணருமாறு உணர்த்துகின்றது.
- பதவுரை
- இ ஈ முன் = இகர ஈகார ஈற்றின்முன்,
- இ ஈ வரில் = இகர ஈகாரங்கள் வந்தால்,
- இரண்டும் கெட்டு = ஈறும் முதலும் ஆகிய இரண்டும் கெட,
- ஈ ஆம் = ஈகாரம் வரும்.
- பொழிப்புரை
- இகர ஈகார ஈற்றின்முன் இகர ஈகாரங்கள் வந்தால் ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட ஈகாரம் வரும்.
உதாரணம்: கிரி இந்திரன்- கிரீந்திரன், கிரி ஈசன் - கிரீசன்.
- மகீ இந்திரன்- மகீந்திரன், மகீ ஈசன் - மகேசன்.
152. உ ஊமுன் உ ஊவரி லிரண்டுங்கெட் டூவாம். (12) () உ ஊ முன் உ ஊ வரில் இரண்டும் கெட்டு ஊ ஆம்.
- பவாநந்தர் உரை
- இஃது உகர ஊகாரத்தின்முன் உ ஊ வருமாறு உணர்த்துகின்றது.
- பதவுரை
- உ ஊ முன் = உகர ஊகார ஈற்றின்முன்,
- உ ஊ வரில் = உகர ஊகாரங்கள் வந்தால்,
- இரண்டும் கெட்டு = ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட,
- ஊ ஆம் = ஊகாரம் வரும்.
- பொழிப்புரை
- உகர ஊகார ஈற்றின்முன் உகர ஊகாரங்கள் வந்தால் ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட ஊகாரம் வரும்.
உதாரணம்: குரு உபதேசம் - குரூபதேசம், சிந்து ஊர்மி - சீந்தூர்மி.
- சுயம்பூ உபதேசம் - சுயம்பூபதேசம், வதூ ஊரு - வதூரு.
153. அ ஆ முன் இ ஈவரி லிரண்டுங்கெட் டேயாம். (13) () அ ஆ முன் இ ஈ வரில் இரண்டும் கெட்டு ஏ ஆம்.
- பவாநந்தர் உரை
- இஃது அகர ஆகாரங்களின்முன் இ ஈ வருமாறு உணர்த்துகின்றது.
- பதவுரை
- அ ஆ முன் = அகர ஆகார ஈற்றின்முன்,
- இ ஈ வரில் = இகர ஈகாரங்கள் வந்தால்,
- இரண்டும் கெட்டு = ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட,
- ஏ ஆம் = ஏகாரம் வரும்.
- பொழிப்புரை
- அகர ஆகார ஈற்றின்முன் இகர ஈகாரங்கள் வந்தால் ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட ஏகாரம் வரும்.
உதாரணம்: நர இந்திரன்- நரேந்திரன், தேவ ஈசன்- தேவேசன், தரா இந்திரன் - தரேந்திரன், உமா ஈசன் - உமேசன்.
154. அ ஆ முன் உ ஊவரி லிரண்டுங்கெட் டோவாம். (14) ()அ ஆ முன் உ ஊ வரில் இரண்டும் கெட்டு ஓ ஆம்.
- பவாநந்தர் உரை
- இஃது அ ஆ முன் உ ஊ வருமாறு உணர்த்துகின்றது.
- பதவுரை
- அ ஆ முன் = அகர ஆகார ஈற்றின்முன்,
- உ ஊ வரில் = உகர ஊகாரங்கள் வந்தால்,
- இரண்டும் கெட்டு = ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட்டு,
- ஓ ஆம் = ஓகாரம் வரும்.
- பொழிப்புரை
- அகர ஆகார ஈற்றின்முன் உகர ஊகாரங்கள் வந்தால் ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட ஓகாரம் வரும்.
உதாரணம்: சூர்ய உதயம் - சூர்யோதயம், ஞான ஊர்ச்சிதன் - ஞானோர்ச்சிதன், கங்கா உற்பத்தி - கங்கோற்பத்தி, தயா ஊர்ச்சிதன் - தயோர்ச்சிதன்.
155. அ ஆமுன் ஏ ஐவரி லிரண்டுங்கெட் டையாம். (15) () அ ஆ முன் ஏ ஐ வரில் இரண்டும் கெட்டு ஐ ஆம்.
- பவாநந்தர் உரை
- இஃது அகர ஆகாரத்தின்முன் ஏ ஐ வருமாறு உணர்த்துகின்றது.
- பதவுரை
- அ ஆ முன் = அகர ஆகார ஈற்றின் முன்,
- ஏ ஐ வரில் = ஏகார ஐகாரங்கள் வந்தால்,
- இரண்டும் கெட்டு = ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட,
- ஐ ஆம் = ஐகாரம் வரும்.
- பொழிப்புரை
- அகர ஆகார ஈற்றின்முன் ஏகார ஐகாரங்கள் வந்தால் ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட ஐகாரம் வரும்.
உதாரணம்: பரம ஏகாந்தி - பரமைகாந்தி, சிவ ஐக்யம் - சிவைக்யம், தரா ஏகவிரன் - தரைகவீரன், தேவதா ஐக்யம் - தேவதைக்யம்.
156. அ ஆமுன் ஓ ஔவரி லிரண்டுங்கெட் டௌவாம். (16) () அ ஆ முன் ஓ ஔ வரில் இரண்டும் கெட்டு ஔ ஆம்.
- பவாநந்தர் உரை
- இஃது அ ஆ முன் ஓ ஔ வருமாறு உணர்த்துகின்றது.
- பதவுரை
- அ ஆ முன் = அகர ஆகார ஈற்றின் முன்,
- ஓ ஔ வரில் = ஓகார ஔகாரங்கள் வந்தால்,
- இரண்டும் கெட்டு = ஈறும் முதலும் ஆகிய இரண்டும் கெட,
- ஔ ஆம் = ஔகாரம் வரும்.
- பொழிப்புரை
- அகர ஆகார ஈற்றின் முன் ஓகார ஔகாரங்கள் வந்தால் ஈறும் முதலுமாகிய இரண்டும் கெட ஔகாரம் வரும்.
உதாரணம்:கலச ஓதநம்- கலசௌதநம், திவ்ய ஔஷதம் - திவ்யௌஷதம், மகா ஓஷதி - மகௌஷதி, மகா ஔதார்யம் - மகௌதார்யம்.
157. இகர ஏகார முதற்கை யாகும். (17) () இகர ஏகார முதற்கு ஐ ஆகும்.
- பவாநந்தர் உரை
- இது மொழிமுதல் இகர எகரங்கள் திரியுமாறு உணர்த்துகின்றது.
- பதவுரை
- முதற்கு = மொழி முதலில் உள்ள,
- இகர ஏகாரம் = இகர ஏகாரங்கள் இரண்டும்,
- ஐ ஆகும் = ஐகாரம் ஆகும்.
- பொழிப்புரை
- மொழி முதலில் உள்ள இகர ஏகாரங்கள் இரண்டும் ஐகாரம் ஆகும்.
உதாரணம்: கிரியில் உள்ளன - கைரிகம். வேதசம்பந்தம் - வைதிகம்.
158. உ ஊ ஓ முத லௌவா கும்மே. (18) ()உ ஊ ஓ முதல் ஔ ஆகும்மே.
- பவாநந்தர் உரை
- இது மொழி முதல் உகர ஊகார ஓகாரங்கள் திரியுமாறு உணர்த்துகின்றது.
- பதவுரை
- முதல் = மொழிக்கு முதலில் உள்ள,
- உ ஊ ஓ = உகர ஊகார ஓகாரங்கள்,
- ஔ ஆகும் = ஔகாரம் ஆகும்.
- பொழிப்புரை
- மொழிக்கு முதலில் உள்ள உகர ஊகார ஓகாரங்கள் ஔகாரம் ஆகும்.
உதாரணம்: குருகுலத்தார் - கௌரவர், சோமன் மகன் - சௌம்யன், சூரன் மகன் - சௌரி.
159. மொழிமுத லகரம் ஆவா கும்மே. (19) () மொழி முதல் அகரம் ஆ ஆகும்மே.
- பவாநந்தர் உரை
- இது மொழி முதல் அகரம் ஆகாரம் ஆமாறு உணர்த்துகின்றது.
- பதவுரை
- மொழி முதல் அகரம் = மொழிக்கு முதலில் உள்ள அகரமானது,
- ஆ ஆகும் = ஆகாரம் ஆகும்.
- பொழிப்புரை
- மொழிக்கு முதலில் உள்ள அகரமானது ஆகாரம் ஆகும்.
உதாரணம்: தசரதன் மகன் - தாசரதி, ஜநகன் மகள் - ஜாநகி.
160. எதிர்மறை வடசொற் கியைந்த மொழிமுதல் () எதிர் மறை வட சொற்கு இயைந்த மொழி முதல்
- உயிர்வரி லந்நு மொற்றுறி லவ்வுமாம். (20) () உயிர் வரில் அந்நும் ஒற்று உறில் அவ்வும் ஆம்.
- பவாநந்தர் உரை
- இஃது எதிர்மறை வருமாறு உணர்த்துகின்றது.
- பதவுரை
- வடசொல் எதிர்மறைக்கு = வடமொழி எதிர்மறைக்கு,
- இயைந்த = பொருந்தின,
- மொழி முதல் உயிர் வரின் = மொழி முதல் உயிர் வந்தால்,
- அந்நும் = அந்நும்,
- ஒற்று உறில் = மொழி முதல் மெய் வந்தால்,
- அவ்வும் = அவ்வும்,
- ஆம் = வரும்.
- பொழிப்புரை
- வடமொழி எதிர்மறைக்குப் பொருந்தின மொழிமுதல் உயிர் வந்தால் அந்நும் மொழிமுதல் மெய் வந்தால் அவ்வும் வரும்.
உதாரணம்: ந+ஆசாரம் = அநாசாரம் (ஆசாரம் இன்மை), ந+ஆதி = அநாதி (ஆதியின்மை), ந+களங்கம் = அகளங்கம் (களங்கம் இன்மை), ந+யோக்கியம் = அயோக்கியம் (யோக்கியம் இன்மை).
161. நிர் துர் நி கு வி பொருளின்மை நிகழ்த்தும். (21) ()நிர் துர் நி கு வி பொருள் இன்மை நிகழ்த்தும்.
- பவாநந்தர் உரை
- சிறிய எழுத்துக்கள்இது நிர் முதலியன இன்மைப் பொருளில் வரும் என்பது உணர்த்துகின்றது.
- பதவுரை
- நிர் துர் நி கு வி = நிர், துர், நி, கு, வி ஆகிய இவ்வைந்தும்,
- பொருள் இன்மை நிகழ்த்தும் = இன்மைப் பொருளை உணர்த்தும்.
- பொழிப்புரை
- நிர் துர் நி கு வி ஆகிய இவ்வைந்தும் இன்மைப் பொருளை உணர்த்தும்.
உதாரணம்: நிர்+நாமன் = நிர்நாமன் (நாமம் இல்லான்). துர்+பலம்= துர்ப்பலம் (பலமின்மை). நி+மலம் = நிமலம் (மலமின்மை), கு+தர்க்கம்=குதர்க்கம் (தர்க்கமின்மை). வி+குலம்= விகுலம் (குலமின்மை).
162. வடமொழி யுயிர்முன் வன்கண மியல்பாம். (22) () வட மொழி உயிர் முன் வன் கணம் இயல்பு ஆம்.
- பவாநந்தர் உரை
- இது வடமொழி உயிர்முன் வன்கணம் இயல்பாமாறு உணர்த்துகின்றது.
- பதவுரை
- வடமொழி உயிர் முன் = உயிரீற்று வடமொழிகளின்முன் வருகிற,
- வன்கணம் = வல்லெழுத்துக்கள்,
- இயல்பு ஆம் = இயல்பாகும்.
- பொழிப்புரை
- உயிரீற்று வடசொற்களின் முன் வருகிற வல்லெழுத்துக்கள் இயல்பாகும்.
உதாரணம்: ஆதிபகவன், அளிகுலம்.
163. ஏயன் விகுதி யெய்தும் பிள்ளைக்கே. (23) () ஏயன் விகுதி எய்தும் பிள்ளைக்கு ஏ.
- பவாநந்தர் உரை
- இஃது ஏயன் விகுதி பிள்ளைப் பொருளில் வருமாறு உணர்த்துகின்றது.
- பதவுரை
- ஏயன் விகுதி = ஏயன் என்னும் விகுதி,
- பிள்ளைக்கு = பிள்ளைப் பொருளில்,
- எய்தும் = வரும்.
- பொழிப்புரை
- ஏயன் என்னும் விகுதி பிள்ளைப் பொருளில் வரும்.
உதாரணம்: கிருத்திகையின் மகன் - கார்த்திகேயன், கங்கையின் மகன் - காங்கேயன்.
164. ஆ ஐ ஔ முத லாகமந் திரிபாம். (24) (01) ஆ ஐ ஔ முதல் ஆகமம் திரிபு ஆம்.
- பவாநந்தர் உரை
- இஃது ஆகார ஐகார ஔகாரங்கள் மொழிமுதலில் தோன்றலும் திரிபுமாம் என்பது உணர்த்துகின்றது.
- பதவுரை
- ஆ ஐ ஔ = ஆகார ஐகார ஔகாரங்கள்,
- முதல் = மொழி முதலில்,
- ஆகமம் திரிபு ஆம் = தோன்றலும் திரிபும் ஆகும்.
- பொழிப்புரை
- ஆகார ஐகார ஔகாரங்கள் மொழி முதலில் தோன்றலும் திரிபும் ஆகும்.
உதாரணம்: வ்யாகரணம் உணர்ந்தோன் = வையாகரணன். த்வாரங் காப்பவன் = தௌவாரிகன்- இவை ஆகமம்.
- த்வாதசி = த்வி+தச, இது திரிபு. திரிபு எனினும் ஆதேசம் எனினும் ஒக்கும்.
அகத்தியம் எழுத்திலக்கணக் காண்டம் ஐந்தாவது வடமொழிப் படலம் முற்றிற்று
உரை நூல்களிற் கண்ட பேரகத்திய மேற்கோட் சூத்திரங்கள்
தொகுஆசிரியர்: அகத்தியனார்
தொகுஉரையாசிரியர்: ச.பவாநந்தம் பிள்ளை அவர்கள்
தொகு1. இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே () இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே
- எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே ()எள் இன்று ஆகில் எண்ணெயும் இன்றே
- எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல () எள்ளினின்று எள் நெய் எடுப்பது போல
- இலக்கி யத்தினின் றெடுபடும் இலக்கணம். () இலக்கியத்தினின்றும் எடுபடும் இலக்கணம்.
- பதவுரை
- இலக்கியம் இன்றி = இலக்கியம் இல்லாமல்,
- இலக்கணம் இன்று = இலக்கணமில்லை,
- எள் இன்று ஆகில் = எள் இல்லையாயின்,
- எண்ணெயும் இன்று = எண்ணெயும் இல்லை,
- எள்ளில் நின்று = எள்ளில் இருந்து,
- எண்ணெய் எடுப்பது போல = எண்ணெயை எடுப்பது போல,
- இலக்கியத்தில் நின்று இலக்கணம் எடுபடும் = இலக்கியத்திலிருந்து இலக்கணம் சொல்லப்படும் என்றவாறு.
2. நெடிலு நெடுமையுந் தீர்க்கமு நெடிற்பெயர். () நெடிலும் நெடுமையும் தீர்க்கமும் நெடில் பெயர்.
- பதவுரை
- நெடிலும் = நெடில் என்பதும்,
- நெடுமையும் = நெடுமை என்பதும்,
- தீர்க்கமும் = தீர்க்கம் என்பதும்,
- நெடில் பெயர் = நெட்டெழுத்துக்களுக்குப் பெயர்களாம் (எ-று).
3. அவையே, ()அவையே,
- அகம்புறம் அண்மை செய்மை பொதுமைக்கணாம். () அகம் புறம் அண்மை சேய்மை பொதுமைக் கண் ஆம்.
- பதவுரை
- அவையே = அந்தச் சுட்டுக்கள்,
- அகம் புறம் = அகத்திலும் புறத்திலும்,
- அண்மை சேய்மை பொதுமைக் கண் ஆம் = அண்மை சேய்மை பொதுமைகளில் வரும் (எ-று).
4. யாவென் வினாவே அஃறிணைப் பன்மை () யா என் வினாவே அஃறிணைப் பன்மை
- விகுதி பெறுங்கால் ஐம்பாலினும் வினாவாம். () விகுதி பெறும்கால் ஐம்பாலினும் வினா ஆம்
- பதவுரை
- யா என் வினா = யாவென்னும் வினாவானது,
- அஃறிணைப் பன்மை = அஃறிணைப் பன்மையாகும்,
- விகுதி பெறுங்கால் = (அது) விகுதி பெறுமிடத்து,
- ஐம்பாலினும் வினா ஆம் = ஐம்பாலிலும் வினாவாகும் (எ-று).
5. எழுவாய்ச் சந்தியின் இசைவலி யியல்பே. () எழுவாய்ச் சந்தியின் இசை வலி இயல்பு ஏ.
- பதவுரை
- எழுவாய்ச் சந்தியின் இசை = எழுவாய்ச் சந்தியில் வந்த,
- வலி = வல்லெழுத்துக்கள்,
- இயல்பே = இயல்பாய்ப் புணரும் (எ-று).
6. வியங்கோள் விகுதிமுன் வலிஇயல் பாகும். ()வியங்கோள் விகுதி முன் வலி இயல்பு ஆகும்.
- பதவுரை
- வியங்கோள் விகுதி முன் = வியங்கோள் விகுதிக்கு முன்னே வருகிற,
- வலி = வல்லெழுத்துக்கள்,
- இயல்பு ஆகும் = இயல்பாய்ப் புணரும் (எ-று).
7. இரண்டன் விபத்தி எஞ்சில் வலிஇயல்பாகும். () இரண்டன் விபத்தி எஞ்சில் வலி இயல்பு ஆகும்.
- பதவுரை
- இரண்டன் விபத்தி எஞ்சில் = இரண்டாம் வேற்றுமைத் தொகையில்,
- வலி = வல்லெழுத்துக்கள்,
- இயல்பு ஆகும் = இயல்பாய்ப் புணரும் (எ-று).
8. பெயரே அன்றிப் பிறவுரு பேலா. () பெயரே அன்றிப் பிற உருபு ஏலா.
- பதவுரை
- பெயரே அன்றி = பெயர்ச்சொல்லே அன்றி,
- பிற = வேறு சொற்கள்,
- உருபு ஏலா = வேற்றுமை உருபுகளை ஏற்க மாட்டா (எ-று).
9. அதுவும் ஆதுவும் அவ்வும் உடையவும் () அதுவும் ஆதுவும் அவ்வும் உடையவும்
- ஆறன் உருபென் றறைதல் வேண்டும். ()ஆறன் உருபு என்று அறைதல் வேண்டும்.
- பதவுரை
- அதுவும் = அது என்பதும்,
- ஆதுவும் = ஆது என்பதும்,
- அவ்வும் = அ என்பதும்,
- உடையவும் = உடைய என்பதும்,
- ஆறன் உருபு என்று = ஆறாம் வேற்றுமை உருபு என்று,
- அறைதல் வேண்டும் = சொல்ல வேண்டும் (எ-று).
10. கூறு படுத்தலாற் கூற்றெனப் படுமே. () கூறு படுத்தலால் கூற்று எனப்படும் ஏ.
- பதவுரை
- கூறுபடுத்தலால் = கூறுபடுத்துவதனால்,
- கூற்று எனப்படும் = கூற்று என்று சொல்லப்படும் (எ-று).
11. இட்டுவிட் டிரண்டும் வினையிடைச் சொல்லே. () இட்டு விட்டு இரண்டும் வினை இடைச் சொல் ஏ.
- பதவுரை
- இட்டு விட்டு இரண்டும் = இட்டு விட்டு என்கிற இரண்டும்,
- வினை இடைச் சொல் = வினையிடைச் சொற்களாம் (எ-று).
12. பலவி னியைந்தவு மொன்றெனப் படுமே () பலவின் இயைந்தவும் ஒன்று எனப்படும் ஏ
- யடிசில் புத்தகஞ் சேனை யமைந்த ()அடிசில் புத்தகம் சேனை அமைந்த
- கதவ மாலை கம்பல மனைய. () கதவம் மாலை கம்பலம் அனைய.
- பதவுரை
- பலவின் = பல பொருள்களால்,
- இயைந்தவும் = அமைந்தனவும்,
- ஒன்று எனப்படும் = ஒன்று என்றே சொல்லப்படும்.
- அடிசில் = சோறு,
- புத்தகம் = நூல்,
- சேனை = படை,
- கதவம் = கதவு,
- மாலை = ஆரம்,
- கம்பலம் = கம்பளம் என இவை,
- அனைய = அவ்விலக்கணத்தைப் பொருந்துவன (எ-று).
- அமைந்த என்பதனை அடிசில் முதலிய எல்லாப் பொருள்களோடும் கூட்டி அவ்வவற்றிற்கு ஏற்பப் பல பொருள்களான் இயன்றவென்க. இவை உதாரணங்கள்.
13. வயிர வூசியு மயன்வினை யிரும்புஞ் () வயிர ஊசியும் மயன் வினை இரும்பும்
- செயிரறு பொன்னைச் செம்மைசெய் யாணியுந் () செயிர் அறு பொன்னைச் செம்மை செய் ஆணியும்
- தமக்கமை கருவியுந் தாமா மவைபோ () தமக்கு அமை கருவியும் தாம் அவை போல்
- லுரைத்திற முணர்த்தலு முரையது தொழிலே. ()உரைத் திறம் உணர்த்தலும் உரையது தொழில் ஏ.
- பதவுரை
- வயிர ஊசியும் = வயிரத்தான் இயன்ற ஊசியும்,
- மயன் வினை = கம்மாளனது,
- வினை இரும்பும் = தொழில் செய்யும் இரும்பும்,
- செயிர் அறு பொன்னை = குற்றமற்ற பொன்னை,
- செம்மை செய் ஆணியும் = செம்மைப் படுத்துகிற ஆணியும்,
- தமக்கு அமை கருவியும் = தமக்கு அமைந்திருக்கும் கருவிகளும்,
- தாம் ஆம் = தாமேயாகும்;
- அவை போல் = அவற்றைப்போலவே,
- உரைத்திறம் உணர்த்தலும் = உரையின் பாகுபாட்டினை உணர்த்தலும்,
- உரையது தொழிலே = உரையது தொழிலேயாம் (எ-று).
14. ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை () ஏழ் இயல் முறையது எதிர் முக வேற்றுமை
- வேறென விளம்பான் பெயரது விகாரமென் () வேறு என விளம்பான் பெயரது விகாரம் என்று
- றோதிய புலவனு முளனொரு வகையா () ஓதிய புலவனும் உளன் ஒரு வகையான்
- B>னிந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன். ()இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்.
- பதவுரை
- ஏழ் இயல் முறையது = வேற்றுமை ஏழாக நடைபெறும் முறையினை உடையது,
- எதிர் முக வேற்றுமை = விளி வேற்றுமை என்று,
- வேறு விளம்பான் = வேறொன்று சொல்லாமல் (அது),
- பெயரது விகாரம் என்று = பெயரின் விகாரமே என்று,
- ஓதிய = சொன்ன,
- புலவனும் = புலவனானவனும்,
- உளன் = இருக்கிறான்;
- இந்திரன் = இந்தரனானவன்,
- ஒரு வகையால் = ஒருவிதத்தால்,
- வேற்றுமை = வேற்றுமைகள்,
- எட்டு ஆம் என்றனன் = எட்டாம் என்று சொல்லினன் (எ-று).
- ஓதிய புலவன் வடமொழி பாணினி பகவான்.
15. ஆற னுருபே யதுவா தவ்வும் () ஆறன் உருபே அது ஆது அவ்வும்
- வேறொன் றுடையதைத் தனக்குரி யதையென () வேறு ஒன்று உடையதைத் தனக்கு உரியதை என
- விருபாற் கிழமையின் மருவுற வருமே. () இரு பால் கிழமையின் மருவு உற வருமே.
- பதவுரை
- ஆறன் உருபு = ஆறாம் வேற்றுமை உருபு,
- அது = அதுவும்,
- ஆது = ஆதுவும்,
- அவ்வும் = அகரமும் (ஆகும்),
- வேறு ஒன்று உடையது என = வேறொன்றனை உடையது என்றும்,
- தனக்கு உரியது என = தனக்குரியது என்றும்,
- இருபால் கிழமையின் = இரு பகுதியவாகிய கிழமையினும்,
- மருவுற வரும் = பொருந்தவரும் (எ-று).
- கிழமை இரண்டு, தற்கிழமை பிறிதின் கிழமை. செய்யுட்கிழமையும் ஆம்.
16. மற்றுச்சொன் னோக்கா மரபி னனைத்து ()மற்றுச் சொல் நோக்கா மரபின் அனைத்தும்
- முற்றி நிற்பது முற்றியன் மொழியே. () முற்றி நிற்பது முற்று இயல் மொழி ஏ.
- பதவுரை
- மற்றுச்சொல் நோக்கா = வேறு சொல்லை நோக்காத,
- மரபின் = மரபோடு,
- அனைத்தும் = எல்லாம்,
- முற்றி நிற்பது = நிறைந்திருப்பது,
- முற்றியல் மொழி = வினைமுற்றுச் சொல்லாம் (எ-று).
17. காலமொடு கருத வரினு மாரை (01) காலமொடு கருத வரினும் ஆரை
- மேலைக் கிளவியொடு வேறுபா டின்றே. () மேலைக் கிளவியொடு வேறுபாடு இன்று ஏ.
- பதவுரை
- காலமொடு கருத வரினும் = காலத்தோடு கூடி வருவதாய் எண்ணவந்தாலும்,
- ஆரை = ஆர் விகுதி,
- மேலைக் கிளவியொடு வேறுபாடு இன்று = முன்னர்க் கிளந்த விகுதிச் சொல்லோடு வேறுபடுதல் இல்லை (எ-று).
18. காலமும் வினையுந் தோன்றிப்பா றோன்றாது ()காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது
- பெயர்கொள் ளும்மது பெயரெச் சம்மே. () பெயர் கொள்ளும் அது பெயர் எச்சம் ஏ.
- பதவுரை
- காலமும் வினையும் தோன்றி = காலமும் வினையும் வெளிப்பட்டு நிற்க,
- பால் தோன்றாது = பால் ஒன்றும் வெளிப்படாமல்,
- பெயர் கொள்ளும் அது = பெயரைக்கொண்டு முடிவது,
- பெயர் எச்சம் = பெயரெச்சம் ஆகும் (எ-று).
19. காலமும் வினையுந் தோன்றிப்பா றோன்றாது () காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது
- வினைகொள் ளும்மது வினையெச் சம்மே. () வினை கொள்ளும் அது வினை எச்சம் ஏ.
- பதவுரை
- காலமும் வினையும் தோன்றி = காலமும் வினையும் வெளிப்பட்டு நிற்க,
- பால் தோன்றாது = பால் ஒன்றும் வெளிப்படாமல்,
- வினை கொள்ளும் அது = வினையைக் கொண்டு முடிவது,
- வினை எச்சம் - வினையெச்சம் ஆம் (எ-று).
பார்க்க
தொகுபேரிசைச் சூத்திரம்மூலமும் உரையும்