பெருங்கதை/3 1 யாத்திரை போகியது

(3 1 யாத்திரை போகியது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

3 மகத காண்டம் 3 1 யாத்திரை போகியது

உதயணன் உட்கோள்

தொகு

ஆங்கினி திருந்த காலை யீங்கினி
வேந்துபடக் கடந்த வேந்துசுடர்நெடுவேல்
உதயணனிலைமை யிதுவென வுரைப்பேன்
பழனப் படப்பைப் பாஞ்சால ராசன்
அழன்மிகு சீற்றத் தாருணி யரசன் 5
திரியு நெய்யு மொருவயிற் செல்லிய
எரிவிளக் கற்ற மிருள்பரந் தாங்குப்
பாய தொல்சீர்ப் பகையடு தானை
ஏய ரற்றத் திடுக்கட் காலை
அன்றவ ணறிந்தே தொன்றுவழி வந்த 10
குலப்பகை யாகிய வலித்துமேல் வந்து
நன்னகர் வௌவு மின்னாச் சூழ்ச்சியன்
என்வகை யறிந்த நன்பொரு ளாளன்
பெரும்படைத் தானைப் பிரச்சோ தனன்றன்
அரும்படை யழியா வாற்றலிற் போந்தவன் 15
மடமகட் கொண்ட விடன்றி சூழ்ச்சி
யூகி யுளனெனி னிகழா னிவனெனச்
சாவுமுந் துறுத்த வலிப்பின னாகித்
தீயகங் கழுமிய கோயில் வேவினுள்
தேவியை யிழந்து பூவிதழ்ச் சோலைப் 20
புல்லென் யாக்கையொடு போயின னுதயணன்

பாஞ்சாலராசன் உட்கோள்

தொகு

இல்லெனக் கெழுபகை யிம்மையி னினியென
மாற்று வேந்தன் மதில்காப் பிகந்துதன்
ஆற்றன் மகிழ்ந்த வந்நிலை யொற்றி

அமைச்சர் உதயணனுக்குக் கூறல்

தொகு

மகத மன்னனொடு மகட்கிளை யாகித் 25
தொகைகொண் டீண்டியவன் றொல்படை தழீஇ
ஆதித் துணிவுடை நீதியிற் கரந்த
தம்பியர் கூட வெம்பிய வெகுட்சியின்
ஒடுங்கா மாந்த ருள்ள மஞ்சப்
பாடுபெயர்ந் திடிக்கு மேடகம் போல 30
அகன்றுபெயர்ந் தழிக்கு மரும்பெறற் சூழ்ச்சி
நவின்ற தோழனொடு பயம்பட வலித்து
மதியுடை யமைச்சர் மனந்தெளி வுறீஇப்
புதிதிற் கொண்ட பூக்கவின் வேழம்
பணிசெயப் பிணிக்கும் பாகர் போல 35
நீதி யாள ராதி யாகிய
திறத்திற் காட்டவு மறத்தகை யழுங்கி

உதயணன் இரங்கல்

தொகு

முன்னுப காரத்து நன்னயம் பேணித்
தன்னுயிர் கொடுக்குந் தவமுது தாயும்
விறப்பினிற் பெருகியும் வறப்பினிற் சுருங்கியும் 40
உறுதி நோக்கி யுயிர்புரை காதலோ
டாழ்விடத் துதவு மரும்புணை போலத்
தாழ்விடைத் தாங்கிச் சூழ்விடைத் துளங்கா
உள்ள வாற்ற லுறுபுகழ் யூகியும்
அள்ளற் றாமரை யகவித ழன்ன 45
அரிபரந் தகன்ற வம்மலர் நெடுங்கட்
டெரிமலர்க் கோதைத் தேவியு மின்றித்
தருமமு வருத்தமுங் காமமு மிழந்தே
இருநில மருங்கி னிறைமை தாங்கி
வாழ்தலி னினிதே யாழ்தலென் றழிந்தே 50
உரக்கவின் றேய விரக்கமொ டரற்றவும்

தோழர் தேற்றல்

தொகு

கைவரை நில்லாக் கையறு கவற்சிகண்
டின்மொழி விச்சை யிலாமைய னென்னும்
ஆளவி நெஞ்சத் தந்நண னிருந்த
காள வனமும் வெந்தீப் புக்கெனக் 55
காவலன் றன்னையுஞ் சாவற லுறீஇ
மயக்க நெஞ்சமொடு மனம்வலித் திருந்துழி

இசைச்சன் கூற்று

தொகு

இசைச்சன் கைறுவ னீங்கிது கேட்கென
விச்சையின் முடியா விழுவினை யில்லெனல்
பொய்சொ லென்பர் புன்மை யோரே 60
அற்ற தாக லிற்றுங் கூறுவென்
கற்றதுங் கேட்டதுங் கண்ணா மாந்தர்க்
கொற்கிடத் துதவு முறுவலி யாவது
பொய்ப்பது போலு நம்முதற் றாகப்
பற்றொடு பழகி யற்பழ லழுந்தி 65
முடிவது நம்மைக் கடிவோ ரில்லை
இல்லை யாதலிற் சொல்லுவ லின்னும்
முடியாக் கரும மாயினு முடியும்
வாயின் முற்றித்து வயங்கா தாயினும்
சாவினும் பழியார் சால்புடை யோரென 70
மல்லற் றானை மறங்கெழு மன்னவன்
செல்வப் பாவை சென்றினிது பிறந்துழி
இம்மை யாக்கையி னியல்பின ளாகத்
தன்மையிற் றரீஉந் நாழாப் பெருவினை
உட்குடை விச்சை யொன்றுண் டதனைக் 75
கற்றுநனி நவின்ற கடன்றி யந்தணன்
இருந்தினி துறையு மிராச கிரியெனும்
பொருந்தரு வியனகர்ப் புக்கவற் குறுகி
ஆற்றுளி வழிபா டாற்றி யமைச்சனொடு
பூக்குழை மாதரை மீட்டனங் கொண்டு 80
பெறற்கரு விச்சையுங் கற்று நாமெனத்
திறற்படு கிளவி தெரிந்தவ னுரைப்ப

உதயணன் கூற்றும் தோழர் செயலும்

தொகு

விறற்போ ருதயணன் விரும்புபு விதும்பி
என்னே யன்னவு முளவோ வென்றலின்
வேட்டதன் வழியே பாற்பட நாடி 85
ஆதி வேத்தஃ தகவயிற் பெரியோர்
ஓதிய வுண்டென வுணரக் கூற
இன்னே போது மேகுமின் விரைந்தெனப்
பள்ளம் படரும் பன்னீர் போலவன்
உள்ளம் படர்வழி யுவப்பக் காட்டிக் 90
கணம்புரி பெரும்படைக் காவ நீக்கிக்
குணம்புரி தோழர் கொண்டனர் போதர
ஆற்றலும் விச்சையு மறிவு மமைந்தோர்
நூற்றுவர் முற்றி வேற்றுந ராகென

வேற்று வேட வகை

தொகு

வெண்ணூற் பூந்துகில் வண்ணங் கொளீஇ 95
நீலக் கட்டியு மரகதத் தகவையும்
பாசிலைக் கட்டியும் பீதகப் பிண்டமும்
கோல மாகக் கொண்டுகூட் டமைத்துப்
பிடித்துருக் கொளீஇக் கொடித்திரி யோட்டிக்
கையமைத் தியற்றிய கலிங்கத் துணியினர் 100
கொய்யுளைப் புரவி மேற்கொண் டவரிற்
கைவினைக் கம்மங் காண்பினி தாக
வாரமைத் தியற்றிய காலமை செருப்பினர்
செம்பொற் கொட்டைப் பந்தர்க் கொளுவினர்
மாத்திரை நுண்கயிற் றாத்திரை யாப்பினர் 105
உள்கூட் டமைந்த சில்கூட் டல்குலர்
இரும்பனை யிளமடல் விரிந்துளர் வெண்டோட்
டீர்க்கிடை யாத்த நூற்புரிப் பந்தச்
செந்தோட் டணிமலர் சேர்ந்த வுச்சி
அந்தோட் டம்பணை யரக்குவினை யுறீஇய 110
சித்திரத் திண்கால் வித்தக்கஃ குடையினர்
மரகத மணிக்கை மாசில் பொற்றொடி
உருவுபடச் செறித்த வுரோமக் கொட்டையிற்
செந்தளிர் மராஅத்துப் பைங்காய் பழித்த
செண்ணார் வடிவிற் கண்ணார் கத்தியர் 115
ஏரில வங்கத் தீம்பூ வேலம்
கப்புரப் பளிதமொ டுட்படுத் தியற்றிய
வாசத் திரையொடு பாகுநிறைத் தடக்கிய
மாசி லருமணி மடைத்த வாடையர்
பட்டுச் சுவேகமொடு பாட்டுப்புற மெழுதிய 120
கட்டமை கவடி பற்றிய கையினர்
புரிநூ லணிந்த பொன்வரை மார்பினர்
விரிநூற் கிரந்தம் விளம்பிய நாவினர்
வாச வெள்ளை வரைந்த கழுத்தினர்
தேசந் திரிதற் காகிய வணியொடு 125
வளங்கெழு மாமலை வன்புன் றாளக
நலங்கெழு சிறப்பி னாட்டக நீந்திப்
பைந்தொடி யரிவைக்குப் படுகடங் கழீஇய
கண்புரை யந்தணன் காள வனத்தினின்
றுதய ஞாயிற்றுத் திசைமுக நோக்கித் 130
திருமகட் டேரு மொருமையிற் போந்து
கருப்பாச மென்னுங் கானக் கான்யாற்றுப்
பொரும்புன னீத்தம் புணையிற் போகிச்
சேணிடைப் போகிய பின்றை யப்பால்
நீணிலைப் படுவிற் பேர்புணை நீந்தி 135
நொந்துநொந் தழியு நோன்புரி யாக்கையர்
அருஞ்சுரக் கவலையு மடவியும் யாறும்
பெருஞ்சின வீர ரொருங்குடன் பேர்வுழி

உதயணன் மான் முதலியவற்றை நோக்கிப் புலம்பல்

தொகு

வென்றடு சிறப்பின் வீணை வித்தகன்
ஒன்றிய தேவியை யுள்குவன னாகிச் 140
செறிந்த மருங்கிற் றிரிமருப் பிரலை
புறந்தற் காப்பப் புணர்மறி தழீஇய

மான் பிணை

தொகு

மடமா னம்பிணை கண்டு மாதர்
கடைபோழ் நெடுங்கட் காம நோக்கம்
உள்ளத் தீர வொள்ளழ லுயிரா 145
இனத்திற் கெழீஇ யின்ப மகிழ்ச்சியொடு
புனத்திற் போகாது புகன்றுவிளை யாடும்
மான்மடப் பிணையே வயங்கழற் பட்ட
தேனேர் கிளவி சென்ற வுலகம்
அறிதி யாயின் யாமு மங்கே 150
குறுகச் செல்கங் கூறா யெனவும்

மயிற்பெடை

தொகு

பணிவரை மருங்கிற் பாறை தோறும்
மணியிரும் பீலி மல்க வுளரி
அரும்பெற லிரும்போத் தச்சங் காப்ப
மதநடை கற்கு மாமயிற் னேடாய் 155
சிதிர்மலர்க் கூந்தற் செந்நீக் கவர
மயர்வனள் விளிந்தவென் வஞ்சி மருங்குல்
மாறிப் பிறந்துழி மதியி னாடிக்
கூறிற் குற்ற முண்டோ வெனவும்

ஆண்புறா

தொகு

வெஞ்சுரஞ் செல்வோர் வினைவழி யஞ்சப் 160
பஞ்சுர வோசையிற் பையெனப் பயிரும்
வெண்சிறைச் செங்கா னுண்பொறிப் புறவே
நுண்சிறு மருங்கு னுகர்வின் சாயற்
பாசப் பாண்டிற் பல்கா ழல்குலென்
வாசவ தத்தை யுள்வழி யறியின் 165
ஆசை தீர வவ்வழி யடைகேன்
உணரக் கூறா யாயிற் பெடையொடு
புணர்வு விரும்பல் பொல்லா தெனவும்

வண்டு

தொகு

பசைந்துழிப் பழகல் செல்லாது பற்றுவிட்
டுவந்துழித் தவிரா தோடுதல் காமுறும் 170
இளையோ ருள்ளம் போலத் தளையவிழ்ந்
தூதுமல ரொழியத் தாதுபெற நயந்து
கார்ப்புன மருங்கி னார்த்தனை திரிதரும்
அஞ்சிறை யறுகாற் செம்பொறி வண்டே
எரியுள் விளிந்தவென் வரிவளைப் பணைத்தோள் 175
வள்ளிதழ்க் கோதை யுள்ளுழி யுணரிற்
கவற்சி வகையிற் பெயர்த்தனை களைஇயர்
அரும்பூங் கோதைப் பூந்தா துண்டவள்
அவிழ்பூங் கூந்தலுண் மகிழ்துயில் வெய்தி
நீயு மெவ்வந் தீர யானும் 180
நல்லிள வனமுலை புல்லுபு பொருந்த
உய்த்தனை காட்டுதி யாயிற் கைம்மா
றித்துணை யென்பதொன் றில்லென விரங்கியும்

தென்றல்

தொகு

பொங்குமழை தவழும் பொதியின் மீமிசைச்
சந்தனச் சோலைதொறுந் தலைச்சென் றாடி 185
அசும்பிவ ரடைகரைப் பசுந்தோ டுளரிச்
சுள்ளிவெண் போது சுரும்புண விரித்து
மணிவாய் நீலத் தணிமுகை யலர்த்தி
ஒண்பூங் காந்த ளுழக்கிச் சந்தனத்
தந்ந ணறுமல ரவிழ மலர்த்தி 190
நறுங்கூ தாளத்து நாண்மல ரளைஇக்
குறுந்தாட் குரவின் குவிமுகை தொலைச்சி
முல்லைப் போதி னுள்ளமிழ் துணாஅப்
பல்பிட வத்துப் பனிமலர் மறுகிப்
பொற்றார்க் கொன்றை நற்றாது நயந்து 195
சாத்துவினைக் கம்மியன் கூட்டுவினை யமைத்துப்
பல்லுறுப் படக்கிய பையகங் கமழ
எல்லுறு மாலை யிமயத் துயர்வரை
அல்குதற் கெழுந்த வந்தண் டென்றால்
செவ்வழித் தீந்தொடை சிதைந்தன கிளவியென 200
எல்வளைத் தோளியை யெவ்வழி யானும்
நாடிச் சென்றவள் சேடிள வனமுலைக்
குழங்கற் சாந்திடைக் குளித்துவிளை யாடியென்
அழுங்க னெஞ்சத் தயாஅநோய் தீர
மயர்வெனை மாற்றுதி யாயி னின்மாட் 205
டுயர்வுள வியற்கை யொழியுமோ வெனவும்
இன்னவை பிறவு மன்னவை கண்டோர்
அவல நெஞ்சமொ டறிவுபிறி தாகத்
தவலருந் தேவியைத் தானினைந் தாற்றா
திறுதி யெண்ணி யிகவா மன்னனை 210

உதயணன் முதலியோர் மகதநாட்டின் எல்லையை அடைதல்

தொகு

உறுதி மொழயி னுணர்த்துவன ராகிப்
பல்வகைத் தோழர் படிவ வேடமொடு
செல்வ மகதத் தெல்லை யெய்தி
எருவழிப் பழகல் செல்லா துருவுகரந்து
பெருவழி முன்னினர் பெருந்தகைக் கொண்டென். 215

3 1 யாத்திரை போகியது முற்றிற்று.