சூடாமணி நிகண்டு ஆசிரியர்: மண்டல புருடர் (மூலபக்கம்= மதுரை மின்நூல் திட்டம்)
சூடாமணி நிகண்டு என்னும் நூல், கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள், வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில், இந்நூல் பதிக்கப்பட்டு, பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகளுடன் உள்ளன கருதப்படுகிறது.


292 (1)
மனவு நன்மணி சங் கக்காம் வரை மலை யிறை வேய் மட்டாம்
தனி தமி யொப்பின்மைப் பேர் சாந்தமே கமையுஞ் சாந்தும்
முனை பகை நுனி வெறுப்பாம் முளை வே யங்குரமே பிள்ளை
யின மிருங்கிளை யமைச்சா மெழில் வண்ண மிளமைக்கும் பேர்.

293 (2)
ஆனகம் படகத்தின் பேர்ஆகுந் துந்துபியு மப்பேர்
மானமே யளவி லச்சை விமானமே பெருமை குற்றம்
பானலே பழன நெய்தல் பாங்கரே யிடம் பக்கப் பேர்
மானலே மயக்கம் ஒப்பாம் வருடமே மழையு மாண்டும்.

294 (3)
தானமே மத நீராட்டுத் தருகொடை சுவர்க்க நாற்பேர்
பீனமே பருமை பாசி பேடென்ப பேடி யூரே
நானமே பூசும்பூச்சு நானமுங் குளிக்குநீரும்
வான மாகாயமென்ப மழை யுலர்மரமுமாமே.

295 (4)
வானி மேற்கட்டி சேனை வண்துகிற் கொடி முப்பேரே
ஆனி யுத்தராட மூலஞ் சேத மோர் மாதமென்ப
ஏனையே யொழிபு மற்றையெனு மிடைச்சொற்கு மப்பேர்
ஆனியம் பொழுது நாளாம் அனந்தை யோர்சத்தி பூமி.

296 (5)
முன்னலே நினைவு நெஞ்சா முன்னஞ் சீக்கிரியோ டெண்ணம்
கன்னல் சர்க்கரை கரும்பு கரக நாழிகைவட்டிற் பேர்
மன்ன னுத்தரட்டாதிப்பேர் மன்னவன் றானுமாகும்
கின்னர நீர்புள் யாழாங் கிடக்கை பூதலம் பாயற் பேர்.

297 (6)
பின்னையே பின்றை தங்கை பெரியமாற்குரியதேவி
கொன் பயனிலாமைக் காலங் கூறிய பெருமை யச்சம்
பொன்னென்ப வனப் பிரும்பு பூமகள் வியாழ நாற்பேர்
மன் னிலை மிகுதி வேந்தே வாழி வாழ்கென லிடைச்சொல்.

298 (7)
வன்னியே பிரமசாரி வளர்கிளி சமி செந்தீயாம்
சென்னி கம் பாணன் சோழன் சீரு ளீயஞ் செம்பாகும்
கன்னி பெண் ணழிவிலாமை கட்டிளமைக்கும் பேரே
தென் னிசை வனப்புத் தாழை தெற்கொடு கற்பு மாமே.

299 (8)
குன்று வேதண்டமாகங் குறைவொடு சதய முப்பேர்
அன்றி லோர் புள்ளு மூலநாளென வாமிரண்டே
மன்றமே வௌியின் நாமம் வாச மம்பலமு மப்பெர்
மன்றலே பரிமளப்பேர் மருவு கல்யாணமும் பேர்.

300 (9)
தன முலை பொன் ஆன்கன்று சந்த முத்தன மைம்பேராம்
கனவு நித்திரை மையற்பேர் கலிங்கஞ் சாதப்புள் ளாடை
கனை செறி வொலியா மென்ப கவரியே சவரி மேதி
பனுவலே கிளவி நூலாம் படப்பை யூர்புறமே தோட்டம்.

301 (10)
அனந்தனே சிவன் மால் சேடன் அலாயுதன் அருக னைந்தே
அனந்தமே முடிவிலாமை யாடகம் விண் முப்பேரெ
அனங்கமே யிருவாட்சிப் பேராகு மல்லிகைக்கு மப்பேர்
தனஞ்சயன் பார்த்தனே செந்தழ லொரு காற்றுமாமே.

302 (11)
சானகி சீதை மூங்கில் தனுவென்ப துடல் வில் லற்பம்
சானுவே மலை முழந்தாண் மலைப்பக்கம் தானுமாகும்
சோனையே யோண நாளும் விடாமழைசொரிதலும் பேர்
கானலே மலைச்சார் சோலை கடற்கரைச்சோலை பேய்த்தேர்.

303 (12)
வானென்ப விசும்பு மேகம் மழையொடு பெருமை நாற்பேர்
தானையே சேனை யாடை படைக்கலந் தானுமாகும்
கானந் தே ரிசையே பேதை காடுதற் பாடி யைம்பேர்
ஏனலே செந்தினைப்பேர் தினைப்புன மென்று மாமே.

304 (13)
முனியென்பது யானைக்கன்று முனிவன் வில் லகத்தி நாற்பேர்
துனியென்ப புலவிநீட்டந் துன்ப நோ யாறு கோபம்
பனியென்ப நடுக்கந் துன்பம் பயங் குளி ரிமமைம் பேரே
சினை யென்ப முட்டை பீளா மரக்கொம்புஞ் செப்பு மப்பேர்.

305 (14)
மானே சாரங்க மாவின்பொதுவொடு மகர ராசி
கானே நன்மணங் காடென்ப கல்லி யூர்குருவி யாமை
ஏனாதி மஞ்சிகன் மந்திரியுந் தந்திரியு மென்ப
மீனே சித்திரை நாள் வான்மீன் மயிலையு மேவுமப்பேர்.

306 (15)
ஞானமே யறிவு கல்வி நல்ல தத்துவ நூன் முப்பேர்
யானமே மரக்கலத்தோ டெழிலுர்திவிகற்ப மிரண்டாம்
ஏன மோலைக்குடைப் பேர் எறுழியு மறமு மப்பேர்
மேனியே வடிவமென்ப நிறத்தையும் விளம்பலாமே.

307 (16)
அன்னையே முன்பிறந்தாள் தோழி தாயாகு மென்ப
அன்ன மோதிமமே சோ றாமாகார முட னெய்யுண்டி
தன்மை யே ரியல்பினோடு தன்மையினிடமுஞ் சாற்றும்
பன்னலே நெருக்கம் வார்த்தை பருத்தியின் பேருமாமே.

308 (17)
வனமே நீர் மிகுதி காடு வளர்சோலை துளசி யீமம்
மனுவே மந்திர மோர்நூலாம் மண்ணை பேய் இளமை மூடன்
புனையென்ப தழகினோடு பொலிவு மொப்பனையுமாகும்
மனையென்ப மனைவி வீடாம் வதுவையே மணங் கல்யாணம்.

309 (18)
அன் வினையொடு பெயர்க்கும் விகுதி சாரியையு மாகும்
மன்னிடுங் கனைத்தலென்ப திரு ளோசை யிருபேர் வைக்கும்
இன்னென வொரு சொற் பல்பேர்க் கியற்கவி முந்நூற்றொன்பான்
சொன்னவன் குணபத்திரன் றாள்சூடு மண்டலவன் றானே.

"https://ta.wikisource.org/w/index.php?title=சூடாமணி_நிகண்டு/19-19&oldid=29081" இலிருந்து மீள்விக்கப்பட்டது