நன்னூல்
பவணந்தி முனிவர் இயற்றியருளிய நன்னூல்தொகு
(பிழையில்லா மெய்ப்பதிப்பு)தொகு
- பார்க்க:
- நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்
- நன்னூல் சொல்லதிகாரம் [[]]
நன்னூலின் சிறப்புப் பாயிரம்தொகு
மலர்தலை யுலகின் மல்கிரு ளகல (01) மலர் தலை உலகின் மல்கு இருள் அகல
யிலகொளி பரப்பி யாவையும் விளக்கும் (02)இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும்
பரிதியி னொருதா னாகி முதலீ(03)பரிதியின் ஒரு தான் ஆகி முதல் ஈறு
றொப்பள வாசை முனிவிகந் துயர்ந்த(04)ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த
வற்புத மூர்த்திதன் னலர்தரு தன்மையின் (05)அற்புத மூர்த்தி தன் அலர் தரு தன்மையின்
மனவிருளிரிய மாண்பொருண் முழுவதும் (06)மன இருள் இரிய மாண் பொருள் முழுவதும்
முனிவற வருளிய மூவறு மொழியுளுங் (07)முனிவு அற அருளிய மூ அறு மொழியளும்
குணகடல் குமரி குடகம் வேங்கட (08)குண கடல் குமரி குடகம் வேங்கடம்
மெனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலு (09)எனும் நான்கு எல்லையின் இருந்தமிழ் கடலுள்
ளரும்பொரு ளைந்தையும் யாவரு முணரத் (10)அரும் பொருள் ஐந்தையும் யாவரும் உணர
தொகைவகை விரியிற் றருகெனத் துன்னா (11)தொகை வகை விரியில் தருக என துன்னார்
ரிகலற நூறி யிருநில முழுவதுந் (12)இகல் அற நூறி இருநிலம் முழுவதும்
தனதெனக் கோலித் தன்மத வாரணந் (13)தனது என கோலி தன்மத வாரணம்
திசைதொறு நிறுவிய திறலுறு தொல்சீர்க் (14)திசைதொறும் நிறுவிய திறல் உறு தொல் சீர்
கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் (15)கரும் கழல் வெண் குடை கார் நிகர் வண் கை
திருந்திய செங்கோற் சீய கங்க (16)திருந்திய செங்கோல் சீய கங்கன்
னருங்கலை வினோத னமரா பரணன் (17)அரும் கலை வினோதன் அமர் ஆபரணன்
மொழிந்தன னாக முன்னோர் நூலின் (18)மொழி்ந்தனன் ஆக முன்னோர் நூலின்
வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன் (19) வழியே நன்னூல் பெயரின் வகுத்தனன்
பொன்மதிற் சனகைச் சன்மதிமுனியருள் (20)பொன் மதில் சனகை சன்மதி முனி அருள்
பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி (21)பன்னரும் சிறப்பின் பவணந்தி
யென்னு நாமத் திருந்தவத் தோனே. (22)என்னும் நாமத்து இரும் தவத்தோனே.
நன்னூலின் சிறப்புப்பாயிரம் முற்றிற்று
பாயிரவியல்தொகு
பொதுப் பாயிரம்தொகு
நூற்பா:1
- (பாயிரத்தின் பெயர்கள்)
முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்
முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்.
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்.
(01)
நூற்பா: 02
- (பாயிரத்தின் வகை)
- பாயிரம் பொதுச்சிறப் பெனவிரு பாற்றே பாயிரம் பொது சிறப்பு என இரு பாற்றே. (02)
நூற்பா: 03
- (பொதுப்பாயிரம்- இலக்கணம்)
- நூலே நுவல்வோ னுவலுந் திறனே [01] நூலே, நுவல்வோன், நுவலும் திறனே
- கொள்வோன் கோடற் கூற்றா மைந்து [02] கொள்வோன், கோடல் கூற்றாம் ஐந்தும்
- மெல்லா நூற்கு மிவைபொதுப் பாயிரம். [03] எல்லா நூற்கும் இவை பொதுப் பாயிரம். (03)
1. நூலினது வரலாறுதொகு
நூற்பா: 04
- (நூலினது இலக்கணம்)
- நூலி னியல்பே நுவலி னோரிரு [01] நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு
- பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய் [02 பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்
- நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி [03 நாற்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி
- யையிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ [04] ஐயிரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு
- டெண்ணான் குத்தியி னோத்துப் படல [05] எண் நான்கு உத்தியின் ஓத்து படலம்
- மென்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை [06] என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை
- விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே. [07] விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே. (04)
நூற்பா: 05
- (நூல்களின் வகை)
- முதல்வழி சார்பென நூன்மூன் றாகும் [01] முதல், வழி, சார்பு என நூல் மூன்று ஆகும் (05)
நூற்பா: 06
- (முதல்நூல்)
- அவற்றுள், [01] அவற்றுள்
- வினையி னீங்கி விளங்கிய அறிவின்[02] வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
- முனைவன் கண்டது முதனூ லாகும்.[03] [3] முனைவன் கண்டது முதல் நூல் ஆகும். (06)
நூற்பா: 07
- (வழி நூல்)
- முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப் [01] முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்து
- பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி [02] பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
- யழியா மரபினது வழிநூ லாகும். [03] அழியா மரபினது வழிநூல் ஆகும். (07)
நூற்பா: 08
- (சார்பு நூல்)
- இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித் [01] இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கி
- திரிபுவே றுடையது புடைநூ லாகும். [02] திரிபு வேறு உடையது புடைநூல் ஆகும். (08)
நூற்பா: 09
- (வழிநூலுக்கும் சார்புநூலுக்கும் உரிய சிறப்புவிதி)
- முன்னோர் மொழிபொருளே யன்றி அவர்மொழியும்
- பொன்னேபோற் போற்றுவ மென்பதற்கும்- முன்னோரின்
- வேறுநூல் செய்துமெனு மேற்கோளி லென்பதற்கும்
- கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்.
நூற்பா: 10
- (நாற்பொருள் பயன்)
- அறம்பொரு ளின்பம் வீடடைத னூற்பயனே.
நூற்பா: 11
- (ஏழுமதம்)
- எழுவகை மதமே யுடன்படன் மறுத்தல்
- பிறர்தம் மதமேற் கொண்டு களைவே
- தாஅ னாட்டித் தனாது நிறுப்பே
- இருவர் மாறுகோ ளொருதலை துணிவே
- பிறர்நூற் குற்றங் காட்ட லேனைப்
- பிறிதொடு படாஅன் றன்மதங் கொளலே.
நூற்பா: 12
- (பத்துக் குற்றம்)
- குன்றக் கூறன் மிகைபடக் கூறல்
- கூறியது கூறன் மாறுகொளக் கூறல்
- வழூஉச்சொ்ற் புணர்த்தன் மயங்க வைத்தல்
- வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
- சென்றுதேய்ந் திறுத னின்று பயனின்மை
- என்றிவை யீரைங் குற்ற நூற்கே.
நூற்பா: 13
- (பத்தழகு)
- சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
- நவி்ன்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
- ஓசை யுடைமை யாழமுடைத் தாதல்
- முறையின் வைப்பே யுலக மலையாமை
- விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த
- தாகுத னூலிற் கழகெனும் பத்தே.
நூற்பா: 14
- (முப்பத்திரண்டுத்தி)
- நுதலிப் புகுத லோத்துமுறை வைப்பே
- தொகுத்துச் சு்ட்டல் வகுத்துக் காட்டல்
- முடித்துக் காட்டன் முடிவிடங் கூறல்
- தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல்
- சொற்பொருள் விரித்த றொடர்ச்சொற் புணர்த்தல்
- இரட்டுற மொழித லேதுவின் முடித்தல்
- ஒப்பின் முடித்தன் மாட்டெறிந் தொழுகல்
- இறந்தது விலக்க லெதிரது போற்றல்
- முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
- விகற்பத்தின் முடித்தன் முடிந்தது முடித்தல்
- உரைத்து மென்ற லுரைத்தா மென்றல்
- ஒருதலை துணித லெடுத்துக் காட்டல்
- எடுத்த மொழியி னெய்த வைத்தல்
- இன்ன தல்ல திதுவென் மொழிதல்
- எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல்
- பிறநூன் முடிந்தது தானுடன் படுதல்
- தன்குறி வழக்க மிகவெடுத் துரைத்தல்
- சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல்
- ஒன்றின முடித்த றன்னின முடித்தல்
- உய்த்துணர வைப்பென வுத்தியெண் ணான்கே.
நூற்பா: 15.
- (உத்தி இன்னதென்பது)
- நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி
- ஏற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனத்
- தகும்வகை செலுத்துத றந்திர வுத்தி. (15)
நூற்பா: 16.
- (ஓத்து இன்னதென்பது)
- நேரின மணியை நிரல்பட வைத்தாங்
- கோரினப் பொருளை யொருவழி வைப்ப
- தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர். (16)
நூற்பா: 17.
- (படலம் இன்னதென்பது)
- ஒருநெறி யின்றி விரவிய பொருளாற்
- பொதுமொழி தொடரி னதுபடல மாகும். (17)
நூற்பா: 18.
- (சூத்திரம் இன்னதென்பது)
- சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச்
- செவ்வ னாடியிற் செறித்தினிது விளக்கித்
- திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம். (18)
நூற்பா: 19
- (சூத்திர நிலை)
- ஆற்றொழுக் கரிமா நோக்கந் தவளைப்
- பாய்த்துப் பருந்தின்வீழ் வன்னசூத் திரநிலை. (19)
நூற்பா: 20
- (சூத்திரவகைகள்)
- பிண்டந் தொகைவகை குறியே செய்கை
- கொண்டியல் புறனடைக் கூற்றன சூத்திரம். (20)
நூற்பா: 21
- (உரையின் பொதுவிலக்கணம்)
- பாடங் கருத்தே சொல்வகை சொற்பொருள்
- தொகுத்துரை யுதாரணம் வினாவிடை விசேடம்
- விரிவதி காரந் துணிவு பயனோ
- டாசிரிய வசனமென் றீரே ழுரையே. (21)
நூற்பா: 22
- (காண்டிகை உரை)
- கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
- அவற்றொடு வினாவிடை யாக்க லானும்
- சூத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை. (22)
நூற்பா: 23.
- (விருத்தியுரை)
- சூத்திரத் துட்பொரு ளன்றியு மாண்டைக்
- கின்றி யமையா யாவையும் விளங்கத்
- தன்னுரை யானும் பிறநூ லானும்
- ஐய மகலவைங் காண்டிகை யுறுப்பொடு
- மெய்யினை யெஞ்சா திசைப்பது விருத்தி. (23)
நூற்பா: 24
- (நூல் எனும் பெயரின் காரணம்)
- பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச்
- செஞ்சொற் புலவனே சேயிழையா- எஞ்சாத
- கையேவா யாகக் கதிரே மதியாக
- மையிலா நூன்முடியு மாறு. (24)
நூற்பா: 25
- உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப்
- புரத்தின் வளமுருக்கிப் பொல்லா- மரத்தின்
- கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோன் மாந்தர்
- மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு. (25)
2. ஆசிரியன் வரலாறுதொகு
நூற்பா: 26
நல்லாசிரியர் இலக்கணம்
- குலனரு டெய்வங் கொள்கை மேன்மை
- கலைபயி றெளிவு கட்டுரை வன்மை
- நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும்
- உலகிய லறிவோ டுயர்குண மினையவும்
- அமைபவ னூலுரை யாசிரி யன்னே. (26)
நூற்பா: 27
- (நிலத்தின் மாண்பு)
- தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்
- பருவ முயற்சி யளவிற் பயத்தலும்
- மருவிய நன்னில மாண்பா கும்மே. (27)
நூற்பா: 28
- (மலையின் மாண்பு)
- அளக்க லாகா வளவும் பொருளும்
- துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
- வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே. (28)
நூற்பா: 29
- (நிறைகோல் மாண்பு)
- ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும்
- மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே. (29)
நூற்பா: 30
- (மலரின் மாண்பு)
- மங்கல மாகி யின்றி யமையா
- தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
- பொழுதின் முகமலர் வுடையது பூவே. (30)
நூற்பா: 31
- (ஆசிரியர் ஆகாதவர் இலக்கணம்)
- மொழிகுண மின்மையு மிழிகுண வியல்பும்
- அழுக்கா றவாவஞ்ச மச்ச மாடலும்
- கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை
- முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும்
- உடையோ ரிலரா சிரியரா குதலே. (31)
நூற்பா: 32
- (கழற்குடத்தின் இயல்பு)
- பெயதமுறை யன்றிப் பிறழ வுடன்றரும்
- செய்தி கழற்பெய் குடத்தின் சீரே. (32)
நூற்பா: 33
- (மடற்பனையின் இயல்பு)
- தானே தரக்கொளி னன்றித் தன்பான்
- மேவிக் கொளப்படா விடத்தது மடற்பனை. (33)
நூற்பா: 34
- (பருத்திக்குண்டிகையின் தன்மை)
- அரிதிற் பெயக்கொண் டப்பொரு டான்பிறர்க்
- கெளிதீ வில்லது பருத்திக் குண்டிகை. (34)
நூற்பா: 35
- (முடத்தெங்கின் தன்மை)
- பல்வகை யுதவி வழிபடு பண்பின்
- அல்லோர் களிக்கு மதுமுடத் தெங்கே. (35)
3. பாடஞ்சொல்லலினது வரலாறுதொகு
நூற்பா: 36
- ஈத லியல்பே யியம்புங் காலைக்
- காலமு மிடனும் வாலிதி னோக்கிச்
- சிறந்துழி யிருந்துதன் றெய்வம் வாழ்த்தி
- உரைக்கப் படும்பொரு ளுள்ளத் தமைத்து
- விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
- கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளக்
- கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப. (36)
4. மாணாக்கனது வரலாறுதொகு
நூற்பா: 37
- (மாணாக்கர் இலக்கணம்)
- தன்மக னாசான் மகனே மன்மகன்
- பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே
- உரைகோ ளாளற் குரைப்பது நூலே. (37)
நூற்பா: 38
- (மூவகை மாணாக்கர்)
- அன்ன மாவே மண்ணொடு கிளியே
- இல்லிக் குடமா டெருமை நெய்யரி
- அன்னர் தலையிடை கடைமா ணாக்கர். (38)
நூற்பா: 39
- (மாணாக்கர் ஆகாதவர் இலக்கணம்)
- களிமடி மானி காமி கள்வன்
- பிணியனேழை பிணக்கன் சினத்தன்
- துயில்வோன் மந்தன் றொன்னூற் கஞ்சித்
- தடுமா றுளத்தன் றறுகணன் பாவி
- படிறனின் னோர்க்குப் பகரார் நூலே. (39)
5. பாடங்கேட்டலின் வரலாறுதொகு
நூற்பா: 40
- கோடன் மரபே கூறுங் காலைப்
- பொழுதொடு சென்று வழிபடன் முனியான்
- குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்
- திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப்
- பருகுவ னன்னவார் வத்த னாகிச்
- சித்திரப் பாவையி னத்தக வடங்கிச்
- செவிவா யாக நெஞ்சுகள னாகக்
- கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்
- போவெனப் போத லென்மனார் புலவர். (40)
நூற்பா: 41
- (பயிலும் முறை)
- நூல்பயி லியல்பே நுவலின் வழககறிதல்
- பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
- ஆசாற் சார்ந்தவை யமைவரக் கேட்டல்
- அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்
- வினாதல் வினாயவை விடுத்த லென்றிவை
- கடனாக் கொளினே மடநனி யிகக்கும். (41)
நூற்பா: 42
- ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பின்
- பெருகநூலிற் பிழைபாடிலனே. (42)
நூற்பா: 43
- முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும். (43)
நூற்பா: 44
- ஆசா னுரைத்த தமைவரக் கொளினும்
- காற்கூ றல்லது பற்றல னாகும். (44)
நூற்பா: 45
- அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகாற்
- செவ்விதி னுரைப்ப வவ்விரு காலும்
- மையறு புலமை மாண்புடைத் தாகும். (45)
நூற்பா: 46
- அழலி னீங்கா னணுகா னஞ்சி
- நிழலி னீங்கா னிறைந்த நெஞ்சமோ
- டெத்திறத் தாசா னுவக்கு மத்திறம்
- அறத்திற் றிரியாப் படர்ச்சிவழி பாடே. (46)
பொதுப்பாயிரம் முற்றிற்றுதொகு
சிறப்புப் பாயிரத்திலக்கணம்தொகு
நூற்பா: 47
- சிறப்புப் பாயிரத்தின் பொதுவிதி
- ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை
- நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
- கேட்போர் பயனோ டாயெண் பொருளும்
- வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே. (47)
நூற்பா: 48
- காலங் களனே காரண மென்றிம்
- மூவகை யேற்றி மொழிநரு முளரே. (48)
நூற்பா: 49
- (நூலுக்குப் பெயரிடும் முறை)
- முதனூல் கருத்த னளவு மிகுதி
- பொருள்செய் வித்தோன் றன்மைமுத னிமித்தினும்
- இடுகுறி யானுநூற் கெய்தும் பெயரே. (49)
நூற்பா: 50
- (நூல்யாப்பு நான்குவகை)
- தொகுத்தல் விரித்த றொகைவிரி மொழிபெயர்ப்
- பெனத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப. (50)
நூற்பா: 51
- (சிறப்புப் பாயிரம் செய்தற்குரியவர்கள்)
- தன்னா சிரியன் றன்னொடு கற்றோன்
- தன்மா ணாக்கன் றகுமுரை காரனென்
- றின்னோர் பாயிர மியம்புதல் கடனே. (51)
நூற்பா: 52
- (சிறப்புப்பாயிரம் பிறர்செய்யக் காரணம்)
- தோன்றாத் தோற்றித் துறைபல முடிப்பினும்
- தான்றற் புகழ்த றகுதி யன்றே. (52)
நூற்பா: 53
- (தற்புகழ்ச்சி தகும் இடங்கள்)
- மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும்
- தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும்
- மன்னிய வவையிடை வெல்லுறு பொழுதினும்
- தன்னை மறுதலை பழித்த காலையும்
- தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோற்கே. (53)
நூற்பா: 54
- (பாயிரம் நூலுக்கு இன்றியமையாதது)
- ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
- பாயிர மில்லது பனுவ லன்றே. (54)
நூற்பா: 55
- மாடக்குச் சித்திரமு மாநகர்க்குக் கோபுரமும்
- ஆடமைத்தோ ணல்லார்க் கணியும்போல்- நாடிமுன்
- ஐதுரை நின்ற வணிந்துரையை யெந்நூற்கும்
- பெய்துரையா வைத்தார் பெரிது. (55)
சிறப்புப்பாயிரத்திலக்கணம் முற்றிற்றுதொகு
பார்க்க:
- [[]]
- நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்