நன்னூல் சொல்லதிகாரம்

= நன்னூல் சொல்லதிகாரம் தொகு

= ஆசிரியர் பவணந்தி முனிவர் தொகு

முதலாவது பெயரியல் தொகு

நூற்பா: 258


(அருகக்கடவுள் வணக்கம்)


முச்சக நிழற்று முழுமதி முக்குடை

முச் சகம் நிழற்றும் முழு மதி முக் குடை

யச்சுத னடிதொழு தறைகுவன் சொல்லே. (01)



சொல்லின் பொதுவிலக்கணம் தொகு

நூற்பா: 259


(சொல்)


ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி யென்றா
இருதிணை யைம்பாற் பொருளையுந் தன்னையும்
மூவகை யிடத்தும் வழக்கொடு செய்யுளின்
வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே. (02)


நூற்பா: 260


(மூவகைமொழி)


ஒருமொழி யொருபொரு ளனவாந் தொடர்மொழி
பலபொரு ளனபொது விருமையு மேற்பன. (03)


நூற்பா: 261


(இருதிணை)


மக்க டேவர் நரக ருயர்திணை
மற்றுயி ருள்ளவு மில்லவு மஃறிணை. (04)


நூற்பா: 262


(ஐம்பால்)


ஆண்பெண் பலரென முப்பாற் றுயர்திணை. (05)


நூற்பா: 263


ஒன்றே பலவென் றிருபாற் றஃறிணை. (06)


நூற்பா: 264


(புறனடை)


பெண்மைவிட் டாணவா வுவபே டாண்பால்
ஆண்மைவிட் டல்ல தவாவுவ பெண்பால்
இருமையு மஃறிணை யன்னவு மாகும். (07)


நூற்பா: 265


(சொல் தன்னையும் பொருளையும் உணர்த்தல்)


படர்க்கைவினைமுற்று நாமங்குறிப்பிற்
பெறப்படுந் திணைபா லனைத்து மேனை
இடத்தவற் றொருமைப் பன்மைப் பாலே. (08)


நூற்பா: 266


(மூவிடம்)


தன்மை முன்னிலை படர்க்கை மூவிடனே. (09)


நூற்பா: 267


வழக்கு)


இலக்கண முடைய திலக்கணப் போலி
மரூஉவென் றாகு மூவகை யியல்பும்
இடக்க ரடக்கன் மங்கலங் குழூஉக்குறி
எனுமுத் தகுதியோ டாறாம் வழக்கியல். (10)


நூற்பா: 268


(செய்யுள்)


பல்வகைத் தாதுவி னுயிர்க்குடல் போற்பல
சொல்லாற் பொருட்கிட னாக வுணர்வினின்
வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள். (11)


நூற்பா: 269


(வெளிப்படை குறிப்பு)


ஒன்றொழி பொதுச்சொல் விகாரந் தகுதி
ஆகு பெயரன் மொழிவினைக் குறிப்பே
முதறொகை குறிப்போ டின்ன பிறவும்
குறிப்பிற் றருமொழி யல்லன வெளிப்படை. (12)


சொற்பாகுபாடு தொகு

நூற்பா: 270


சொல்லின் வகை


அதுவே,
இயற்சொற் றிரிசொ லியல்பிற் பெயர்வினை
எனவிரண் டாகு மிடையுரி யடுத்து
நான்கு மாந்திசை வடசொலணு காவழி. (13)


நூற்பா: 271


(இயற்சொல்)


செந்தமி ழாகித் திரியா தியார்க்கும்
தம்பொருள் விளக்குந் தன்மைய வியற்சொல். (14)


நூற்பா: 272


(திரிசொல்)


ஒருபொருள் குறித்த பலசொல் லாகியும்
பலபொருள் குறித்த வொருசொல் லாகியும்
அரிதுணர் பொருளன திரிசொல் லாகும். (15)


நூற்பா: 273


(திசைச்சொல்)


செந்தமிழ் நிலஞ் சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப. (16)


நூற்பா: 274

(வடசொல்)


பொதுவெழுத் தானுஞ் சிறப்பெழுத் தானும்
ஈரெழுத் தானு மியைவன வடசொல். (17)

பெயர்ச்சொல் தொகு

நூற்பா: 275


(பெயரின் பொதுவிலக்கணம்)


இடுகுறி காரண மரபோ டாக்கந்
தொடர்ந்து தொழிலல காலந் தோற்றா
வேற்றுமைக் கிடனாய்த் திணைபா லிடத்தொன்
றேற்பவும் பொதுவு மாவன பெயரே. (18)


உயர்திணைப்பெயர்கள் தொகு

நூற்பா: 276


(உயர்திணை ஆண்பாற் பெயர்)


அவற்றுள்,
கிளையெண் குழூஉமுதற் பல்பொரு டிணைதேம்
ஊர்வா னகம்புற முதல நிலன்யாண்
டிருது மதிநா ளாதிக் காலந்
தோள்குழன் மார்புகண் காது முதலுறுப்
பளவறி வொப்பு வடிவு நிறங்கதி
சாதி குடிசிறப் பாதிப் பல்குணம்
ஓத லீத லாதிப் பல்வினை
இவையடை சுட்டு வினாப்பிற மற்றோ
டுற்ற னவ்வீறு நம்பி யாடூஉ
விடலை கோவேள் குரிசி றோன்றல்
இன்னன வாண்பெய ராகு மென்ப. (19)


நூற்பா: 277

(உயர்திணைப் பெண்பாற் பெயர்)


கிளைமுத லாகக் கிளந்த பொருள்களுள்
ளவ்வொற் றிகரக் கேற்ற வீற்றவும்
தோழி செவிலி மகடூஉ நங்கை
தையலோ டின்னன பெண்பாற் பெயரே. (20)


நூற்பா: 278


(உயர்திணைப் பலர்பாற் பெயர்)


கிளைந்த கிளைமுத லுற்றரவ் வீற்றவும்
கள்ளெ னீற்றி னேற்பவும் பிறவும்
பல்லோர் பெயரின் பகுதி யாகும். (21)


அஃறிணைப்பெயர்கள் தொகு

நூற்பா: 279


(அஃறிணை யொன்றன்பாற் பெயர்


வினாச்சுட் டுடனும் வேறுமாம் பொருள்
ஆதி யுறுதுச் சுட்டணை யாய்தம்
ஒன்றனெண் ணின்னன வொன்றன் பெயரே. (22)


நூற்பா: 280


(அஃறிணைப் பலவின்பாற் பெயர்)


முன்ன ரவ்வொடு வருவை யவ்வும்
சுட்டிறு வவ்வுங் கள்ளிறு மொழியும்
ஒன்ற லெண்ணு முள்ள வில்ல
பல்ல சில்ல வுளவில பலசில
இன்னவும் பலவின் பெயரா கும்மே. (23)


நூற்பா: 281


(அஃறிணையிருபாற் பொதுப்பெயர்)


பால்பகா வஃறிணைப் பெயர்கள்பாற் பொதுமைய. (24)


நூற்பா: 282

பொதுப்பெயர்கள் தொகு

(இருதிணைப்பொதுப்பெயர்)
முதற்பெயர் நான்குஞ் சினைப்பெயர் நான்குஞ்
சினைமுதற்பெயரொரு நான்குமுறை யிரண்டுந்
தன்மை நான்கு முன்னிலை யைந்தும்
எல்லாந் தாந்தா னின்னன பொதுப்பெயர். (25)


நூற்பா: 283


ஆண்மை பெண்மை யொருமை பன்மையின்
ஆமந் நான்மைக ளாண்பெண் முறைப்பெயர். (26)


நூற்பா: 284


அவற்றுள், ஒன்றே யிருதிணைத் தன்பா லேற்கும். (27)


நூற்பா: 285


(தன்மை முன்னிலைப் படர்க்கைப் பெயர்கள்


தன்மை யானான் யாநா முன்னிலை
எல்லீர் நீயீர் நீவிர் நீர்நீ
அல்லன படர்க்கை யெல்லா மெனல்பொது. (28)



நூற்பா: 286


வினையின் பெயரே படர்க்கை வினையா
லணையும் பெயரே யாண்டு மாகும். (29)


நூற்பா: 287


(பொதுப்பெயர் பன்னிரண்டு)


தான்யா னானீ யொருமை பன்மைதாம்
யாநா மெலாமெலீர் நீயிர்நீர் நீவிர். (30)


நூற்பா: 288


ஒருவ னொருத்திப் பெயர்மே லெண்ணில. (31)


நூற்பா: 289


ஒருவ ரென்ப துயரிரு பாற்றாய்ப்
பன்மை வினைகொளும் பாங்கிற் றென்ப. (32)


ஆகுபெயர் தொகு

நூற்பா: 290


பொருண்முத லாறோ டளவைசொற் றானி
கருவி காரியங் கருத்த னாதியுள்
ஒன்றன் பெயரா னதற்கியை பிறிதைத்
தொன்முறை யுரைப்பன வாகு பெயரே. (33)


வேற்றுமை தொகு

நூற்பா: 291


ஏற்கு மெவ்வகைப் பெயர்க்குமீ றாய்ப்பொருள்
வேற்றுமை செய்வன வெட்டே வேற்றுமை. (34)


நூற்பா: 292


வேற்றுமையின் பெயரும் முறையும்


பெயரே ஐஆல் குஇன் அதுகண்
விளியென் றாகு மவற்றின் பெயர்முறை. (35)


நூற்பா: 293


ஆற னுருபு மேற்குமவ் வுருபே. (36)


நூற்பா: 294



நீயிர் நீவிர்நா னெழுவா யலபெறா. (37)



நூற்பா: 295


(பெயர் வேற்றுமை)


அவற்றுள்,
எழுவா யுருபு திரிபில் பெயரே
வினைபெயர் வினாக்கொள லதன்பய னிலையே. ((38)


நூற்பா: 296


(இரண்டாம் வேற்றுமை


இரண்டா வதனுரு பையே யதன்பொருள்
ஆக்க லழித்த லடைத னீத்தல்
ஒத்த லுடைமை யாதி யாகும். (39)


நூற்பா: 297


(மூன்றாம் வேற்றுமை)


மூன்றா வதனுரு பாலா னோடொடு
கருவி கருத்தா வுடனிகழ் வதன்பொருள். (40)



நூற்பா: 298


(நான்காம் வேற்றுமை)


நான்கா வதற்குரு பாகுங் குவ்வே
கொடைபகை நேர்ச்சி தகவது வாதல்
பொருட்டுமுறை யாதியி னிதற்கிதெனல் பொருளே. (41)



நூற்பா: 299


(ஐந்தாம் வேற்றுமை)


ஐந்தா வதனுரு பில்லு மின்னும்
நீங்கலொப் பெல்லை யேதுப் பொருளே. (42)


நூற்பா: 300


(ஆறாம் வேற்றுமை)


ஆற னொருமைக் கதுவுமாதுவும்
பன்மைக் கவ்வு முருபாம் பண்புறுப்?
பொன்றன் கூட்டம் பலவி னீட்டந்
திரிபி னாக்க மாந்தற் கிழமையும்
பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே. (43)


நூற்பா: 301


(ஏழாம் வேற்றுமை)


ஏழ னுருபுகண் ணாதி யாகும்
பொருண்முத லாறு மோரிரு கிழமையின்
இடனாய் நிற்ற லிதன்பொரு ளென்ப. (44)


நூற்பா: 302


(ஏழாம் வேற்றுமை உருபுகள்)


கண்கால் கடையிடை தலைவாய் திசைவயின்
முன்சார் வலமிட மேல்கீழ் புடைமுதல்
பின்பா டளைதே முழைவழி யுழியுளி
உள்ளகம் புறமில் லிடப்பொரு ளுருபே. (45)


நூற்பா: 303


(எட்டாம் வேற்றுமை)


எட்ட னுருபே யெய்து பெயரீற்றின்
திரிபு குன்றன் மிகுத லியல்பயற்
றிரிபு மாம்பொருள் படர்க்கையோரைத்
தன்முக மாகத் தானழைப் பதுவே. (46)


நூற்பா: 304


(விளிக்கப்படு பெயர்கள்)


இஉ ஊவோ டையோ னளரல
யவ்வீற் றுயர்திணை யோரவல் லிவற்றொடு
ணஃகா னாவீ றாகும் பொதுப்பெயர்
ஞநவொழி யனைத்தீற் றஃறிணை விளிப்பன. (47)



நூற்பா: 305


(பொதுவாகிய விளியுருபு)


இம்முப் பெயர்க்கண் ணியல்பு மேயும்
இகர நீட்சியு முருபா மன்னே. (48)


நூற்பா: 306


(விளியுருபிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி)


ஐயிறு பொதுப்பெயர்க் காயு மாவும்
உருபா மல்லவற் றாயு மாகும். (49)


நூற்பா: 307


ஒருசார் னவ்வீற் றுயர்திணைப் பெயர்க்கண்
அளபீ றழிவய னீட்சி யதனோ
டீறு போத லவற்றோ டோவுறல்
ஈறழிந் தோவுற லிறுதியவ் வாதல்
அதனோ டயறிரிந் தேயுற லீறழிந்
தயலே யாதலும் விளியுரு பாகும். (50)


நூற்பா: 308


ளஃகா னுயர்பெயர்க் களபீ றழிவயல்
நீட்சி யிறுதி யவ்வொற் றாதல்
அயலி லகரமே யாதலும் விளித்தனு. (51)


நூற்பா: 309


ரவ்வீ றுயர்பெயர்க் களபெழ லீற்றயல்
அகரம் இஈ யாத லாண்டையா
யீயாத லதனோ டேயுற லீற்றே
மிக்கயல் யாக்கெட் டதனய னீடல்
ஈற்றி னீருற லிவையுமீண் டுருபே. (52)


நூற்பா: 310


லகாரவீற் றுயர்பெயர்க் களபய னீட்சியும்
யகார வீற்றிற் களபுமா முருபே. (53)


நூற்பா: 311


னவ்வீற் றுயர்திணை யல்லிறு பெயர்க்கண்
இறுதி யழிவத னோடய னீட்சி. (54)



நூற்பா: 312


லளவீற் றஃறிணைப் பெயர்ப்பொதுப் பெயர்க்கண்
ஈற்றய னீட்சியு முருபா கும்மே. (55)


நூற்பா: 313


(விளியுருபின் புறனடை)


அண்மையி னியல்புமீ றழிவுஞ் சேய்மையின்
அளபும் புலம்பி னோவு மாகும். (56)


நூற்பா: 314


(விளியுருபேலாப் பெயர்கள்)


நுவ்வொடு வினாச்சுட் டு்ற்ற னளர
வைதுத் தாந்தா னின்னன விளியா. (57)



நூற்பா: 315


(முதல் சினைகளில் ஐயும் கண்ணும்)


முதலை யையுறிற் சினையைக் கண்ணுறும்
அதுமுதற் காயிற் சினைக்கை யாகும். (58)


நூற்பா: 316


(முதல் சினை)


முதலிவை சினையிவை யெனவே றுளவில
உரைப்போர் குறிப்பின வற்றே பிண்டமும். (59)


நூற்பா: 317


(உருபுமயக்கம்)


யாத னுருபிற் கூறிற் றாயினும்
பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும். (60)


நூற்பா: 318


(செய்யுளில் திரிந்துவரல்)


ஐயான் குச்செய்யுட் கவ்வு மாகும்
ஆகா வஃறிணைக் கானல் லாதன. (61)


நூற்பா: 319


(முடிக்குஞ்சொல்)


எல்லை யின்னு மதுவும் பெயர்கொளும்
அல்ல வினைகொளு நான்கே ழிருமையும்
புல்லும் பெரும்பாலு மென்மனார் புலவர். (62)


பெயரியல் முற்றும் தொகு

பார்க்க:

[[]]
நன்னூல் மூலம்
நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 2. பதவியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 3. உயிரீற்றுப்புணரியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 4. மெய்யீற்றுப்புணரியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 5. உருபுபுணரியல்


நன்னூல் சொல்லதிகாரம் 2. வினையியல்
நன்னூல் சொல்லதிகாரம் 3. பொதுவியல்
நன்னூல் சொல்லதிகாரம் 4. இடையியல்
நன்னூல் சொல்லதிகாரம் 5. உரியியல்
[[]]
"https://ta.wikisource.org/w/index.php?title=நன்னூல்_சொல்லதிகாரம்&oldid=1036119" இலிருந்து மீள்விக்கப்பட்டது