சோழர் வரலாறு/கிள்ளி வளவன்

9. கிள்ளி வளவன்

முன்னுரை: இவன் முன்சொன்ன நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியவர்க்கு அடுத்து இருந்த பெரிய அரசன் ஆவன். என்னை? அவ்விருவரையும் பாடிய புலவர் பலரும் இவனை நேரிற் பாடியிருத்தலின் என்க. இவன் உறையூரை அரசிருக்கையாகக் கொண்டு ஆண்டவன்.[1] இவனைப் புலவர் ஒன்பதின்மர் 18 பாக்களிற் பாடியுள்ளனர். இவனை அகநானூற்றில் ஒர் இடத்தில் நக்கீரர் குறித்துள்ளார்.[2] இவனைப் பற்றிய பாடல்களால் இவன் சிறந்த போர் வீரன், சிறந்த புலவன், புலவரைப் பற்றிய புரவலன், கரிகாலன் நலங்கிள்ளி போன்ற சோழப் பேரரசன் என்பன எளிதிற் புலனாகின்றன.

போர்ச் செயல்கள்: இவன் செய்த போர்கள் பல என்பது பல பாடல்களால் விளங்குகிறது.இடம் குறிக்காமலே பல பாடல்கள் போர்களைக் குறிக்கின்றன; இவன் பகைவர் அரண்கள் பலவற்றை அழித்தவன்; அரசர் பொன் மகுடங்களைக் கொண்டு தனக்கு வீரக்கழலைச் செய்து கொண்டவன்,[3] எட்டுத் திசையும் எரி கொளுத்திப் பல கேடுகள் நிகழப் பகைவர் நாட்டை அழித்தவன்; காற்றுடன் எரி நிகழ்ந்தாற் போன்ற செலவையுடைய போரில் மிக்கவன்.[4] வேந்தரது பாடி வீட்டின்கண் குருதிப் பரப்பின் கண்ணே யானையைக் கொன்று புலாலையுடைய போர்க் களத்தை உண்டாக்கிய போர் செய்யும் படையை உடையவன்.[5] மண்டிய போரில் எதிர் நின்று வெல்லும் படையையும் திண்ணிய தோள்களையும் உடையவன்;[6] வாள் வீரரும் யானையும் குதிரையும் உதிரம் கொண்ட போர்க்களத்தில் மாய, நாடோறும் அமையானாய், எதிர்நின்று கொன்று நமனுக்கு நல்விருந்தளித்தவன்.[7]

கருவூர் முற்றுகை: இவன் செய்த பல போர்களில் கருவூர் முற்றுகை ஒன்றாகும். இவன் தன் படைகளுடன் கருவூரை முற்றிப் போர் செய்தான். சேர மன்னன் கருவூர் அரணுக்குள் இன்பமாகக் காலம் கழித்து வந்தான். அவன் வீர மானம் அற்றவன். கிள்ளி வளவன் விணே போரிடலைக் கண்டு வருந்திய ஆலத்துார் கிழார் என்ற புலவர் அவனை நோக்கி, “நின் படைகள் செய்யும் கேட்டை நன்கு உணர்ந்தும் சேர மன்னன் மானம் இன்றித் தன் கோட்டைக்குள் இனிதாக இருக்கின்றான். அவன் போருக்கு வரவில்லை. நீ மானமற்ற அவனுடன் பொருவதில் என்ன சிறப்பு உண்டாகும்? நீ வென்றாலும் ஒன்றே அவனைக் கொன்றாலும் ஒன்றே. எச்செயலாலும் நினக்குப் பெருமை வருமென்பது விளங்கவில்லை.”[8]

என்று கூறுமுகத்தால், சேர அரசனது மானமின்மையையும் கிள்ளிவளவனது ஆண்மையையும் விளக்கினார். பின்னர்ச் சேரன் தோற்றான்போலும்! என்னை?

“இமய மலையின்கண் சூட்டப்பட்ட காவலாகிய வில் பொறியையும் சிறந்த வேலைப்பாடமைந்த தேரையும் உடைய சேரன் அழிய அவனது அழிவில்லாத கருவூரை அழிக்கும் நினது பெருமை பொருந்திய வலிய தாளை எங்ஙனம் பாடவல்லேன்?”[9] என்று கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியுள்ளதால என்க.

மலையமானுடன் போர்: மலையமான் என்பவன் திருக்கோவலுரைத் தலைநகரமாகக் கொண்ட மலைநாட்டுத் தலைவன். இந்த மலையமான் மரபினர் கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை தமிழக வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் சங்க காலம் முதலே சோழர் பேரரசிற்கு உட்பட்டவராவர். அங்ஙனம் இருந்தும், கிள்ளிவளவன் காலத்து மலையமான் எக்காரணம் பற்றியோ சோழனது சீற்றத்திற்கு ஆளானான். அதனால் கிள்ளிவளவன் அவனை என்ன செய்தான் என்பது விளங்கவில்லை; ஆயின் அவன் மக்கள் இருவரையும் சிறைப் பிடித்துக் கொணர்வித்தான்; அவர்களை யானையால் இடறச் செய்யத் தீர்மானித்தான். இஃது அக்காலத்துத் தண்டனை வகைகளில் ஒன்றாக இருந்தது.

இந்தக் கொடுஞ் செயலைக் கோவூர் கிழார் அறிந்தார். அவர் மலையமானது அறச்செயலை நன்கறிந்தவர்; அவ்வள்ளல் மக்கட்கு நேர இருந்த கொடுந்துன்பத்தைப் பொறாதவராய்ச் சோழனைக் குறுகி,

“நீ, ஒரு புறாவின் துன்பம் நீக்கத் தன் உயிர் கொடுத்த சோழன் மரபில் வந்தவன். இப்பிள்ளைகள் புலவர் வறுமையைப் போக்கும் மரபில் வந்தவர்கள். இவர்கள் யானையைக் காணுமுன்வரை அச்சத்தால் அழுதுக் கொண்டிருந்தனர்; யானையைக் கண்டவுடன் தம் அழுகையை நிறுத்தி வியப்பால் அதனை நோக்கி நிற்கின்றனர்; அப்புதிய இடத்தைக் கண்டு அஞ்சி இருக்கின்றனர். நீ இதனைக் கேட்டனையாயின், விரும்புவதைச் செய்வாயாக.”[10]

என்று உறைக்க உரைத்தார். பிறகு நடந்தது தெரியவில்லை.

பாண்டிய நாட்டுப் போர்: கிள்ளிவளவன் பாண்டிய னுடன் போர் செய்தான். போர் மதுரையில் நடந்தது. பாண்டியன் தானைத் தலைவன் பழையன் மாறன் என்பவன். சோழன் வெள்ளம் போன்ற தன் சேனையுடன் போரிட்டான். எனினும், அப்போரில் தோற்றான். அவனுடைய புரவிகளும், களிறுகளும் பாண்டியன் பெற்ற இந்த வெற்றியைக் கண்ட கோக்கோதை மார்பன் (சேரமான் கோக்கோதை மார்பன்?) மகிழ்ச்சி அடைந்தான்.

இந்தச் செய்தியை நக்கீரர் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் குறித்துள்ளார்.[11] கிள்ளிவளவன் இப்போரில் வெற்றி பெற்றிருப்பானாயின், அவனைப் பற்றிய 18 பாடல்களில் ஒன்றிலேனும் குறிக்கப் பெற்றிருப்பான். அவனைப் பாடிய புலவர் ஒன்பதின்மருள் ஒருவரேனும் இதனைக் குறியாமை ஒன்றே, அவன் பாண்டிப் போரில் தோற்றிருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. கிள்ளிவளவன் இறந்த பிறகும் அவனைப் புலவர் நால்வர் பாடியுள்ளனர். அப்பாடல்களிலும் பாண்டிப் போர் குறிக்கப்பட்டிலது. இவற்றை நோக்கக் கிள்ளிவளவன் பாண்டி நாட்டுப் போரில் தோற்றானாதல் வேண்டும் என்பது தெரிகிறது. கரிகாலன் ஏற்படுத்திய சோழப் பேரரசிற்குத் தன்னைப் போல உட்பட்டிருந்த பாண்டியன், அக்கரிகாலன் மரபில் வந்த கிள்ளிவள வனைத் தோற்கடித்துத் தன் ஆட்சி பெற்றதைக் கான (சேரமான்) கோக்கோதை மார்பன் மகிழ்ந்தனன் என்பது இயல்பே அன்றோ?

சேரநாட்டுப் போர்: இத்துடன், இச்சோழன் ‘குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்’ என இறந்தபின் பெயர் பெற்றான். ‘குளமுற்றம் என்னும் இடத்தில் இறந்த’ என்பது இதன்பொருள். குளமுற்றம் என்பது சேரநாட்டில் உள்ளதோர் ஊர். இவன் சேரனோடு செய்த போரில் இறந்தானாதல் வேண்டும்[12] என்பது தெரிகிறதன்றோ?

முடிவு: இவன் பல இடங்களிற் போர் செய்தான்; கருவூரை ஆண்ட சேர மன்னனை முதலில் தாக்கினான்; மலையமானைப் பகைத்துக் கொண்டான்' என்ற முற்செய்திகளையும் இவற்றோடு நோக்க, இவனது ஆட்சிக் காலத்தில், கரிகாலன் காலமுதற் சிற்றரசரான அனைவரும் தம்மாட்சி பெற முனைந்தனர் என்பதும், இறுதியில் வெற்றி பெற்றனர் என்பதும் தெளிவாக விளங்குகின்றன.

இவை அனைத்தையும் சீர்தூக்கின், கரிகாலன் உண்டாக்கிய சோழப் பேரரசு கிள்ளிவளவன் காலத்தில் சுருங்கிவிட்டது என்பது நன்கு விளங்குதல் காண்க.

கிள்ளிவளவன் பேரரசன்: தமிழ்நாட்டிற்கு உரியராகிய மூவேந்தருள்ளும் ‘அரசு’ என்பதற்கு உரிய சிறப்புடையது கிள்ளிவளவன் அரசே[13] என்று வெள்ளைக் குடிநாகனார் வெளிப்படுத்துவதிலிருந்து, இவன் அக்காலத்தில் தலைமை பெற்றிருந்த தன்மையை நன்கறியலாம். “செஞ்ஞாயிற்றின் கண் நிலவு வேண்டினும், வேண்டிய பொருளை உண்டாக்கும் வலிமை உடையவன்’[14] என்று ஆவூர் மூலங்கிழார் அறைந்தமை அவனது பேரரசுத் தன்மையை அன்றோ புலப்படுத்துவது? மிக்க பெரிய சேனையையுடைய அறிஞர் புகழ்ந்த நல்ல புகழையும் பரந்த சுடரினையும் உடைய ஆதித்தன் வானத்தின் கண் பரந்தாலொத்த தலைமையை உடைய செம்பியர் மரபினன் கிள்ளிவளவன், கொடிகள் அசைந்தாடும் யானைகளையுடைய மிகப் பெரிய வளவன்[15] என்று ஐயூர் முடவனார் அருளிச் செய்தமை அறியற்பாலது.

சிறந்த போர் விரன்: இவன் செய்த பல போர்கள் முன்னர்க் குறிக்கப்பட்டுள. பெரும் படைகளைக் கொண்ட இவனே சிறந்த போர்வீரன் என்பதும் புலவர் சொற்களால் அறியலாம். ‘அருஞ்சமம் கடக்கும் ஆற்றலன்’ என்று இவனை எருகாட்டுர்த் தாயங் கண்ணனார்[16] பாடியுள்ளது நோக்கத்தக்கது.

புலவன்-நண்பன்: கிள்ளிவளவன் சிறந்த புலவன் என்பது இவன் பாடிய புறநானூற்றுப் பாடலால் நன்கறியலாம். அங்ஙனமே அப்பாடலால், இவன் பண்ணன் என்பானிடம் கொண்டிருந்த சிறந்த நட்பும் தெரியலாம். அப்பாடலின் பொருள் பின்வருமாறு:

‘பழுத்த மரத்தினிடம் பறவைகள் கூடி ஒசையிடும். அது போலப் பண்ணன் விடுதியில் உண்டியால் உண்டாகிய ஆரவாரம் கேட்டுக் கொண்டே இருக்கும். மழை பெய்யும் காலத்தை நோக்கித் தம் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலத்தை அடையும் சிற்றெறும்பின் ஒழுங்குப் போலச் சோற்றுத் திரளையைக் கையில் உடையராய் வெவ்வேறு வரிசையாகச் செல்கின்ற பெரிய சுற்றத்துடன் கூடிய பிள்ளைகளைக் காண்கின்றோம். அங்ஙனம் கேட்டும் கண்டும், எம்பசி வருத்தலால், பசி நோய் தீர்க்கும் மருத்துவனது மனை அண்மையில் உள்ளதோ? சேய்மையில் உள்ளதோ? கூறுங்கள்’ என்று இப்பாணன் கேட்கின்றான். பாணரே, இவன், வறுமையைக் காண்பீராக. என் வறுமையும் தீர்த்து இவன் வறுமையும் தீர்க்க இருக்கின்ற பண்ணன், யான் உயிர் வாழ்நாளையும் பெற்று வாழ்வானாக”[17]

இவ்வழகிய பாடலில், கிள்ளிவளவன் தன் புலமையையும் தனது நண்பனாகிய பண்ணனது கொடைத் திறத்தையும் அவன்பால் தான் கொண்டிருந்த சிறந்த நட்பையும் ஒருங்கே விளங்கியிருத்தல் படித்து இன்புறற்பாலது.

புரவலன்: இவனைப் பாடியுள்ள புலவர் ஒன்பதின்மர் ஆவர். அவர் ஆலந்துர் கிழார்’[18], வெள்ளைக்குடி நாகனார்,[19] மாறோக்கத்து நப்பசலையார்,[20] ஆவூர் மூலங்கிழார்,[21] கோவூர்கிழார்,[22] ஆடுதுறை மாசாத்தனார்[23] ஐயூர் முடவனார்,[24] நல் இறையனார்,[25] எருக்கூட்டுர்த் தாயங்கண்ணனார்[26] என்போராவார். இவருள் ஆடுதுறை மாசாத்தனாரும் எருக்கூட்டுர்த் தாயங் கண்ணனாரும் இவன் இறந்த பின் வருந்திப் பாடிய செய்யுட்களே புறப்பாட்டில் இருக்கின்றன. அவர்கள் அவன் உயிரோடிருந்த பொழுது கண்டு பாடிய பாக்கள் கிடைத்தில. இந்த ஒன்பதின்மரையும் இவர்தம் புலமையறிந்து போற்றிப் பாதுகாத்த வளவன் பெருமையை என்னென்பது! சிறந்த கொடையாளியாகிய பண்ணனைத் தன் நண்பனாகப் பெற்றவனும் புலவர் ஒன்பதின்மரைப் பாதுகாத்தவனுமாகிய இக்கிள்ளி வளவன், தன்னளவில் சிறந்த புரவலன் என்பதில் ஐயமுண்டோ? இவன் இத்தன்மையனாக இருந்தமை யாற்றான் புலவர் ஒன்பதின்மர் பாடும் பேற்றைப் பெற்றான், அறவுரை பல அறையப் பெற்றான்; இறந்த பின்னும் புலவர் பாடல்கள் கொண்டான். அவன் இறந்தபின் இவனைப் பாடியவர், மேற்குறித்த ஒன்பதின்மருள் நால்வர் ஆவர். அவர் கோவூர் கிழார், மாறோக்கத்து நப்பசலையார், ஐயூர் முடவனார், ஆடுதுறை மாசாத்தனார் என்போராவர்.

இரவலர்க்கு எளியன்: ‘பானனே, நீ கிள்ளிவளவனது கொடிய வாயிலில் காலம் பார்த்து நிற்க வேண்டுவதில்லை; உடனே உள்ளே போகலாம்’[27] என்று ஆலத்துார் கிழார் பாணனை ஆற்றுப்படுத்தலைக் காண, சோழனது இரவலர்க்கு எளியனாந்தன்மை இற்றென இனிது விளங்குகிறதன்றோ? ‘கலிங்கமும் (ஆடையும்) செல்வமும் கேடின்றி (குறைவின்றி)க் கொடுப்பாயாக; பெரும, நின் நல்லிசை நினைந்து இங்கு வந்தேன்; நின் பீடுகெழு நோன்றாள் பலவாறு பாடுவேன்”[28] என்ற நல் இறையனார் பாடலில், இவனது நல்லிசை அவரை வருமாறு செய்தது என்பதை நோக்குக. இதனால், இவனது வள்ளற்றன்மையும் இரவலர்க்கு எளியனாத் தன்மையும் நன்கு விளங்குகின்றன. இவன் வந்த புலவர்க்கு,

“நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு
மணிக்கலம் நிறைந்த மணனாறு தேறல்
பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு
மாரியன்ன வண்மையிற் சொரிந்து
வேனில் அன்னஎன் வெப்பு நீங்க
அருங்கலம் நல்கி யோனே”[29]

என்பது எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார் பாடலால் இனிதுணர க் கிடத்தல் காண்க.

புலவர் கையறு நிலை: இப்பெருமகன் அரசனாக இருந்து, பல போர்கள் புரிந்து, புலவர் பலரைப் போற்றி, எளியர் பலரை ஆதரித்து, முத்தமிழை ஒம்பி வளர்த்தமை உன்னி உன்னி, இவன் இறந்தபொழுது புலவர் பாடிய பாக்கள்[30] உள்ளத்தை உருக்குவனவாகும்.

“நமன் வெகுண்டு சோழன் உயிரைக் கொண்டிருத்தல் இயலாது; அவன் பாடுவாரைப் போல நின்று கையால் தொழுது வாழ்த்தி இரந்து உயிர்கொண்டானாதல் வேண்டும்”[31] என்றார் நப்பசலையார். “அறிவற்ற நமனே, நாளும் பலரைப் போரிற்கொன்று நினக்கு நல் விருந்தளித்த புரவலனையே அழைத்துக் கொண்ட உன் செயல் விதையையே குற்றி உண்டார் மூடச் செயலை ஒத்ததாகும். இனி, தினக்கு நாளும் உணவு தருவார் யாவர்?”[32] என்றனர் ஆடுதுறை மாசாத்தனார். “பேரரசனாகிய கிள்ளிவளவனைப் புதைக்கும் தாழியை, வேட்கோவே, என்ன அளவுகொண்டு செய்யப் போகிறாய்? அவன் மிகப் பெரியவனாயிற்றே”[33] என வருந்தினர் ஐயூர் முடவனார்.

“குணதிசை நின்று குடமுதற் செலினும்
குடதிசை நின்று குணமுதற் செலினும்
வடதிசை நின்று தென்வயிற் செலினும்
தென்திசை நின்று குறுகாது நீடினும்
யாண்டு நிற்க எள்ளியாம்!
வேண்டிய துணர்ந்தோன் தாள்வா ழியவே!”[34]

என்று கையற்றுப் புலம்பினார் கோவூர்க்கிழார்.

பாக்களால் அறியத்தகுவன: சோழவளநாடு வேள்விகள் மலிந்த நாடு.[35] அக்காலத்தே அறநூல் ஒன்று தமிழகத்தே இருந்தது. அதனைப் புலவர் நன்கறிந்திருந்தனர்.[36] உறையூர் சோழர் கோநகரம் ஆதலின், அங்கு அறங்கூறவையம் இருந்தது.[37] கோட்டை மதிலைச் சூழ ஆழமான அகழி இருந்தது. அதன்கண் முதலைகள் விடப்பட்டிருந்தன. ஊர் காப்பார் இடையாமத்தில் விளக்கு எடுத்துக் கொண்டு ஊர் சுற்றிவருவது வழக்கம்[38] வரகரிசியைப் பாலிற் பெய்து அட்டசோற்றுடன் முயற் கறியை உண்டலும் அக்கால வழக்கம்.[39] இலக்கண முறைமை நிரம்பிய யாழைப் பாணர் வைத்திருந்தனர். அது தேன்போன்ற இனிய நரம்புத் தொடைகளை உடையது.[40] அரசர் முதலானோர் உடலைத் தாழியிற் கவித்தல் மரபு.[41] நாள்தோறும் அரசனைக் காலையில் துயில் எழுப்பல் பாடகர் தொழிலாகும்.[42] பாம்பின் சட்டை போன்ற மெல்லிய ஆடைகள் அக்காலத்தில் தமிழ் நாட்டிற் செய்யப்பட்டன.[43] கிள்ளிவளவன் காலத்திற்கு முற்பட்டதொரு காலத்திருந்த சேரன் இமயமலை மீது வில்பொறி பொறித்திருந்தான்?[44] இச்செய்தி நன்கு கவனித்தற்கு உரியது. இச்சேரன் யாவன்? இவன் காலம் யாது? என்பன ஆராய்தற்குரிய செய்திகள். இவை பொய்யான செய்திகளாக இருத்தல் இயலாது. என்னை? சோழனைப் பாராட்டிப் பாடும் புலவர், சேரனைப் பற்றிய பொய்ச் செய்தியைச் சோழன் முன்கூறத் துணியார் ஆதலின் என்க. புறவிற்காகத் துலைபுக்க சோழன், தூங்கெயில் எறிந்த தொடித் தோட் செம்பியன் என்பவர் கிள்ளிவளவன் முன்னோர்; முன்னவன் அருளுடைமைக்கும் பின்னவன் பெரு வீரத்திற்கும் சுட்டப் பெற்றனர்.


  1. புறம், 69.
  2. அகம், 346.
  3. புறம், 40.
  4. அகம் 41.
  5. அகம் 69.
  6. புறம், 226.
  7. அகம் 227.
  8. புறம், 36.
  9. புறம் 39.
  10. புறம் 46.
  11. அகம் 349; K.A.N. Sastry’s ‘Cholas,’ Vol 1.p.54
  12. N.M.V. Nattar’s “Choals', p.69.
  13. புறம் 35.
  14. புறம் 38.
  15. புறம் 228.
  16. புறம், 397.
  17. புறம் 173.
  18. புறம் 34, 36, 69
  19. புறம் 35.
  20. புறம் 37,39,226.
  21. புறம் 38, 40.
  22. புறம் 41,46,70,386.
  23. புறம் 227.
  24. புறம் 228.
  25. புறம் 363.
  26. புறம் 397.
  27. புறம் 69
  28. புறம், 393
  29. புறம் 397
  30. புறம் 226, 227, 228, 386.
  31. புறம் 226.
  32. புறம் 227.
  33. புறம் 228.
  34. புறம் 386.
  35. புறம் 397.
  36. புறம் 34.
  37. புறம் 39.
  38. புறம் 37.
  39. புறம் 34.
  40. புறம் 69,70.
  41. புறம் 228.
  42. புறம் 397.
  43. புறம் 39.
  44. புறம் 37,38,46.