நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்
சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்
தொகுஉரை: களத்தூர் வேதகிரி முதலியார்
தொகு2.பொருட்பால்: 1.அரசியல்
தொகு[அஃதாவது, பொருளினுடைய பகுப்பாம்]
பதினாறாம் அதிகாரம் மேன்மக்கள்
[அஃதாவது, மேன்மக்கள் தலைமையைச் சொல்லுதலாம்]
பாடல்: 151 (அங்கண்)
தொகுஅங்கண் விசும்பி னகனிலா பாரிக்குந்|அம் கண் விசும்பின் அகல் நிலா பாரிக்கும்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மற்- றிங்கண்|திங்களும் சான்றோரும் ஒப்பர் மன் - திங்கள்
மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமந்து|மறு ஆற்றும் சான்றோர் அஃது ஆற்றார் தெருமந்து
தேய்வ ரொருமா சுறின். (01)|தேய்வர் ஒரு மாசு உறின். (௧)
பதவுரை:
- அம் = அழகிய,
- கண் = இடமகன்ற,
- விசும்பின் = ஆகாயத்தில்,
- அகல் = பிரிவான,
- நிலா = கிரணங்களை,
- பாரிக்கும் = பரப்பும்,
- திங்கள் = சந்திரன்,
- மறு = களங்கத்தை,
- ஆற்றும் = பொறுத்துக்கொள்வான்;
- சான்றோர் = பெரியோர்கள்,
- அஃது = அக்களங்கத்தை,
- ஆற்றார் = பொறுத்துக்கொள்ளார்,
- ஒரு = (தமக்கு) ஒரு,
- மாசு = குற்றம்,
- உறின் = வந்தால்,
- தெருமந்து = மயக்கமடைந்து,
- தேய்வர் = மாய்வர்.
கருத்துரை:
சந்திரன் களங்கத்தைச் சகிக்கினும் பெரியோர்கள் அக்களங்கத்தைச் சகியார்.
விசேடவுரை:
சான்றோர் - எழுவாய், தேய்வர் - பயனிலை. மன் - அசை.
- நன்னூல்
‘திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும்
- மிகலினும் இழிபினும் ஒருமுடி பினவே.’
- -இவ்விதியால் சந்திரனாகிய அஃறிணை உயர்திணை முடிபு பெற்றது. (151)
பாடல்: 152 (இசையுமெனினு)
தொகுஇசையு மெனினு மிசையா தெனினும்|இசையும் எனினும் இசையாது எனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையி|வசை தீர எண்ணுவர் சான்றோர் - விசையின்
னரிமா வுரங்கிழித்த வம்பினிற் றீதோ?|நரி மா உரம் கிழித்த அம்பினில் தீதோ
வரிமாப் பிழைப்பெய்த கோல். (02)|அரிமா பிழைப்பு எய்த கோல். (௨)
பதவுரை:
- இசையும் எனினும் = கூடுமாயினும்,
- இசையாது எனினும் = கூடாதாயினும்,
- வசை = குற்றம்,
- தீர = நீங்க,
- எண்ணுவர் = நினைப்பவர்கள்,
- சான்றோர் = பெரியவர்கள்;
- விசையின் = விசையால்,
- நரி மா = நரியினது,
- உளம் = நெஞ்சத்தை,
- கிழித்த = பிளந்த,
- அம்பினில் = கணையைப் பார்க்கிலும்,
- அரி மா = சிங்கத்தை,
- பிழைப்ப + பிழைக்க,
- எய்த = தொடுத்த,
- கோல் = கணையானது,
- தீதோ? = பொல்லாதோ?
கருத்துரை: பெரியோர்கள் பிறராற் பொருள் கிடைத்தாலுங் கிடையாவிட்டாலுங் குற்ற நினையார்கள்.
விளக்கவுரை: சான்றோர் - எழுவாய், எண்ணுவர் - பயனிலை. நரிமேல் எய்த அம்பிலும் அரிமேலெய்த அம்பு உயர்வு.
பாடல்: 153 (நரம்பெழுந்து)
தொகுநரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினுஞ் சான்றோர்|நரம்பு எழுந்து நல் கூர்ந்தார் ஆயினும் சான்றோர்
குரம்பெழுந்து குற்றங்கொண் டேறா- ருரங்கவறா|குரம்பு எழுந்து குற்றம் கொண்டு ஏறார் - உரம் கவறு ஆ
வுள்ளமெனு நாரினாற் கட்டி யுளவரையாற்|உள்ளம் எனும் நாரினால் கட்டி உள வரையால்
செய்வர் செயற்பா லவை. (03)|செய்வர் செயல் பால் அவை. (௩)
பதவுரை:
- சான்றோர் = பெரியோர்கள்,
- நரம்பு = நரம்புகள்,
- எழுந்து = தோன்றி,
- நல்கூர்ந்தார் ஆயினும் = வறுமைப்பட்டாராயினும்,
- குரம்பு = வரம்பு,
- எழுந்து = கடந்து,
- குற்றம் கொண்டு = குற்றத்தைக் கொண்டு,
- ஏறார் = (யாசிக்கச்) செல்லார்,
- உரம் = அறிவே,
- கவறு ஆ = கவறாகக் கொண்டு,
- உள்ளம் எனும் = முயற்சி என்கிற,
- நாரினால் = நாரால்,
- கட்டி = மனத்தைக் கட்டி,
- உள வரையால் = (தமக்குள்ள) பொருளளவால்,
- செயற்பாலவை = செய்யத் தக்க கருமங்களை,
- செய்வர் = செய்வார்கள்.
:கருத்துரை:
- பெரியோர்கள் வறுமை அடைந்தாரானாலும், யாசிக்கார்கள்; உள்ளமட்டுந் தருமஞ் செய்வார்கள்.
விளக்கவுரை:
- சான்றோர் - எழுவாய், செய்வர் - பயனிலை, செயற்பாலவை - செயப்படுபொருள். ‘கவறு’ என்றது, இருபிளவாகிய பனையின் அடிமட்டை. இம்மட்டை மரத்தைக் கவியப் பற்றியது போல, மனதை அறிவு கவியப் பற்றுதலாம்.
பாடல்: 154 (செல்வுழிக்)
தொகுசெல்வுழிக் கண்ணொருநாட் காணினுஞ் சான்றவர்||செல்வுழிக் கண் ஒரு நாள் காணினும் சான்றவர்
தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் - புரிந்தியாப்பர்||தொல் வழி கேண்மையில் தோன்ற - புரிந்து யாப்பர்
நல்லவரை நாட சிலநா ளடிப்படிற்||நல்ல வரை நாட சில நாள் அடி படில்
கல்வரையு முண்டா நெறி. (04)||கல் வரையும் உண்டாம் நெறி. (௪)
பதவுரை:
- நல் = நல்ல,
- வரை = மலையையும்,
- நாட = நாட்டையும் உடைய பாண்டியனே!
- செல்வுழிக்கண் = போகின்ற வழியிடத்து,
- ஒரு நாள் = (ஒருவரை) ஒரு நாள்,
- காணினும் = கண்டாலும்,
- சான்றவர் = பெரியோர்கள்,
- தொன் = பழைய.
- வழி = வழியில் வந்த,
- கேண்மையில் = உறவைப்போல்,
- தோன்ற = விளங்க,
- புரிந்து = விரும்பி,
- யாப்பர் = சிநேகஞ் செய்வர்,
- கல்வரையும் = கன்மலையும்,
- சிலநாள் = சிலகாலம்,
- அடிபடில் = காலடிப்பட்டால்,
- நெறி = வழி,
- உண்டாம் = உண்டாகும்.
:கருத்துரை: பாண்டியனே! பெரியோர்கள் புதியவரைக் கண்டாலும் பழையவரைப் போலவே சிநேகஞ் செய்வர்.
விளக்கவுரை: சான்றவர் - எழுவாய், யாப்பர் - பயனிலை.
பாடல்: 155 (புல்லா)
தொகுபுல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி||புல்லா எழுத்தில் பொருள் இல் வறும் கோட்டி
கல்லா வொருவ னுரைப்பவுங் - கண்ணோடி||கல்லா ஒருவன் உரைப்பவும் - கண் ஓடி
நல்லார் வருந்தியுங் கேட்பரே மற்றவன்||நல்லார் வருந்தியும் கேட்பரை மற்று அவன்
பல்லாரு ணாணல் பரிந்து. (05)||பல்லாருள் நாணல் பரிந்து. (௫)
பதவுரை:
- புல்லா = இலக்கணம் பொருந்தாத,
- எழுத்தில் = எழுத்தினையுடைய,
- பொருள் இல் = பொருளறிவில்லாத,
- வறும் = வீணாகிய,
- கோட்டி = சபையில்,
- கல்லா ஒருவன் = கற்காத ஒருவன்,
- உரைப்பவும் = ஒன்றைச் சொல்லவும்,
- நல்லார் = மேன்மக்கள்,
- கண் ஓடி = தாட்சணியங்கொண்டு,
- வருந்தியும் = வருத்தமடைந்தும்,
- அவன் = அவ்வறிவில்லான்,
- பல்லாருள் = பலர் முன்,
- நாணல் = நாணுதற்கு,
- பரிந்து = இரங்கி,
- கேட்பர் = கேட்பார்கள்.
:கருத்துரை: பெரியோர்கள், கல்லார் சபையில் ஞான சூனியன் ஒன்றைச் சொல்லினும் அவன் நாணுதலுக்கு இரங்கிக் கேட்பார்.
விளக்கவுரை: நல்லார் - எழுவாய், கேட்பார் - பயனிலை, ஏ, மற்று - அசைகள்.
பாடல்: 156 (கடித்துக்)
தொகுகடித்துக் கரும்பினை கண்டகர நூறி||கடித்து கரும்பினை கண் தகர நூறி
யிடித்துநீர் கொள்ளினு மின்சுவைத்தே - யாரும்||இடித்து நீர் கொள்ளினும் இன் சுவைத்தே - யாரும்
வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் குடிப்பிறந்தார்||வடு பட வைது இறந்த கண்ணும் குடி பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து. (06)||கூறார் தம் வாயில் சிதைந்து. (௬)
பதவுரை: கரும்பினை = கரும்பை,
- கடித்து = தரித்து,
- கண் = கணுக்கள்,
- தகர = உடைய,
- நூறி = நெறித்து,
- இடித்து = (ஆலையில்) ஆடி,
- நீர் = இரசத்தை,
- கொள்ளினும் = கொண்டாலும்,
- (அக்கரும்பு) இன் = இனிய,
- சுவைத்தே = மதுரமுடையதே,
- ஆகும் = ஆம்; (அதுபோல)
- வடு பட = குற்றம் உண்டாக,
- வைது = ஒருவர் வைது,
- இறந்தக் கண்ணும் = போனாலும்,
- குடிப் பிறந்தார் = நற்குடியிற் பிறந்தார்,
- தம் = தம்முடைய,
- வாயில் = வாயினாலே,
- சிதைந்து = சிதைய,
- கூறார் = சொல்லார்.
:கருத்துரை: கரும்பை வருத்தினும் இனிய சாற்றைக் கொடுக்கும்; அதுபோல, ஒருவர் வைதாலும் நற்குடியிற் பிறந்தார் கூட வையமாட்டார்.
விளக்கவுரை: குடிப்பிறந்தார் - எழுவாய், கூறார் - பயனிலை.
பாடல்: 157 (கள்ளார்)
தொகுகள்ளார்கள் ளுண்ணார் கடிவ கடிந்தொரீஇ||கள்ளார் கள் உண்ணார் கடிவ கடிந்து ஒரீஇ
யெள்ளிப் பிறரை யிகழ்ந்துரையார் - தள்ளியும்||எள்ளி பிறரை இகழ்ந்து உரையார் - தள்ளியும்
வாயிற்பொய் கூறார் வடுவறு காட்சியார்||வாயில் பொய் கூறார் வடு அறு காட்சியவர்
சாயிற் பரிவ திலர். (07)||சாயில் பரிவது இலர். (௭)
பதவுரை:
- வடு = குற்றம்,
- அறு = அற்ற,
- காட்சியார் = அறிவுடையார்,
- கள்ளார் = திருடார்,
- கள் உண்ணார் = கள்ளைக் குடியார்,
- கடிவ = நீக்கத் தக்கவைகளை,
- கடிந்து = நீக்கி,
- ஒரீஇ = தீமையின் நீங்கி,
- பிறரை = அயலாரை,
- எள்ளி = அவமதித்து,
- இகழ்ந்து = நிந்தித்து,
- உரையார் = சொல்லார்;
- தள்ளியும் = தவறியும்,
- வாயில் = வாயால்,
- பொய் கூறார் = பொய் சொல்லார்;
- சாயின் = துன்பம் வந்தால்,
- பரிவது இலர் = விசனப்படார்.
:கருத்துரை:
மேன்மக்கள் திருடார், கள்ளுண்ணார், பிறரையிகழார், பொய் சொல்லார், வறுமை வந்தால் விசனப்படார்.
விளக்கவுரை: காட்சியார் - எழுவாய், பரிவதிலர் - பயனிலை.
பாடல்: 158 *(பிறர்மறை)*
தொகுபிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந்||பிறர் மறையின் கண் செவிடு ஆய் திறன் அறிந்து
தேதில ரிற்கட் குருடனாய்த் - தீய||ஏதிலர் இல் கண் குருடனாய் - தீய
புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாது||புறம் கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்
மறங்கூற வேண்டா வவற்கு. (08)||அறம் கூற வேண்டா அவற்கு. (௮)
பதவுரை:
- பிறர் = அயலாருடைய,
- மறையின்கண் = இரகசியச் சொல்லிடத்து,
- செவிடு ஆய் = செவிடனாகவும்,
- திறன் அறிந்து = நல்லொழுக்கத் திறமறிந்து,
- ஏதிலார் = அயலாருடைய,
- இல் = மனையாள்,
- கண் = இடத்து,
- குருடனாய் = குருடனாகவும்,
- தீய = கொடிய,
- புறம் கூற்றில் = பொறாமைச் சொல்லிடத்து,
- மூங்கையாய் = ஊமையாகவும்,
- நிற்பான் ஏல் = இருப்பானானால்,
- அவற்கு = அவனுக்கு,
- யாதும் = யாதொரு,
- அறம் = தருமமும்,
- கூற வேண்டா = சொல்லவேண்டாவாம்.
:கருத்துரை:
- பிறர் இரகசியத்திற் செவிடனாகவும், பிறர் மனையாளிடத்துக் குருடனாகவும், பொறாமை சொல்வோனிடத்து ஊமையாகவும் ஒருவன் இருந்தானானால் அவனுக்கு இதுவே பெரிய தருமம்.
விளக்கவுரை:
- ஒருவன் - எழுவாய், கூறவேண்டா - பயனிலை.
பாடல்: 159 (பன்னாளுஞ்)
தொகுபன்னாளுஞ் சென்றக்காற் பண்பிலார் தம்முழை|பல் நாளும் சென்றக்கால் பண்பு இலார் தம் உழை
யென்னானும் வேண்டுப வென்றிகழ்ப- யென்னானும்|என் ஆனும் வேண்டுப என்று இகழ்ப - என் ஆனும்
வேண்டினு நன்றுமற் றென்று விழுமியோர்|வேண்டினும் நன்று மற்று என்று விழுமியோர்
காண்டொறுஞ் செய்வர் சிறப்பு. (09)|காண் தொறும் செய்வர் சிறப்பு. (௯)
பதவுரை:
- பண்பு இலார் = நற்குணமில்லார்,
- தம் உழை = தம்மிடத்து,
- பல் நாளும் = பல நாளும்,
- சென்றக்கால் = (ஒருவர்) சென்றால்,
- என் ஆனும் = யாதாகிலும்,
- வேண்டுப = வேண்டுவார்கள்,
- என்று = என்று சொல்லி,
- இகழ்ப = இகழ்வார்கள்;
- விழுமியோர் = மேன்மக்கள்,
- என் ஆனும் = யாதாகிலும்,
- வேண்டினும் = வேண்டினாலும்,
- நன்று = நல்லது,
- என்று = என்று சொல்லி,
- காண்தொறும் = காணுந்தோறும்,
- சிறப்பு = சிறப்பை,
- செய்வர் = செய்வார்கள்.
:கருத்துரை:
- கீழ்மக்கள் தங்களிடத்து ஒருவர் வந்தால் யாதொன்றைக் கேட்பார்களென்று இகழ்வார்கள்; மேன்மக்கள் தங்களிடத்து வந்தவருக்குக் காணுந்தோறுஞ் சிறப்புச் செய்வார்கள்.
விளக்கவுரை:
- பண்பிலார் - எழுவாய், இகழ்ப - பயனிலை, விழுமியோர் - எழுவாய், செய்வர் - பயனிலை, சிறப்பினை - செயப்படுபொருள், மற்று - அசை.
பாடல்: 160 (உடையாரிவ)
தொகுஉடையா ரிவரென் றொருதலையாப் பற்றிக்||உடையார் இவர் என்று ஒரு தலையா பற்றி
கடையாயார் பின்சென்று வாழ்வ - ருடைய||கடையாயார் பின் சென்று வாழ்வர் -உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே நல்ல||பிலம் தலை பட்டது போலாதே நல்ல
குலந்தலைப் பட்ட விடத்து. (10)||குலம் தலை பட்ட இடத்து. (௰)
பதவுரை:
- உடையார் = செல்வமுள்ளார்,
- இவர் என்று = இவர்களென்று,
- ஒரு தலையா = ஒரு துணிவாக,
- பற்றி = பிடித்து,
- கடையாயார் = கீழ்மக்கள்,
- பின் சென்று = பின் போய்,
- வாழ்வர் = சிலர் வாழ்வார்கள்;
- நல்ல = நல்ல,
- குலம் = குலத்திற் பிறந்தாரை,
- தலைப்பட்ட = முதன்மையாகச் சேரப்பட்ட,
- இடத்து = இடத்திலே,
- உடைய = எல்லாப் பொருளுமுடைய,
- பிலம் = குகையை,
- தலைப்பட்டது போலாதே = தலைப்பட்டது போலுமல்லவோ.
:கருத்துரை:
- கீழ்மக்களைச் சென்று சிலர் வாழ்ந்திருப்பர்; மேன் மக்களைச் சேர்தல் எப்பொருளுமுள்ள குகை அகப்பட்டது போலும்.
விளக்கவுரை:
- (சிலர்) = தோன்றா எழுவாய், வாழ்வர் = பயனிலை.
பார்க்க
தொகு2.பொருட்பால்: 1.அரசியல்
- நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி
- நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு
- [[]]
- நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை
- நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்
- நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
- நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை
- [[]]