நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை

சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்

தொகு

உரை: களத்தூர் வேதகிரி முதலியார்

தொகு

2.பொருட்பால்: 1.அரசியல்

தொகு

[அஃதாவது, பொருளினுடைய பகுப்பாம்]


பத்தொன்பதாம் அதிகாரம் பெருமை

[அஃதாவது, பெருந்தன்மையைச் சொல்லுதலாம்]


பாடல்: 181 (ஈதலிசை)

தொகு

ஈத லிசையா திளமைசே ணீங்குதலாற் || ஈதல் இசையாது இளமை சேண் நீங்குதலால்

காத லவருங் கருத்தல்லர் - காதலித் || காதலவரும் கருத்து அல்லர் - காதலித்து

தாதுநா மென்னு மவாவினைக் கைவிட்டுப் || ஆதும் நாம் என்னும் அவாவினை கைவிட்டு

போவதே போலும் பொருள். (01) || போவதே போலும் பொருள். (௧)


பதவுரை:

ஈதல் = கொடுத்தல்,

இசையாது = பொருந்தாது,
இளமை = இளமைப்பருவம்,
சேண் = தூரத்தில்,
நீங்குதலால் = நீங்கலால்,
காதலவரும் = (நம்மேல்) இச்சையுள்ள பெண்களும்,
கருத்து அல்லர் = கருத்துள்ளவர் அல்லர்;
காதலித்து = இச்சித்து, நாம் ஆதும் என்னும் = நாம் வாழக்கடவோம் என்னும்,
அவாவினை = ஆசையை,
கைவிட்டு போவது = துறந்துபோவது,
பொருள் = பொருளாம்.

கருத்துரை:

ஆசையைவிட்டுத் துறப்பதே பொருளாம்.

விசேடவுரை:

பொருள் - எழுவாய், போவது - பயனிலை. போலும், ஏ - அசைகள்.


பாடல்: 182 (இற்சார்வி)

தொகு

இற்சார்வி னேமாந்தே மீங்கமைந்தே மென்றெண்ணிப் || இல் சார்வின் ஏமாந்தேம் ஈங்கு அமைந்தேம் என்று எண்ணி

பொச்சாந் தொழுகுவர் பேதையா - ரச்சார்வு || பொச்சாந்து ஒழுகுவர் பேதையார் - அ சார்வு

நின்றன போன்று நிலையா வெனவுணர்ந்தா || நின்றன போன்று நிலையா என உணர்ந்தார்

ரென்றும் பரிவ திலர். (02) || என்றும் பரிவது இலர். (௨)


பதவுரை:

பேதையார் = அறிவில்லார்,

இல் சார்வின் = இல்வாழ்க்கையில்,
ஏமாந்தேம் = மகிழ்ச்சியடைந்தோம்,
ஈங்கு = இவ்விடத்து,
அடைந்தேம் என்று = யாவும் நிறைவுற்றோம் என்று,
எண்ணி = நினைத்து,
பொச்சாந்து = (பின்வருந்துன்பத்தை) மறந்து,
ஒழுகுவர் = நடப்பவர்;
அ சார்வு = அவ் இல்வாழ்க்கை,
நின்றன போன்று = நின்றன போலானவை,
நிலையா என = நில்லாவென,
உணர்ந்தார் = அறிந்த பெரியோர்கள்,
என்றும் = எந்நாளும்,
பரிவது இலர் = விசனப்படார்.

கருத்துரை:

அறிவீனர் இல்வாழ்க்கையை யிச்சித்து நடப்பார்; அறிவுள்ளோர் அவ்வாழ்க்கையைச் சிந்தித்துத் துன்பமடையார்.

விசேடவுரை:

பேதையார் - எழுவாய், ஒழுகுவர் - பயனிலை; உணர்ந்தார் - எழுவாய், பரிவதிலர் - பயனிலை.


பாடல்: 183 (மறுமைக்கு)

தொகு

மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து || மறுமைக்கு வித்து மயல் இன்றி செய்து

சிறுமைப் படாதேநீர் வாழ்மின் - அறிஞராய் || சிறுமைப் படாதே நீர் வாழ்மின் - அறிஞராய்

நின்றுழி நின்றே நிறம்வேறாங் காரண || நின்றுழி நின்றே நிறம் வேறாம் காரணம்

மின்றிப் பலவு முள. (03) || இன்றி பலவும் உள. (௩)


பதவுரை:

நீர் = நீங்கள்,

அறிஞராய் = விவேகிகளாய்,
மறுமைக்கு = மறுபிறப்பிற்கு,
வித்து = வித்தான தருமங்களை,
மயல் இன்றி = மயக்கமில்லாமல்,
செய்து = துணிந்து செய்து,
சிறுமை = துன்பம்,
படாது = உண்டாகாமல்,
வாழ்மின் = வாழுங்கள், (ஏனெனில்),
நின்றுழி நின்று = நின்ற நிலையிலே நின்று,
நிறம் = குணம்,
வேறு ஆம் காரணம் = வேறுபடு முகாந்திரம்,
இன்றி = இல்லாமல்,
பலவும் உள = பலவும் உள்ளன.

கருத்துரை:

நீங்கள் அறிவாளிகளாய் இருந்து தருமத்தைச் செய்து வாழுங்கள். தருமஞ் செய்யாது குணம் வேறுபடுதல் பலவிருக்கின்றன.

விசேடவுரை:

நீர் - எழுவாய், வாழ்மின் - பயனிலை. பலவும் - எழுவாய், உள - பயனிலை. ஏ, உம் - அசைகள்.

பாடல்: 184 (உறைப்பருங்)

தொகு

உறைப்பருங் காலத்து மூற்றுநீர்க் கேணி || உறைப்பு அரு காலத்து ஊற்று நீர் கேணி

யிறைத்துணினு மூராற்று மென்பர் - கொடைக்கடனுஞ் || இறைத்து உணினும் ஊர் ஆற்றும் என்பர் - கொடை கடனும்

சாஅயக் கண்ணும் பெரியோர்போன் மற்றையா || சாயக் கண்ணும் பெரியோர் போல் மற்றையார்

ராஅயக் கண்ணு மரிது. (04) || ஆயக் கண்ணும் அரிது. (௪)


பதவுரை:

உறைப்பு = மழை,

அரு காலத்து = இல்லாக் காலத்து,
ஊற்று நீர் = ஊற்று நீருள்ள,
கேணி = குளமானது,
இறைத்து = நீரை இறைத்து,
உணினும் = உண்டாலும்,
ஊர் ஆற்றும் = ஊரைக் காப்பாற்றும்,
என்பர் = என்று சொல்வர்; (அதுபோல்),
கொடை = தியாகத்தின்,
கடனும் = முறைமையும்,
சாயக்கண்ணும் = (வறுமையால்) தளர்ந்தவிடத்தும்,
பெரியார் போல் = பெரியோர்களைப் போல்,
மற்றையார் = சிறியோர்,
ஆயக்கண்ணும் = செல்வம் உண்டாயினும்,
அரிது = செய்தல் அரிது.

கருத்துரை:

பெரியோர் செய்தல் போலச் சிறியோர் செய்தல் அரிது.

விசேடவுரை:

(செய்தல்) - தோன்றா எழுவாய், அரிது - பயனிலை.

பாடல்: 185 (உறுபுன)

தொகு

உறுபுன றந்துல கூட்டி யறுமிடத்துங் || உறு புனல் தந்து உலகு ஊட்டி அறும் இடத்தும்

கல்லூற் றுழியூறு மாறேபோற் - செல்வம் || கல் ஊற்று உழி ஊறும் ஆறே போல் - செல்வம்

பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணுஞ் சிலர்க்காற்றிச் || பலர்க்கு ஆற்றி கெட்டு உலந்த கண்ணும் சிலர்க்கு ஆற்றி

செய்வர் செயற்பா லவை. (05) || செய்வர் செயற்பாலவை. (௫)


பதவுரை:

உறு = மிக்க,

புனல் = நீரை,
தந்து = கொடுத்து,
உலகு = உலகத்தை,
ஊட்டி = உண்பித்து,
அறும் இடத்தும் = நீர் அற்ற காலத்தும்,
கல் = தோண்டின்,
ஊற்று உழி = ஊற்றுக்குழியிடத்து,
ஊறும் = ஊறுகின்ற,
ஆறே போல் = ஆறுபோல,
செல்வம் = பாக்கியத்தை,
பலர்க்கு = பலருக்கும்,
ஆற்றி = கொடுத்து,
கெட்டு = கெட்டு,
உலந்தக் கண்ணும் = அழிந்தாலும்,
சிலருக்கு = சிலருக்கு,
ஆற்றி = கொடுத்து,
செயற்பாலவை = செய்யத்தக்க கருமங்களை,
செய்வர் = பெரியோர் செய்வார்.

கருத்துரை:

மழையில்லாத நாளிலும் ஆறு ஊற்றுநீர் கொடுக்கும்; அதுபோல, செல்வம் அழிந்தாலும் பெரியோர் செய்யுந் தருமங்களைச் செய்வர்.

விசேடவுரை:

(பெரியோர்) - தோன்றா எழுவாய், செய்வர் - பயனிலை, செயற்பாலவை - செயப்படுபொருள். ஏகாரம் - அசை.

பாடல்: 186 (பெருவரை)

தொகு

பெருவரை நாட பெரியார்கட் டீமை || பெரு வரை நாட பெரியார்கண் தீமை

கருநரைமேற் சூடேபோற் றோன்றுங் - கருநரையை || கரு நரை மேல் சூடே போல் தோன்றும் - கரு நரையை

கொன்றன்ன வின்னா செயினுஞ் சிறியார்மே || கொன்று அன்ன இன்னா செயினும் சிறியார் மேல்

லொன்றானுந் தோன்றாக் கெடும். (06) || ஒன்றானும் தோன்றா கெடும். (௬)


பதவுரை:

பெரு = பெரிய,

வரை = மலையையும்,
நாட = நாட்டையுமுடைய பாண்டியனே!
பெரியோர்கண் = பெரியோரிடத்துண்டான,
தீமை = குற்றம்,
கரு = பெரிய,
நரை = இடபத்தின்,
மேல் = முதுகின்மேலிருக்கும்,
சூடே போல் = திமிலைப் போல,
தோன்றும் = காணப்படும்;
கரு = பெரிய,
நரையை = இடபத்தை,
கொன்று அன்ன = கொன்றாற் போலும்,
இன்னா = குற்றங்களை,
செயினும் = செய்தாலும்,
சிறியார் மேல் = சிறியவரிடத்து,
ஒன்றானும் = ஒரு குற்றமும்,
தோன்றா = தோன்றாமல்,
கெடும் = கெட்டுவிடும்.

கருத்துரை:

பாண்டியனே! பெரியோர்கள் செய்த குற்றம் பிரகாசமாய்க் காணப்படும்; சிறியோர்கள் செய்த குற்றம் காணப்படாது.

விசேடவுரை:

தீமை - எழுவாய், தோன்றும் - பயனிலை. (குற்றம்) - தோன்றா எழுவாய், கெடும் - பயனிலை.

பாடல்: 187 (இசைந்த)

தொகு

இசைந்த சிறுமை யியல்பிலா தார்கட் || இசைந்த சிறுமை இயல்பு இலாதார் கண்

பசைந்த துணையும் பரிவா - மசைந்த || பசைந்த துணையும் பரிவு ஆம் - அசைந்த

நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கட் || நகையேயும் வேண்டாத நல் அறிவினார் கண்

பகையேயும் பாடு பெறும். (07) || பகையேயும் பாடு பெறும். (௭)


பதவுரை:

சிறுமை = அற்பமும்,

இசைந்த = பொருந்திய,
இயல்பு = நற்குணம்,
இலாதார்கண் = இல்லாதாரிடத்து,
பசைந்த = நட்பு கொண்ட,
துணையும் = அளவும்,
பரிவாம் = துன்பமாகும்;
அசைந்த = தளர்ந்த,
நகையேயும் = மகிழ்ச்சியிலும்,
வேண்டாத = தீமையை விரும்பாத,
நல்ல அறிவினார்கண் = நல்ல அறிவையுடைய பெரியோரிடத்து,
பகையேயும் = விரோதமும்,
பாடு பெறும் = பெருமையடையும்.

கருத்துரை:

சிறியவர்களிடத்துக் கொண்ட சிநேகம் துன்பந்தரும்; பெரியவர்களிடத்திற் கொண்ட பகையும் பெருமை தரும்.

விசேடவுரை:

பசைந்த துணை - எழுவாய், பரிவாம் - பயனிலை. பகை - எழுவாய், பெறும் - பயனிலை.

பாடல்: 188 (மெல்லிய)

தொகு

மெல்லிய நல்லாருண் மேன்மை யதுவிறந் || மெல் இயல் நல்லாருள் மேன்மை அது இறந்து

தொன்னாருட் கூற்றுட்கு முட்குடைமை யெல்லாஞ் || ஒன்னார் உள் கூற்று உட்கும் உட்கு உடைமை எல்லாம்

சலவருட் சாலச் சலமே நலவரு || சலவருள் சால சலமே நலவருள்

ணன்மை வரம்பாய் விடல். (08) || நன்மை வரம்பு ஆய் விடல். (௮)


பதவுரை:

மெல் = மெல்லிய,

இயல் = நற்குணமுடைய,
நல்லாருள் = பெண்களிடத்து,
மேன்மை = மேன்மை செலுத்துக;
அது இறந்து = அஃதொழிந்து,
ஒன்னாருள் = பகைவரிடத்து,
கூற்று = இயமன்,
உட்கும் = அச்சந்தரும்,
உட்கு உடைமை = அச்சத்தைச் செலுத்துக;
எல்லாம் = முற்றும்,
சலவருள் = பொய்யரிடத்து,
சால = மிகவும்,
சலமே = பொய்யே செலுத்துக;
நலவருள் = நல்லவரிடத்து,
நன்மை = நன்மையை,
வரம்பாய் = அளவாய்,
விடல் = செலுத்துக.

கருத்துரை:

பெண்களிடத்து மேன்மையையும், பகைவரிடத்து அச்சத்தையும், பொய்யரிடத்துப் பொய்யையும், நல்லவர்களிடத்து நன்மையையும் செலுத்தக் கடவாய்.

விசேடவுரை:

(நீவிர்) - தோன்றா எழுவாய், செலுத்துக - பயனிலை. ‘மென்மை’ என்றும் பாடமுண்டு.

பாடல்: 189 (கடுக்கி)

தொகு

கடுக்கி யொருவன் கடுங்குறளை பேசி || கடுக்கி ஒருவன் கடு குறளை பேசி

மயக்கி விடினு மனப்பிரிப்பொன் றின்றித் || மயக்கி விடினும் மனம் பிரிப்பு ஒன்று இன்றி

துளக்க மிலாதவர் தூய மனத்தார் || துளக்கம் இலாதவர் தூய மனத்தார்

விளக்கினு ளொண்சுடரே போன்று. (9) || விளக்கினுள் ஒள் சுடரே போன்று. (௯)


பதவுரை:

கடுக்கி = கடுமையாகி,

ஒருவன் = ஒருவன்,
கடு குறளை = பொல்லாத சொற்களை,
பேசி = சொல்லி,
மயக்கிவிடினும் = மயக்கினாலும்,
மனம் = தம்மனத்து,
பிரிப்பு = வேறுபாடு,
ஒன்று இன்றி = சிறிதும் இல்லாமல்,
விளக்கினுள் = தீபத்துள்,
ஒள் = ஒள்ளிய,
சுடரே போன்று = தீபம் போலாகி,
துளக்கம் இலாதவர் = அசைவில்லாதவர்,
தூய மனத்தார் = பரிசுத்த மனமுடையராவர்.

கருத்துரை:

ஒருவன் கொடுஞ் சொற்களைச் சொல்லி மயக்கினாலும் வேறுபடாமல் நிற்பவரை பரிசுத்த மனமுடையவர்.

விசேடவுரை:

துளக்கமிலாதவர் - எழுவாய், தூய மனத்தவர் - பயனிலை.

பாடல்: 190 (முற்றுத்துந்)

தொகு

முற்றுத்துத்துந் துத்தினை நாளு மறஞ்செய்து || முன் துத்தும் துத்தினை நாளும் அறம் செய்து

பிற்றுத்துத் துத்துவர் சான்றவர் - அத்துத்து || பின் துத்து துத்துவர் சான்றவர் - அ துத்து

முக்குற்ற நீக்கி முடியு மளவெல்லாந் || முக்குற்றம் நீக்கி முடியும் அளவு எல்லாம்

துக்கத்து ணீக்கி விடும். (10) || துக்கத்துள் நீக்கி விடும். (௰)


பதவுரை:

முன் துத்தும் = முன்பு உண்ணும்,

துத்தினை = உணவை,
நாளும் = எந்நாளும்,
அறம் = தருமம்,
செய்து = செய்து,
பின் துத்து = பின்பு உண்ணும் உணவை,
துத்துவர் = உண்ணுவர்,
சான்றவர் = பெரியோர்,
துத்து = அவ்வுணவு,
முக்குற்றம் = மூன்று குற்றங்களையும்,
நீக்கி = தள்ளி,
முடியும் அளவு எல்லாம் = கிடைக்கும் அளவெல்லாம்,
துக்கத்துள் = துன்பத்திலிருந்து,
நீக்கிவிடும் = நீங்கச் செய்யும்.

கருத்துரை:

முக்குற்றம் அற்றுவந்த உணவு துக்கத்தை விட்டு நீங்கச் செய்யும்.

விசேடவுரை:

முக்குற்றம் மூன்று - களவு செய்தல், வஞ்சித்தல், யாசித்தல். அத்துத்து - எழுவாய், நீக்கிவிடும் - பயனிலை.


பத்தொன்பதாம் அதிகாரம் “பெருமை” முற்றிற்று.



பார்க்க

தொகு
நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரை

2.பொருட்பால்: 1.அரசியல்

நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி
நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு
நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்
நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை
நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்
நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை

II.பொருட்பால்: 2.நட்பியல்

21.சுற்றந்தழால்
22.நட்பாராய்தல்
23.நட்பிற் பிழைபொறுத்தல்
24.கூடா நட்பு

II.பொருட்பால்: 3.இன்பவியல்

[[]] [[]] [[]]
[[]] [[]] [[]]
[[]] [[]] [[]]
[[]] [[]] [[]]
[[]]