நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு

சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்

தொகு

உரை: களத்தூர் வேதகிரி முதலியார்

தொகு

2.பொருட்பால்: 1.அரசியல்

தொகு

[அஃதாவது, பொருளினுடைய பகுப்பாம்]


பதினைந்தாம் அதிகாரம் குடிப்பிறப்பு

[அஃதாவது, நற்குடியிற் பிறத்தலாம்]

பாடல்: 141 (உடுக்கை)

தொகு

உடுக்கை யுலறி யுடம்பழிந்தக் கண்ணுங்|உடுக்கை உலறி உடம்பு அழிந்த கண்ணும்

குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் - குன்றா|குடி பிறப்பு ஆளர் தம் கொள்கையில் - குன்றார்

ரிடுக்கண் டலைவந்தக் கண்ணு மரிமா|இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா

கொடிப்புற் கறிக்குமோ மற்று. (01)|கொடிப் புல் கறிக்குமோ மற்று. (௧)


பதவுரை:

குடி பிறப்பு ஆளர்= நற்குலத்திற் பிறந்தோர்,

உடுக்கை= ஆடை,

உலறி= கெட்டு,

உடம்பு= உடலானது,

அழிந்தக்கண்ணும்= அழிந்தாலும்,

தம்= தங்களுடைய,

கொள்கையில்= நன்னடக்கையில்,

குன்றார்= குறைவுபடார்;

அரிமா= சிங்கமானது,

இடுக்கண்= பசித்துன்பம்,

தலைவந்தக்கண்ணும்= முதன்மையாக வந்தாலும்,

கொடி புல்= கொடிகளையுடைய புல்லை,

கறிக்குமோ= தின்னுமோ?


கருத்துரை:

நற்குடியிற் பிறந்தார் துன்பம் வந்தாலும் நன்னடக்கையில் குறையார்; சிங்கம் பசித்தாலும் புல்லைத் தின்னாது.


விசேடவுரை:

குடிப்பிறப்பாளர்= எழுவாய், குன்றார்- பயனிலை.

பாடல்: 142 (சான்றாண்மை)

தொகு

சான்றாண்மை சாய லொழுக்க மிவைமூன்றும்|சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவை மூன்றும்

வான்றோய் குடிப்பிறந்தோர்க் கல்லது- வான்றோய்|வான் தோய் குடி பிறந்தார்க்கு அல்லது - வான் தோய்

மைதவழ் வெற்ப படாஅ பெருஞ்செல்வ|மை தவழ் வெற்ப படாஅ பெரும் செல்வம்

மெய்தியக் கண்ணும் பிறர்க்கு. (02)|எய்தியக் கண்ணும் பிறர்க்கு. (௨)

பதவுரை:

வான்= ஆகாயத்தை,

தோயும்= அளாவும்,

மை= மேகம்,

தவழ்= தவழும்,

வெற்ப= மலையையுடைய பாண்டியனே!

சான்றாண்மை= பெருந்தன்மை,

சாயல்= மேன்மை,

ஒழுக்கம்= நன்னடக்கை,

இவை மூன்றும்= இம்முக்குணங்களும்,

வான்= பெருமை,

தோய்= நிறைந்த,

குடி பிறந்தார்க்கு= நற்குடியிற் பிறந்தார்க்கு,

அல்லது= அல்லாமல்,

பிறர்க்கு= நற்குடியிற் பிறவாதார்க்கு,

பெரும் செல்வம்= பெரிய செல்வம்,

எய்தியக் கண்ணும்= வந்தாலும்,

படா= (அம் முக்குணங்கள்) உண்டாகாவாம்.

கருத்துரை:

பாண்டியனே! பெருந்தன்மை, மேன்மை, நன்னடக்கை ஆகிய இவை நற்குடியிற் பிறந்தார்க்கல்லது அக்குடியிற் பிறவாதாருக்கு இல்லை.


விசேடவுரை:

இவை- எழுவாய், படா- பயனிலை.

பாடல்: 143 (உடுக்கை)

தொகு

இருக்கை யெழலு மெதிர்செலவு மேனை|இருக்கை எழலும் எதிர் செலவும் ஏனை

விடுப்ப வொழிதலோ டின்ன- குடிப்பிறந்தார்|விடுப்ப ஒழிதலோடு இன்ன- குடி பிறந்தார்

குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோ|குன்றா ஒழுக்கமா கொண்டார் கயவரோடு

டொன்றா வுணரற்பாற் றன்று.|ஒன்றா உணரல் பாற்று அன்று. (௩)

பதவுரை:

குடி பிறந்தார்= நற்குடியிற் பிறந்தார்,

இருக்கை எழலும்= (பெரியோரைக் கண்டு) இருக்கும்இடம் விட்டு எழுதலும்,

எதிர் செலவும்= எதிராகப் போதலும்,

ஏனை= இவை நீங்க,

விடுப்ப= வழிவிடுதலும்,

ஒழிதல்= நீங்கலும்,

ஓடு= இவற்றுடன்,

இன்ன= இவை போல்வன உபசாரங்களை,

குன்றா= குறையாத,

ஒழுக்கம் ஆ= நன்னடக்கையாக,

கொண்டார்= கொண்டார்கள்; (ஆதலால்),

கயவரோடு= கீழ்மக்களோடு,

ஒன்றா= அக்குணங்கள் பொருந்தாவாம்;

உணரற் பாற்று= அறியுந் தன்மை,

அன்று= கீழோர்க்கல்ல.


கருத்துரை:

நற்குடியிற் பிறந்தோர் ஆசார உபசாரங்களை விடார்; அக்குடியிற் பிறவாதார்க்கு ஆசார வுபசாரங்களில்லை.


விசேடவுரை:

குடிப்பிறந்தார்- எழுவாய், கொண்டார்- பயனிலை.

பாடல்: 144 (நல்லவை)

தொகு

நல்லவை செய்யி னியல்பாகுந் தீயவை|நல்லவை செய்யின் இயல்பு ஆகும் தீயவை

பல்லவர் தூற்றும் பழியாகு- மெல்லா|பல்லவர் தூற்றும் பழி ஆகும் - எல்லாம்

முணருங் குடிப்பிறப்பி னூதிய மென்னோ|உணரும் குடிப் பிறப்பின் ஊதியம் என்னோ

புணரு மொருவர்க் கெனின்.|புணரும் ஒருவர்க்கு எனின். (௪)

பதவுரை:

நல்லவை= நன்மைகளை,

செய்யின்= செய்தால்,

இயல்பு ஆகும்= இயற்கையாகும்;

தீயவை= துன்பங்களைச் செய்தால்,

பல்லவர்= பலரும்,

தூற்றும்= தூற்றத்தக்க,

பழி ஆகும்= பழிப்பாகும்;

எல்லாம்= நற்குணமெல்லாம்,

உணரும்= அறியும்,

குடிப்பிறப்பு= நற்குடிப்பிறப்பு,

ஒருவர்க்கு= ஒருவருக்கு,

இன்= இனிதாக,

புணரும் எனின்= கூடுமானால்,

ஊதியம் என்= இதிலு மிலாபம் யாது?


கருத்துரை:

ஒருவருக்கு நற்குடிப் பிறப்புப் பொருந்துமானால் இதைவிட லாபமென்ன?

விசேடவுரை:

ஊதியம்- எழுவாய், என்- பயனிலை. ஓ-அசை.

பாடல்: 145 (கல்லாமை)

தொகு

கல்லாமை யச்சங் கயவர் தொழிலச்சஞ்|கல்லாமை அச்சம் கயவர் தொழில் அச்சம்

சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்ச- மெல்லா|சொல்லாமை உள்ளும் ஓர் சோர்வு அச்சம் - எல்லாம்

மிரப்பார்க்கொன் றீயாமை யச்ச மரத்தாரம்|இரப்பார்க்கு ஒன்று ஈயாமை அச்சம் மரத்தார் அம்

மாணாக் குடிப்பிறந் தார். (05)|மாண் ஆ குடி பிறந்தார். (௫)

பதவுரை:


கருத்துரை:

கல்லாமை= கற்காதிருக்கை,

அச்சம்= அச்சம்;

கயவர்= கீழ்மக்கள்,

தொழில்= தொழில்களைச்செய்தல்,

அச்சம்= அச்சம்;

சொல்லாமையுள்ளும்= பொய் சொல்லாமை இடத்தும்,

ஓர்= ஒரு,

சோர்வு= சொற்சோர்வுபடல்,

அச்சம்= அச்சம்;

எல்லாம்= யாவும்,

இரப்பார்க்கு= யாசிப்பவர்க்கு,

ஒன்று= ஒருபொருள்,

ஈயாமை= கொடாமை,

அச்சம்= அச்சம்; (ஆதலால்)

அ மாணா குடி பிறந்தார்= பெருமையில்லாத அக்குடியிற் பிறந்தார்,

மரத்தார்= மரத்தோடு ஒத்தவர்.


கருத்துரை:

கல்லாமையும், இழிதொழிலும், சொற்சோர்வும், ஈயாமையும் உடையவர்கள் மரத்திற்கு ஒப்பானவர்.

விசேடவுரை:

மாணாக் குடிப்பிறந்தார்- எழுவாய், மரத்தார்- பயனிலை.

[‘மரத்தாரிம்’, என்றும் பாடம்.]

பாடல்: 146 (இனநன்மை)

தொகு

இனநன்மை யின்சொலென் றீதன்மற் றேனை|இனம் நன்மை இன் சொல் என்று ஈதல் மற்று ஏனை

மனநன்மை யென்றிவை யெல்லாங்- கனமணி|மனம் நன்மை என்று இவை எல்லாம் - கனம் மணி

முத்தோ டிமைக்கு முழங்குவரித் தண்சேர்ப்ப|முத்தோடு இமைக்கும் முழங்கு வரி தண் சேர்ப்ப

விற்பிறந்தார் கண்ணே யுள. (06)|இல் பிறந்தார் கண்ணே உள. (௬)


பதவுரை:

கனம்= பொன்னையும்,

மணி= அரதநங்களையும்,

முத்தோடு= முத்துக்களுடன்,

இமைக்கும்= பிரகாசிக்கச் செய்யும்,

முழங்கு= சத்திக்கின்ற,

தண்= குளிர்ந்த,

உவரி= கடலையும்,

சேர்ப்ப= கரையையுமுடைய பாண்டியனே!

இனம் நன்மை= இன நன்மையும்,

இன் சொல்= இனிய சொற்களும்,

ஒன்று= ஒரு பொருளை,

ஈதல்= கொடுத்தலும்,

ஏனை= ஒழிந்த,

மனம் நன்மை= மனத்தின் நன்மையும்,

என்ற இவை= என்னும் இவையெல்லாம்,

இல் பிறந்தார்= நற்குடியிற் பிறந்தார்,

கண்ணே= இடத்தே,

உள= இருக்கின்றன.


கருத்துரை:

பாண்டியனே! நல்லினம், நற்சொல், ஈகை, நன்மனம் இவையெல்லாம் நற்குடிப் பிறந்தார்க்கே உளவாம்.


விசேடவுரை:

எல்லாம்- எழுவாய், உள- பயனிலை, மற்று- அசை.

பாடல்: 147 (செய்கை)

தொகு

செய்கை யழிந்து சிதன்மண்டிற் றாயினும்|செய்கை அழிந்து சிதல் மண்டிற்று ஆயினும்

பெய்யா வொருசிறை பேரி- லுடைத்தாகு|பெய்யா ஒரு சிறை பேர் இல் - உடைத்து ஆகும்

மெவ்வ முழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்|எவ்வம் உழந்தக் கடைத்தும் குடி பிறந்தார்

செய்வர் செயற்பா லவை. (07)|செய்வர் செயல் பால் அவை. (௭)

பதவுரை:

செய்கை= செய்கைகள்,

அழிந்து= கெட்டு,

சிதல்= கறையான்,

மண்டிற்று ஆயினும்= பற்றியதாயினும்,

பெய்யா= (மழைநீர்) ஒழுகாத,

ஒரு சிறை= ஓரிடமுள்ள,

பேர் இல்= பெரிய வீடு,

உடைத்தாகும்= உண்டாயிருக்கும்; (அதுபோல),

எவ்வம்= துன்பம்,

உழந்தக் கடைத்தும்= வருத்தினாலும்,

குடி பிறந்தார்= நற்குடியிற் பிறந்தோர்,

செயற்பாலவை= செய்யத் தக்கவைகளை,

செய்வர்= செய்வார்கள்.


கருத்துரை:

நற்குடியிற் பிறந்தோர் துன்பத்தால் வருந்தினுஞ் செய்யத்தக்க கருமங்களைச் செய்வர்.


விசேடவுரை:

குடிப்பிறந்தார்- எழுவாய், செய்வர்- பயனிலை, செயற்பாலவை- செயப்படுபொருள்.

பாடல்: 148 (ஒருபுடை)

தொகு

ஒருபுடை பாம்பு கொளினு மொருபுடை|ஒரு புடை பாம்பு கொளினும் ஒரு புடை

யங்கண்மா ஞாலம் விளக்குறூஉந்- திங்கள்போற்|அம் கண் மா ஞாலம் விளக்கு உறூஉம் - திங்கள் போல்

செல்லாமை செவ்வனேர் நிற்பினு மொப்புரவிற்|செல்லாமை செவ்வன் நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு

கொல்கார் குடிப்பிறந் தார். (08)|ஒல்கார் குடி பிறந்தார். (௮)

பதவுரை:

ஒரு புடை= ஒருபக்கம்,

பாம்பு= பாம்பு,

கொளினும்= பற்றிக் கொள்ளினும்,

ஒருபுடை= ஒரு பக்கம்,

அம்= அழகிய,

கண்= இடமகன்ற,

மா= பெரிய,

ஞாலம்= பூமியை,

விளக்குறூஉம்= விளக்கும்,

திங்கள்போல்= சந்திரன் போல,

குடி பிறந்தார்= நற்குடியிற் பிறந்தார்,

செல்லாமை= வறுமை,

செவ்வன் நேர்= செவ்வையாக,

நிற்பினும்= நின்றாலும்,

ஒப்புரவிற்கு= (பிறர்க்கு) தருமஞ் செய்தற்கு,

ஒல்கார்= தளரார்.

கருத்துரை:

நற்குடியிற் பிறந்தார் வறுமையடைந்தாலும் தருமஞ் செய்தற்குத் தளரார்.

விசேடவுரை:

குடிப்பிறந்தார்- எழுவாய், ஒல்கார்- பயனிலை.

பாடல்: 149 (செல்லாவிடத்)

தொகு

செல்லா விடத்துங் குடிப்பிறந்தார் செய்வன|செல்லா இடத்தும் குடி பிறந்தார் செய்வன

செல்லிடத்துஞ் செய்யார் சிறியவர்- புல்வாய்|செல் இடத்தும் செய்யார் சிறியவர் - புல்வாய்

பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோற்|பருமம் பொறுப்பினும் பாய் பரி மா போல்

பொருமுர ணாற்றுத லின்று. (09)|பொரு முரண் ஆற்றுதல் இன்று. (௯)

பதவுரை:

குடி பிறந்தார்= நற்குடியிற் பிறந்தவர்கள்,

செல்லா இடத்தும்= வறுமையிடத்தும்,

செய்வன= செய்யும் தருமங்களை,

சிறியவர்= கீழ்மக்கள்,

செல்லிடத்தும்= செல்வமுள்ள இடத்தும்,

செய்யார்= செய்யார்கள்;

புல்வாய்= கலைமான்,

பருமம்= கல்லணையை,

பொறுப்பினும்= சுமந்தாலும்,

பாய்= பாயும்,

பரிமாபோல்= குதிரையைப் போல,

பொரும்= தாக்கும்,

முரண்= சண்டையை,

ஆற்றுதல்= செய்தல்,

இன்று= இல்லை.

கருத்துரை:

மேன்மக்கள் வறுமையிடத்துஞ் செய்யும் தருமங்களைக் கீழ்மக்கள் செல்வமுள்ளவிடத்துஞ் செய்யார்கள்.

விசேடவுரை:

சிறியவர்- எழுவாய், செய்யார்- பயனிலை.

பாடல்: 150 (எற்றொன்று)

தொகு

எற்றொன்று மில்லா விடத்துங் குடிப்பிறந்தா|எற்று ஒன்றும் இல்லா இடத்தும் குடி பிறந்தார்

ரற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத்- தூற்றாவ|அற்று தன் சேர்ந்தார்க்கு அசைவு இடத்து - ஊற்று ஆவர்

ரற்றக் கடைத்து மகல்யா றகழ்ந்தக்கால்|அற்ற கடைத்தும் அகல் யாறு அகழ்ந்தக்கால்

தெற்றெனத் தெண்ணீர் படும். (10)|தெற்று என தெள் நீர் படும். (௰)

பதவுரை:

அகல்= அகன்ற,

ஆறு= ஆறானது,

அற்றக்கடைத்தும்= நீர் வற்றினாலும்,

அகழ்ந்தக்கால்= தோண்டினால்,

தெற்றென= அலைப்போடு,

தெள் நீர்= தெளிந்த நீர்,

படும்= தரும்; (அதுபோல),

குடிப்பிறந்தார்= நற்குடியிற் பிறந்தவர்,

எற்று ஒன்றும்= யாதொன்றும்,

இல்லா இடத்தும்= இல்லாதிருந்தும்,

அற்று= பொருளிழந்து,

தன் சேர்ந்தார்க்கு= தம்மை யடுத்தார்க்கு,

அசைவு இடத்து= தளர்ந்த விடத்து,

ஊற்று ஆவர்= உதவியாவர்.


கருத்துரை:

நற்குடியிற் பிறந்தார், வறுமையிலும் தம்மையடுத்தவர்க்கு உதவி செய்வார்கள்.


விசேடவுரை:

குடிப்பிறந்தார்- எழுவாய், ஊற்றாவர்- பயனிலை.


‘குடிப்பிறப்பு’ அதிகாரம் முற்றிற்று.




பார்க்க

தொகு
நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரை

2.பொருட்பால்: 1.அரசியல்

நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி
[[]]
நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்
நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை
நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்
நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை
[[]]
நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரையுடன்
நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை
நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை
நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை
நாலடியார் 7-ஆம் அதிகாரம் - சினமின்மை
நாலடியார் 8-ஆம் அதிகாரம்-பொறையுடைமை
நாலடியார் 9-ஆம் அதிகாரம்-பிறர்மனைநயவாமை
நாலடியார் 10-ஆம் அதிகாரம்-ஈகை
நாலடியார் 11-ஆம் அதிகாரம்-பழவினை
நாலடியார் 12-ஆம் அதிகாரம்-மெய்ம்மை
நாலடியார் 13-ஆம் அதிகாரம்-தீவினையச்சம்