பக்கம்:நற்றிணை 1.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394

நற்றிணை தெளிவுரை


அம்மள்ளனார் 82

'மள்ளனார்' எனப் பெயருடையார் பலரினும் இவரை வேறுபடுத்த 'அம்' என்னும் அடையினைத் தந்துள்ளனர் எனல் பொருந்துவதாகும். 'நல்நடைக் கொடிச்சி! என் உயவு அறிதியோ? முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோல நின் உருவு கண்எறிப்ப நோக்கல் ஆற்றலெனே' எனத் தலைவன் சொல்வதாகப் பாடிய புலமைத் திறத்தினை உடையவர். கானவரது சிறுகுடி வாழ்வை இவர் எடுத்துக் காட்டும் வகையும் நயமுடையதாகும். இவர் பாடியதாகக் கிடைத்துள்ள செய்யுள் இஃது ஒன்று மட்டுமே.

அம்மூவனார் 4, 35, 76, 138.

'அம்மு' எனச் சேரநாட்டாரிடையே வழங்கிவருகின்ற பெயரமைதியைக் கொண்டு இவரையும் சேரநாட்டினராகக் கருதுவார் பலர். 'மூவனார்' என்பதனை இயற்பெயராகவும், 'அம்' என்பது சிறப்புக் கருதிச் சேர்த்து வழங்கப்பட்டதாகவும் கருதுவர் சிலர். சேரன், பாண்டியன், மலையமான் ஆகியோரால் ஆதரிக்கப்பெற்றவராகத் தொண்டி, மாந்தை, கொற்கை, கோவலூர் முதலிய பேரூர்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர், ஐங்குறுநூற்றின் நெய்தல்பற்றிய நூறு செய்யுட்களையும் (100-200), அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுட் சில (27) செய்யுட்களையும் பாடியவாகச் சங்கத்தொகை நூற்களுட் காணலாம். இந்நூலுள் 76 ஆவது செய்யுள் பாலைத்திணையைச் சார்ந்தது; பிற மூன்றும் நெய்தற்றிணைச் செய்யுட்களாகும். மாந்தைத் துறையின் சிறப்பை 35ஆவது செய்யுளுள் மிகவும் இனிதாக இவர் அறிமுகப் படுத்துகின்றனர். நெய்தற் பரதவர் வலைகளை உணக்கும் திறமும், அலவனின் அறியாமைச் செயலும், தலைவனின் காதற்பாசமும், தோழியின் பண்பும் ஆகிய பலவற்றையும் தீவிய சொற்களினாலே அமைத்து நம்மை இன்புறுத்துவதனை இச்செய்யுட்களாற் காணலாம். 76ஆவது செய்யுளிற் பாலைத்திணையை அமைத்துப் பாடிய பொழுதும் அதன்கண்ணும் தலைவியை நெய்தனிலக் குறுமகளாக அமைத்துள்ள திறம் பெரிதும் இன்புறர்பாலதாகும்.

அறிவுடை நம்பி 15

'பாண்டியன் அறிவுடை நம்பி' என்னும் இவர், அரச வாழ்வினரேனும் சிறந்த தமிழ்ப்புலவராகவும் விளங்கிய-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/395&oldid=1708222" இலிருந்து மீள்விக்கப்பட்டது