புறநானூறு/பாடல் 11-20
01-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
101-110 111-120 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200
201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
பாடல்:11 (அரிமயிர்த்)
தொகு- (பெற்றனர்! பெற்றிலேன்!)
பாடியவர் : பேய்மகள் இளவெயினியார்.
தொகு- பாடப்பட்டோன்
- சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
- திணை
- பாடாண்.
- துறை
- பரிசில் கடாநிலை.
அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும்
விண் பொருபுகழ், விறல்வஞ்சிப்
பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
வெப் புடைய அரண் கடந்து,
துப்புறுவர் புறம்பெற் றிசினே:
புறம் பொற்ற வய வேந்தன்
மறம் பாடிய பாடினி யும்மே,
ஏர் உடைய விழுக் கழஞ்சின்,
சீர் உடைய இழை பெற்றிசினே!
இழை பெற்ற பாடி னிக்குக்
குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே.
என ஆங்கு,
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.
பாடல்:12 (பாணர்தாமரை)
தொகு- (அறம் இதுதானோ?)
பாடியவர் : நெட்டிமையார்.
தொகு- பாடப்பட்டோன்
- பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
- திணை
- பாடாண்.
- துறை
- இயன்மொழி.
பாணர் தாமரை மலையவும், புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்,
அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?
பாடல்:13 (இவன்யார்)
தொகு- (நோயின்றிச் செல்க!)
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
தொகு- பாடப்பட்டோன்
- சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி.
- திணை
- பாடாண்.
- துறை
- வாழ்த்தியல்
‘இவன் யார்?’ என்குவை ஆயின், இவனே,
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய,
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்,
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்,
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்,
சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப,
மரீஇயோர் அறியாது, மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம!
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,
கொழுமீன், விளைந்த கள்ளின்,
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.
பாடல்:14 (கடுங்கண்ண)
தொகு- (மென்மையும்! வன்மையும்! )
பாடியவர் :கபிலர்.
தொகு- பாடப்பட்டோன்
- சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
- திணை
- பாடாண்.
- துறை
- இயன்மொழி
கடுங்கண்ண கொல் களிற்றால்
காப் புடைய எழு முருக்கிப்,
பொன் இயல் புனை தோட்டியான்
முன்பு துரந்து, சமந் தாங்கவும்;
பார்உடைத்த குண்டு அகழி
நீர் அழுவம் நிவப்புக் குறித்து,
நிமிர் பரிய மா தாங்கவும்;
ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்;
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும்; குரிசில்!
வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை,
புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகலின், நன்றும்
மெல்லிய பெரும! தாமே, நல்லவர்க்கு
ஆரணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மை
செருமிகு சேஎய் ! நின் பாடுநர் கையே.
பாடல்:15 (கடுந்தேர்)
தொகு- (எதனிற் சிறந்தாய்? )
பாடியவர் : கபிலர்.
தொகு- பாடப்பட்டோன்
- சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
- திணை
- பாடாண்.
- துறை
- இயன்மொழி
கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப்,
பாழ்செய் தனை, அவர் நனந்தலை நல்லெயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்,
வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்
தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்;
துளங்கு இயலாற், பணை எருத்தின்,
பா வடியாற்,செறல் நோக்கின்,
ஒளிறு மருப்பின் களிறு அவர
காப் புடைய கயம் படியினை;
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின்,
விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையடு
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்,
நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய,
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்? புரையில்
நற் பனுவல் நால் வேதத்து
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப், பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,
யூபம் நட்ட வியன்களம் பலகொல்?
யாபல கொல்லோ? பெரும! வார் உற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே.
பாடல்: 16 (வினைமாட்சிய)
தொகு- (செவ்வானும் சுடுநெருப்பும்!)
பாடியவர்: பாண்டரங் கண்ணனார்.
தொகு- பாடப்பட்டோன்
- சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி.
- திணை
- வஞ்சி.
- துறை; மழபுல வஞ்சி.
வினை மாட்சிய விரை புரவியடு,
மழை யுருவின தோல் பரப்பி,
முனை முருங்கத் தலைச்சென்று, அவர்
விளை வயல் கவர்பு ஊட்டி
மனை மரம் விறகு ஆகக்
கடி துறைநீர்க் களிறு படீஇ
எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்,
புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத்,
துணை வேண்டாச் செரு வென்றிப்,
புலவு வாள் புலர் சாந்தின்
முருகன் சீற்றத்து, உருகெழு குருசில்!
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல்,
பனிப் பகன்றைக், சுனிப் பாகல்,
கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண்பணை பாழ் ஆக,
ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை,
நாம நல்லமர் செய்ய,
ஒராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே.
பாடல்: 17 (தென்குமரி)
தொகு- (யானையும் வேந்தனும்!)
பாடியவர்; குறுங்கோழியூர் கிழார்.
தொகு- பாடப்பட்டோன்
- சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
- திணை; வாகை.
- துறை
- அரசவாகை; இயன்மொழியும் ஆம்.
தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா வெல்லை,
குன்று, மலை, காடு, நாடு
ஒன்று பட்டு வழி மொழியக்,
கொடிது கடிந்து, கோல் திருத்திப்,
படுவது உண்டு, பகல் ஆற்றி,
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல!
குலை இறைஞ்சிய கோள் தாழை
அகல் வயல், மலை வேலி,
நிலவு மணல் வியன் கானல்,
தெண் கழிமிசைச் சுடர்ப் பூவின்,
தண் தொண்டியோர் அடு பொருந!
மாப் பயம்பின் பொறை போற்றாது,
நீடு குழி அகப் பட்ட
பீடு உடைய எறுழ் முன்பின்
கோடு முற்றிய கொல் களிறு,
நிலை கலங்கக் குழி கொன்று,
கிளை புகலத் தலைக்கூடி யாங்கு
நீ பட்ட அரு முன்பின்,
பெருந் தளர்ச்சி, பலர் உவப்பப்,
பிறிது சென்று, மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக் கூறலின்,
‘உண் டாகிய உயர் மண்ணும்,
சென்று பட்ட விழுக் கலனும்,
பெறல் கூடும், இவன்நெஞ்சு உறப்பெறின்’எனவும்,
‘ஏந்து கொடி இறைப் புரிசை,
வீங்கு சிறை, வியல் அருப்பம்,
இழந்து வைகுதும்.இனிநாம்; இவன்
உடன்று நோக்கினன், பெரிது’ எனவும்,
வேற்று அரசு பணி தொடங்குநின்
ஆற்ற லொடு புகழ் ஏத்திக்,
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய
மழையென மருளும் பல் தோல், மலையெனத்
தேன்இறை கொள்ளும் இரும்பல் யானை,
உடலுநர் உட்க வீங்கிக், கடலென
வான்நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது
கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப,
இடியென முழங்கு முரசின்,
வரையா ஈகைக் குடவர் கோவே!
பாடல்: 18 (முழங்குமுந்நீர்)
தொகு- (நீரும் நிலனும்!)
பாடியவர்: குடபுலவியனார்.
தொகு- பாடப்பட்டோன்
- பாண்டியன் நெடுஞ்செழியன்.
- திணை
- பொதுவியல்.
- துறை
- முதுமொழிக் காஞ்சி : பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம்.
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து, தம்புகழ் நிறீஇ:
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை,
நுண் ஆரல், பரு வரால்,
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;
வான் உட்கும் வடிநீண் மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்இசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன்
தகுதி கேள், இனி, மிகுதியாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்குஉத வாதே; அதனால்,
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.
பாடல்: 19 (இமிழ்கடல்)
தொகு- (எழுவரை வென்ற ஒருவன்!)
பாடியவர் : குடபுலவியனார்.
தொகு- பாடப்பட்டோன்
- பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
- திணை
- வாகை.
- துறை
- அரசவாகை.
இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து,
மன்உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்.
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய!
‘இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய
பெருங்கல் அடாரும் போன்ம் என விரும்பி,
முயங்கினேன் அல்லனோ யானே! மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல,
அம்புசென்று இறுத்த அறும்புண் யானைத்
தூம்புஉடைத் தடக்கை வாயடு துமிந்து.
நாஞ்சில் ஒப்ப, நிலமிசைப் புரள,
எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்
எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்;
‘இன்ன விறலும் உளகொல், நமக்கு?’என,
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணிக்
கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல்வலங் கடந்தோய்! நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?
பாடல்: 20 (இருமுந்நீர்க்)
தொகு- (மண்ணும் உண்பர்!)
பாடியவர்: குறுங்கோழியூர்கிழார்.
தொகு- பாடப்பட்டோன்
- சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை;
மாந்தரஞ் சேரல்எனவும் குறிப்பர்.
- திணை
- வாகை.
- துறை
- அரச வாகை.
இரு முந்நீர்க் குட்டமும்,
வியன் ஞாலத்து அகலமும்,
வளி வழங்கு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றாங்கு
அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை;
அறிவும், ஈரமும், பெருங்க ணோட்டமும்;
சோறு படுக்கும் தீயோடு
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே;
திருவில் அல்லது கொலைவில் அறியார்;
நாஞ்சில் அல்லது படையும் அறியார்;
திறனறி வயவரொடு தெவ்வர் தேய, அப்
பிறர்மண் உண்ணும் செம்மல்; நின் நாட்டு
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது,
பகைவர் உண்ணா அருமண் ணினையே;
அம்பு துஞ்சும்கடி அரணால்,
அறம் துஞ்சும் செங்கோலையே;
புதுப்புள் வரினும், பழம்புள் போகினும்,
விதுப்புற அறியா ஏமக் காப்பினை;
அனையை ஆகல் மாறே,
மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே.