நாலடியார் 7-ஆம் அதிகாரம் - சினமின்மை
சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்
தொகுஉரை: களத்தூர் வேதகிரி முதலியார்
தொகுஅறத்துப்பால்: துறவறவியல்
தொகுஏழாம் அதிகாரம் சினமின்மை
- [அஃதாவது, கோபம் இல்லாதிருக்கும் தன்மையைச் சொல்லுதலாம்]
பாடல்: 61 (மதித்திறப் )
தொகுமதித்திறப் பாரு மிறக்க மதியா (01) மதித்து இறப்பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரு மிறக்க- மிதித்தேறி மிதித்து இறப்பாரும் இறக்க - மிதித்து ஏறி
யீயுந் தலைமே லிருத்தலா லஃதறிவார் ஈயும் தலை மேல் இருத்தலால் அஃது அறிவார்
காயுங் கதமின்மை நன்று. காயும் கதம் இன்மை நன்று.
(01)
- பதவுரை
- மதித்து= கனஞ்செய்து,
- இறப்பாரும்= நடப்பவரும்,
- இறக்க= நடக்கட்டும்;
- மதியா= மதியாமல்,
- மிதித்து= கனவீனஞ் செய்து,
- இறப்பாரும்= நடப்பவரும்,
- இறக்க= நடக்கட்டும்;
- மிதித்து ஏறி= காலால் மிதித்து ஏறி,
- ஈயும்= ஈயானதும்,
- தலைமேல்= சிரசின்மேல்,
- இருத்தலால்= இருக்கையால்,
- அஃது= அவ் ஈயின் இயல்பை,
- அறிவார்= அறிபவர்கள்,
- காயும்= கோபிக்கும்,
- கதம் இன்மை= கோபம் இல்லாதிருக்கை,
- நன்று= நல்லது.
- கருத்துரை
- மதித்து நடப்பவரும் நடக்கட்டும்; மதியாது நடப்பவரும் நடக்கட்டும்; அடிமேல் ஏறிய ஈ முடிமேல் ஏறி இருத்தலால் அத்தன்மை யலைபவர் பிறர்மேற் கோபமில்லாதிருக்கை நன்று.
- விசேடவுரை
- கதமின்மை- எழுவாய், நன்று- பயனிலை.
பாடல்: 62 (தண்டாச்)
தொகு- தண்டாச் சிறப்பிற்றம் மின்னுயிரைத் தாங்காது () தண்டாச் சிறப்பின் தம் இன் உயிரைத் தாங்காது
- கண்டுழி யெல்லாந் துறப்பவோ? - மண்டி () கண்டுழி எல்லாம் துறப்பவோ - மண்டி
- யடிபெயரா தாற்ற விளிவந்த போழ்தின் () அடி பெயராது ஆற்ற இளி வந்த போழ்தின்
- முடிகிற்கு முள்ளத் தவர். (02) முடிகிற்கும் உள்ளத்தவர்.
- பதவுரை
- மண்டி= நெருங்கி,
- அடி= பாதங்களை,
- பெயராது= பெயர்த்து வையாமல்,
- ஆற்ற= மிகவும்,
- இளி= இழிவு,
- வந்த போழ்தில்= வந்த காலத்தில்,
- முடிகிற்கும்= (எண்ணியவற்றை) முடிக்கும்,
- உள்ளத்தவர்= மனவலியுள்ளோர்,
- தண்டாத= கெடாத,
- சிறப்பின்= சிறப்புடைய,
- தம்= தமது,
- இன் உயிர்= இனிய வுயிரை,
- தாங்காது= தாங்காமல்,
- கண்ட உழி எல்லாம்= கோபம் கண்ட விடமெல்லாம்,
- துறப்பவோ= உயிரை விடுவார்களோ?
- கருத்துரை
- மிகவும் இழிவு வந்த காலத்தில் நினைத்தவற்றை முடிக்கு மனவலிமையுடையோர், கோபங்கொண்ட விடத்தில் உயிரை விடார்கள்.
- விசேடவுரை
- உள்ளத்தவர்- எழுவாய், துறப்பவோ- பயனிலை.
தருக்க சங்கிரகம்
- “உயிர்தா னுடறொறும் வெவ்வே றாகும்.”
பாடல்: 63 (காவாதொரு)
தொகுகாவா தொருவன்றன் வாய்திறந்து சொல்லுஞ்சொ () காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல்
லோவாதே தன்னைச் சுடுதலா- லோவாதே ()ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
யாய்ந்தமைந்த கேள்வி யறிவுடையா ரெஞ்ஞான்றுங் () ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவு உடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. (03) காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து.
- பதவுரை
- காவாது= (நாவைக்) காக்காமல்,
- ஒருவன்= ஒருவன்,
- தன்= தனது,
- வாய் திறந்து= வாயைத் திறந்து,
- சொல்லும் சொல்= சொல்லும் கடுஞ் சொற்கள்,
- ஓவாது= ஒழியாமல்,
- தன்னை= வைதவனையே,
- சுடுதலால்= சுடலால்,
- ஓவாது= ஒழியாமல்,
- ஆய்ந்து= பல நூலாராய்ந்து,
- அமைந்த= நிரம்பிய,
- கேள்வி= கல்வி,
- அறிவு உடையார்= விவேகமுடையார்,
- எ ஞான்றும்= எக்காலத்திலும்,
- காய்ந்து= கோபித்து,
- அமைந்த= கொடுமை நிறைந்த சொற்களை,
- கறுத்து= சீறி,
- சொல்லார்= சொல்லார்கள்.
- கருத்துரை
- ஒருவன், நாவைக் காவாது பிறனை வைத சொல்லானவை தன்னைச் சுடுதலால் கல்வி அறிவுடையார் எக்காலத்திலுங் கோபித்துக் கொடுஞ்சொற்களைச் சொல்லார்.
- விசேடவுரை
- அறிவுடையார்- எழுவாய், சொல்லார்- பயனிலை, அமைந்த- செயப்படுபொருள், ஏகாரம் இரண்டும் அசைகள்.
பாடல்: 64 (நேர்த்து)
தொகுநேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் () நேர்த்து நிகர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர்- ஓர்த்ததனை ()வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்து அதனை
யுள்ளத்தா னுள்ளி யுரைத்தூரா யூர்கேட்பத் () உள்ளத்தான் உள்ளி உரைத்து ஊராய் ஊர் கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாங் கீழ். (04) துள்ளித் தூண் முட்டுமாம் கீழ்.
- பதவுரை
- விழுமியோர்= பெரியோரானவர்,
நிகரல்லார்= ஒப்பில்லார், நேர்த்து= எதிர்த்து, நீர் அல்ல= குணமில்லாச் சொற்களை, சொல்லியக்கால்= சொன்னால், வேர்த்து= (மனம்) புழுங்கி, வெகுளார்= கோபியார், கீழ்= கீழ்மகன், ஓர்த்து= ஆராய்ந்து, அதனை= வைத்தனை, உள்ளத்தான்= மனதால், உள்ளி= நினைத்து, உராய்- சென்று, ஊர்= ஊராய், கேட்ப= கேட்க, உரைத்து= சொல்லி, துள்ளி= துடித்து, தூண்= தூணில், முட்டும்= முட்டிக்கொள்வான்.
- கருத்துரை
- பெரியோர்கள் தமக்கு ஒப்பில்லார் கொடுஞ்சொற்களைச் சொன்னால் கோபியார்; கீழானவன் பிறன் வைத்தனை நினைத்து ஊரார்க்குச் சொல்லித் தூணில் முட்டிக்கொள்வான்.
- விசேடவுரை
- விழுமியோர்- எழுவாய், வெகுளார்- பயனிலை, கீழ்- எழுவாய், முட்டும் - பயனிலை. நேர்த்து-ஓர்த்து விகாரம்.
நன்னூல்:வினையியல் 29-ம் சூத்திரம்.
“பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற்
செல்லாதாகுஞ் செய்யுமென் முற்றே.”
இவ்விதியால் முட்டும் என்றது முட்டுவான் என்றாயிற்று.
பாடல்: 65 (இளையா)
தொகு- இளையா னடக்க மடக்கங் கிளைபொரு () இளையான் அடக்கம் அடக்கம் கிளை பொருள்
- ளில்லான் கொடையே கொடைப்பய- னெல்லாம் ()இல்லான் கொடையே கொடைப் பயன்-
- எல்லாம்
- ஒறுக்கு மதுகை யுரனுடை யான் () ஒறுக்கும் மதுகை உரன் உடையான்
- பொறுக்கும் பொறையே பொறை. (05) பொறுக்கும் பொறையே பொறை.
- பதவுரை
இளையான்= இளமையுடையவன்,
அடக்கம்= ஐம்பொறிகளை அடக்குதல்,
அடக்கம்= அடக்கமாவது;
கிளை= வளரும்,
பொருள்= திரவியம்,
இல்லான்= இல்லாதவன்,
கொடையே= கொடுத்தலே,
பயன்= பிரயோசனமுள்ள,
கொடை= கொடையானது,
எல்லாம்= யாவும்,
ஒறுக்கும்= சஞ்சரிக்கும்,
மதுகை= வெற்றியும்,
உரன்= பலத்தையும்,
உடையாளன்= உடைய சுத்த வீரன்,
பொறுக்கும்= பொறுக்கின்ற,
பொறையே= பொறுமையே,
பொறை= பொறுமையாவது.
- கருத்துரை
- இளையவன் ஐம்பொறி அடக்குதலே அடக்கமாகும். இல்லாதவன் கொடுக்கிறதே கொடையாகும். சுத்தவீரன் பொறுக்கிறதே பொறுமையாகும்.
- விசேடவுரை
- அடக்கம்- எழுவாய், அடக்கம்- பயனிலை. கொடை- எழுவாய், கொடை- பயனிலை. பொறை- எழுவாய், பொறை- பயனிலை.
பாடல் 66 (கல்லெறிந்)
தொகுகல்லெறிந் தன்ன கயவர்வா யின்னாச்சொல் () கல் எறிந்து அன்ன கயவர் வாய் இன்னாச் சொல்
எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர்- ஒல்லை ()எல்லாரும் காணப் பொறுத்து உய்ப்பர் - ஒல்லை
யிடுநீற்றாற் பையவிந்த நாகம்போற் றத்தங் () இடு நீற்றால் பை அவிந்த நாகம் போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு. (06) குடிமையான் வாதிக்கப் பட்டு.
- பதவுரை
இடு=மந்திரித்திடும்,
நீற்றால்= திருநீற்றால்,
ஒல்லை= சீக்கிரம்,
பை= படம்,
அவிந்த= அடங்கிய,
நாகம்போல்= நாகத்தைப் போல்,
தம்தம்= தங்கள் தங்களுடைய,
குடிமையால்= குடிப்பிறப்பால்,
வாதிக்கப்பட்டு= ஒறுக்கப்பட்டு,
கல்= கல்லை,
எறிந்தன்ன= எறிந்தாற்போலும்,
கயவர்= கீழானவர்,
வாய்= வாயில் வரும்,
இன்னாச் சொல்= கொடுஞ் சொற்களை,
எல்லாரும்= யாவரும்,
காண=அறிய,
பொறுத்து உய்ப்பர்= சகித்து நடப்பர் (பெரியோர்).
- கருத்துரை
- மந்திரித்த திருநீற்றால் அடங்கிய நாகம் போலப் பெரியோர் தங்கள் குல ஒழுக்கத்திற்கு அஞ்சிக் கீழ்மக்கள் சொல்லிய கொடுஞ்சொற்களைப் பொறுத்து நடப்பர்.
- விசேடவுரை
- (பெரியோர்)- தொன்றா எழுவாய், உய்ப்பர்- பயனிலை, இன்னாச்சொல்- செயப்படுபொருள்.
பாடல் 67 (மாற்றாராய்)
தொகுமாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை () மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை
யாற்றாமை யென்னா ரறிவுடையார்- ஆற்றாமை () ஆற்றாமை என்னார் அறிவு உடையார் - ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்காற் றாமவரைப் () நேர்த்து இன்னா மற்றவர் செய்தக்கால் தாம் அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று. (07) பேர்த்து இன்னா செய்யாமை நன்று.
- பதவுரை
அறிவுடையார்= அறிவுளார்,
மாற்றார் ஆய்= பகைவராய்,
நின்று= நின்று,
தம்= தம்மோடு,
மாறு ஏற்பார்க்கு= மாறுபடுமவர்க்கு,
ஏலாமை= பொருந்தாமையை,
ஆற்றாமை= வல்லமை இல்லாமை,
என்னார்= என்று சொல்லார்;
ஆற்றாமை= பொறுத்தற்கரியவை,
நேர்த்து= எதிர்த்து,
இன்னா= துன்பங்களை,
அவர்= அப்பகைவர்,
செய்தக்கால்= செய்தால்,
தாம்= தாங்கள்,
அவரை= அப்பகைவரை,
பேர்த்து= மீண்டு,
இன்னா= தீங்குகளை,
செய்யாமை= செய்யாதிருத்தல்,
நன்று= நல்லது.
- கருத்துரை
தம்முடன் எதிர்ப்பவர்மேல் எதிராதிருத்தலை வல்லமையில்லாமை என்று அறிவுடையோர் சொல்லார். பகைவர் துன்பஞ்செய்தால் அவர்களுக்குத் துன்பஞ் செய்யாதிருத்தலே நல்லது.
- விசேடவுரை
- அறிவுடையோர்- எழுவாய், என்னார்- பயனிலை, மற்று- அசை.
அவிநயம்
நெடின்மிக வருதல் நெடிற்செய்யுள் என்ப.
பாடல் 68 (நெடுங்கால)
தொகுநெடுங்கால மோடினு நீசர் வெகுளி () நெடும் காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்கால மன்றிப் பரக்கு- மடுங்காலை ()கெடும் காலம் அன்றிப் பரக்கும் - அடும் காலை
நீர்கொண்ட வெப்பம்போற் றானே தணியுமே () நீர் கொண்ட வெப்பம் போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம். (08) சீர் கொண்ட சான்றோர் சினம்.
- பதவுரை
நீசர்= கீழ்மக்களுடைய,
வெகுளி= கோபமானது,
நெடுங்காலம்= அநேக காலம்,
ஓடினும்= சென்றாலும்,
கெடும் காலம்= கெட்டுப் போகுங்காலம்,
இன்றி= இல்லாமல்,
பரக்கும்= வளர்ந்து நிற்கும்;
சீர்= சிறப்பை,
கொண்ட= கொண்டிருக்கிற,
சான்றோர்= பெரியோர்,
சினம்= கோபமானது,
அடும்= காய்ச்சும்,
காலை= காலத்தில்,
நீர்= நீரானது,
கொண்ட= கொண்டிருக்கிற,
வெப்பம்போல்= உஷ்ணம்போல்,
தானே= தனக்குத்தானே,
தணியும்= ஆறும்.
- கருத்துரை
கீழ்மக்கள் கோபம் நெடுநாட் சென்றாலும் பெருகி நிற்கும்; பெரியோர் கோபம் நீர்கொண்ட வெப்பம்போல் தனக்குத் தானே தணியும்.
- விசேடவுரை
நீசர் வெகுளி- எழுவாய், பரக்கும்- பயனிலை. சான்றோர் சினம்- எழுவாய், தணியும்- பயனிலை. ஏ-அசை.
பாடல் 69 (உபகாரஞ்)
தொகுஉபகாரஞ் செய்ததனை யோராதே தங்க () உபகாரம் செய்ததனை ஓராதே தம் கண்
ணபகார மாற்றச் செயினு- முபகாரந் ()அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாஞ் செய்வதல்லாற் றவற்றினாற் றீங்கூக்கல் () தாம் செய்வது அல்லால் தவற்றினால் தீங்கு ஊக்கல்
வான்றோய் குடிப்பிறந்தார்க் கில். (09) வான் தோய் குடிப் பிறந்தார்க்கு இல்.
- பதவுரை
உபகாரம்= உதவி,
செய்ததனை= செய்ததை
ஓராது= அறியாது,
தங்கண்= தம்மிடத்து,
அபகாரம்= ஒருவர் அபகாரத்தை,
ஆற்ற= மிகவும்,
செயினும்= செய்தாலும்,
உபகாரம்= உதவியை,
தாம்= தாங்கள்,
செய்வது அல்லால்= செய்வதல்லது,
தவற்றினால்= (அவர் செய்த) குற்றத்தால்,
தீங்கு= பொல்லாங்கை,
ஊக்கல்= செய்தல்,
வான்= பெருமை,
தோய்= நிறைந்த,
குடிப்பிறந்தார்க்கு= நற்குடியிற் பிறந்தார்க்கு,
இல்= இல்லை.
- கருத்துரை
- ஒருவர் உபகாரத்தை அறியாது அபகாரத்தைச் செய்தாலும் நற்குடியிற் பிறந்தார் உபகாரஞ் செய்தலே அல்லாது அபகாரஞ் செய்யார்.
- விசேடவுரை
- ஊக்கல்- எழுவாய், இல்- பயனிலை, தீங்கு- செயப்படுபொருள். வான்றோய் குடி- உயர்ந்த குடி எனினுமாம்.
பாடல் 70 (கூர்ந்துநாய்)
தொகு- கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டுந் தம்வாயாற் () கூர்த்து நாய் கௌவிக் கொளக் கண்டும் தம் வாயால்
- பேர்த்துநாய் கௌவினா ரீங்கில்லை- நீர்த்தன்றிக் ()பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை - நீர்த்து அன்றிக்
- கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ? () கீழ் மக்கள் கீழ் ஆய சொல்லியக்கால் சொல்பவோ
- மேன்மக்க டம்வாயான் மீட்டு. (60) மேல் மக்கள் தம் வாயான் மீட்டு.
- பதவுரை
நாய்= நாயானது,
கூர்த்து= கோபமிகுந்து,
கௌவிக்கொள= கடித்துக் கொள்ள,
கண்டும்= பார்த்தும்,
பேர்த்து= மீண்டு,
தம்= தம்முடைய,
வாயால்= வாயினால்,
நாய்= கடித்த நாயை,
கௌவினார்= கடித்தவர்,
ஈங்கு= இவ்வுலகில்,
இல்லை= இல்லை;
நீர்த்து அன்றி= குணமில்லாமல்,
கீழ்மக்கள்= கீழானவர்கள்,
கீழாய= இழிவான சொற்களை,
சொல்லியக்கால்= சொன்னால்,
மேல்மக்கள்= மேலானவர்கள்,
தம் வாயால்= தங்கள் வாயால்,
மீட்டு= மறுத்து,
சொல்பவோ= சொல்வார்களோ?
- கருத்துரை
நாய் கடிக்கக் கண்டும், தங்கள் வாயால் கடித்தநாயைக் கடித்தவர்கள் இவ்வுலகிலில்லை; கீழானவர்கள் இழிவான சொற்களைச் சொன்னால் மேலானவர்கள் ஒன்றுஞ் சொல்லார்கள்.
- விசேடவுரை
மேன்மக்கள்- எழுவாய், சொல்பவோ- பயனிலை, கீழானவற்றை- செயப்படுபொருள்.
அவிநயம்
“ஒற்றுப் பயில லொற்றியற் செய்யுள்”