நாலடியார் 11-ஆம் அதிகாரம்-பழவினை

சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்

தொகு

உரை: களத்தூர் வேதகிரி முதலியார்

தொகு

அறத்துப்பால்: இல்லறவியல்

தொகு

பதினொன்றாம் அதிகாரம் பழவினை

[அஃதாவது, முற்பிறப்பிற் செய்த வினையாம்]

பாடல்: 101 (பல்லாவு)

தொகு

பல்லாவு ளுய்த்து விடினுங் குழக்கன்று பல் ஆவுள் உய்த்து விடினும் குழ கன்று

வல்லதாந் தாய்நாடிக் கோடலைத்-தொல்லைப் வல்லதாம் தாய் நாடி கோடலை- தொல்லை

பழவினையு மன்ன தகைத்தேதற் செய்த பழ வினையும் அன்ன தகைத்தே தன் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு. (01) கிழவனை நாடி கொளற்கு.

பதவுரை

பல் ஆவுள்= பல பசுக்களுள்,

குழ கன்று= இளங்கன்றை,

உய்த்து விடினும்= செலுத்தி விடினும்,

தாய்= தன் தாயை,

நாடி= தேடி,

கோடலை= கொள்ளுதலில்,

வல்லதாம்= வன்மையுடையதாம்;

தொல்லை= முன்செய்த,

பழ வினையும்= ஊழ்வினையும்,

தன்= தன்னை,

செய்த= செய்துள்ள,

கிழவனை= உரியவனை,

நாடி= ஆராய்ந்து,

கொளற்கு= பற்றிக் கொள்ளுதற்கு,

அன்ன தகைத்தை= அத்தன்மையதாம்.

கருத்துரை
கன்று பசுவைத் தேடிக்கொள்ளுதலைப் போல, வினையுஞ் செய்தவனைத் தேடிக்கொள்ளும்.
விசேடவுரை
பழவினை- எழுவாய், அன்ன தகைத்தே- பயனிலை.


பாடல்: 102 (உருவுமிளமை)

தொகு
உருவு மிளமையு மொண்பொருளு முட்கு () உருவும் இளமையும் ஒள் பொருளும் உட்கும்
மொருவழி நில்லாமை கண்டு-மொருவழி ()ஒரு வழி நில்லாமை கண்டும் - ஒரு வழி
யொன்றேயு மில்லாதான் வாழ்க்கை யுடம்பிட்டு () ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பு இட்டு
நின்றுவீழ்ந் தக்க துடைத்து. (02) நின்று வீழ்ம் தக்கது உடைத்து.
பதவுரை
கருத்துரை

உருவும்= அழகும்,

இளமையும்= இளமைப் பருவமும்,

ஒள்= ஒளிபொருந்திய,

பொருளும்= திரவியமும்,

ஒரு வழி= ஒரு பிறப்பினும்,

நில்லாமை= நில்லாது,

உட்கும்= கெடுதலை,

கண்டும்= பார்த்தும்,

ஒன்றேயும்= ஒரு நல்வினையும்,

இல்லாதான்= செய்யாதவன்,

வாழ்க்கை= உயிர் வாழ்தலானது,

உடம்பு= உடம்பினை,

இட்டு= எடுத்து,

நின்று= நிறைவளவினனாய்,

வீழ்ம்= வீழுந் தகுதியை,

தக்கது= உடையது.

கருத்துரை
ஒரு பிறப்பிலுந் தரும்ஞ் செய்யாதவன் வாழ்வு கெடும்.
விசேடவுரை
வாழ்க்கை- எழுவாய், உடையது- பயனிலை.


பாடல்: 103 (வளம்பட)

தொகு

வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை () வளம் பட வேண்டாதார் யார் யாரும் இல்லை

யளந்தன போக மவரவ ராற்றான் ()அளந்தன போகம் அவர் அவர் ஆற்றான்

விளங்காய் திரட்டினா ரில்லைக் களங்கனியைக் () விளங்காய் திரட்டினார் இல்லை கள கனியை

காரெனச் செய்தாரு மில். (03) கார் எனச் செய்தாரும் இல்.

பதவுரை

வளம்= செல்வம்,

பட= உண்டாக,

வேண்டாதார்= விரும்பாதார்,

யார் யாரும்= யாவரும்,

இல்லை= இல்லை;

அவர் அவர்= அவரவர் செய்த,

ஆற்றால்= வினையால்,

போகம்= அவரவர்க்கு அநுபோகம்,

அளந்தன= கற்பித்துக் கிடந்தன;

விளங்காய்= விளங்காயை,

திரட்டினார்= திரட்டினவர்,

இல்லை- இல்லை,

கள கனியை= களவின் கனியை,

கார் என= கறுப்பாகும்படி,

செய்தாரும்= செய்தவரும்,

இல்லை= இல்லை.

கருத்துரை
செல்வம் வேண்டாதார் யாருமில்லை. அவரவர் வினையின்படி செல்வம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
விசேடவுரை
போகம்- அளந்தன, அளந்தன- பயனிலை.

பாடல்: 104 (உறற்பால)

தொகு

உறற்பால நீக்க லுறுவார்க்கு மாகா () உறல் பால நீக்கல் உறுவார்க்கும் ஆகா

பெறற்பா லனையவு மன்னவா-மாரி ()பெறல் பால் அனையவும் அன்னவாம் -மாரி

வறப்பிற் றருவாரு மில்லை யதனைச் () வறப்பில் தருவாரும் இல்லை அதனை

சிறப்பிற் றணிப்பாரு மில். (04) சிறப்பில் தணிப்பாரும் இல்.

பதவுரை

உறும் பகுதியால்= உறும் பகுதியான தீவினைகளை,

நீக்கல்= நீக்குதல்,

உறுவர்க்கும்= தபோதனர்க்கும்,

ஆகா= இயலாவாம்;

பெறல் பால்= பெறும்பகுதியான நல்வினைகள்,

அனயவும்= எல்லாம்,

அன்ன ஆம்= அத்தன்மையாம்; (அது போல),

மாரி= மழை,

வறப்பில்= மறுத்த காலத்தில்,

தருவாரும்= அதனைப் பெய்விப்பாரும்,

இல்லை= இல்லை;

சிறப்பில்= (அம்மழை) பெய்யுங்காலத்தில்,

அதனை= அதை,

தணிப்பாரும்= பெய்யாமல் நிறுத்த வல்லாரும்,

இல்லை= இல்லை.

கருத்துரை
வந்த துன்பங்களை நீக்குதலும், இருக்கிற இன்பங்களைப் போக்குதலும் பெரியோர்க்கும் அரிது.
விசேடவுரை
நீக்கல்- எழுவாய், ஆகா- பயனிலை.

பாடல்: 105 (தினைத்துணை)

தொகு

தினைத்துணைய ராகித்தந் தேசுள் ளடக்கிப் () தினை துணையர் ஆகி தம் தேசு உள் அடக்கி

பனைத்துணையார் வைகலும் பாடழித்து-வாழ்வர் ()பனை துணையார் வைகலும் பாடு அழித்து வாழ்வர்

நினைப்பக் கிடந்த தெவனுண்டா மேலை () நினைப்பக் கிடந்தது எவன் உண்டாம் மேலை

வினைப்பய னல்லாற் பிற. (05) வினைப் பயன் அல்லால் பிற.

பதவுரை

தினை= தினையினுடைய,

துணையர் ஆகி= அளவினையுடையவராய்,

தம்= தமது,

தேசு= ஒளியை,

உள்= உள்ளே,

அடக்கி= அடங்கச் செய்து,

பனை= பனையினுடைய,

துணையார்= அளவினையுடையார்,

வைகலும்= நாடோறும்,

பாடு= பெருமை,

அழிந்து= கெட்டு,

வாழ்வர்= வாழாநிற்பர்;

நினைப்ப= விசாரிக்க,

கிடந்தது= தக்கது,

எவன்= என்?

உண்டாம்= உளதாம்,

மேலை= முன் செய்த,

வினை பயன்= வினையின்பயன்,

அல்லால்= அல்லது,

பிற= வேறொன்றுமில்லை.

கருத்துரை
வினையின் வசத்தால் பனையளவு பெருமையை உடையவரும், தினையளவு பெருமையினை உடையவராவாய் அடங்கி நிற்பர்.
விசேடவுரை
பனைத்துணையார்- எழுவாய், வாழ்வர்- பயனிலை.

பாடல் 106 (பல்லான்ற)

தொகு

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவுங் () பல் ஆன்ற கேள்வி பயன் உணர்வார் வீயவும்

கல்லாதார் வாழ்வ தறிதிரேற்-கல்லாதார் ()கல்லாதார் வாழ்வது அறிதிரேல் - கல்லாதார்

சேதன மென்னுமச் சேறகத் தின்மையாற் () சேதனம் என்னும் அச் சேறு அகத்து இன்மையால்

கோதென்று கொள்ளாதாங் கூற்று. (06) கோது என்று கொள்ளாதாம் கூற்று.

பதவுரை

பல்= பல நூல்களையும்,

ஆன்ற= கற்றமைந்த,

கேள்வி= கல்வியால் வரும்,

பயன்= பயனை,

உணர்வார்= அறிவார்,

வீயவும்= இறக்கவும்,

கல்லாதார்= கல்லாதவர்,

வாழ்வதும்= உயிர் வாழ்வதும்,

அறிதிரேல்= காரணம் அறிவீராகில்,

கல்லாதார்= கல்லாதவர்,

சேதனம் என்னும்= அறிவென்னும்,

அ சேறு= அந்தச் சாரம்,

அகத்து= மனதில்,

இன்மையால்= இல்லாமையால்,

கூற்று= கூற்றானது,

கோது என்று= அவரைச் சக்கை என்றெண்ணி,

கொள்ளாதாம்= கொள்ள மாட்டாது.

கருத்துரை
இயமனானவன் கற்றோரைச் சாரமாகவும், மற்றோரைச் சக்கையாகவும் கொள்வான்.
விசேடவுரை
கூற்று- எழுவாய், கொள்ளாதாம்- பயனிலை.

பாடல் 107 (இடும்பைகூர்)

தொகு

இடும்பைகூர் நெஞ்சத்தா ரெல்லாருங் காண () இடும்பை கூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண

நெடுங்கடை நின்றுழல்வ தெல்லா-மடப்பம்பூ ()நெடும் கடை நின்று உழல்வது எல்லாம் - அடப்பம் பூ

வன்னங் கிழிக்கு மலைகடற் றண்சேர்ப்ப () அன்னம் கிழிக்கும் அலை கடல் தண் சேர்ப்ப

முன்னை வினையாய் விடும். (07) முன்னை வினையாய் விடும்.


பதவுரை

அடப்பம்= அடம்பினுடைய,

பூ= பூக்களை,

அன்னம்= அன்னங்கள்,

கிழிக்கும்= கிழித்து விளையாடும்,

அலை= அலைகள் பொருந்திய,

தண்= குளிர்ந்த,

கடல்= சமுத்திரத்தையும்,

சேர்ப்ப= கரையையுமுடைய பாண்டியனே!

இடும்பை= துன்பம்,

கூர்= மிக்க,

நெஞ்சத்தார்= நெஞ்சினையுடையார்,

எல்லாரும்= எல்லாரும்,

காண= அறிய,

நெடும்= நெடிய,

கடை= வாயில்கடோறும்,

நின்று= இரந்து நின்று,

உழல்வது= திரிவது,

எல்லாம்= யாவும்,

முன்னை= முன்செய்த,

வினையாய் விடும்= தீவினைப் பயனாய் விடும்.

கருத்துரை
பாண்டியனே! இப்பிறப்பில் யாசிக்குஞ் செய்கை முற்பிறப்பிற் செய்வினையாம்.
விசேடவுரை
எல்லாம்- எழுவாய், வினையாய் விடும்- பயனிலை.

தண்டியலங்காரம்- பொதுவணியியல்

“தெளிவெனப் படுவது பொருள்புலப் பாடே.”

பாடல் 108 (அறியாரு)

தொகு

அறியாரு மல்ல ரறிவ தறிந்தும் () அறியாரும் அல்லர் அறிவது அறிந்தும்

பழியோடு பட்டவை செய்தல்-வளியோடி ()பழியோடு பட்டவை செய்தல் - வளி ஓடி

நெய்த னறவுயிர்க்கு நீள்கடற் றண்சேர்ப்ப () நெய்தல் நறவு உயிர்க்கும் நீள் கடல்

செய்த வினையான் வரும். (08) செய்த வினையால் வரும்.


பதவுரை

வளி ஓடி= காற்றின் வழியே ஓடி,

நெய்தல்= நெய்தல் பூவினது,

நறவு= வாசனை,

உயிர்க்கும்= கமழாநின்ற,

நீள்= நீண்ட,

தண்= குளிர்ந்த,

கடல்= சமுத்திரத்தையும்,

சேர்ப்ப= கரையையுமுடைய பாண்டியனே!

அறியாரும்= அறியாதாரும்,

அல்லர்= அல்லர்,

அறிவது= அறியத்தக்க நூல்களின் பலனை,

அறிந்தும்= அறிந்திருந்தும்,

பழியோடு= பழியுடனே,

பட்டவை= பொருந்தியவை,

செய்தல்= சிலர் செய்தல்,

செய்த= முன்செய்த,

இருவினையால்= தீவினைப் பயனால்,

வரும்= வரும்.

கருத்துரை
பாண்டியனே! நூல்களை அறிந்தும் தீவினைகளைச் செய்தல் முன் செய்வினை வசமாம்.
விசேடவுரை
செய்தல்- எழுவாய், வரும்- பயனிலை.

பாடல் 109 (ஈண்டுநீர்)

தொகு

ஈண்டுநீர் வையத்து ளெல்லாரு மெத்துணையும் () ஈண்டு நீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்

வேண்டார்மற் றீய விழைபய-னல்லவை ()வேண்டார் மன் தீய விழை பயன் - அல்லவை

வேண்டினும் வேண்டா விடினு முறற்பால () வேண்டினும் வேண்டா விடினும் உறல் பால

தீண்டா விடுத லரிது. (09) தீண்டா விடுதல் அரிது.(௯)


பதவுரை

ஈண்டு நீர் வையத்துள்= விரிநீர் சூழ்ந்த உலகத்துள்,

எல்லாரும்= யாவரும்,

எத்துணையும்= தமக்கு எவ்வளவும்,

தீய= கொடியவை,

விழை= கலந்த,

பயன்= துன்பங்களை,

வேண்டார்= வேண்டியிரார்,

நல்ல= நல்வினைப் பயன்களை,

வேண்டினும்= விரும்பினராயினும்,

வேண்டாவிடினும்= விரும்பாவிட்டாலும்,

உறல் பால= வரும் வினைகள்,

தீண்டா= அவரைத் தீண்டாமல்,

விடுதல்= நீங்குதல்,

அரிது= அரிது.

கருத்துரை
யாவரும் நல்வினை தீவினைகளை வேண்டினும் வேண்டாவிடினும் வரும் வினைகள் வராமலிராவாம்.
விசேடவுரை
விடுதல்- எழுவாய், அரிது- பயனிலை. மன்- ஒழியிசை.

பாடல் 110 (சிறுகா)

தொகு

சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா () சிறுகா பெருகா முறை பிறழ்ந்து வாரா

வுறுகாலத் தூற்றாகா வாமிடத்தே-யாகுஞ் ()உறு காலத்து ஊற்று ஆகாவாம் இடத்தே - ஆகும்

சிறுகாலைப் பட்ட பொறியு மதனா () சிறு காலை பட்ட பொறியும் அதனால்

லிறுகாலத் தென்னை பரிவு. (10) இறு காலத்து என்னை பரிவு. (௧௦)

பதவுரை

சிறுகாலை= முற்காலத்து,

பட்ட= உண்டாகிய,

பொறியும்= நல்வினைகளும்,

சிறுகா= சிறுகாவாம்,

பெருகா= பெருகாவாம்,

முறை= வரிசை,

பிறழ்ந்து= மாறி,

வாரா= வாராவாம்,

உறுகாலத்து= துன்புறுங்காலத்து,

ஊற்று ஆகா= வந்து தங்காவாம்;

ஆம் இடத்தே= ஆங் காலத்தே,

ஆகும்= ஆகும்;

அதனால்= (அத்துணையே) ஆதலால்,

இறு காலத்து= (தீவினைப்பயனால்) கேடுவருங் காலத்து,

பரிவு= வருந்துவது,

என்னை= யாது?


கருத்துரை
நல்வினைகள் சிறுகலும், பெருகலும், முறை மாறி வருதலுமில்லை; வரும்போது வரும்; தீவினைகள் வந்தபோது வருந்துவதென்ன?
விசேடவுரை
பரிவு- எழுவாய், என்னை- பயனிலை.

தண்டியலங்காரம்- பொதுவணியியல்

“சொல்லினும் பொருளினும் சுவைப்பட லின்பம்.”

இஃது இன்பவணி.

பார்க்க

தொகு
நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரையுடன்
நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை
நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை
நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை
நாலடியார் 6-ஆம் அதிகாரம் - துறவு
நாலடியார் 7-ஆம் அதிகாரம் - சினமின்மை
நாலடியார் 8-ஆம் அதிகாரம்-பொறையுடைமை
நாலடியார் 9-ஆம் அதிகாரம்-பிறர்மனைநயவாமை
நாலடியார் 10-ஆம் அதிகாரம்-ஈகை
[[]]
நாலடியார் 12-ஆம் அதிகாரம்-மெய்ம்மை
நாலடியார் 13-ஆம் அதிகாரம்-தீவினையச்சம்

2.பொருட்பால்: 1.அரசியல்

நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி
நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு
நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்
நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை
நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்
நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை
[[]]