பக்கம்:நற்றிணை 1.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடிய சான்றோர்கள்

399


செய்யுட்களுட் காணலாம். இவரது அகநானூற்று 56வது செய்யுள் சுவையான எள்ளல் காட்சியினைக் கொண்டதாகும்.

இனிச்சந்த நாகனார் 66

இனிய சந்தத்தோடு வாய்ப்பாட்டுப் பாடும் திறனுடையவராகவும், 'நாகன்' என்னும் பெயருடையோராகவும் விளங்கியவராதலின் இப்பெயர் பெற்றனாரதல் பொருந்தும். நாகர் குலத்தவர் எனலும் பொருத்தமுடைத்தேயாம். இவரதாகக் காணப்படுவது பாலைத்திணை சார்ந்த இச் செய்யுளொன்றே. நற்றாய் உடன்போக்கிற் சென்றாளான தன் குறுமகளை நினைந்து வருந்துகின்றதாக அமைந்துள்ள இச்செய்யுள் மிகவும் நயமுடையதாகும்.

உக்கிரப் பெருவழுதி 98

இச் செய்யுளும். அகநானூற்று 26 ஆவது செய்யுளும் இவரியற்றியனவாகக் காணப்படுவனவாம். கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி (புறம். 21) எனச் சான்றோராற் சிறப்பிக்கப் பெற்றவரும் இவரே. பாண்டிய மன்னராகவும் பைந்தமிழ் வல்லாராகவும் திகழ்ந்தவர் இவராவர். சேரமான் மாரிவெண்கோவும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியும் இவருடன் நட்புடையோராக விளங்கினர். ஔவையாராலும் ஆவூர் மூலங்கிழாராலும் போற்றிப் புகழப்பட்டவர். உப்பூரிகுடிகிழார் உருத்திர சன்மரைக் கொண்டு அகநானூற்றைத் தொகுப்பித்தவரும் இவரேயாவர். திருக்குறட் பெருநூலும் இவரவைக் கண்ணேயே அரங்கேறினதென்று சான்றோர் கூறுகின்றனர், 'பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென' என இவர் உரைப்பது கொண்டு பல்லி படுவதனைக் கேட்டு நிமித்தம் காணும் பண்டைமரபினை அறியலாம். இச் செய்யுள் குறிஞ்சித்திணைச் செய்யுளாகும் தலைவனோடு ஊடி நின்ற தலைவி, தான் ஊடல் தீர்ந்து அவனோடு கூடிய தன்மையைக் கூறுவதாக அமைந்த இவரது அகநானூற்றுச் செய்யுள் (26) சிறந்த ஓர் இன்ப நாடகமாகவே விளங்குகின்றது.

உலோச்சனார் 11, 38, 63, 64, 74, 131, 149, 191.

இவர் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியின் காலத்தவர்; அவனையும், பொறையாற்றுப் பெரியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/400&oldid=1708240" இலிருந்து மீள்விக்கப்பட்டது