1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325

சீவகசிந்தாமணிக் காப்பியம்

தொகு

1. நாமகள் இலம்பகம்

தொகு

(அழுகுரல்)

தொகு
அழுகுரல் மயங்கிய வல்ல லாவணத்
தெழுகிளை மகிழ்ந்தெம தரசு வேண்டினான்
கழிபெருங் காதலான் கந்து நாமனென்
றுழிதரு பெருநிதி யுவப்ப நல்கினான். (301) ( )

(திருமகற்)

தொகு
திருமகற் பெற்றெனச் செம்பொற் குன்றெனப்
பெருநல நிதிதலை திறந்து பீடுடை
யிருநிலத் திரவலர்க் கார்த்தி யின்னணஞ்
செருநிலம் பயப்புறச் செல்வன் செல்லுமே. (302)
(வேறு )

(நல்லுயிர்)

தொகு
நல்லுயிர் நீங்கலு நன்மாண் புடையதொர்
புல்லுயிர் தன்னொடு நின்றுழிப் புல்லுயிர்
கல்லுயிர் காட்டிற் கரப்பக் கலங்கவிழ்ந்
தல்லலுற் றாளுற்ற தாற்ற வுரைப்பாம். (303) ( )

(பொறியறு)

தொகு
பொறியறு பாவையிற் பொம்மென விம்மி
வெறியுறு கோதை வெறுநில மெய்த
விறுமுறை யெழுச்சியி னெய்துவ தெல்லாம்
நிறிமையிற் கூற நினைவி னகன்றாள். (304) ( )

(பெருமகற்)

தொகு
பெருமகற் காக்கம் பிறழ்வின்றிக் கேட்டே
திருமக டானினிச் செய்வதை யெல்லா
மொருமனத் தன்னா யுரையென லோடுந்
தெருவரு தெய்வதஞ் செப்பிய தன்றே. (305) ( )

(மணியறைந்)

தொகு
மணியறைந் தென்ன வரியற லைம்பாற்
பணிவருங் கற்பிற் படைமலர்க் கண்ணாய்
துணியிருட் போர்வையிற் றுன்னுபு போகி
யணிமணற் பேரியாற் றமரிகை சார்வாம். (306) ( )

(அமரிகைக்)

தொகு
அமரிகைக் கோசனை யைம்பது சென்றாற்
குமரிக் கொடிமதிற் கோபுர மூதூர்
தமரிய லோம்புந் தரணி திலகம்
நமரது மற்றது நண்ணல மாகி. (307) ( )

(வண்டார்)

தொகு
வண்டார் குவளையு வாவியும் பொய்கையுங்
கண்டார் மனங்கவர் காவுங் கஞலிய
தண்டா ரணியத்துத் தாபதப் பள்ளியொன்
றுண்டாங் கதனு ளுறைகுவ மென்றாள். (308) ( )

(பொருளுடை)

தொகு
பொருளுடை வாய்மொழி போற்றினள் கூற
மருளுடை மாதர் மதித்தன ளாகி
யருளுடை மாதவ ரத்திசை முன்னி
யிருளிடை மின்னி னிலங்கிழை சென்றாள். (309)
(வேறு )

(உருவ மாமதி)

தொகு
உருவ மாமதி வாண்முகத் தோடிய
விருவி லும்மெறி மாமக கரக்குழை
திருவி லும்மிவை தேமொழி மாதரைப்
பொருவி னீளதர் போக்குவ போன்றவே. (310)
(வேறு )

(சிலம்பிரங்கிப்)

தொகு
சிலம்பிரங்கிப் போற்றிசைப்பத் திருவிற் கைபோய் மெய்காப்ப
விலங்குபொற் கிண்கிணியுங் கலையு மேங்க வெறிவேற்கண்
மலங்கமணி மலர்ந்த பவளக் கொம்பு முழுமெய்யும்
சிலம்பிவலந் ததுபோற் போர்வை போர்த்துச் செல்லுற்றாள். (311) ( )

(பஞ்சியடர)

தொகு
பஞ்சியட ரனிச்ச நெருஞ்சி யீன்ற பழமாலென்
றஞ்சு மலரடிக ளரங்கண் டன்ன வருங்காட்டுட்
குஞ்சித் தசைந்தசைந்து குருதி கான்று வெய்துயிரா
வஞ்சி யிடைநுடங்க மயில்கை வீசி நடந்ததே. (312) ( )
(வேறு )

(தடங்கொடா)

தொகு
தடங்கொ டாமரைத் தாதுறை தேவியுங்
குடங்கை போலுண்கட் கூனியுங் கூர்ம்பரற்
கடங்க ளும்மலை யுங்கடந் தார்புன
லிடங்கொள் யாற்றக மெய்தின ரென்பவே. (313) ( )

(எல்லையெய்)

தொகு
எல்லை யெய்திய வாயிரச் செங்கதிர்
மல்லன் மாக்கடற் றோன்றலும் வைகிருட்
டொல்லை நல்வினை முற்படத் தோன்றிய
வல்லல் வெவ்வினை போல வகன்றதே. (314) ( )

(நுணங்குநுண்)

தொகு
நுணங்கு நுண்கொடி மின்னொர் மழைமிசை
மணங்கொள் வார்பொழில் வந்துகி டந்ததொத்
தணங்கு நுண்டுகில் மேலசைந் தாளரோ
நிணங்கொள் வைந்நுதி வேனெடுங் கண்ணினாள். (315) ( )

(வைகிற்)

தொகு
வைகிற் றெம்மனை வாழிய போழ்தெனக்
கையி னானடி தைவரக் கண்மலர்ந்
தைய வோவென் றெழுந்தன ளாய்மதி
மொய்கொள் பூமி முளைப்பது போலவே. (316) ( )

(தூவியஞ்சிறை)

தொகு
தூவி யஞ்சிறை யன்னமுந் தோகையும்
மேவி மென்புன மானின மாதியா
நாவி நாறெழின் மேனியைக் கண்டுகண்
டாவித் தாற்றுகி லாதழு திட்டவே. (317) ( )

(கொம்மைவெம்)

தொகு
கொம்மை வெம்முலைப் போதிற் கொடியனா
ளும்மை நின்றதொ ரூழ்வினை யுண்மையா
லிம்மை யிவ்விட ருற்றன ளெய்தினாள்
செம்மை மாதவர் செய்தவப் பள்ளியே. (318)
(வேறு )

(வாளுறை)

தொகு
வாளுறை நெடுங்க ணாளை மாதவ மகளி ரெல்லாந்
தோளுறப் புல்லு வார்போற் றொக்கெதிர் கொண்டுபுக்குத்
தாளுறு வருத்த மோம்பித் தவநெறிப் படுக்க லுற்று
நாளுறத் திங்க ளூர நல்லணி நீக்கு கின்றார். (319)
(வேறு )

(திருந்துதக)

தொகு
திருந்து தகரச் செந்நெருப்பிற் றேன்றோய்த் தமிர்தங் கொளவுயிர்க்குங்
கருங்கா ழகிலி னறும்புகையிற் கழுமிக் கோதை கண்படுக்குந்
திருந்து நானக் குழல்புலம்பத் தேனும் வண்டு மிசைப்புலம்ப
வரும்பொன் மாலை யலங்கலோ டாரம் புலம்ப வகற்றினாள். (320) ( )

(திங்களுகிரிற்)

தொகு
திங்க ளுகிரிற் சொலிப்பதுபோற் றிலகம் விரலிற் றானீக்கிப்
பைம்பொன் மகர குண்டலமும் பாவை கழுத்தி னணிகலமும்
வெங்கண் வேந்தற் கமிர்தாகி வேற்கட் பாவை பகையாய
வங்கண் முலையி னணிமுத்து மரும்பொற் பூணு மகற்றினாள். (321) ( )

(பஞ்சியனைய)

தொகு
பஞ்சி யனைய வேய்மென்றோட் பகுவாய் மகரங் கான்றிட்ட
துஞ்சாக் கதிர்கொ டுணைமுத்தந் தொழுதே னும்மை யெனத்துறந்
தஞ்சி வருத்து நுசுப்பினாள் வளைகை யுடைத்து மணிக்காந்த
ளஞ்சச் சிவந்த மெல்விரல்சூ ழரும்பொ னாழி யகற்றினாள். (322) ( )

(பூப்பெய்)

தொகு
பூப்பெய் செம்பொற் கோடிகமும் பொன்னா ரால வட்டமு
மாக்கு மணிசெய் தேர்த்தட்டு மரவின் பையு மடுமல்குல்
வீக்கி மின்னுங் கலையெல்லாம் வேந்தன் போகி யரம்பையரை
நோக்கி நும்மை நோக்கானீர் நோவா தொழிமி னெனத்துறந்தாள். (323) ( )

(பிடிக்கை)

தொகு
பிடிக்கை போலுந் திரள்குறங்கி னணியு நீக்கிப் பிணையன்னா
ளடிக்கிண் கிணியு மஞ்சிலம்பும் விரன்மோ திரத்தோ டகற்றியபின்
கொடிப்பூத் துதிர்ந்த தோற்றம்போற் கொள்ளத் தோன்றி யணங்கலற
வுடுத்தாள் கற்றோய் நுண்கலிங்க முரவோன் சிறுவ னுயர்கெனவே. (324)
( வேறு)

(பாலுடை)

தொகு
பாலுடை யமிர்தம் பைம்பொற் கலத்திடைப் பாவை யன்ன
நூலடு நுசுப்பி னல்லா ரேந்தவு நேர்ந்து நோக்காச்
சேலடு கண்ணி காந்தட் டிருமணித் துடுப்பு முன்கை
வாலட கருளிச் செய்ய வனத்துறை தெய்வ மானாள். (325)


தொடர்வது
1. நாமகள் இலம்பகம்- பாடல் 326-350


பார்க்க

தொகு
சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150
1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175
1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200
1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225
1. நாமகள் இலம்பகம்- பாடல் 225-250
1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275
1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300
[[]]
1. நாமகள் இலம்பகம்- பாடல் 326-350
1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375
1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-400