மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 03

மனோன்மணீயம் நாடகம் தொகு

அங்கம் 01- மூன்றாம்களம் தொகு

இடம்: கொலுமண்டபம்.

காலம்: காலை.

(சீவகன், குடிலன், நாராயணன் உரையாடியிருக்க)

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சீவகன்
நமக்கத னாலென்? நன்றே யாமெனத்
தமக்குச் சரியாம் இடத்தில் தங்குக.
எங்கே யாகினுந் தங்குக, நமக்கென்?
ஆவலோ டமைத்தநம் புரிசையை அவர்மிகக்
கேவலம் ஆக்கினர், அதற்குள கேடென்?
குறைவென்? குடில! கூறாய் குறித்தே.
குடிலன்
குறையான் ஒன்றுங் கண்டிலன் கொற்றவ!
நறையார் வேப்பந் தாராய்! நமதிடங்
கூடல் அன்றெனுங் குறையொன் றுளது.
நாடில் அஃதலால் நானொன் றறியேன் (வரி: 10)
மேலும் தவசிகள் வேடந் தாங்கினோர்
ஆலயம் ஒன்றையே அறிவர். முன்னொரு
கோவில் அமைத்ததிற் குறைவிலா உற்சவம்
ஓவ லிலாதே உஞற்றுமின் என்றவர்
ஏவினர் அஃதொழித் தியற்றினம் இப்புரி
ஆதலால் இங்ஙனம் ஓதினர், அதனை
அழுக்கா றென்றுநா மையமற் றறைதல்
ஒழுக்க மன்றே, குருவன் றோவவர்?
சீவகன்
ஐயரும் அழுக்காறடைந்தார், மெய்ம்மை
கோவில் தானா காவலர் கடமை? (20)
கேவலம், கேவலம், முனிவரும் ஆ!ஆ!
குடிலன்
அதிசய மன்றுபூ பதியே! இதுவும்.
துறந்தார் முற்றும் துறந்தவ ரல்லர்.
மறந்தார் சிற்சில. வறிதே தமக்கு
மனோகர மாகிய சினகரம் ஒன்றில்
உலகுள பொருளெலாம் உய்ப்பினும் பின்னும்
நிலைபெற நிரம்பா தவர்க்குள வாசை.
வசிட்டர் முன்னர் வாளாப் புகைத்தனர்
முசிப்பிலா மன்னர் திரவிய முற்றும்.
கௌசிகன் இரக்கவோர் மௌலி வேந்தன் (30)
பட்டபா டுலகில் யாவரே பட்டுளர்?
சிட்ட முனிவர்கள் செயலாற் பலகால்
புரந்தரன் தனதுருக் கரந்து திரிந்தனன்.
முனிவரே யாயினும் மனிதரே மீண்டும்.
இச்சை யற்றவர் இச்சகத்து யாவர்?
சீவகன்
ஒவ்வும், ஒவ்வும்நீ உரைத்தது முற்றும்.
நாராயணன்
(தனதுள்)
ஐயோ!பாவி! அருந்தவ முனிவரைப்
பொய்யன் ஆக்குவன், புரவல னோவெனில்
எடுப்பார் கைப்பிள்ளை, தடுப்பார் யாரே?
(நேரிசை வெண்பா)
நாராயணன்
(அரசனை நோக்கி)
கொல்லாய் எனப்பகைஞர் கோற்றொடியார் கும்பிட்டுப்
பல்லிளிக்கக் கண்சிவக்கும் பார்த்திபனே- பொல்லா
வெறும்எலும்பை நாய்கௌவும் வேளைநீ செல்ல
உறுமுவதென் நீயே உரை. (சேவகன் வர)
(நிலைமண்டில ஆசிரியப்பா--- ---தொடர்ச்சி)
சேவகன்
மன்னிய கலைதேர் சகடர் வந்தனர்.
சீவகன்
(நாராயணனை நோக்கி)
வரச்சொல் சேவக! உரைத்தநின் உவமையிற்
சற்றே குற்ற முள்ளது நாரணா!
குடிலன்
(தனதுள்)
அரசன் மாறாய்ப் பொருள்கிர கித்தனன்
(அரசனை நோக்கி)
வெற்றுரை வீணாய் விளம்பினன். அதனிற்
குற்றங் காணக் குறுகுதல், முற்றும்
மணற்சோற் றில்கல் தேடுதல் மானும். (சகடர் வர)

தொகு

சீவகன்
(சகடரை நோக்கி)
சுகமோ யாவரும் முதிய சகடரே!
மகிழ்வுற வும்மை நோக்கி வெகுநாள்
ஆயின தன்றே? --- ----
சகடர்
--- ---- ஆம்! ஆம்! அடியேன்.
சீவகன்
மேயின விசேடமென்? விளம்புதிர், என்குறை?
சகடன்
அறத்தா றகலா(து) அகலிடங் காத்துப்
பொறுத்ததோட் புரவல! உன்குடை நீழற்
பொருந்தும் எங்கட்(கு) அரந்தையும் உளதோ?
சுகமிது காறும். அகமகிழ் வுற்றுன்
மந்திரத் தலைவன் குடிலன் மகற்கே
எந்தன் புதல்வி வாணியை வதுவையிற்
கொடுக்கவோ ராசை, கொற்றவ! மற்றது
முடிக்கநின் கருணையே முற்றும்வேண் டுவனே.
சீவகன்
சீலஞ் சிந்தை கோல மனைத்துஞ்
சாலவும் பொருந்தும் சகடரே! அதனால் (60)
களித்தோம் மெத்த ஏ!ஏ! குடில!
ஒளித்த தென்நீ உரையா தெமக்கே?
குடிலன்
ஆவ தாயின் அறிவியா தொழிவனோ?
சீவகன்
இடையூ றென்கொல்? இடியே றன்ன
படையடு பலதே வன்றான் ஏதோ
விரும்பினன் போலும், வேறோர் கரும்பே!
குடிலன்
இல்லையெம் இறைவ! எங்ஙனம் உரைக்கேன்!
சொல்லிற் பழிப்பாம். சகடரே சொல்லுக.
சீவகன்
என்னை? சகடரே! இடையூ றென்னை?
சகடர்
பரம்பரை யாய்உன் தொழும்புபூண் டொழுகும் (70)
அடியனேன் சொல்பழு தாயின தில்லை.
முடிவிலாப் பரிவுடன் வளர்த்தவென் மொய்குழல்
ஒருத்தியே யென்சொல் வியர்த்தம் ஆக்குவள்.
ஒருதலை யாயிம் மணத்திற் குடன்படாள்.
விரிதலைப் பேய்போல், வேண்டிய விளம்பியும்
ஓராள் ஒன்றும்! உணராள் தன்னயம்;
நேராள் ஒருவழி, பாராள் நெறிமுறை;
என்னயான் செய்கேன்? இதன்மே லெனக்கும்
இன்னல் தருவதொன் றில்லை, தாதையர்
மாற்றங் கேளா மக்கள் கூற்றுவர் (80)
எனுமொழி யெனக்கே அனுபவம் இறைவ!
உரைத்தவென் கட்டுரை பிழைத்திடப் பின்னுயிர்
தரித்திருந் தென்பயன்? சாவோ சமீபம்
நரைத்த தென்சிரம், திரைத்த தென்னுடல்
தள்ளருங் காலம், பிள்ளையும் வேறிலை.
என்னுரை காத்துநீ யிம்மண முடிக்க
மன்னவ! கிருபையேல் வாழ்தும் இவ்வயின்,
இல்லையேல் முதியவென் னில்லா ளுடன்இனிச்
(கண்ணீர் துளிக்க)
செல்ல விடையளி, செல்லுதுங் காசி.
சீவகன்
ஏனிது சகடரே! என்கா ரியமிது! (90)
தேன்மொழி வாணி செவ்விய குணத்தாள்.
காணி லுரைப்பாம், வீணிவ் வழுகை.
நாராயணன்
(தனதுள்)
பாதகன் கிழவன் பணத்திற் காக
ஏதுஞ் செய்வன், இறைவனோ அறியான்
ஓதுவங் குறிப்பாய், உணரில் உணர்க.
(அரசனை நோக்கி)
(நேரிசை வெண்பா)
மாற்றலர்தம் மங்கையர்க்கு மங்கலநா ணங்கவிழ
ஏற்றியநாண் விற்பூட்டு மேந்தலே- சோற்றதற்காய்த்
தன்மகவை விற்றவரிச் சந்திரனு முன்னவையில்
என்மகிமை யுள்ளா னினி.
(நிலைமண்டில ஆசிரியப்பா, --- தொடர்ச்சி)
சீவகன்
தனிமொழி என்னை? -- ---
நாராயணன்
--- --- சற்றும் பிசகிலை
நீட்டல் விகாரமாய் நினையினும் அமையும்.
சீவகன்
காட்டுவ தெல்லாம் விகாரமே, காணாய்
கிழவரின் அழுகை --- ---
நாராயணன்
--- ---- சிலவரு டந்தான்
நெடுநாள் நிற்கும் இளையவர் அழுகை (100)
சீவகன்
விடுவிடு! நின்மொழி யெல்லாம் விகடம்.
(நாராயணன் போக)
(சகடரை நோக்கி)
அறிவிர்கொல் அவளுளம்? --- ----
சகடர்
--- ---- சிறிதியா னறிவன்,
திருநட ராசனென் றொருவனிங் குள்ளான்.
பொருவரும் புருடன்மற் றவனே யென்றவள்
சொல்வது கேட்டுளர் சிற்சில தோழியர்.
குடிலன்
(அரசனை நோக்கி)
நல்லதப் படியே நடக்கிலென்? இவர்க்கும்
பொல்லா முரண்டேன்? --- ---
சகடர்
(குடிலனை நோக்கி)
--- --- போம்!போம்! உமது
குழந்தையேல் இங்ஙனம் கூறீர்! முற்றும்,
இழந்திட வோவெனக் கித்தனை பாடு?
பூவையை வளர்த்துப் பூனைக் கீயவோ? (110)
(அரசனை நோக்கி)
காவலா! அவனைப் போலயான் கண்டிலன்;
சுத்தமே பித்தன், சொல்லுக் கடங்கான்,
தனியே யுரைப்பன், தனியே சிரிப்பன்;
எங்கேனு மொருபூ இலைகனி அகப்படில்
அங்கங் கதனையே நோக்கி நோக்கித்
தங்கா மகிழ்ச்சியில் தலைதடு மாறுவன்.
பரற்கலும் அவனுக் ககப்படாத் திரவியம்!
ஆயிரந் தடவை யாயினும் நோக்குவன்,
பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை?
சீவகன்
ஆமாம் யாமும் கண்டுளேஞ் சிலகால் (120)
நின்றால் நின்ற படியே; அன்றி
இருக்கினும் இருப்பன் எண்ணிலாக் காலம்.
சிரிக்கினும் விழிக்கினும் நலமிலை தீயதே.
அவனன் றோமுன் அஞ்சைக் களத்தில் ....
குடிலன்
அவன்றான்! அவன்றான்! அழகன்! ஆனந்தன்
சீவகன்
அழகிருந் தென்பயன்? தொழிலெலாம் அழிவே
எங்கவன் இப்போது? --- ---
குடிலன்
--- --- இங்குளன் என்றனர்.
சிதம்பரத் தனுப்பினேன்; சென்றிலன், நின்றான்.
இதந்தரு நின்கட் டளையெப் படியோ?
சீவகன்
மெத்தவும் நன்மை; அப்படி யேசெய். (130)
குடிலன்
சித்தம், ஆயினும் செல்கிலன். முனிவர்
பிரியனா தலினாற் பெயர்ந்திலன் போலும்!
சரியல, இராச்சிய தந்திரத் தவர்க்கென்?
சீவகன்
(சகடரை நோக்கி)
நல்லது சகடரே! சொல்லிய படியே
மொழிகுவம் வாணிபால்! மொய்குழற் சிறுமி
அழகினில் மயங்கினள்; அதற்கென்? நும்மனப்
படியிது நடத்துவம். விடுமினித் துயரம்.
சகடர்
இவ்வுரை யொன்றுமே என்னுயிர்க் குறுதி
திவ்விய திருவடி வாழுக சிறந்தே!
(சகடர் போக, செவிலி வர)

தொகு

சீவகன்
(செவிலியின் முக நோக்கி)
என்னை இவள்முகம் இப்படி யிருப்பது?
தோற்றம்நன் றன்றே! --- ----
செவிலி
--- --- நேற்றிரா முதலா
சீவகன்
பிணியோ என்கண் மணிக்கு? ---
செவிலி
-- -- -- பிணியா
யாதுமொன் றி்ல்லை, ஏதோ சிறுசுரம்.
சீவகன்
சுரம்!சுரம்! ஓ!ஓ! சொல்லுதி யாவும்
அரந்தையொன் றறியாள்! ஐயோ! விளைந்தவை
உரையாய் விரைவில், ஒளிக்கலை ஒன்றும்
வந்தவா றென்னை? நடந்தவா றென்னை?
செவிலி
அறியேம் யாங்கள், ஐய!அம் மாயம்
நறவுமிழ் நளினம் பொலிவிழந் திருப்ப
நம்மனை புகுந்த செல்வி, எம்முடன் (150)
மாலையி லீலைச் சோலை யுலாவி
அமுதமூற் றிருக்குங் குமுதவாய் விண்டு
நயவுரை பலவுங் குயிலின் மிழற்றி
மலைய மாருதம் வந்துவந் துந்த
நிலவொளி நீந்திநந் நெடுமுற் றத்துப்
பந்துவந் தாடிமேன் மந்திர மடைந்தே
துணைபுண ரன்னத் தூவி யணைமிசைக்
கண்படு மெல்லை - கனவோ நினைவோ-
'நண்ப என்னுயிர் நாத'வென் றேங்கிப்
புண்படு மவள்போற் புலம்புறல் கேட்டுத் (160)
துண்ணென யாந்துயி லகற்றிப் புக்குழி,
குழலுஞ் சரியும், கழலும் வளையும்
மாலையும் கரியும், நாலியும் பொரியும்;
விழியும் பிறழும்; மொழியுங் குழறும்;
கட்டழ லெரியும், நெட்டுயிர்ப் பெறியும்
நயனநீர் மல்கும், சயனமே லொல்கும்
இவ்வழி யவ்வயிற் கண்டுகை நெரியா;
தெய்வம் நோந்தேம் செய்கட னேர்ந்தேம்
அயினிநீர் சுழற்றி அணிந்தேம் பூதி
மயிலினை மற்றோ ரமளியிற் சேர்த்துப் (170)
பனிநீர் சொரிந்து நனிசேர் சாந்தம்
பூசினேம்; சாமரை வீசினேம்; அவையெலாம்
எரிமே லிட்ட இழுதாய் அவட்கு
வரவர மம்மர் வளர்க்கக் கண்டு
நொந்தியா மிருக்க, வந்தன வாயசம்
'காகா' இவளைக் காவெனக் கரைந்த
சேவலுந் திகைத்துத் திசைதிசை கூவின
கங்குல் விடிந்தும் அங்கவள் துயரஞ்
சற்றும் சாந்த முற்றில ததனால்
அரசநீ அறியிலெஞ் சிரசிரா தென்றே (180)
வெருவி யாங்கள் விளைவ துரைக்கும்
நிமித்திகர்க் கூஉய்க் கேட்டோம் நிமித்தம்
பெண்ணை யந்தார் சூடிட நுந்தம்
பெண்ணை யந்தார் சூட்டெனப் பேசினர்
எண்ணம் மற்றவர்க் கியாதோ அறியேம்
பனம்பூச் சூடியும் முனம்போ லவேசுரம்
ஏது மறியாப் பேதை! நேற்றுத்
தவஞ்செய ஆசை யென்றவள் தனக்குக்
காதனோய் காணவோ ரேதுவு மில்லை.
எந்தாய் இருக்கு நிலைமை இனிநீ (190)
வந்தே காண்குதி மன்னவ ரேறே!
சீவகன்
ஆ!ஆ! நோவிது காறுமொன் றறிகிலன்
இதுவென் புதுமை? என்செய் கோயான்?
குடிலன்
தவஞ்செய ஆசை யென்றுதாய் நவின்ற
வாக்கு நோக்கின் முனிவர் மந்திரச்
செய்கையோ என்றோர் ஐயம் ஜனிக்கும்
நேற்றங் கவட்கவர் சாற்றிய மாற்றம்
அறியலாந் தகைத்தோ? --- ---
சீவகன்
--- --- வறிதவ் வையம்
மொழியொரு சிறிதும் மொழிந்திலர், கண்டுழி
அழுதனர், அழுதாள் உடன்நம் அமுதும் (200)
ஆசி பேசியங் ககலுங் காலை
ஏதோ யந்திரம் எழுதிவைத் திடவோர்
அறையுட னங்கணந் திறவுகோ லோடு
தமக்கென வேண்டினர், அளித்தன முடனே
நமக்கதி னாலென்? நாமறி யாததோ?
என்னோ அறியேன் இந்நோய் விளைவு?

(சீவகனும் செவிலியும் போக)

குடிலன்
யந்திரத் தாபன மோஅவர் எண்ணினர்?
அவ்வள வறிவி லாரோ முனிவர்?
அவ்வள வேதான்; அன்றியென்? ஆயினும்
எத்தனை பித்தனிவ் வரசன்! பேதையின் (210)
இத்திறங் காமம் என்பதிங் கறியான்
உரைக்குமுன் கருதுவம் நமக்குறு நலமே.

(குடிலன் போக)

முதல் அங்கம் மூன்றாம் களம் முற்றிற்று தொகு

பார்க்க: தொகு

I. முதல் அங்கம் தொகு

மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 01
மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 02
மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 04
மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 05
மனோன்மணீயம்(ஆசிரிய முகவுரை, கதைச்சுருக்கம்.)
மனோன்மணீயம் மூலம் (அங்கம் 01- பாயிரம்)

II தொகு

மனோன்மணீயம்/அங்கம் 02/களம் 01

மனோன்மணீயம்/அங்கம் 02/களம் 02

மனோன்மணீயம்/அங்கம் 02/களம் 03

III தொகு

மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 01

மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 02

மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 03

மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 04

IV தொகு

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 01

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 02

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 03

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 04

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 05

V தொகு

மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 01

மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 02

மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 03