மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 03
< மனோன்மணீயம் | அங்கம் 04
மனோன்மணீயம்
தொகுஅங்கம் நான்கு
தொகுமூன்றாம் களம்
தொகு- இடம்: அரண்மனையில் ஒருசார்.
- காலம்: நண்பகல்.
(சீவகன், தனியாய்ச் சோர்ந்து கிடக்க, சேவகர் வாயில்காக்க.)
- (நேரிசை ஆசிரியப்பா)
- முதற்சேவகன்
- செய்வதென்? செப்பீர், கைதவற் கியாமோ
- ஆறுதல் கூறுவம்?
- இரண்டாம் சேவகன்
- ... ... கூறலும் வீணே!
- பெருத்த துயரிற் பேசும் தேற்றம்,
- நெருப்பிடை நெய்சொரிந் தற்றே யென்பர்.
- மூன்றாம்சேவகன்
- பணிந்தியாம் அருகே நிற்போம் அன்றித்
- துணிந்துமற் றதுதான் சொல்லுவர் யாவர்?
- நாலாம்சேவகன்
- நாரா யணரேல் தீரமாய் மொழிவர்.
- மூன்றாம்சேவகன்
- மெய்ம்மை! மெய்ம்மை! விளம்புவர் செம்மையாய்.
- முதற்சேவகன்
- எங்குமற் றவர்தாம் ஏகினர்? உணர்வைகொல்?
- நாலாம்சேவகன்
- மங்கைவாழ் மனைக்குநேர் ஓடுதல் கண்டேன் (10)
- இரண்டாம்சேவகன்
- சகிப்பளோ கேட்கில் தமியள்...
- மூன்றாம்சேவகன்
- ... ... ... ஆயினும்
- மகளால் அன்றி மன்னவன் தேறான்.
- அதற்கே சென்றனர் போலும் ஆஆ!
- இரண்டாம்சேவகன்
- நாரா யணரே நன்மதி உடையோர்.
- நாலாம்சேவகன்
- பாரீர்! இன்றவர் பண்ணிய சாகசம் 15
- இன்றியாம் பிழைத்ததிங் கிவரால் அன்றேல்...
(சீவகன் எழுந்து நடக்க)
- மூன்றாம்சேவகன்
- அரசன் அஃதோ எழுந்தான் காணீர்.
- முதற்சேவகன்
- உரைதரு கின்றான் யாதோ? ஒதுங்குமின்.
- அடுத்திவண் நிற்பீர் அமைதி! அமைதி!
- சீவகன்
- கெடுத்தேன் ஐயோ! கெடுத்தேன்! நாணம் (20)
- விடுத்துயிர் இன்னும் வீணில் தரித்தேன்
- ஆஆ! என்போல் யாருளர் வீணர்?
- யாருளர் வீணர்? யாருளர் யாருளர்?
- பாண்டியன் தொல்குலம் பட்டபா டின்றுமற்
- றிதுவோ! இதுவோ! மதிவரு குலமே! 25
- மறுவறு நாவே! மாசறு மணியே!
- அழியாப் பழிப்புனக் காக்கவோ உனது
- வழியாய் உதித்தேன் மதியிலா யானும்.
- அந்தோ! இந்து முதலா வந்த
- முன்னோர் தம்முள் இன்னார்க் கிரிந்து (30)
- மாண்டவர் அன்றி மீண்டவர் உளரோ?
- யாதினிச் செய்குவன்! ஐயோ பொல்லாப்
- பாதகன் மக்களுள் வெட்கமில் பதடி.. (பற்கடித்து)
- போர்முகத் தோடிப் புறங்கொடுத் தேற்குக்
- கார்முகம் என்செய! கடிவாள் என்செய! 35
(வில்லும் வாளும் எறிந்து)
- ஓஓ! இதனால் உண்டோர் பெரும்பயன்
(மறுபடியும் வாளை எடுத்து நோக்கிநிற்க, சேவகர் ஓடிவர)
- போ!போ! வெளியே போரிடைப் பொலியாது
- வாளா இருந்த வாளுக் கீதோ
(நாராயணன் வர)
- எனாதுயிர் ஈவேன், வினாவுவர் யாவர்?
- நாராயணன்
- மனோன்மணி தன்னை மறந்தாய் போலும்! (40)
- சீவகன்
- குழந்தாய்! குழந்தாய்!..(விழுந்து மூர்ச்சிக்க)
- சேவகர்
- .... .... கொற்றவா கொற்றவா!
- நாராயணன்
- பேசன்மின்!
(அரசனை மடியில் தாங்கி)
- முதற்சேவகன்
- .... பேசன்மின்!
- நாராயணன்
- .... .... வீசுமின்! அகன்மின்!
- முதற்சேவகன்
- வெளியே!
- நான்காம்சேவகன்
- ....பனிநீர்...
- நாராயணன்
- .... தெளிநீ சிறிது.
- சீவகன்
- குழந்தாய்! குழந்தாய்! கொன்றேன் நின்சீர்!
(எழுந்து சோர்வாயிருக்க)
- நாராயணன்
- இழந்தால் இருப்பளோ? என்செயத் துணிந்தாய்? (45)
- சீவகன்
- நஞ்சே எனக்கியான்! என்செய் வேனினி!
- இருதலைக் கொள்ளியில் எறும்பா னேனே!
- செருமுகத்து இரிந்தென் மானம் செகுத்தும்
- உயிரினை ஓம்பவோ உற்றது! ஓர்சிறு
- மயிரினை இழக்கினும் மாயுமே கவரிமா. (50)
- பெருந்தகை பிரிந்தும்ஊன் சுமக்கும் பெற்றி
- மருந்தாய் எனக்கே இருந்ததே நாரணா!
1@
தொகு- நாராயணன்
- மன்னவ! யார்க்கும் தன்னுடல் மாய்த்தல்
- அரிதோ? பெரிதாம் அஞர்வந் துற்றுழிக்
- கருதிய தமரைக் காட்டிவிட் டோடி (55)
- ஒளிப்பதோ வீரமென் றுன்னினை?
- சீவகன்
- .... .... .... ஓ! ஓ!
- போரிடை ஓடுவோன் வீரம்நா டுவனோ?
- நாராயணன்
- காலமும் களமும் கண்டு திரும்புதல்
- சாலவும் வீரமே, தக்கவை உணரும்
- தன்மையில் சௌரியம் மடமே, சூழ்ச்சிசேர் (60)
- வன்மையே வீரத் துயிராம் மன்னவ!
- சீவகன்
- போதும் போதும்நின் போலி நியாயம்!
- சாதலுக் கஞ்சியோர் தனையளுக் காகச்
- சூதக உடம்பைச் சுமக்கத் துணிந்தேன்.
- மன்னனும் அல்லன், வழுதியும் அல்லன்! (65)
(சேவகரை நோக்கி)
- என்னுடன் இருமின்! ஏன்நிற் கின்றீர்?
- முதற்சேவகன்
- இறைவ! ஈதென்னை!
- சீவகன்
- .... .... இறைவனென் றென்னை
- இசைப்பது வசையே, இஃதோ காண்மின்!
- அசைந்த தொருநிழல், அஃதோ யானெனப்
- பாருமின். பாண்டியன் போரிடைப் பட்டான்! (70)
- வாரும் வாரும்! இருமின் யாவரும்.
- நாராயணன்
- வீணாய் வெற்றுரை விளம்பலை வேந்த!
- காணாய் அஃதோ! அவர்விடும் கண்ணீர்
(சேவகர் அழுதலை நோக்கி)
- சீவகன்
- வம்மின் வம்மின்! எம்மனீர்! ஏனிது?
- முதற்சேவகன்
- பருதிகண் டன்றோ பங்கயம் அலரும்? (75)
- அரசநீ துயருறில் அழுங்கார் யாரே?
- சீவகன்
- பிரியசே வகரே! பீடையேன்! துயரேன்!
- இழந்தனம் முற்றும் என்றோ எண்ணினீர்!
- அழிந்ததோ நம்மரண்? ஒழிந்ததோ நம்படை?
- மும்மையில் இம்மியும் உண்மையில் இழந்திலம். (80)
- வெல்லுவம் இனியும், மீட்போம் நம்புகழ்.
- அல்லையேற் காண்மின்!
- நாராயணன்
- .... .... அதற்கேன் ஐயம்?
- இறைவ!இப் போதுநீ இசைத்தவை சற்றும்
- குறைவிலை. தகுதியே! கூறிய படியே
- ஆவது காண்குவம்; அழகார் அம்புயப் (85)
- பூவின துயர்வு பொய்கையின் ஆழத்
- தளவா வதுபோல், உளமது கலங்கா
- ஊக்கம் ஒருவன தாக்கத் தளவெனத்
- துணிவார்க் குறுதுயர், தொடுமுன் எவ்வும்
- அணியார் பந்துறும் அடிபோல், முயற்சியில் (90)
- இயக்கிய இன்பம் பயக்குமென் றிசைக்கும்
- சான்றோர் சொல்லும் சான்றோ அன்றோ?
- ஆதலின் இறைவ!நீ ஓதிய படியே
- உள்ளத் தெழுச்சியும் உவலையோ டூக்கமும்
- தள்ளா முயற்சியும் தக்கோர் சார்பும் (95)
(குடிலனும் பலதேவனும் வர)
- உண்டேல் ஊழையும் வெல்லுவம், மண்டமர்
- அடுவதோ அரிது வடிவேல் அரசே!
- குடிலன்
- (தனக்குள்)
- இப்பரி சாயர சிருப்பது வியப்பே!
- ‘தக்கோன்’ என்றனன் சாற்றிய தென்னோ!
(அழுவதாகப் பாவித்து
ஒருபுறம் ஒதுங்கி முகமறைந்து நிற்க)
- சீவகன்
- ஏனிது குடில! ஏன்பல தேவ! (100)
- ஆனதென்? அமைச்ச! ஆ!ஆ!
2@
தொகு- குடிலன்
- .... .... .... அடியேன்
- வருதி இப்புறம்! வருதியென் அருகே!
- குடிலன்
- (அழுது)
- திருவடிச் சேவையில்...
- சீவகன்
- .... .... செய்தவை அறிவோம்.
- குடிலன்
- (ஏங்கி)
- ஜனித்த நாள்முதலா...
- சீவகன்
- .... .... உழைத்தனை! உண்மை
- குடிலன்
- உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒருங்கே... (105)
- சீவகன்
- விடுத்தனை. உண்மை, விளம்பலென்?
- குடிலன்
- .... .... .... உண்மையில்
- பிசகிலன் என்பது...
- சீவகன்
- நிசம்நிசம்! அறிவோம்!
- குடிலன்
- (விம்மி)
- எல்லாம் அறியும் ஈசனே சான்றெனக்கு
- அல்லால் இல்லை...
- சீவகன்
- .... .... அனைவரும் அறிவர்,
- குடிலன்
- அருமை மகனிவன் ஒருவன் (110)
- சீவகன்
- .... .... .... அறிகுவம்.
- குடிலன்
- பாராய் இறைவ!
(பலதேவன் மார்பினைச் சுட்டிக்காட்டி)
- சீவகன்
- (பலதேவனை நோக்கி)
- .... .... வாராய்.
- குடிலன்
- .... .... .... இப்புண்
- ஆறுமா றென்னை? தேறுமா றென்னை?
- உன்னருள் அன்றிமற் றென்னுள தெமக்கே...
- சீவகன்
- அம்பின் குறியன்று, யாதிது?
- குடிலன்
- .... .... .... அடியேம்
- அன்பின் குறியிது! (115)
- சீவகன்
- .... .... ஆஆ!
- குடிலன்
- .... .... .... ஆயினும்
- பொல்லாப் பகைவர் பொய்யர் அவர்பலர்...
- இல்லா தாக்குவர் இறைவ! என் மெய்ம்மை.
..(அழ)
- சீவகன்
- வெல்வோம் நாளை! விடுவிடு துயரம்!
- குடிலன்
- (தனதுள்)
- அறிந்திலன் போலும் யாதும்!
(சிறிது உளந்தெளிந்து)
- சீவகன்
- .... .... .... அழுங்கலை.
- வெறுந்துய ரேனிது? விடுவிடு! உலகில் (120)
- வெற்றியும் தோல்வியும் உற்றிடல் இயல்பே,
- அழுவதோ அதற்கா விழுமிய மதியோய்!
- குடிலன்
- (தனதுள்)
- சற்றும் அறிந்திலன்! என்னையென் சமுசயம்!
- சீவகன்
- முற்றிலும் வெல்லுதும் நாளை அதற்கா
- ஐயுறேல்! அஞ்சலை! ஆயிரம் வஞ்சியர் (125)
- நணுகினும் நாளை...
- குடிலன்
- .... .... நாயேற் கதனில்
- அணுவள வேனும் இலையிலை அயிர்ப்பு
- நெடுநாள் ஆக நின்பணி விடைக்கே
- உடலோ டாவியான் ஒப்பித் திருந்தும்
- கெடுவேன், அவையிக் கிளர்போ ரதனில் (130)
- விடுமா றறியா வெட்கமில் பதடியாய்க்
- கொடியார் சிலர்செய் கொடுஞ்சூ ததனால்
- தடுமா றைடைந்தென் தகைமையும் புகழும்
- கொடுமா றுகுத்த கெடுமதி ஒன்றே
- கருத்திடை நினைதொறும் கண்ணிடு மணல்போல், (135)
- உறுத்துவ திறைவ! ஒவ்வொரு கணமும்,
- பகைவர்தம் படைமேற் படுகிலா வுடலம்
- கெடுவேற் கென்னோ கிடைத்ததிங் கறியேன்!
- அடுபோர்க் களத்திலாண் டடைந்திலன்! ஐயோ!
- வடிவேல் ஒன்றென் மார்பிடை இதுபோல் (140)
(பலதேவனைக் காட்டி)
- படுமாறில்லாப் பாவியேன், எங்ஙனம்
- நோக்குவன் நின்முகம்? காக்குதி! ஐயோ!
- தாக்குறு பகைவர் தம்படை என்னுயிர்
- போக்கில, நீயே போக்குதி! காக்குதி!
- இரக்கமுற் றுன்திருக் கரத்துறை வாளிவ் (145)
- உரத்திடை ஊன்றிடில் உய்குவன் அன்றேல்...
(அழுது)
- சீவகன்
- உத்தம பத்தியில் உமைப்போல் யாரே!
- நாராயணன்: (தனதுள்)
- மெத்தவும் நன்றிந் நாடகம் வியப்பே!
- மற்றக் கோழைக் குற்றதெப் படிப்புண்?
- போரிடை உளதன் றியார்செய் தனர்பின்! (150)
- உணர்குவம். இப்பேச் சோய்விலாப் பழங்கதை.
(நாராயணன் போக)
- குடிலன்
- சித்தமற் றவ்வகை தேர்ந்துள தென்னில்
- இத்தனை கருணையும் எனக்கென் அருளுதி.
- பாதநற் பணிவிடை படைத்தநாள் முதலா
- யாதுமொன் றெனக்கா இரந்திலன் உணர்வை.
- ஓதிய படியென் உரங்கிழித் துய்ப்பையேல்
- போதுமிங் கெனக்(கு)அப் போதலோ காண்குவர்
- மன்னுல குள்ளார் என்னுள நிலைமை!
- உன்பெயர்க் குரிய ஒவ்வோர் எழுத்தும்
- என்னுரத் தழியா எழுத்தினில் எழுதி (160)
- இருப்பதும் உண்மையோ இலையோ என்பது
- பொருக்கெனக் கிழித்திங் குணர்த்துதி புவிக்கே.
(முழந்தாளூன்றி நின்றழ)
- சீவகன்
- அழுவதென்? எழுஎழு! யாரறி யார்கள்!
- உன்னுளம் படும்பா டென்னுளம் அறியும்
- என்னநு பவங்கேள் குடிலா! ஈதோ (165)
- சற்றுமுன் யானே தற்கொலை புரியத்
- துணிந்து வாள் உருவினேன், துண்ணென நாரணன்
- அணைந்திலன் ஆயினக் காலை...
- குடிலன்
- .... .... .... ஐயோ!
- சீவகன்
- தடுத்தான், விடுத்தேன்!
- குடிலன்
- (தனதுள்)
- .... .... கெடுத்தான் இங்கும்!
3@
தொகு- சீவகன்
- அரியே றன்ன அமைச்ச! பெரியோர் (170)
- தரியார், சகியார் சிறிதொரு சழக்கும்.
- ஆயினும் அத்தனை நோவதற் கென்னே?
- வாளுறை சேர்த்திலம்! நாளையும் போர்செயக்
- கருதினோம்! உறுதி! வெருவியோ மீண்டோம்?
- குடிலன்
- வஞ்சியர் நெஞ்சமே சான்றுமற் றதற்கு. (175)
- மீண்டதிற் குறைவென்? ஆஆ! யாரே
- வெருவினார்? சீசீ! வீணவ் வெண்ணம்!
- இருதினம் பொருதனர் சிறுவனை வெலற்கென்
- றொருமொழி கூறநம் உழையுளார் சிலர்செய்
(நாராயணன் நின்றவிடம் நோக்கி)
- சதியே யெனக்குத் தாங்காத் தளர்ச்சி. (180)
- அதுவலால் என்குறை? மதிகுல மருந்தே!
- சென்றுநாம் இன்று திரும்பிய செயலே
- நன்றெனப் போர்முறை நாடுவோர் நவில்வர்,
- செவ்விதில் ஓடிநாய் கவ்விடும், சிறந்த
- மடங்கலோ எதற்கும் மடங்கியே குதிக்கும். (185)
- குதித்தலும் பகையினை வதைத்தலும் ஒருகணம்.
- நாளைநீ பாராய்! நாந்தூ தனுப்பும்
- வேளையே அன்றி விரிதலை அனந்தை
- ஊரார் இவ்வயின் உற்றதொன் றறியாச்
- சீராய் முடியுநம் சிங்கச் செருதிறம்! (190)
- மீண்டோம் என்றுனித் தூண்டிலின் மீனென
- ஈண்டவன் இருக்குக, இருக்குக. வைகறை
- வரும்வரை இருக்கில் வந்தவிவ் வஞ்சியர்,
- ஒருவரும் மீள்கிலர். ஓர்கால் இக்குறி
- தனக்கே தட்டிடில் தப்புவன் என்பதே (195)
- எனக்குள துயரம், அதற்கென் செய்வோம்!
- ஆதலின் இறைவ! அஞ்சினம் என்றொரு
- போதுமே நினையார் போர்முறை அறிந்தோர்.
- சீவகன்
- எவ்விதம் ஆயினும் ஆகுக. வைகறை,
- இதுவரை நிகழ்ந்தவற் றெதுகுறை வெனினும் (200)
- அதுவெலாம் அகலநின் றரும்போர் ஆற்றுதும்.
- குடிலன்
- வஞ்சியான் இரவே அஞ்சிமற் றொழிந்திடில்
- அதுவுமாம் விதமெது?
(சேவகன் வர)
- சேவகன்
- .... .... உதியன் தூதுவன்
- உற்றுமற் றுன்றன் அற்றம்நோக் கினனே!
- குடிலன்
- சரி!சமா தானம் சாற்றவே சார்ந்தான். (205)
- சீவகன்
- பெரிதே நின்மதி ஆஆ! வரச்சொல்.
(வஞ்சித்தூதன் வர)
- தூதன்
- தொழுதனன், தொழுதனன்! வழுதி மன்னவா!
(வணங்கி)
- அருளே அகமாத் தெருளே மதியா
- அடலே உடலாத் தொடைபுக ழேயா
- நின்றவென் இறைவன் நிகழ்த்திய மாற்றம் (210)
- ஒன்றுள துன்வயின் உரைக்க என்றே
- விடுத்தனன் என்னை அடுத்ததூ துவனா.
- இன்றுநீர் இருவரும் எதிர்த்ததில் யாவர்
- வென்றனர் என்பது, விளங்கிடும் உனக்கே.
- பொருதிட இனியும் கருதிடில் வருவதும் (215)
- அறிகுவை! அதனால் அறிகுறி உட்கொண்
- டுறுவது முன்னுணர்ந் துறவா வதற்கே
- உன்னிடில் தாம்பிர பன்னியி னின்றொரு
- கும்ப நீருமோர் நிம்ப மாலையும்
- ஈந்தவன் ஆணையில் தாழ்ந்திடில் வாழ்வை! (220)
- மதிற்றிற மதித்திரு மாப்பையேல் நதியிடை
- மட்பரி நடாத்தினோர்க் கொப்பா குவையே!
- ஆதலின் எங்கோன் ஓதிய மாற்றம்
- யாதெனிற் கைதவா! வைகறை வருமுன்
- தாரும் நீரும்நீ தருவையேற் போரை (225)
- நிறுத்துவன். அல்லையேல் நின்புறம் முடிய
- ஒறுத்திட உழிஞையும் சூடுவன். இரண்டில்,
- எப்படி உன்கருத் தப்படி அவற்கே.
- சீவகன்
- நன்று! நன்று!நீ நவின்றனை சிறுவன்
- வென்றதை நினைத்தோ, அலதுமேல் விளைவதைக் (230)
- கருதித் தன்னுளே வெருவியோ, உன்னை
- விடுத்தனன் என்பதிங் கெடுத்துரை யாதே
- அடுத்திவண் உள்ளார் அறிகுவர் ஆயினும்,
- மற்றவன் தந்தசொற் குற்ற நம்விடை
- சாற்றுதும் கேட்டி, தன்பொருள் ஆயின் (235)
- ஏற்றிரந் தவர்க்கியாம் யாதுமீந் திடுவோம்
- அருந்திடச் சேரன் அவாவிய புனலும்
- விரும்பிய சுரும்பார் வேம்பும் விதுகுலம்
- வரும்பரம் பரைக்காம் அல்லால் எனக்கே
- உளவல; அதனால் ஒருவனீந் திடுதல் (240)
- களவெனக் காணுதி. மற்றுநீ கழறிய
- உழிஞையங் குளதெனில் வழுதிபாற் பழுதில்
- நொச்சியும் உளதென நிச்சயம் கூறே.
4@
தொகு- தூதன்
- ஐயோ! கைதவா! ஆய்ந்திலை உன்றன்
- மெய்யாம் இயல்பு. மிகுமுன் சேனையின் (245)
- தீரமும் திறமும் உனதரும் வீரமும்
- கண்முற் படுமுன் கவர்ந்தசே ரற்கிம்
- மண்வலி கவர்தலோ வலிதென் றுன்னினை?
- என்மதி குறித்தாய்! எடுத்தகைப் பிள்ளாய்!
- குடிலன்
- நில்லாய் தூதுவ! நின்தொழில், உன்னிறை (250)
- சொல்லிய வண்ணம் சொல்லி, யாங்கள்
- தரும்விடை கொடுபோய்ச் சாற்றலே அன்றி
- விரவிய பழிப்புரை விளம்புதல் அன்றே.
- அதனால் உன்னுயிர் அவாவினை யாயின்
- விரைவா யேகுதி விடுத்தவன் இடத்தே. (255)
- தூதன்
- குடிலா! உன்மனப் படியே! வந்தனம்.
- மருவிய போரினி வைகறை வரையிலை.
- இரவினில் வாழுமின் இவ்வர ணகத்தே.
(தூதுவன் போக)
- குடிலன்
- தூதிது சூதே, சொன்னேன் அன்றோ?
- சீவகன்
- ஏதமில் மெய்ம்மையே ஆயினும் என்னை? (260)
- நீரும் தாரும் யாரே அளிப்பர்?
- எனவோ அவைதாம்? யாதே வரினும்
- மனவலி ஒல்கலை மானமே பெரிது.
- சிதைவிடத் துரவோர் பதையார் சிறிதும்
- புதைபடு கணைக்குப் புறங்கொடா தும்பல். (265)
- மதிகுல மிதுகா றொருவரை வணங்கித்
- தாழ்ந்துபின் நின்று வாழ்ந்ததும் அன்று!
- மாற்றார் தமக்கு மதிக்குல மாலையும்
- ஆற்றுநீ ருடன்நம் ஆண்மையும் அளித்து
- நாணா துலகம் ஆளல்போல் நடித்தல் (270)
- நாணாற் பாவை உயிர்மருட் டுதலே
- ஒட்டார் பின்சென் றுயிர்வாழ் தலினும்
- கெட்டான் எனப்படல் அன்றே கீர்த்தி!
- அதனாற் குடிலா! அறிகுதி துணிபாய்.
- எதுவா யினும்வரில் வருக! ஒருவனை (265)
- வணங்கியான் இணங்குவன் எனநீ மதியேல்
(எழுந்து)
- வருவோம் நொடியில். மனோன்மணி நங்குலத்
- திருவினைக் கண்டுளந் தேற்றி மீள்குவம்.
- கருதுவ பலவுள காணுதும்.
- இருநீ அதுகா றிவ்வயின் இனிதே. (280) (பா-1)
(சீவகன் போக)
- குடிலன்
- கருதுதற் கென்னே! வருவது கேடே.
- தப்பினாய் இருமுறை. தப்பிலி நாரணன்
- கெடுத்தான் பலவிதம். மடப்பயல் நீயே
(பலதேவனை நோக்கி)
- அதற்கெலாம் காரணம்.
- பலதேவன்
- .... .... அறிகுவை, ஒருவன்
- இதுபோல் வேலுன் நெஞ்சிடை இறக்கிடில். (285)
- குடிலன்
- உன்நடக் கையினால்,
- பலதேவன்
- .... .... உன்நடக் கையினால்!
- மன்னனைக் குத்திட உன்னினை, ஊழ்வினை!
- என்னையே குத்திட இசைந்தது; யார்பிழை?
- குடிலன்
- பாழ்வாய் திறக்கலை. ஊழ்வினை! ஊழ்வினை!
- பகைக்கலை எனநான் பலகாற் பகர்ந்துளேன். (290)
- பலதேவன்
- பகையோ? பிரியப் படுகையோ? பாவி!
- குடிலன்
- பிரியமும் நீயும்! பேய்ப்பயல்! பேய்ப்பயல்!
- எரிவதென் உளமுனை எண்ணும் தோறும்
- அரியவென் பணமெலாம் அழித்துமற் றின்று...
- பலதேவன்
- பணம்பணம் என்றேன் பதைக்கிறாய் பிணமே! (295)
- நிணம்படு நெஞ்சுடன் நின்றேன். மனத்திற்
- கண்டுநீ பேசுதி! மிண்டலை வறிதே!
(பலதேவன் போக)
- குடிலன்
- விதியிது! இவனுடன் விளம்பி யென்பயன்?
- இதுவரை நினைத்தவை யெல்லாம் போயின!
- புதுவழி கருதுவம்! போயின போகுக! (300)
(மௌனம்)
- எதுவுமிந் நாரணன் இருக்கின்,
- அபாயம், ஆஆ! உபாயமிங் கிதுவே. (பா-2)
(குடிலன் போக)
நான்காம் அங்கம், மூன்றாம் களம் முற்றிற்று
தொகுபார்க்க
தொகுIV
மனோன்மணீயம்: நான்காம்அங்கம், மூன்றாங்களத்தின் கதைச்சுருக்கம்
I
தொகுமனோன்மணீயம் மூலம்(முதல்அங்கம்-பாயிரம்)