மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 03

மனோன்மணீயம்- நாடகம் தொகு

மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 03 தொகு

மூன்றாம் அங்கம்- மூன்றாங் களம்: கதைச்சுருக்கம் தொகு

அரண்மனையிலே கன்னிமாடத்திலே, நிலாமுற்றத்தில், குமரி மனோன்மணி உலவுகிறாள். நடு இரவு. வாணியும், அருகில் இருக்கிறாள். அறையில் படுத்திருக்கும் செவிலி, “ஏனம்மா, நடு இரவில் எழுந்து உலாவுகிறாய்? கண்விழித்தால், உடம்பு சூடுகொள்ளும். படுத்து உறங்கு” என்றாள். “எனக்கு, உடம்பு வியர்க்கிறது; இங்கேயே இருக்கிறேன். நீதூங்கு” என்று மனோன்மணி சொல்லி, “வாணி! உனக்கும் தூக்கம் பிடிக்கவில்லையோ” என்று கேட்டாள்.
“கண்விழித்து எனக்குப் பழக்கம்” என்றாள், வாணி.
“அன்றிற் பறவைகள் ஏன், இப்படி இரைகின்றன! முனிவர் அறையில், ஓசை கேட்கிறது; நாள்தோறும், நிலத்தைத் தோண்டுகிறது போலச் சந்தடி கேட்கிறது. இன்று, ஊரிலும், சந்தடியாக இருந்தது. என்ன காரணம்?” என்று மனோன்மணி கேட்டாள்.
வாணி, சேரன் படையெடுத்துவந்த செய்தியைச் சொல்லாமல், உரையாடலை, வேறு பக்கமாகத் திருப்புகிறாள்.
“தாங்கள் கண்டது கனவுதானா?” என்று கேட்டாள்.
“நான் கண்டது கனவும் அல்ல, நனவும் அல்ல” என்றாள், மனோன்மணி.
“அவரைக்கண்ணால் கண்டதில்லையோ?”
“இல்லை. ஆனால், கண்ணிலேதான் இருக்கிறார். நீ, ஓவியம் எழுதவல்ல சித்திரலேகையாக இருந்தால், அவரைப்போலப் படம் எழுதிக்காட்டுவாய்.”
“இது புதுமை.”
“அது இருக்கட்டும். வாணி! உன்பாட்டைக் கேட்டு நெடுநாளாயிற்று. இப்போது, ஒரு பாட்டுப் பாடு” என்றாள், மனோன்மணி.
“என்பாட்டைத்தான், எல்லோரும் தெரிந்திருக்கிறார்களே! உங்கள் பாடுதான், ஒருவருக்கும் தெரியாது.”
“வாணி! இப்போது, இது பற்றிப் பேசவேண்டாம். இதையெல்லாம் மறக்க, நீ ஒரு பாட்டுப் பாடு” என்று மனோன்மணி வெதும்பினாள். வாணி, அதற்கிணங்கி, வீணை வாசித்துக்கொண்டு, சிவகாமி சரிதத்தைப் பாடுகிறாள். அவள் பாடிய சிவகாமியின் கதை இதோ:-

சிவகாமியின் கதை தொகு

காடெங்கும், திசை தெரியாமல் அலைந்து திரிந்து அலுத்துப்போன ஒரு வாலிபன், காட்டில், ஒருமுனிவரைக் கண்டு வணங்கிக் கூறினான்: “அடிகளே! வழிதெரியாமல் அலைகிற அடியேனுக்கு, ஒரு வழிகூறவேண்டும். அளவைக் குறிக்காமலே நிழலை அளப்பது போல, இந்தக் காடு முழுவதும் அலைந்து திரிந்தேன். காடோ, முடிவில்லாமல் வளர்ந்து கொண்டே போகிறது. இரவும் வந்துவிட்டது; இனி, நடக்கவியலாது. நான் தங்க ஓர் இடம் காட்டியருள வேண்டும்” என்று கேட்டான்.
வாலிபனின் வேண்டுகோளைக் கேட்ட முனிவர் கூறினார்: “வீடு என்றும், மடம் என்றும் எனக்குக் கிடையாது. ஏகாந்தப்பெருவெளிதான், என்னுடைய வீடு. ஆசையெல்லாம் துறந்த வீரர்கள்தாம், என் வீட்டை அடையமுடியும். இங்கே, பாயும் பூவணையும் கிடையா. பாலுணவு கிடைக்காது. இளைஞனே! நீ விரும்பினால், என்னுடன் வா; இல்லையானால், நீ விரும்பிய இடம் போய்க்கொள்.” இவ்வாறு முனிவர் கூறியதைக் கேட்ட வாலிபன், ஏதோ ஒரு நினைவு தூண்ட, முனிவரை வணங்கி, அந்த முனிவரைத் தொடர்ந்து பின்னாலே நடந்தான்.
கரிய திரைச்சீலைகள் திசைதெரியாமல் மூடிக்கொண்டதுபோல, இரவு வந்தது; வானத்திலே, விண்மீன்கள் வெளிப்பட்டு, ஒன்றோடொன்று ஏதோ இரகசியம் பேசிப் புன்முறுவல் பூப்பது போலத் தோன்றின. இணைபிரிந்த அன்றிற்பறவைகள், ஏங்கிக் கூவின. வௌவால்கள் பறந்தன. மின்மினிப் பூச்சிகள் மினுமினுத்து, வெளிச்சந் தந்தன.அந்த இருண்ட காட்டிலே, பாம்பின் தலையில் உள்ள மாணிக்க மணியும், யானைகளின் வெண்மையான தந்தங்களும், புலிகளின் அனல்போன்ற விழிகளும் ஒளிகொடுத்தன. ஊசி சென்ற வழியே நூல் செல்வதுபோல, முனிவரைப் பின்தொடர்ந்து வாலிபன் நடந்தான். முனிவர், புதர்களில் நுழைந்தும், மலையேறியும், குகையில் இழிந்தும், ஆற்றைக்கடந்தும் நடந்தார். வாலிபனும், பின்தொடர்ந்து சென்றான். கடைசியில் அவர், ஒரு வெளியான இடத்திற்கு வந்தார். அங்கு நெருப்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. முனிவர், அருகில் இருந்த விறகுகளை எடுத்து, நெருப்பில் போட்டார். இளைஞனைப் பார்த்து, “வழிநடந்த இளைப்பும், பசியின் களைப்பும் அகல, நெருப்பருகில் இருந்து, இக்காய்கனி கிழங்குகளை அருந்து” என்றுகூறிப் பழங்களையும் கிழங்குகளையும் அருகில் வைத்தார். யோகமுறையினால் மனத்தை அடக்கத் தெரியாதவர்கள், மனச்சாந்தியைப் பெறுவதற்கு, மலைகளையும் கடல்களையும் தாண்டி அலைகிறார்கள்; என்னே! மனிதரின் அறிவு” என்று கூறி நகைத்தார்.
ஆனால், இளைஞனோ, மோனமாக நின்றான். “உனக்குக் கூச்சம் ஏன்? நெடுந்தூரம் அலைந்து வருந்திப் பசித்திருக்கிறாய். நெருப்பின் அருகில் சென்று, குளிர்காய்ந்து, உணவை அருந்து; உன் சோர்வு நீங்கும்” என்றார். வாலிபன், பதுமைபோல அசையாது நின்றான். முனிவர், இரண்டு மூன்று முறை கூறினார். அவன் அசையவில்லை. அப்போது, நெருப்புக் கொழுந்து விட்டு எரிந்து, வெளிச்சம் தந்தது. முனிவர் அவ்வாலிபன் முகத்தை, அவ்வெளிச்சத்தின் உதவியால், ஊன்றிப் பார்த்தார். அவன் கண்களில் நீர் வழிய, தலைகுனிந்து நின்றான். முனிவர் கேட்டார்: “வீட்டில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டு இப்படி வந்துவிட்டாயா? உனக்கு என்ன கவலை? உன் மனத்தில் இருப்பதைச்சொல்லு. பெரும்பொருளை இழந்தனையா? நண்பர் இகழ்ந்தனரா? நீ காதலித்த பெண், உன்னைக் கைவிட்டனளா? உண்மையைக் கூறு. ஐயோ! இவ்வுலகத்துச் சுகங்களெல்லாம், இதோ, இந்தத் தீயில் எழுந்து அடங்குகின்ற நிழல்போன்றவை. நண்பர்களும், உறவினரும் நாடிவருவது, நெய்க்குடத்தை மொய்க்கவரும் எறும்பு போன்றது. காதல் என்பது, முயற்கொம்பு. பெண்கள் கபட எண்ணம் உடையவர்கள்.” இவ்வாறு முனிவர் கூறியதைக் கேட்ட வாலிபன், கனவிலிருந்து விழித்தெழுபவன் போல விழித்து வெட்கத்துடன் முகம் வெளுத்து நின்றான். பிறகு அவ்வாலிபன், தான் அணிந்திருந்த வேடத்தைக் கலைத்தான். வாலிபத்துறவியின் வேடம் மாறி, அழகான மங்கையொருத்தியின் வடிவமாக ஆனான்.
பெண்ணாக மாறிய அம்மங்கை, முனிவரின் பாதங்களில் தலைவைத்து வணங்கிக் கூறுகிறாள்: “காவிரிப்பூம் பட்டினத்திலே, ஒரு தாய் வயிற்றில், இரண்டு பெண்களும், ஒரு மகனும் ஆக மூவர் பிறந்தார்கள். இரண்டு பெண்களில் ஒருத்திக்கு, மகட்பேறு இல்லை; மற்றொருத்திக்குப் பாவியாகிய நான், மகளாகப் பிறந்தேன். என் பெயர் சிவகாமி. அந்த ஆண்மகனுக்கு ஒரு பிள்ளை. அந்தப் பிள்ளையும் நானும், சிறுவயதில், ஒன்றாக வளர்ந்தோம். அவர் அழகர். அன்புள்ளவர். நாங்கள் இருவரும், ஒருவரையொருவர் காதலித்தோம். அவர் பெயரை, என் நா கூறாது.” இதைக்கேட்ட முனிவரின் உடல் சிலிர்த்தது; கண்களில் நீர்வழிந்தது. அவர், அதை மறைப்பதற்கு, நெருப்பில் விறகு இடுபவர்போலத் திரும்பினார்.
மங்கை, மேலும் கூறினாள்: “பிள்ளைப்பேறற்ற என் சிறிய தாய், பெருஞ்செல்வம் படைத்தவள். அவள், அச்செல்வம் முழுவதையும், எனக்குக் கொடுத்தாள். பாவி, நான், அச்செல்வத்தினால் மதிமயங்கினேன். அவரை, நான், அசட்டை செய்தேன். பொருளுக்காகப் பொய்க்காதல் பேசி, என்னை மணக்கப் பலர் வந்தார்கள். என் காதலரைத்தவிர, நான், அவர்களை விரும்பினேன் இல்லை. ஆனால், செல்வச் செருக்கால், குறும்புத்தனத்தால், தருக்குக் கொண்டேன். அவர், தனது கருத்தைக் குறிப்பாக உணர்த்தியும், நான் வாளா இருந்தேன். கடைசியில், அவர், என்னைவிட்டு அகன்றார். அவரைத் தேடினேன். அவர் காணப்படவில்லை. பலநாள் தேடினேன்; கிடைக்கவில்லை. நெடுநாள் தேடியும், அவர் இருந்த இடம் தெரியவில்லை. கடைசியாக, அவரைக் கண்டுபிடிப்பது, இல்லையேல் உயிரை மாய்த்துக்கொள்வது என்று தீர்மானஞ்செய்து, ஆண்வேடந் தாங்கி அலைந்து திரிந்தேன். எங்கேயும் தேடினேன்; பல இடங்களில் அலைந்தேன்; காணாமல் அலுப்படைந்தேன். இதுவரையிலும், அவரைக் கண்டேன் இல்லை. முனிவர் பெருமானே! என் காதலரின் சாயல், உம்மிடம் இருப்பதைக் காண்கிறேன். ஆகையால்தான் என்கதையை, உம்மிடம் கூறினேன். இனி நான் உயிர்வாழ்ந்து பயனில்லை. இதோ, இந்தத் தீயே எனக்குக்கதி” என்று சொல்லி மூண்டெழுகின்ற தீயில் பாய்ந்தாள். உடனே மின்னல் போல முனிவர் பாய்ந்து, அவளைப் பிடித்துத் தடுத்தார். “சிவகாமி! நான்தான் உன்னுடைய சிதம்பரன்!” என்று கூறினார். அவர் நா குழறிற்று. சிவகாமியும் சிதம்பரனும் ஒன்றாயினர். பார்வதியும், சரசுவதியும், இலக்குமியும் வந்து, அவர்களை வாழ்த்தினார்கள்; அருந்ததியும் வந்து ஆசி கூறினாள்.
@@@ @@@ @@@
இந்தச்சிவகாமி சரிதத்தை, வாணி இசைப்பாடலாகப் பாடினாள். இதைக்கேட்ட மனோன்மணி, வாணியைப் பாராட்டினாள். பிறகு, “வாணி! உன்காதலன் எங்கு இருக்கிறார்?” என்று வினவினாள்.
“என் மனத்தில் இருக்கிறார்!” என்றாள்.
“வெளியில், எங்கே இருக்கிறார்?”
“அறியேன்; முனிவருடைய ஆசிரமத்தில் இருப்பதாக நாராயணர் கூறினார்.”
“ஏன்? என்ன நடந்தது? நிகழ்ந்ததைக் கூறு”
வாணி சொன்னாள்: “ஒருநாள் அவரும் நானும், நகருக்கப்பால், ஒரு வாய்க்காலண்டை போனோம். அங்கே கூழாங்கற்களிடையே சலசலவென்று பாய்ந்தோடும் நீரையும், அந்நீரில் வெண்ணிலாவின் பால்போன்ற ஒளியையும் பார்த்துக்கொண்டு நெடுநேரம் இருந்தோம். அப்போது அவர், அங்கு மலர்ந்திருந்த குவளைப்பூ ஒன்றைப் பறித்து, என்னிடம் அன்பாகக் கொடுத்தார். அதனை வாங்கி, அறிவிலியாகிய நான், கண்ணில் ஒற்றினேன் இல்லை; முகர்ந்து மணம் கண்டேன் இல்லை; தலையில் சூடினேன் இல்லை. ஓடும் நீரில் அதை விட்டு, வேடிக்கை பார்த்துச் சிரித்தேன். அவர், புன்முறுவலுடன், ஏதோ சொல்ல வாயெடுத்தார். அதற்குள்ளாக என் தாயார், அங்கு வந்து, சுடுசொல் கூறினார். நான், வாளா நின்றேன். அவர் ஒன்றும் பேசாமல் போய்விட்டார். அதுமுதல், அவரைக் காணவில்லை. இனிக் காண்பேனோ என்னவோ? ஒரு முறை பார்த்து என் கருத்தைக் கூறினாலல்லாமல், என் மனம் சாந்தியடையாது.”
மனோன்மணி, “வாணி! இருவர் மனமும் ஒன்றானால், வாய்பேசாமலே, கருத்தை உணர்வார்கள். அதில் ஒன்றும் ஐயமில்லை!” என்றாள். இவ்வாறு பேசும்போது, மனோன்மணியின் உடல் நடுங்கிற்று. “எனக்கு, இப்படி, உடம்பு அடிக்கடி நடுங்குகிறது; ஏனோ, தெரியவில்லை!” என்றாள்.
“குளிர்காற்றில் இருப்பது கூடாது; உள்ளே வா அம்மா! இதோ மழையும் வருகிறது.”
“அதென்ன, ஊர்ப்பக்கமாக வெளிச்சம் தெரிகிறது; கூச்சலும் கேட்கிறது; போர்க்குறி காணப்படுகிறது... வாணி! அதென்ன, சொல்” என்றாள் மனோன்மணி.
“சொல்லுகிறேன், உள்ளே வா” என்று வாணிகூற, இருவரும் உள்ளே செல்கின்றனர்.

மூன்றாம் அங்கம், மூன்றாம் களம் கதைச்சுருக்கம் முற்றிற்று. தொகு

மூன்றாம் அங்கம் தொகு

மூன்றாங் களம் தொகு

இடம்: கன்னிமாடம், நிலாமுற்றம்.
காலம்: யாமம்.
(மனோன்மணி உலாவ, வாணி நிற்க, செவிலி படுத்துறங்க.)

(நேரிசை ஆசிரியப்பா)

செவிலி

(படுத்தபடியே)

ஏதம்மா! நள்ளிரா எழுந்து லாவினை?
தூக்கம் ஒழிவையேல் சுடுமே யுடலம்.
மனோன்மணி
உடலால் என்பயன்? சுடவே தகுமது
வேர்க்கிற திவ்விடம், வெளியே இருப்பல்.
போர்த்துநீ தூங்கு!

(செவிலி தூங்க)

--- ---- வாணீ! உனக்கும்
உறக்க மில்லையோ?
வாணி
... .... எனக்கது பழக்கம்.
மனோன்மணி: வருதி இப்புறம், இருஇரு....

(இருவரும் நிலாமுற்றத்திருக்க)

... .... ..... இதுவரை
எங்கிருந் தனவிவ் அன்றிற் பேய்கள்!
நஞ்சோ நாவிடை? நெஞ்சந் துளைக்கும்
உறக்கங் கொண்டனள் செவிலி! குறட்டைகேள்.
கையறு நித்திரை! வாணீ! மற்றிது (10)
வைகறை யன்றோ!
வாணி
.... .... நடுநிசி அம்மா!
மனோன்மணி
இத்தனை அரவமேன்? முனிவ ரறையில்
நித்தமு முண்டிது! நிதியெடுப்பவர்போல்
தோண்டலு மண்ணினைக் கீண்டலும் கேட்டுளேன்.
ஊரிலேன் இன்றிவ் உற்சவ அரவம்?
வாணி
(தனதுள்)
போரெனப் பொறுப்பளோ? உரைப்பனோ? ஒளிப்பனோ?
மனோன்மணி
கண்டதோ நகருங் காணாக் கனவு?
வாணி
கண்டது கனவோ தாயே?
மனோன்மணி
.... .... .... கண்டது..
கனவெனிற் கனவு மன்று: மற்று (20)
நனவெனில் நனவு மன்று.
வாணி
.... .... .... நன்றே!
கண்ணாற் கண்டிலை போலும்! அம்ம!
மனோன்மணி
கண்ணால் எங்ஙனங் காணுவன்? கண்ணுளார்!
வாணி: எண்ணம் மாத்திரமோ? இதுவென் புதுமை!
மனோன்மணி: எண்ணவும் படாஅர்! எண்ணுளும் உளாஅர்!
வாணி: புதுமை! ஆயினும் எதுபோ லவ்வுரு?
மனோன்மணி
இதுவென வொண்ணா உவமையி லொருவரை
எத்திற மென்றியான் இயம்ப! நீயுஞ்
சித்திர ரேகை யலையே, விடுவிடு!
பண்ணியல் வாணீ! வாவா! உன்றன் (30)
பாட்டது கேட்டுப் பலநா ளாயின!
வாணி
என்பா டிருக்க! யாவரு மறிவார்!
உன்பா டதுவே ஒருவரு மறியார்.
மனோன்மணி
பாக்கிய சாலிநீ! பழகியும் உளையே!
நீக்குக இத்தீ நினைவு! யாழுடன்
தேக்கிய இசையிற் செப்பொரு சரிதம்

(வாணி வீணை மீட்ட)

அவ்விசை யேசரி ஒவ்வுமித் தருணம்!

(வாணி பாட)

சிவகாமி சரிதம் தொகு

(குறள் வெண்செந்துறை)

“வாழியநின் மலரடிகள்! மௌனதவ முனிவ!
மனமிரங்கி அருள்புரிந்தோர் வார்த்தையெனக் கீயின்
பாழடவி இதிற்சுழன்று பாதைவிடுத் தலையும்,
பாவியொரு வனையளித்த பலனுறுவை பெரிதே. (1)
சாரும்வரை குறியாது தன்னிழலை யளக்குந்,
தன்மையென நான்நடக்கத் தான்வளரும் அடவி
ஆரிருளில் இனிநடக்க ஆவதிலை. உடல,
மாறும்வகை வீடுளதே லடையுநெறி யருளாய்.” (2)
என்றமொழி கேட்டமுனி யெதிர்விடையங் கியம்பும்:
“ஏகாந்தப் பெருங்ககனம்; இதிலுலக ரணையார்,
சென்றுறைய மடமுமிலை; திகழ்வெளி யென்வீடு;
சிந்தையற நொந்தவர்க்குச் சேரவிலை பந்தம். (3)
அறங்கிடந் சிந்தையரா யாசையெலாந் துறந்த,
அதிவீர ரொழியஎவ ராயினுமிங் கடையார்
உறங்கஅவர் பணிப்பாயும் பூவணையும் உன்னார்,
உண்ணவெனில், பாலமிழ்தும் ஒன்றாக மதியார். (4)
ஆதலிலென் பாலுறுவ தியாதெனினு மைந்த!
அன்புடன்நீ யென்பிறகே யணையிலஃ துனதாம்.
வேதனையும் மெய்ச்சலிப்பும் விட்டகல இருளும்
விடியும்,உடன் மனமிருக்கில் வேண்டுமிடம் ஏகாய்.” (5)
என்றுரைத்த இனியமொழி யிருசெவியுங் குளிர,
ஏதோதன் பழநினைவும் எழவிருகண் பனித்து
நன்றெனவே தவவடிவாய் நின்றமகன் வணங்கா,
நன்முனிவன் செல்வழியே நடந்துநனி தொடர்ந்தான். (6)
இந்திரநற் சாலவித்தை யெதுவோவொன் றிழைக்க,
இட்டதிரை யெனத்திசைக ளெட்டுமிருள் விரிய
அந்தரத்தே கண்சிமிட்டிச் சுந்தரதா ரகைகள்,
அரியரக சியந்தமக்குள் ளறைந்து நகைபுரிய; (7)
என்புருகப் பிணைந்தஅன்றில் இணைசிறிது பிரிய,
ஏங்கியுயிர் விடுப்பவர்போ லிடையிடையே கூவ,
அன்புநிலை யாரறிவ ரென்பனபோல் மரங்கள்,
அலர்மலர்க்கண் ணீரருவி அகமுடைந்து தூவ; (8)
விந்தைநடப் பதுதெரிக்க விளிப்பவரின் வாவல்,
விரைந்தலைய மின்மினியும் விளக்கொடுபின் ஆட;
இந்தவகை அந்தியைமுன் ஏவிஇர வென்னும்,
இறைவியும்வந் திறுத்தனள்மற் றிளைஞருயிர் வாட. (9)
பொறியரவின் கடிகையுறு பொலன்மணியி னொளியும்,
பொலிமதத்திண் கறையடியின் புலைமருப்பி னொளியும்
அறிவரிய சினவுழுவை அழல்விழியி னொளியும்,
அலதிலையவ் அடவியிடை யயல்காட்டு மொளியே. (10)
பிரிவரிய ஊசிவழி பின்தொடரும் நூல்போல்,
பேரயர்வின் மனமிறந்து பின்தொடரும் மைந்தன்
அரியபுத ரிடையகற்றி அன்பொடழைத் தேகும்,
அம்முனிவ னடியின்றி அயலொன்றும் அறியான். (11)
ஒருங்கார நிறைமுளரி உழையொதுங்கி நுழைந்தும்,
உயர்மலையின் குகைகுதித்தும் ஓங்கார ஒலியே
தருங்கான நதிபலவுந் தாண்டிஅவ ரடைந்தார்,
சார்பிலர்க்குத் தனித்துணையாந் தவமுனிவ னிடமே. (12)
நேயமுட னெவ்வழியும் நேர்ந்தவரைத் தன்நுண்,
நிறுவுதலை வளைத்தழைக்கு நெருப்பொன்றும் அன்றி
வாயிலெனப் பூட்டென்ன மதிலென்ன வழங்கும்,
மனையென்னும் பெயர்க்குரிய மரபொன்று மின்றி (13)
நின்றதனி யிடமிவர்கள் நேர்ந்தவுடன் முனிவன்,
நெருப்பின்னும் எழுப்புதற்கு நிமலவிற கடுக்கி
ஒன்றியமெய்ப் பத்தரில்தன் உளங்கூசி யொருசார்,
ஒதுங்குகின்ற மைந்தனகம் உவப்பவிவை உரைக்கும்: (14)
“இனிநடக்க வழியுமிலை; இனித்துயரு மில்லை,
இதுவேநம் மிடம்மைந்த! இக்கனலி னருகே
பனிபொழியும் வழிநடந்த பனிப்பகல இருந்து,
பலமூல மிதுபுசிக்கிற் பறக்குமுன திளைப்பே. (15)
தந்நாவி லொருவிரலைத் தாண்டவறி யாமல்,
சாகரமும் மலைபலவுந் தாண்டியலை கின்றார்.
என்னேயிம் மனிதர்மதி!” எனநகைத்து முனிவன்,
இனியகந்த முதலனந்த இனம்வகுத்தங் கிருந்தான். (16)
இருந்தமுனி “வருந்தினவ! ஏதுனது கூச்சம்?,
இருவருமே யொருவரெனி லெவர்பெரியர் சிறியர்?
திருந்தஅன லருகிலினிச் செறிந்துறைதி மைந்த!
சேர்ந்தார்க்குக் களிப்புதவுஞ் சேரார்க்குப் பனிப்பே.” (17)
எனவிரங்கி இரண்டுமுறை இயம்பியுந்தன் னருகே,
யேகாம லெதிரொன்று மிசையாமல் தனியே
மனமிறந்து புறமொதுங்கி மறைந்து,வறி திருந்த,
மகன்மலைவு தெளிந்துவெளி வரும்வகைகள் பகர்ந்தான். (18)
பகர்ந்தநய மொழிசிறிதும் புகந்ததிலை செவியில்,
பாதிமுக மதியொருகைப் பதுமமலர் மறைப்பத்
திகழ்ந்தசுவ ரோவியம்போ லிருந்தவனை நோக்கிச்,
சிந்தைநனி நொந்துமுனி சிறிதுகரு திடுவான். (19)
செந்தழலு மந்தவெல்லை திகழ்ந்தடங்கி யோங்கி,
திகைக்கவெலி பிடித்தலைக்குஞ் சிறுபூனை எனவே
விந்தையொடு நடம்புரிந்து வீங்கிருளை வாங்கி,
மீண்டுவர விடுத்தெடுத்து விழுங்கிவிளங் கினதே. (20)
மொழியாதும் புகலாது விழிமாரி பொழிய,
முகங்கவிழ வதிந்தகுறி முனிநோக்கி வினவும்,
“எழிலாரு மிளமையினில் இடையூறா திகளால்,
இல்லமகன்(று) இவ்வுருவம் எடுத்திவண்வந் தனையோ? (21)
ஏதுனது கவலை?உளத் திருப்பதெனக் கோதாய்,
இழந்தனையோ அரும்பொருளை? இகழ்ந்தனரோ நண்பர்
காதல்கொள நீவிழைந்த மாதுபெருஞ் சூதாய்க்,
கைவிடுத்துக் கழன்றனளோ? மெய்விடுத்துக் கழறாய். (22)
ஐயோஇவ் வையகத்தி லமைந்தசுக மனைத்தும்,
அழலால்இங் கெழுந்தடங்கு நிழலாக நினையாய்,
கையாரும் பொருளென்னக் கருதிமணல் வகையைக்,
காப்பதெலா மிலவுகிளி காத்தலினும் வறிதே. (23)
நண்பருறு வினர்கள்நமை நாடியுற வாடல்,
நறுநெயுறு குடத்தெறும்பு நண்ணலென எண்ணாய்!
பெண்களகக் காதலெலாம் பேசுமுயற் கொம்பே!,
பெருங்கபட மிடுகலனோ பிறங்குமவ ருடலம்!” (24)
எரியுமுளம் நொந்தடிக ளிசைத்தவசை யுட்கொண்டு,
ஏதிலன்நீள் கனவுவிழித் தெழுந்தவன்போல் விழித்து,
விரிவெயிலில் விளக்கொளியும் மின்னொளியிற் கண்ணும்,
வெளிப்பட்ட கள்வனும்போல் வெட்கிமுகம் வெளுத்தான். (25)

தொகு

இசைத்தவசைச் செயலுணர எண்ணிமுகம் நோக்கி,
இருந்தயதி யிக்குறிகண் டிறும்பூதுள் ளெய்தி
விசைத்தியங்கு மெரியெழுப்பி மீண்டுமவன் நோக்க,
வேசரக சியங்களெல்லாம் வெட்டவெளி யான. (26)
நின்மலவி பூதியுள்ளே பொன்மயமெய் தோன்றி,
நீறுபடி நெருப்பெனவே நிலவியொளி விரிக்கும்
உண்மைதிகழ் குருவிழிக்கு ளுட்கூசி யொடுங்கும்.
உண்மைபெறு கண்ணினையும் பெண்மையுருத் தெரிக்கும். (27)
கூசுமுக நாணமொடு கோணியெழில் வீச,
குழற்பாரஞ் சரிந்துசடைக் கோலமஃ தொழிக்கும்,
வீசுலையின் மூக்கெனவே விம்மியவெய் துயர்ப்பு,
வீங்கவெழு கொங்கைபுனை வேடமுழு தழிக்கும். (28)
இவ்விதந்தன் மெய்விளங்க இருந்தமகள் எழுந்தே,
யிருடிபதந் தலைவணங்கி யிம்மொழியங் கியம்பும்:
“தெய்வமொடு நீவசிக்குந் திருக்கோயில் புகுந்த,
தீவினையேன் செய்தபிழை செமித்தருள்வை முனியே! (29)
மண்ணுலகிற் காவிரிப்பூ மாநகரிற் செல்வ,
வணிககுல திலகமென வாழ்வளொரு மங்கை.
எண்ணரிய குணமுடையள், இவள்வயிற் றிலுதித்தோர்,
இருமகளி ரொருபுருட ரென்னஅவர் மூவர். (30)
ஒப்பரிய இப்புருடர்க் கோர்புதல்வ ருதித்தார்,
ஒருத்திமகள் யான்பாவி; ஒருத்திமுழு மலடி,
செப்பரிய அம்மலடி செல்வமிக வுடையள்;
செகமனைத்து மவள்படைத்த செல்வமென மொழிவர். (31)
உடல்பிரியா நிழல்போல ஓதியஅப் புதல்வர்,
உடன்கூடி விளையாடி யொன்றாக வளர்ந்தேன்,
அடல்பெரியர் அருளுருவர் அலகில்வடி வுடையர்,
அவருடைய திருநாமம் அறைவேனோ அடிகாள்?” (32)
உரைத்தமொழி கேட்டிருடி யுடல்புளக மூடி,
ஊறிவிழி நீர்வதன மொழுகவஃ தொளிக்க
எரிக்க,விற கெடுப்பவன்போ லெழுந்துநடந் திருந்தான்,
இளம்பிடியுந் தன்கதையை யெடுத்தனள்முன் தொடுத்தே. (33)
‘மலடிசிறு தாய்படைத்த மதிப்பரிய செல்வம்,
மடமகளென் றனக்களித்தாள், மயங்கியதின் மகிழ்ந்து
தலைதடுமா றாச்சிறிய தமியளது நிலையும்,
தலைவனெனுந் தன்மையையுந் தகைமையையு மறந்தேன். (34)
குறிப்பாயுள் ளுணர்த்தியும்யான் கொள்ளாது விடுத்தேன்,
குறும்புமதி யாலெனது குடிமுழுதுங் கெடுத்தேன்.
வெறுப்பாக நினைந்தென்மேல் வேதனைப்பட் டவரும்,
வெறும்படிறென் உள்ளமென விட்டுவில கினரே. (35)
பொருள்விரும்பிக் குலம்விரும்பிப் பொலம்விரும்பி வந்தோர்,
பொய்க்காதல் பேசினதோ புகலிலள வில்லை.
அருளரும்பி யெனைவிரும்பி ஆளுமென ததிபர்,
அவரொழிய வேறிலையென் றறிந்துமயர்ந் திருந்தேன். (36)
ஒருவாரம், ஒருமாதம் ஒரு வருட காலம்,
ஓயாமல் உன்னியழிந் தேன்உருவங் காணேன்.
திருவாருஞ் சேடியர்க்குச் செப்பஅவர் சேரும்,
திசைதேயம் எவரறிந்து தெரிப்பரெனச் சிரித்தார்? (37)
ஆயத்தார் கூடியெனை ஆயவுந்தான் ஒட்டார்.
அகல்வேலை யோஎறியும் அகோராத்திரங் கெடுத்து,
தீயைத்தா னேயுமிழுஞ் சிறந்தகலை மதியும்,
திரிந்துலவுங் காலுமுயிர் தின்னுநம னென்ன. (38)
கண்டவரைக் கேட்டவரைக் காசினியில் தேடிக்
கண்டிடச்சென் றேயலைந்த கட்டமெனைத் தென்க?
உண்டெனத்தம் யூகநெறி உரைப்பவரே அல்லால்,
உள்ளபடி கண்டறிந்தோர் ஒருவரையுங் காணேன். (39)
உண்டெனிலோ கண்டிடுவன் இல்லையெனில் ஒல்லை,
உயிர்விடுத லேநலமென் றுன்னியுளந் தேறி
கண்துயிலும் இல்லிடந்தீ கதுவவெளி யோடும்,
கணக்காஇவ் வேடமொடு கரந்துபுறப் பட்டேன். (40)
தீர்த்தகுலம் மூர்த்திதலம் பார்த்துடலம் சலித்தேன்,
திருக்கறுபற் குருக்கள்மடம் திரிந்துமனம் அலுத்தேன்
வார்த்தைகத்தும் வாதியர்தம் மன்றனைத்தும் வறிய,

த்தமறுத்துறங்கும் யோகியர்போய் வாழ்குகையும் பாழே. (41)

மான்மறவாக் கலையினமே! வாழ்பிடிவிட் டகலா,
மதம்பெருகு மாகுலமே! வன்பிகமே! சுகமே
நான்மறவா நாதனையெஞ் ஞான்றுமறி வீரோ?
நவில்விரெனப் பின்தொடர்ந்து நாளனந்தங் கழித்தேன். (42)
இவ்விடமும் அவ்விடமும் எவ்விடமும் ஓடி,
இதுவரையும் தேடியுமென் அதிபரைக்கண் டிலனே,
எவ்விடம்யான் நண்ணவினி? எவ்விடம்யான் உண்ண?,
இக்காயம் இனியெனக்கு மிக்கஅரு வருப்பே. (43)
ஐயோவென் உள்ளநிலை அறியாரோ இனியும்?,
ஆசைகொண்டு நானலைந்த தத்தனையும் பொய்யோ?
பொய்யேதான் ஆயிடினும் புனிதரவர் தந்த,
போதமலால் வேறெனக்கும் ஓதுமறி வுளதே? (44)
நல்லர்அரு ளுடையரென நம்பிஇது வரையும்,
நானுழைப்ப தறிவரெனில் ஏனெதிர்வந் திலரோ?
இல்லையெனில் என்னளவும் இவ்வுலகம் அனைத்தும்,
எந்நலமும் கொல்லவென எடுத்தசுடு காடே. (45)
என்னுடைய உயிர்த்துணைவர் எண்ணரிய அருளில்,
ஏதோசிற் சாயையுன(து) இடத்திருத்தல் கண்டு
மன்னுதவ மாமுனிவ! மனத்துயரம் உன்பால்,
வகுத்தாறி னேன்சிறிது. மறுசாட்சி யில்லை (46)
இனியிருந்து பெரும்பயனென்? இவ்வழலே கதி”யென்று,
எரியுமழல் எதிரேநின் றிசைத்தமொழி முழுதும்
முனிசெவியிற் புகுமுனமே மூதுருவம் விளக்கி,
முகமலர்ந்தங் கவளெதிரே முந்திமொழி குளறி... (47)
“சிவகாமி! யானுனது சிதம்பரனே” என்னச்,
செப்புமுனம் இருவருமற் றோருவம் ஆனார்!
எவர்தாமுன் அணைந்தனரென் றிதுகாறும் அறியோம்.
இருவருமொன் றாயினரென் றேயறையும் சுருதி. (48)
பரிந்துவந்து பார்வதியும் பாரதியும் கஞ்சப்
பார்க்கவியும் யார்க்கிதுபோல் வாய்க்குமென வாழ்த்த,
அருந்ததியும் அம்மா!இஃது அருங்கதியென் றஞ்ச,
ஆர்வமுல கார்கவென ஆரணங்கள் ஆர்த்த (49)
ஆழிபுடை சூழுலகம் யாவுநல மேவ!
அறத்துறை புகுந்துயிர்கள் அன்புவெள்ளம் மூழ்க!
பாழிலலை வேனுடைய பந்தனைகள் சிந்த,
பரிந்தருள் சுரந்தமை நிரந்தரமும் வாழ்க! (50)

(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)

மனோன்மணி
வாணி! மங்காய்! பாடிய பாட்டும்
வீணையின் இசையும் விளங்குநின் குரலும்
தேனினும் இனியவாய்ச் சேர்ந்தொரு வழிபடர்ந்து (40)
ஊனையும் உயிரையும் உருக்கும் ஆ!ஆ!

(இருவரும் சற்று மௌனமாய் இருக்க)

உனதுகா தலனெங் குளனோ? உணர்வைகொல்?
வாணி
எனது சிந்தையில் இருந்தனர், மாறார்.
மனோன்மணி
ஆயினும் வெளியில்?
வாணி
... ... அறியேன், அம்ம!
மனோன்மணி
போயின இடம்நீ அறியாய்?
வாணி
... ... ... நாரணன்
முனிவர் தம்மடத் தேகினர் தனியென
ஓதினன் ஓர்கால்.
மனோன்மணி
.... .... ஓகோ! ஓகோ!(மௌனம்)
கடைநாள் நிகழ்ந்தவை யென்னை? கழறாய்
வாணி
அடியனேற் கந்நாள் கெடுநாள் மிகவும்!
ஒருநாள் அந்தியில் இருவரும் எதிர்ச்சையாக் (50)
கடிபுரி கடந்துபோய், நெடுவயற் பாயும்
ஒருசிறு வாய்க்காற் கரைகண் டாங்கே
பெருமலை பிறந்த சிறுகாற் செல்வன்
தெண்ணீர்க் கன்னி பண்ணிய நிலாநிழற்
சிற்றில் பன்முறை சிதைப்பவன் போன்று
சிற்றிலை எழுப்பச் சிறுமி முறுமுறுத்து
அழுவது போல விழுமிய பரல்மேல்
ஒழுகும் தீம்புனல் ஓதையும் கேட்டுப்
பழுதிலாப் பால்நிலா விழுவது நோக்கி
இருவரும் மௌனமாய் நெடும்பொழு திருந்தோம். (60)
‘கரையிடை அலர்ந்த காவியொன் றடர்த்தென்
அருகே கொணர்ந்தெனக்(கு) அன்பா யீந்தனர்.
வருவதிங் கறியா மதியிலி, அதனைக்
கண்ணிணை ஒற்றிலன்; உள்மணம் உகந்திலன்;
மார்பொடு சேர்த்திலன்; வார்குழற் சார்த்திலன்;
ஆர்வமும் அன்பும் அறியார் மான
ஓடும் தீம்புனல் மாடே விடுத்துச்
சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தேன்.
முறுவலோ டவரும் ஏதோ மொழிய
உன்னும் முன்னரென் அன்னையங் கடைந்தாள்; (70)
தீமொழி பலவும் செப்பினள். யானோ?
நாவெழல் இன்றி நின்றேன். நண்பர்
மறுமொழி ஒன்றும் வழங்கா தேகினர்.
அதுமுதல் இதுகாறும் அவர்தமை ஐயோ!
கண்டிலேன். இனிமேற் காண்பனோ? அறியேன்.
ஒருமுறை கண்டென் உளக்கருத் தவருடன்
உரைத்தபோ தன்றி ஒழியா துயிரே!
மனோன்மணி
உரைப்பதென் வாணீ! உளமும் உளமும்
நேர்பட அறியா என்றோ நினைத்தாய்?
வாணி
ஓர்வழிப் படரின் உணருமென் றுரைப்பர். (80)

தொகு

மனோன்மணி
ஏனதில் ஐயம்? எனக்கது துணிபே!
பூதப் பொருட்கே புலன்துணை அன்றிப்
போதப் பொருட்குப் போதும் போதம்,
இரவியை நோக்கற் கேன்விளக் குதவி?
கருவிநுண் மையைப்போற் காட்சியும் விளங்கும்
பட்டே உணரும் முட்டா ளர்கள்போல்
தொட்டே உணரும் துவக்கிந் திரியம்
நுண்ணிய கருவியாம் கண்ணோ உணரும்
எண்ணறச் சேய்த்தாம் நுண்ணிய ஒளியை!
கண்ணினும் எத்தனை நுண்ணிய துள்ளம்! (90)
களங்கம் அறுந்தொறும் விளங்குமங் கெதுவும்.
உண்மையாய் நமதுளம் உருகிலவ் வுருக்கம்
அண்மை சேய்மை யென்றிலை; சென்றிடும்
எத்தனைப் பெட்டியுள் வைத்துநாம் பூட்டினும்
வானுள மின்னொளி ‘வடக்கு நோக்கி’யைத்
தானசைத் தாட்டும் தன்மைநீ கண்டுளை?
போதங் கரைந்துமேற் பொங்கிடும் அன்பைப்
பூத யாக்கையோ தடுத்திடும்? புகலாய்!
வாணி
கூடும் கூடும் கூடுமக் கொள்கை;
நம்பலாந் தகைத்தே!
மனோன்மணி
... .... நம்புவ தன்றிமற்று (100)
என்செய நினைத்தாய்? இவ்வரும் பொருள்கள்
தர்க்கவா தத்தால் தாபித் திடுவோர்
கரத்தால் பூமணம் காண்பவ ரேயாம்!
அரும்பிற் பூமணம் மாய்குத லேய்ப்பத்
தரும்பக் குவமிலார் தமதுளம் போய
வழியே வாளா மனக்கணக் கிட்டு
மொழிவார் முற்றும் துணிவா யெனயான்
இச்சிறு தினத்தின் இயைந்தவை தம்மால்
நிச்சயித் துணர்ந்தேன். வாணீ! ஐயோ!
நம்பலென்பதுவே அன்பின் நிலைமை! (110)
தெளிந்தவை கொண்டு தெளிதற் கரியவை
உளந்தனில் நம்பி உறுதியாய்ப் பிடித்துச்
சிறிது சிறிதுதன் அறிவினை வளர்த்தே
அனுபவ வழியாய் அறிவதை அந்தோ!
அனுமா னாதியால் ஆய்ந்தறிந் திடுவோம்
அலதெனில் இலையென அயிர்ப்போம் எனத்திரி
வாதியர் அன்பொரு போதுமே அறியார்.
தாய்முலைப் பாலுள்நஞ்சு ஆய்பவ ரவரே!
முற்றுங் களங்கம் அற்றிடில் ஆ!ஆ!

(உடல் புளகாங்கிதமாய் நடுங்க)

ஏதோ வாணீ! இப்படி என்னுடல்?... (120)
வாணி
வாதமோ? தாயே!
மனோன்மணி
.... .... சீச்சீ! இன்றெலாம்
இப்படி அடிக்கடி என்னுடல் நடுங்கும்!
வாணி
இக்குளிர் காற்றின் இடையே இருத்தல்
தக்க தன்றினி, தாயே பாராய்!
அம்மழை பெய்யும் இம்மெனும் முன்னம்.
மனோன்மணி
நனைந்திடில் என்னை? கரைந்திடு மோவுடல்?

(எழுந்து மேகம் பார்க்க),

வாணி
(தனதுள்)
ஐயோ! ஏன்நான் அத்திசை காட்டினேன்?
பொய்யெப் படியான் புகல்வன்!
மனோன்மணி
... .... .... வாணீ!
ஊர்ப்புறம் அத்தனை யொளிஏன்? ஓஓ!
ஆர்ப்பேன்? ஆஆ! அயிர்ப்பேன்? அறைகுதி. (130)
போர்க்குறி போலும். புகலுதி உண்மை.

(மழை இரைந்து பெய்ய)

அஞ்சலை அஞ்சலை. இதோஎன் நெஞ்சிடை
வெஞ்சரம் பாயினும் அஞ்சிலேன்! விளம்பு
வாணி
இம்மழை நிற்கலை அம்ம! அறைகுவன்...
விளம்புவன் வீட்டுள் வருக! (135)
தெளிந்ததோர் சிந்தைத் தீரநற் றிருவே!

(இருவரும் போக)

மூன்றாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று. தொகு

பார்க்க: தொகு

III.மூன்றாம் அங்கம் தொகு

III:1 III:2 III:4

மனோன்மணீயம்- ஆசிரியமுகவுரை, கதைச்சுருக்கம்.

அங்கம்: I தொகு

I:1 I:2 I:3 I:4 I:5

அங்கம்: II தொகு

II:1 II:2 II:3

அங்கம்: IV தொகு

IV:1 IV:2 IV:3 IV:4 IV:5

அங்கம்: V தொகு

V:1 V:2 V:3