மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 04

மனோன்மணீயம்- நாடகம் தொகு

மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 04 தொகு

மூன்றாம் அங்கம்- நான்காங் களம்: கதைச்சுருக்கம் தொகு

சுந்தர முனிவர் ஆசிரமத்தில், காலைப்பொழுதில், அவருடைய சீடர்களாகிய நிட்டாபரரும், கருணாகரரும் உரையாடுகின்றனர். நிட்டாபரர் கூறுகிறார்: “கருணாகரரே! வேத வேதாந்தங்களையெல்லாம் படித்தறிந்த நீர், போர்வந்தது பற்றிக் கவலைகொண்டு, இரவெல்லாம் தூக்கமில்லாமல் கண்விழித்தது ஏன்? போர் உலகத்து இயற்கைதானே? போரில் தானா மக்கள் சாகிறார்கள்? போரில்லாமலே, நாள்தோறும் எண்ணிறந்த உயிர்கள் சாகின்றன. எறும்புமுதலாக எல்லா உயிர்களும் சாவதைக் கணக்கிட்டுச் சொல்லமுடியுமா? இதோ, இச்சிலந்திப் பூச்சியைப் பாரும். ஈயின்மேல் பாய்ந்து விழுந்து, இச்சிலந்தி அதனை, எட்டுக் கால்களினாலும் கட்டிப் பிணைத்துக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது, ஈ கதறி அழுகிற குரலை, யார் கேட்கிறார்கள்? உலகத்தையெல்லாம் ஒன்றாக நோக்கும்போது, உடம்பும் அதனைச் சேர்ந்த ஓர் உறுப்புதானே? ஐம்பது கோடி யோசனை பரப்புள்ள இந்தப் பூமி, சூரியமண்டலத்தின் ஒருசிறுதுளி. வானத்தில் காணப்படுகின்ற விண்மீன்கள் ஒவ்வொன்றும், சூரியனைவிட எவ்வளவு பெரியவை! இந்தச் சூரியனும் விண்மீன்களும் எல்லாம் சேர்ந்து, ஒரு பிரமாண்டம் என்று கூறுவர். இதுபோல, ஆயிரத்தெட்டுப் பிரமாண்டங்கள் உள்ளன என்பர். ஆயிரத்தெட்டு என்றால், கணக்காக ஆயிரத்தெட்டு என்பதல்ல; கணக்கற்றவை என்பது பொருள். இந்த ஆயிரத்தெட்டுப் பிரமாண்டங்களும், திருமாலுடைய கொப்பூழில் தோன்றிய செந்தாமரைப் பூவின் பல இதழ்களில் ஓர் இதழிலே, பிரமனாகிய சிலந்தி அமைத்த கூடு. ஏன்? அந்தத் திருமாலும், பெருங்கடலிலே சிறுதுரும்பு என்பர். திருமால் கிடக்கும் கடலும், மெய்ப்பொருளாகிய கடவுளுடன் ஒப்பிடும்போது, சிறு கானல்நீர் போன்றது. இவைகளுடன் ஒப்பிடும்போது, உயிர்களாகிய நாம் எதற்குச் சமம்?...
“நீர்யார்? நான் யார்? ஊர் ஏது? பேர் ஏது? போர் ஏது? மாயையாகிய பெருங்கடலிலே தோன்றிய குமிழிகள் போன்ற இப்பற்பல பிரமாண்டங்கள் அடிக்கடி வெடித்து அடங்குகின்றன. அதனைத்தடுப்பவர் யார்? இயற்றும் இத்தொழிலில் அகப்பட்ட நாம், யந்திரக்கல்லில் அகப்பட்ட பயறுபோல் உள்ளோம். யார், என்ன செய்ய முடியும்? இந்த மாயை உம்மையும் பிடித்தால், நீர் கற்றகல்வியும் ஞானமும், குருட்டரசனுக்குக் கொளுத்தி வைத்த விளக்குப் போலவும், இருட்டறையில் பொருளைக் காணவிரும்பும் கண்போலவும், பயனற்றவையாகும். உலகத்தை ஊன்றிப் பார்க்குந் தோறும், துயரந்தான் அதிகப்படும். ஆகவே, ‘சட்டிசுட்டது, கைவிட்டது’ என்பதுபோல, இவ்வுலகத் துன்பங்களை மறப்பதற்கன்றோ, துறவு பூண்பது! உலகத்தை மறந்தால், உள்ளமும் மறையும். மனம்மறைந்தால், உள்முகமான மெய்ஞ்ஞானம் தோன்றும். அந்த இடத்தில், ‘நான்’ என்பதும், உலகம் என்பதும் இல்லை. எல்லையற்ற அறிவாய், அழியாத பேரின்பமே கிட்டும். இவ்வாறு, நான், உலக உயல்பைக் கடந்து நிற்கும் நிலையைக் கூறுவது, குருடனுக்குப் ‘பாலின் நிறம் கொக்கு’ என்று கூறிய கதைபோலாகும். நீரே, உமக்குள், பொறுமையாக இருந்து, தெளியவேண்டும்.
இவ்வாறு வேதாந்தக்கருத்தை நிட்டாபரர் கூறியதைக் கேட்டுக் கருணாகரர் கூறுகிறார்; “எனக்கு இகமும் வேண்டாம்; பரமும் வேண்டாம், சுவாமி! என்னால் ஆன சிறு தொண்டுசெய்ய விரும்புகிறேன். உலகம் பொய் என்றீர். அதனை, நமக்கு, முதன்முதல் உணர்த்தியவர், நம் குருநாதர் அன்றோ? அவர், அதனை உணர்த்துவதற்கு முன்பு, எப்படியிருந்தோம்? உலக இயல்பில் கட்டுண்டு, பொய்யிலும் வழுவிலும் சிக்குண்டு அல்லற்பட்டிருந்தபோது, கருணாநிதியாகிய சுந்தர தேசிகர், ‘அடகெடுவாய்! இதுவல்ல நன்னெறி’ என்று கூறி நல்வழி காட்டாமற்போனால், நமக்கு, என்னதெரியும்? மனம் என்னும் அளவில்லாத பெருவெளிக்குப் பூட்டு ஏது? தாழ் ஏது? பஞ்சேந்திரியம் ஐந்துமட்டுந்தானா, மனத்தைக் கெடுப்பது? ஆயிரம் ஆயிரம் வழிகளில் புகுந்து, அரைநொடியில் மனத்தை நரகமாக மாற்றிவிடும் தீய நினைவுகள். குருநாதன், அருளுடன் காட்டிய வழியினாலல்லவா, உய்ந்தோம்? அவர் திருவருள் இல்லையானால், நமது அஞ்ஞானம், நமக்கு, எப்படித் தெரியும்?
“அண்டங்கள் எல்லாம், ஒன்றோடொன்று மோதாமல் காப்பது, கடவுளின் கருணையல்லவா? நீர் கூறிய சிலந்தியைப் பாரும். தன் சிறியவலையில் வந்து சிக்கிய ஈயைத் தன் குஞ்சுகளுக்கு உண்ணக்கொடுத்து, அன்பு காட்டுகிறது. அது, 'அன்பு' என்னும் நூலைப் படிக்கத் தொடங்கும் அரிவரிப்பாடம் அல்லவா? உலகில் காணப்படுகிற துயரங்களைக் கண்டு இரங்கினால், அது, மனமாசு நீக்கிப் பொன்னாகச் செய்யும் நெருப்புப் போலாகும். பவழமல்லி முதலிய வெண்மையான பூக்கள் எல்லாம், இருளில், பூச்சிகள், மலர் இருப்பதை அறிந்து கொள்வதற்கே, வெண்மை நிறமாகப் பூக்கின்றன என்று நேற்று இரவு நடராசர் சொல்லுவதற்கு முன்பு, நாம், நினைத்தோம் இல்லை. ஈக்களைக் கவர்வதற்கு, இருளில், வெண்ணிறம், அன்றோ பொருந்தும்? ஈக்கள் வந்தால்தானே, பூக்கள், கருத்தரித்துக் காயாகும்? இக்காரண காரியங்களை அறிவதற்கு, நமது சிற்றறிவு போதாது.
“பாரும். மனோன்மணி, தன் ஊழ்வினை காரணமாகத் தன் கண்ணால் காணாத, காதால் கேட்டிராத ஒருவனை எண்ணி மயங்கினாள்; அதனால் துன்புறுகிறாள். அவள் கருதிய அந்த ஆள் புருடோத்தமன் என்று, குருநாதர் கூறினார். அது, எல்லாவிதத்திலும், பொருத்தமாக இருக்கிறது. போருக்கு வந்த புருடோத்தமனும், குமரி மனோன்மணியும் ஒருவரை யொருவர் கண்டால், போர் இல்லையாகும். இதை விடுத்து, நமது குருநாதர், சிரமப்பட்டுச் சுருங்கை தோண்டி அமைக்கிறார் என்று என் சிற்றறிவினால், நான், முதலில் நினைத்தேன். பிறகு, ஒரு காரணத்துக்காகத்தான் இப்படிச் செய்கிறார் என்று தெரிந்தேன். துன்பங்களைக் கண்டு உளம் கரைந்து, ‘தெய்வத்திருவருள், இவரைக் காக்க’ என்று இரங்கி வேண்டினால், அதுவே முத்தியும் மோட்சமும் ஆகும்” என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, சுந்தர முனிவரும் நடராசனும், அங்கு வந்தார்கள். அவர்களைக் கண்டதும், சீடர்கள் இருவரும், எழுந்துநின்று வணங்கினார்கள்.
சுந்தரமுனிவர், நடராசனைப் பார்த்துக்கூறுகிறார்: “உமது அருளினால், சுருங்கை, இன்று முடிந்தது. நீ இல்லாவிட்டால், இந்த வேலை, இவ்வளவு விரைவாக முடிந்திராது. இதற்கு, நான், என்ன கைம்மாறு செய்வேன்!”
நடராசன்: “நன்றாயிருக்கிறது. தங்கள் முகமன் பேச்சு. இது என்ன வேடிக்கை! தங்கள் ஏவல்படி செய்வதல்லாமல், என்னால் ஆவது என்ன இருக்கிறது?” என்றான். முனிவர், கருணாகரரைப் பார்த்து, “நீர் உறங்குவதற்காகவன்றோ, உம்மை, இங்கு அனுப்பினோம்? நீர் உறங்கி, எத்தனை நாளாயிற்று! ஏன் உறங்கவில்லை? எத்தனை நாள் வருந்தி உழைத்தீர்!” என்று கேட்டார்.

கருணாகரர், “அடியேனுக்கு அலுப்பு என்ன? இங்கு வந்தபோது, நிட்டாபரர், நிட்டையிலிருந்து கண்விழித்தார். இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தோம். இதோ, விடியற் காலமாய் விட்டது” என்றார். “உங்கள் பேச்சை, நாம் அறிவோம். ஓயாத பேச்சு, என்றும் முடியாத பேச்சு. உங்களுக்குச் சமயச் சச்சரவு வேண்டாம். அவரவர்கள் நிலையிலேயே அவரவர்கள் இருக்கலாம்” என்று கூறினார். பிறகு, எல்லோரும் சென்றனர்.

மனோன்மணீயம்- மூன்றாம் அங்கம், நான்காம் களம் கதைச்சுருக்கம் முற்றிற்று. தொகு

மூன்றாம் அங்கம் தொகு

நான்காம் களம் தொகு

இடம்: சுந்தரமுனிவர் ஆசிரமம்.
காலம்: வைகறை.

(நிட்டாபரர், கருணாகரர் இருவரும் அளவளாவியிருக்க)

(நேரிசை ஆசிரியப்பா)
நிட்டாபரர்
ஏதிஃ துமக்குமோ இத்தனை மயக்கம்?
வேதவே தாந்தம் ஓதிநீர் தெளிந்தும்
இரவெலாம் இப்படி இமையிமை யாதே
பரிதபித் திருந்தீர்! கருணா கரரே!
பாரினிற் புதிதோ போரெனப் புகல்வது!
போரிலை ஆயினென்? யாருறார் மரணம்?
எத்தினம் உலகில் எமன்வரா நற்றினம்?
இத்தினம் இறந்தோர் எத்தனை என்பீர்?
ஒவ்வொரு தினமும் இவ்வனம் ஒன்றில்
எறும்பு முதலா எண்ணிலா உயிர்கள் (10)
உறுந்துயர் கணக்கிட் டுரைப்போர் யாவர்?
சற்றிதோ மனங்கொடுத் துற்றுநீர் பாரும்.
குரூரக் கூற்றின் விரூபமிச் சிலந்தி!
பல்குழி நிறைந்த பசையறு தன்முகத்து
அல்குடி யிருக்க, அருளிலாக் குண்டுகண்
தீயெழத் திரித்துப் பேழ்வாய் திறந்து
கருக்கொளும் சினைஈ வெருக்கொளக் கௌவி
விரித்தெண் திசையிலும் நிறுத்திய கரங்களின்
முன்னிரு கையில் வெந்நுறக் கிடத்தி
மார்பொடு வயிறும் சோர்வுறக் கடித்துப் (20)
பறித்திழுத்(து) இசித்துக் கறிக்கமற் றவ்ஈ
நொந்துநொந் தந்தோ! சிந்தனை மயங்கி
எய்யா தையோ! என்றழு குரலிங்(கு)
யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்?
கைகால் மிகில்நம் மெய்வே றாமோ?
நோவும் சாவும் ஒன்றே. அன்றியும்
உலகெலாம் நோக்கில்நம் உடலொரு பொருளோ?
பஞ்சா சத்கோடி யெனப்பலர் போற்ற
எஞ்சா திருந்த இப்புவி அனைத்தும்
இரவியின் மண்டலத் தொருசிறு திவலை! (30)
பரவிய வானிடை விரவிய மீனினம்
இரவியில் எத்தனை பெரியஒவ் வொன்றும்!
இரவியும் இம்மீன் இனங்களும் கூடில்
ஒருபிர மாண்டமென் றுரைப்பர், இதுபோல்
ஆயிரத் தெட்டுமற் றுண்டென அறைவர்.
ஆயிரத் தெட்டெனல் அலகிலை என்பதே.
இப்பெரும் உலகெலாம் ஒப்பறு திருமால்
உந்தியந் தடாகத் துதித்தபன் முளரியில்
வந்ததோர் நறுமலர் தந்தபல் லிதழில்
ஓரிதழ், அதனில் ஓர்சார் உதித்த (40)
நான்முகச் சிலந்தி நாற்றிய சிறுவலை
ஏன்மிக? நாமிங் கோதிய மாலும்
ஒருபெருங் கடலில் உறுதுரும் பென்ப!
அப்பெருங் கடலும் மெய்ப்பொருட் கெதிரில்
எப்படிப் பார்க்கினும் இசையாப் பேய்த்தேர்.
இங்கிவை உண்மையேல், எங்குநாம் உள்ளோம்?
நீர்யார்? நான்யார்? ஊரெது? போரெது?
போரெனப் பொறுக்கலீர்! ஓஓ! பாரும்!
மருவறு மாயா மகோததி யதனிற்
புற்புதம் அனைய பற்பல அண்டம் (50)
வெடித்தடங் கிடுமிங் கடிக்கடி. அதனைத்
தடுப்பவர் யாவர்? தாங்குநர் யாவர்?
விடுத்திடும், விடுத்திடும். வீணிவ் விசனம்.
இந்திர சாலமிவ் எந்திர விசேடம்.
தன்தொழில் சலிப்பற இயற்றும்மற் றதனுள்
படுபவர் திரிகையுட் படுசிறு பயறே
விடுபவர் யாவர்பின்! விம்மி விம்மிநீர்
அழுதீர், தொழுதீர், ஆடினீர், பாடினீர்,
யாரென் செய்வர்! யாரென் செயலாம்!
அடித்திடில் உம்மையும் பிடிக்குமிம் மாயை. (60)
பிடித்திடிற் பின்நும் படிப்பும் ஞானமும்
குருட்டர சனுக்குக் கொளுத்திய விளக்கும்,
இருட்டறை யிருந்துகண் சிமிட்டலும் என்ன,
ஆர்க்குமிங் குமக்கும் பிறர்க்குமென் பயக்கும்?
பார்க்கப் பார்க்கவிப் படியே துயரம்
மீக்கொளும். அதனால் விடுமுல கெண்ணம்.
சுட்டதோர் சட்டிகை விட்டிடல் எண்ணத்
துறப்பதிவ் வுலகம் மறப்பதற் கன்றோ!
மறக்கிற் சுயமே மறையும். மறைய
இறக்கும் நும்முளம் இறக்குமக் கணமே (70)
பிறக்கும் பிரத்தியக் பிரபோ தோதயம்!
நீரும் உலகமும் நிகழ்த்திய போரும்
யாருமங் கில்லை. அகண்டசித் கனமாய்
எதிரது கழிந்தபே ரின்பமே திகழும்!
உரையுணர் விறந்தவிந் நிருபா திகம்யான்
உரைதரல், பிறவிக் குருடற் கொருவன்
பால்நிறம் கொக்குப் போலெனப் பகர்ந்த
கதையாய் முடியும்! அதனாற் சற்றே
பதையா திருந்துநீர் பாரும்
சுதமாம் இவ்வநு பூதியின் சுகமே. (80) (பா-1)

தொகு

கருணாகரர்
சுகம்யான் வேண்டிலேன் சுவாமி! எனக்குமற்
றிகம்பரம் இரண்டும் இலையெனில் ஏகுக.
யானென் ஒருபொருள் உளதாம் அளவும்,
ஞான தயாநிதி நங்குரு நாதன்
ஈனனாம் என்னையும் இழுத்தடி சேர்த்த
வானநற் கருணையே வாழ்த்தியிங் கென்னால்
ஆனதோர் சிறுபணி ஆற்றலே எனக்கு
மோனநற் சித்தியும் முத்தியும் யாவும்
ஐயோ! உலகெலாம் பொய்யா யினுமென்?
பொய்யோ பாரும்! புரையறு குரவன் (90)
பரிந்துநம் தமக்கே சுரந்தவிக் கருணை!
இப்பெருந் தன்மைமுன் இங்குமக் கேது?
செப்பிய நிட்டையும் சித்தநற் சுத்தியும்
எப்படி நீரிங் கெய்தினீர்? எல்லாம்
ஒப்பறு நுந்திறம் என்றோ உன்னினீர்?
அந்தோ! அந்தோ! அயர்ப்பிது வியப்பே!
சுந்தரர் கடைக்கண் தந்திடு முன்னம்
பட்டபா டெங்ஙனம் மறந்தீர்? பதைப்பறு
நிட்டையாயினுமென்? நிமலவீ டாயினென்?
ஆவா! யாமுன் அல்லும் பகலும் (100)
ஓவாப் பாவமே உஞற்றியெப் போதும்
ஒருசாண் வயிறே பெரிதாக் கருதியும்,
பிறர்புக ழதுவே அறமெனப் பேணியும்,
மகிழ்கினும் துயருழந் தழுகினும், சினகரம்
தொழுதினும், நன்னெறி ஒழுகினும், வழுவினும்
எத்தொழில் புரியினும் எத்திசை திரியினும்
“நாமே உலகின் நடுநா யகம்நம்
சேமமே சகசிருட்டி யினோர் பெரும்பயன்?”
என்னவிங் கெண்ணி எமக்கெமக் கென்னும்
தந்நயம் அன்றிப் பின்நினை வின்றி (110)
முடிவிலா ஆசைக் கடலிடைப் பட்டும்,
தடைசிறி தடையிற் சகிப்பறு கோபத்
தீயிடைத் துடித்தும், சயஞ்சிறி தடையில்
வாய்மண் நிறைய மதக்குழி அதனுள்
குதித்துக் குதித்துக் குப்புற விழுந்தும்;
பிறர்புகழ் காணப் பெரிதகம் உடைந்தும்;
பிறர்பழி காணப் பெரிதக மகிழ்ந்தும்;
சிறியரைக் காணிற் செருக்கியும், பெரியரைக்
காணிற் பொறாமையுட் கலங்கி நாணியும்;
எனைத்தென எண்ணுகேன்! நினைக்கினும் உடலம் (120)
நடுங்குவ தந்தோ! நம்மை இங்ஙனம்
கொடும்பேய் ஆயிரம் கூத்தாட் டியவழி,
விடும்பரி சின்றிநாம் வேதனைப் படுநாள்
“ஏஏ! கெடுவாய்! இதுவல உன்நெறி
வாவா! இங்ஙனம்” எனமனம் இரங்கிக்
கூவிய தார்கொல்? குடிகொண் டிருந்த
காமமா திகளுடன் கடும்போர் விளைக்க
ஏவியதார்கொல்? இடைவிடா தவைகள்
மேவிய காலை மெலிந்துகை யறுநம்
ஆவியுள் தைரியம் அளித்தவர் யார்கொல்? (130)
சுந்தரர் கருணையோ நந்திற மோஇவை?
உளமெனப் படுவதோ அளவிலாப் பெருவெளி!
கோட்டையும் இல்லை; பூட்டுதாழ் அதற்கில்லை
நஞ்சே அனைய பஞ்சேந் திரியம்
அஞ்சோ வாயில்? ஆயிரம் ஆயிரம்;
அரைநொடி அதனுள் நரகென நம்முளம்
மாற்றிடக் கணந்தொறும் வருந்தீ நினைவோ
சாற்றிடக் கணிதசங் கேத மேயிலை.
இப்பெரும் விபத்தில் எப்படிப் பிழைப்பீர்?
அருளா தரவால் யாதோ இங்ஙனம் (140)
இருள்தீர்ந் திருந்தீர், இலையெனில் நிலையெது?
விட்டதும்தொட்டதும் வெளிப்படல் இன்றி
நிட்டையும் நீரும் கெட்டலைந் திடுவீர்!
கட்டம்! கட்டம்! கரதலா மலகமாய்க்
கண்டுமோ அருளிற் கொண்டீர் ஐயம்?”
“யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்?”
என்றீர் நன்றாய், நண்பரே! நம்நிலை
கண்டுளம் இரங்கிக் காத்தருள் புரிந்து
தொண்டுகொண் டாண்ட சுந்தரன் கருணை
நமக்கென உரித்தோ? நானா உயிர்கள் (150)
எவர்க்கும் அதுபொது அன்றோ? இயம்பீர்.
எங்கிலை அவனருள்? எல்லையில் அண்டம்
தங்குவ தனைத்தும் அவனருட் சார்பில்.
அண்டகோ டிகளிங் கொன்றோ டொன்று
விண்டிடா வண்ணம் வீக்கிய பாசம்,
அறியில் அருளலாற் பிறிதெதுஆ கருஷணம்?
ஒன்றோ டொன்றியாப் புற்றுயர் அன்பில்
நின்றவிவ் வுலகம், நிகழ்த்திய கருணை
பயிற்றிடு பள்ளியே அன்றிப் பயனறக்
குயிற்றிய பொல்லாக் கொடியயந் திரமோ? (160)

தொகு

பாரும் பாரும்! நீரே கூறிய
சிலந்தியின் பரிவே இலங்கிடு முறைமை!
பூரிய உயிரிஃ தாயினும், தனது
சீரிய வலையிற் சிக்குண் டிறந்த
ஈயினை ஈதோ இனியதன் குஞ்சுகள் (165)
ஆயிரம் அருந்த அருகிருந் தூட்டி
மிக்கநல் அன்பெனும் விரிந்தநூல் தெளிய
அக்கரம் பயில்வ ததிசயம்! அதிசயம்!
இப்படி முதற்படி, இதுமுத லாநம்
ஒப்பறும் யாக்கையாம் உயர்படி வரையும் (170)
கற்பதிங் கிந்நூற் கருத்தே. அதனால்
இத்தனி உலகில் எத்துயர் காணினும்
அத்தனை துயரும்நம் அழுக்கெலாம் எரித்துச்
சுத்தநற் சுவர்ணமாச் சோதித் தெடுக்க
வைத்தஅக் கினியென மதித்தலே, உயிர்கட்கு (175)
உத்தம பக்தியென் றுள்ளுவர். ஒருகால்
காரண காரியம் காண்குவம் அல்லேம்.
யாரிவை அனைத்தும் ஆய்ந்திட வல்லார்?
பாரிசா தாதிப் பனிமலர் அந்தியின்
அலர்தலே அன்னவை விளர்நிறம் கிளர (180)
நறுமணம் கமழ்தற் குறுகா ரணமென
நேற்றிரா நடேசர் சாற்றிடும் முன்னர்
நினைத்தோம் கொல்லோ? உரைத்தபின் மற்றதன்
உசிதம்யார் உணரார்? நிசியலர் மலர்க்கு
வெண்மையும் நன்மணம் உண்மையும் இலவேல், (185)
எவ்வணம் அவற்றின் இட்டநா யகராம்
ஈயினம் அறிந்துவந் தெய்திடும்? அங்ஙனம்
மேவிடில் அன்றோ காய்தரும் கருவாம்?
இவ்விதம் நோக்கிடில் எவ்விதத் தோற்றமும்
செவ்விதிற் பற்பல காரணச் செறிவால் (190)
அவ்வவற் றுள்நிறை அன்பே ஆக்கும்.
சிற்றறி வாதலான் முற்றுநாம் உணரோம்
அந்தியில் இம்மலர் அலர்வதேன் என்பதிங்
கறிகிலோம் ஆயினும் அதற்குமோர் காரணம்
உளதென நம்பலே யூகம். அதனால் (195)
உலகிடைத் தோன்றும் உறுகணுக் கேது
நலமுற நமக்கிங் கிலகா ததனாற்
பலமுறை நம்மையே பரிந்திழுத் தாண்டவர்
இலையுல கிடையென எண்ணுவ தெங்ஙனம்?
யாரிங் குலகெலாம் அறிந்திட வல்லார்? (200)
பாருமிங் கீதோ! பரம தயாநிதி
நங்குரு நாத னென்பதார் ஒவ்வார்?
நம்புவம் நீரும் நானுமிங் கொருப்போல்
ஆயினும் பாரும்! அம்மணி மனோன்மணி
ஏதோ ஊழ்வினை இசைவால் தனது (205)
காதாற் கேட்கவும் கண்ணாற் காணவும்
இல்லா ஒருவனை எண்ணி மயங்கினள்.
அல்லல் இதுவே போதும். அஃதுடன்
அப்புரு டன்றான் ஆரென ஆயில்
ஒப்புறு புருடோத் தமனே என்ன (210)

தொகு

எப்படி நோக்கினு மிசையும்.அப் படியே
செப்பினர் யாவும் தெரிந்தநம் குருவும்!
ஏதோ ஒருவன் சூதா ஏவிய
தூதால் வந்ததே ஈதோ பெரும்போர்!
போர்வந் திடவரு புருடோத் தமனும் (215)
வார்குழல் மனோன்மணி மாதும், நோக்கில்
நம்மிலும் எத்தனை நம்பிய அன்பர்
இம்மென ஒருமொழி இசைத்திவர் தம்மை
ஒருவரை யொருவர் உணர்த்திடப் பண்ணில்
வெருவிய போரும் விளைதுயர் அனைத்தும் (220)
இருவர்தம் துக்கமும் எல்லாம் ஏகும்
இப்படிச் சுலபசாத் தியமாய் இருக்க
அப்படி யொன்றும் அடிகள் எண்ணாமல்
சுருங்கைதொட் டிடவே துவக்கித் தன்திரு
அருங்கை வருந்தவும் ஆற்றுமப் பணியே. (225)
சுருங்கை யிதற்குஞ் சொல்லிய துயர்க்கும்
நெருங்கிய பந்தம் நினைத்தற் கென்னை?
ஒன்றும் தோற்றுவ தன்றுஎன் தனக்கே,
என்றுநான் எண்ணி எம்குரு நாதன்
திருமொழி மறுத்தென் சிற்றறி வினையே (230)
பெரிதெனக் கருதலோ, அலதவர் பேணிய
இவ்வழி நம்மதிக் கெட்டா விடினும்
செவ்வி திதுவெனத் தெளிதலோ தகுதி?
இப்படி யேயாம் இவ்வுல கின்நிலை.
அற்பமும் அதிலிலை ஐயம். நமதுமற் (235)
றெய்ப்பினில் வைப்ப யிருந்தபே ரருளைக்
கைப்படு கனியெனக் கண்டபின், உலகின்
எப்பொரு ளையுமிப் படியே இவ்வருள்
தாங்கிடும் என்பதில் சமுசய மென்னை?
இல்லா மாயை என்செய வல்லதாம்? (240)
எல்லாம் அவனருள் அல்லா தில்லை.
என்னனு பவமிது. மன்னிய இவ்வருள்
தன்னிடை மூழ்கித் தானெனல் மறந்து,
நெருப்பிடை இழுதென நெக்குநெக் குருகி
இருப்பவர் பிறர்க்காய் இராப்பகல் உழைப்பர். (245)
ஒருபயன் கருதார். அருளுகரு துவதென்?
அகிலமும் தாங்கும் அருளிலோர் அரங்கமாச்
சகலமும் செய்வர். அஃதவர் சமாதி,
எங்கெலாம் துக்கம் காணினும் அங்கெலாம்
அங்கம் கரையநின் றரற்றி “ஐயோ! (250)
எம்மையும் காத்த இன்னருள் இவரையும்
செம்மையிற் காக்க” எனமொழி குளறி
அழுதுவேண் டுவதே அன்றி
விழுமிய முத்தியும் வேண்டார் தமக்கே. (பா-2)

(சுந்தர முனிவரும் நடராசரும் வர, கருணாகரர்
நிட்டாபரர் இருவரும் எழுந்து வணங்க)

தொகு

சுந்தரமுனிவர்
எல்லாம் நடராசரே! உமதுபே ரருளே!
அல்லா தென்னால் ஆகுமோ? சுருங்கை
இத்தினம் எப்படி முடியும்நீர் இலரேல்?
எத்தனை கருணை? என்னைகைம் மாறு?
நடராசன்
நல்லது நல்லது! சொல்லிய முகமன்!
வேலை எனதோ? உமதோ? விநோதம் (260)
ஏவிய வழியான் போவதே அல்லால்
ஆவதென் என்னால்? ஆஆ! நன்றே!
சுந்தரமுனிவர்
கருணா கரரே! களைப்பற நீரிங்கு
ஒருவா றுறங்கவென் றுன்னி அன்றோ
இவ்விடம் அனுப்பினோம்? என்னை சிறிதும் (265)
செவ்விதில் தூங்கா திருந்தீர்! சீச்சீ!
எத்தனை நாளா யினநீர் தூங்கி!
இத்தனை வருந்தியும் ஏனிலை தூக்கம்?
பன்னாள் இரவும் பகலும் உழைத்தீர்.
எந்நா ளாறுவீர் இவ்வலுப் பினிமேல்? (270)
கருணாகரர்
அடியேற் கலுப்பென்? அருளால் அனைத்தும்
முடிவது. மேலும், யான்வரும் வேளை
இட்டமாம் நிட்டா பரரும் தனியாய்
நிட்டைவிட் டெழுந்தார். இருவரும் அதனால்
ஏதோ சிலமொழி ஓதிமற் றிருந்தோம். (275)
ஈதோ உதயமும் ஆனதே, இனியென்?
சுந்தரமுனிவர்
விடிந்த தன்றிது; வெள்ளியின் உதயம்.
படும்படும்; மிகவும் பட்டீர் வருத்தம்.
உங்கள்பேச் சறிவோம், ஓயாப் பேச்சே!
இங்கது முடியுமோ? ஏனுங் கட்கும் (280)
சமயிகட் காம்சச் சரவு?
அமையும் உங்கட் கவரவர் நிலையே.

(யாவரும் போக)

மூன்றாம் அங்கம் நான்காம் களம் முற்றிற்று. தொகு

(கலித்துறை)

சாற்றரும் ஆபதந் தான்தவிர்த் தின்பந் தரமுயன்று,
தோற்றருங் கற்படை யேதோ அமைத்தனன் சுந்தரனே;
வேற்றுரு வாயகம் வேதித்து நன்மை விளைக்குமவன்
மாற்ற மனுபவம் வந்தபின் னன்றி மதிப்பரிதே. (க.துறை-1)

மூன்றாம் அங்கம் முற்றிற்று. தொகு

ஆசிரியப்பா 6/க்கு அடி 819
வஞ்சித்தாழிசை 3/க்கு அடி 12
குறள்வெண் செந்துறை 50/க்கு அடி 100
கலித்துறை 1/க்கு அடி 4

ஆக, அங்கம் 3/க்கு: பா 60/க்கு அடி 935.

பார்க்க: தொகு

III தொகு

மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 01
மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 02
மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 03

முதல் அங்கம் தொகு

மனோன்மணீயம்- ஆசிரியமுகவுரை, கதைச்சுருக்கம்.

I தொகு

மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 01

மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 02

மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 03

மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 04

மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 05

II தொகு

மனோன்மணீயம்/அங்கம் 02/களம் 01

மனோன்மணீயம்/அங்கம் 02/களம் 02

மனோன்மணீயம்/அங்கம் 02/களம் 03

IV தொகு

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 01

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 02

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 03

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 04

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 05

V தொகு

மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 01

மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 02

மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 03