மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 04

மனோன்மணீயம் தொகு

அங்கம் நான்கு தொகு

நான்காம் களம் தொகு

இடம்: அரண்மனையில் ஒருசார்.
காலம்: மாலை.

(சீவகனும் குடிலனும் மந்திராலோசனை; பலதேவன் ஒருபுறம் நிற்க.)

(நேரிசை ஆசிரியப்பா)

சீவகன்:
ஆதி இன்னதென் றோதுதற் கரிய

வழுதியின் தொழுகுல வாணாள் ஓரிரா
எனமதிப் பதற்கும் இருந்ததே! குடில!
இத்தனை கேடின் றெங்ஙனம் விளைந்தது?
சற்றும் அறிந்திலேன் தையலர் புகலுமுன். (05)
மாற்றார் நமது மதிற்புறத் தகழைத்
தூர்த்தார் எனப்பலர் சொல்லுவ துண்மைகொல்!
குடிலன்
ஓரிடம் அன்றே. உணர்ந்திலை போலும்.

(தனதுள்)

வேரறக் களைகுதும். இதுவே வேளை.
சீவகன்
என்னை! என்னை! (10)
குடிலன்
.... .... மன்னவா யானிங்
கென்னென ஓதுவன் இன்றையச் சூது?
சீவகன்
மருவரு மதிலுள கருவியென் செய்தன?
குடிலன்
கருவிகள் என்செயும்? கருத்தா இன்றியே!
சீவகன்
காவல் இல்லைகொல்? சேவகர் யாவர்?
குடிலன்
ஏவலின் படியாம் எண்ணா யிரவர் (15)
ஆதியர் காவலர் ஆக்கியே அகன்றோம்.
சீவகன்
ஏதிது பின்னிவர் இருந்துமற் றிங்ஙனம்?
குடிலன்
இருந்திடில் இங்ஙனம் பொருந்துமோ? இறைவ!
சீவகன்
செவ்விது! செய்ததென்?
குடிலன்
... .... எவ்விதம் செப்புகேன்?
நாரணர் காவலின் நாயகர் ஆக்கினோம் (20)
போரிடைக் கண்டனை நாரணர் தம்மை.
சீவகன்
மெய்ம்மை! கண்டனம் விட்டதென் காவல்?
குடிலன்
ஐய!யான் அறிகிலன். அவரிலும் நமக்கு
மெய்ம்மையர் யாவர்? வேலியே தின்னில்
தெய்வமே காவல் செய்பயிர்க் கென்பர். (25)
சீவகன்
துரோகம்! துரோகம்!
குடிலன்
.... .... துரோகமற் றன்று!
விரோதம்! அடியேன் மேலுள விரோதம்.
திருவடி தனக்கவர் கருதலர் துரோகம்.
சீவகன்
கெடுபயல்! துரோகம்! விடுகிலன் சிறிதில்.
குடிலன்
மடையன் ஐயோ! மடையன்! சுவாமீ! (30)
எலிப்பகை தொலைக்க இருந்ததன் வீட்டில்
நெருப்பினை இடல்போல் அன்றோ நேர்ந்தது.
விருப்பம்மற் றவர்க்குன் வெகுமதி ஆயின்,
திருத்தமாய் ஒருமொழி திருச்செவி சேர்க்கில்.
அளிப்பையே களிப்புடன் அமைச்சும் தலைமையும்! (35)
அத்தனை அன்புநீ வைத்துளை!

(அழுது)

சீவகன்: .... .... .... ஆஆ!
எத்தனை துட்டன்! எண்ணிலன் சற்றும்!
குடிலன்
ஐயோ! எனக்கிவ் வமைச்சோ பெரிது?
தெய்வமே அறியும் என்சித்த நிலைமை!
வெளிப்பட ஒருமொழி விளம்பிடின் யானே (40)
களிப்புடன் அளிப்பனக் கணமே அனைத்தும்
விடுவேம் அதற்கா வேண்டிலெம் உயிரும்!

(பலதேவன் மார்பைக் காட்டி)

போர்முகத் திங்ஙனம் புரிதலோ தகுதி?
சீவகன்
யார்யார்? நாரணன்? (பலதேவனை நோக்கி)
பலதேவன்
.... .... ஆம்!அவன் ஏவலில்
வம்பனங் கொருவன்... (45)
சீவகன்
.... .... நம்பகை அன்றுபின்!
குடிலன்
நின்பகை அன்றுமற் றென்பகை இறைவ!
சீவகன்
உன்பகை என்பகை! ஓஓ! கொடியன்!
செய்குவன் இப்போ தே,சிரச் சேதம்!
இடங்குழம் பியதிங் கிதனாற் போலும்?

# தொகு

குடிலன்
அடங்கலும் இதனால் ஐய! அன்றேல், (50)
இடப்புறம் வலப்புறம் யாதே குழம்பும்?
மடப்பயல் கெடுத்தான்! மன்ன!நம் மானம்!
ஒருமொழி அல்லா திருமொழி ஆயின்
வெருவர வெம்படை வெல்லுவ தெங்ஙனம்!
சீவகன்
அழைநா ரணனை, (55)

(முதற்சேவகனை நோக்கி)

முதற் சேவகன்
.... .... அடியேன்.
சீவகன்
.... .... .... நொடியில். (சேவகன் போக)
பழைமையும் பண்பும்நாம் பார்க்கிலம் பாவி!
இத்தனை துட்டனோ? ஏனிது செய்தான்?
குடிலன்
சுத்தமே மடையன்! சுவாமீ! பொறுத்தருள்.
என்னதே அப்பிழை மன்ன!நீ காக்குதி!
வருபவை உன்திரு வருளால், வருமுன் (60)
தெரிவுறும் அறிவெனக் கிருந்தும், திருவுளம்
நிலவிய படியே பலதே வனைப்படைத்
தலைவனாய் ஆக்கிடச் சம்மதித் திருந்தேன்,
எனதே அப்பிழை, இலதேல் இவ்விதம்
நினையான் இவனுயிர் நீங்கிடப் பாவி! (65)
அதன்பின் ஆயினும் ஐயோ! சும்மா
இதமுற இராதுபோர்க் களமெலாம் திரிந்து
கடிபுரிக் காவற் படைகளும் தானுமாய்
இடம்வலம் என்றிலை; இவுளிதேர் என்றிலை;
கடகயம் என்றிலை; அடையவும் கலைத்து, (70)
கைக்குட் கனியாய்ச் சிக்கிய வெற்றியை (விம்மி)
சீவகன்
கண்டனம் யாமே.
குடிலன்
.... .... காலம்! காலம்!
சீவகன்
கொண்டுவா நொடியில்.

(இரண்டாம் சேவகனை நோக்கி)

இரண்டாம் சேவகன்
.... .... அடியேன்! அடியேன்...

இரண்டாம் சேவகன் போக)

குடிலன்
சென்றது செல்லுக, ஜயிப்போம் நாளை
ஒன்றுநீ கேட்கில் உளறுவன் ஆயிரம். (75)
கெடுநா உடையான், கேட்டினி என்பயன்?
சீவகன்
விடுவேம் அல்லேம், வெளிப்படை. கேட்பதென்?
எழுமுன் அவன்கழு ஏறிடல் காண்குதும்.
குடிலன்
தொழுதனன் இறைவ! பழைமையன்! பாவம்!
சிறிதுசெய் கருணை, அறியான்! ஏழை! (80)
சீவகன்
எதுவெலாம் பொறுக்கினும் இதுயாம் பொறுக்கிலம்
எத்தனை சூதுளான்! எத்தனை கொடியன்!
குடிலன்
சுத்தன்
சீவகன்
.... சுத்தனோ? துரோகி! துட்டன்!

(நாராயணன் உள்ளேவர)

இட்டநம் கட்டளை என்னையின் றுனக்கே?

(முருகன் முதலியோர் வாயிலில் நிற்க)

நாராயணன்
எப்போ திறைவ?
சீவகன்
.... .... இன்றுபோர்க் கேகுமுன்! (85)
நாராயணன்
அப்போ தாஞ்ஞையாய் அறைந்ததொன் றில்லை,
கடிபுரி காக்க ஏவினன் குடிலன்.
சீவகன்
குடிலனை யாரெனக் கொண்டனை, கொடியாய்!
நாராயணன்
குடிலனைக் குடிலனென் றேயுட் கொண்டுளேன்.
சீவகன்
கெடுவாய்! இனிமேல் விடுவாய் பகடி! (90)
குடிலனென் அமைச்சன்.
நாராயணன்
.... .... நெடுநாள் அறிவன்!
சீவகன்
நானே அவனிங் கவனே யானும்.
நாராயணன்
ஆனால் நன்றே, அரசமைச் சென்றிலை.
சீவகன்
கேட்டது கூறுதி.
நாராயணன்
.... .... கேட்டிலை போலும்.
சீவகன்
கடிபுரி காத்தைகொல்? (95)
நாராயணன்
.... .... காத்தேன் நன்றாய்.
சீவகன்
காத்தையேல் அகழ்க்கணம் தூர்த்ததென் பகைவர்?
நாராயணன்
தூர்த்தது பகையல, துரத்திய படைப்பிணம்.
பார்த்துமேற் பகருதி.
சீவகன்
.... .... பார்த்தனைம் உன்னை

ஆர்த்தபோர்க் களத்திடை, அதுவோ காவல்?

நாராயணன்: உன்னையும் காத்திட உற்றனன் களத்தில். (100)

# தொகு

சீவகன்
என்னையுன் கபட நாடகம்? இனிதே!
அவனுரம் நோக்குதி, அறிவைகொல்?

(பலதேவனைக் காட்டி)

நாராயணன்: .... .... .... அறிவேன்

சீவகன்
எவனது செய்தவன்?
நாராயணன்
.... .... அவனே அறிகுவன்.
சீவகன்
ஒன்றும்நீ உணர்கிலை?
நாராயணன்
.... .... உணர்வேன் இவன்பால்

நின்றதோர் வீரன்இப் பொற்றொடி யுடையான், (105)

“என்தங் கையினிழி விப்படி எனக்கே”
என்றுதன் கைவேல் இவனுரத் தெற்றிப்
பொன்றினன் எனப்பலர் புகல்வது கேட்டேன்.
சீவகன்
நன்றுநன் றுன்கதை!
குடிலன்
.... .... நன்றிது நன்றே!

(பொற்றொடி காட்டி)

பூணிது நினதே! அரண்மனைப் பொற்றொடி (110)
காணுதி முத்திரை! வாணியும் சேர்ந்துளாள்,
இச்செயற் கிதுவே நிச்சயம் கூலி.
அடியேந் தமக்கினி விடையளி அகலுதும்.
அஞ்சிலேம் உடலுயிர்க் கஞ்சுவம் மானம்.
வஞ்சகர் கெடுப்பர் வந்தனம். (115)

(தன் முத்திரை மோதிரம் கழற்றி நீட்ட)

சீவகன்: (நாராயணனை நோக்கி)
.... .... .... நில்நில்
இத்தனை சூதெலாம் எங்குவைத் திருந்தாய்?
உத்தமன் போலமற் றெத்தனை நடித்துளாய்!
சோரா! துட்டா! சுவாமித் துரோகி!
வாராய் அமைச்ச! வாரீர் படைகாள்!

(முருகன் முதலிய தலைவரும் படைஞரும் வர)

நாரா யணனிந் நன்றிகொல் பாதகன் (120)
இன்றியாம் இவனுக் கிட்டகட் டளையும்
நன்றியும் மறந்து நன்னகர் வாயிற்
காவல்கை விடுத்துக் கடமையிற் பிறழ்ந்தும்
மேவருந் தொடியிதெங் கோவிலில் திருடியும்,
ஏவலர்க் கதனையீந் தேபல தேவன் (125)
ஓவலில் உயிரினை உண்டிடத் தூண்டியும்,
அநுமதி இன்றியின் றமர்க்களத் தெய்திக்
கனைகழற் படையரி கரிரதம் கலைத்துச்
சுலபமா யிருந்தநம் வெற்றியும் தொலைத்துப்
பலவழி இராசத் துரோகமே பண்ணியும், (130)
நின்றுளான். அதனால் நீதியா யவனை
இன்றே கொடுங்கழு வேற்றிட விதித்தோம்!
அறிமின் யாவரும் அறிமின்! அறிமின்!
சிறிதன்(று) எமக்கிச் செயலால் துயரம்.
இன்றுநேற் றன்றெனக் கிவனுடன் நட்பு. (135)
நாராயணன்
வெருவிலேன் சிறிதும் வேந்தநின் விதிக்கே!
அறியாய் ஆயின் இதுகா றாயும்
வறிதே மொழிகுதல்! வாழ்க நின்குலம்!
சீவகன்
நட்பல, மக்களே யாயினென்? நடுநிலை
அற்பமும் அகலோம். ஆதலின் இவனை (140)

(படைத்தலைவரை நோக்கி)

நொடியினிற் கொடுபோ யிடுமின் கழுவில்!
முருகன்
அடியேம். நொடியினில் ஆற்றுதும் ஆஞ்ஞை.
குடிலரே வாரும்!
சீவகன்
.... .... மடையன் இவன்யார்?
முருகன்
கூறிய பலவும், குடிலரோ டொவ்வும்,
வேறியார் பிழைத்தனர் வேந்தமற் றின்றே? (145)
குடிலன்
கேட்டனை இறைவ! கெடுபயல் கொடுமொழி.

(காதில்) மூட்டினன் உட்பகை!

நாராயணன்
முருகா! சீசீ! (முருகனை அருகிழுத்து)
சீவகன்
மாட்டுதிர் இவனையும் வன்கழு வதனில். (சேவகனை நோக்கி)
முருகன்
ஆயிற் கழுபதி னாயிரம் வேண்டும்.

(வாயிற்சேவகன் வர)

சேவகன்
சுந்தர முனிவர் வந்தனர் அவ்வறை. (150)
சிந்தனை விரைவிற் செய்தற் குளதாம்.

# தொகு

சீவகன்
வந்ததெவ் வழியிவர்! வந்தனம் குடிலா!
நடத்துதி அதற்குள் விதிப்படி விரைவில்.
குடிலன்
மடத்தனத் தாலிவர் கெடுத்தெனைப் புகல்வர்,
விடுத்திட அருளாய்!
சீவகன்
.... .... விடுகிலம்.
குடிலன்
.... .... .... ஆயின், (155)
சீவகன்
அடுத்துநின் றிதுநீ நடத்தலே அழகாம்.
அடைத்திடு சிறையினில், அணைகுதும் நொடியில்.

(சீவகன் போக)

குடிலன்
(தன்சேவகனை நோக்கி)
சடையா! கொடுபோய் அடையாய் சிறையில்.

(சடையன் அருகே செல்ல)

முருகன்
அணுகலை! விலகிநில்! அறிவோம் வழியாம்.

(சடையன் பின்னும் நெருங்க)

வேணுமோ கோணவாய் விக்கா! (160)
சடையன்
.... .... .... கொக்கொக்! (விக்கி)
முருகன்
கூவலை! விடியுமுன் கூவலை!
சடையன்: .... .... .... கொக்கொக்.
சேவகர் யாவரும்
சேவலோ! சேவலோ! சேவலோ! சேவலோ!

(கைதட்டிச் சிரித்து)

குடிலன்
ஏதிது? இங்ஙனம் யாவரு மெழுந்தார்!
வீதியிற் செல்லலை. வீணர்! அபாயம்!
ஒழிகுவம் இவ்வழி! வழியிது! வாவா! (165)

(குடிலனும் பலதேவனும் மறைய)

சேவகரிற் சிலர்
பிடிமின் சடையனை!

((சடையனும் குடிலனும் சேவகரும் ஓடிட, சில படைஞர் துரத்திட, சிலர் ஆர்த்திட)

மற்றைய சேவகர்
.... .... பிடிமின் பிடிமின்!
சேவகரிற் சிலர்
குடிலெனங் குற்றான்?
குடிலன்
.... .... கொல்வரோ? ஐயோ!

(நன்றாய் மூலையில் மறைய)

சேவகரிற் சிலர்
விடுகிலம் கள்வரை!
மற்றையசேவகர்
.... .... பிடிமின் பிடிமின்!

கூக்குரல் நிரம்பிக் குழப்பமாக)

நாராயணன்
முருகா! நிகழ்பவை சரியல சிறிதும்.

(ஒரு திண்ணையிலேறி நின்று)

அருகுநில், சீசீ! அன்பரே, அமைதி!

(குழப்பங் குறைந்து, அமைதி சிறிது பிறக்க)

முருகன்
அமைதி! கேண்மின்!
முதற்சேவகன்
.... .... அமைதி! அமைதி!
நாராயணன்
நல்லுயிர்த் துணைவரே! நண்பரே! ஒருமொழி
சொல்லிட ஆசை! சொல்லவோ! (குழப்பந் தீர)
சேவகரிற் சிலர்
.... .... .... சொல்லுதி.

(சிறிது சிறிதாய்ப் படைஞர் நெருங்கிச் சூழ)

சேவகர் யாவரும்
சொல்லாய் சொல்லாய்! பல்லா யிரந்தரம்!
நாராயணன்
நல்லீர் மிகவும் அல்லா திங்ஙனம் (175)
முன்பின் அறியா என்போ லிகள்மேல்
அன்புபா ராட்டீர், அநேக வந்தனம்! (கைகூப்பி)
சேவகர்
அறியா ருனையார்? அறிவார் யாரும்.

(முற்றிலும் அமைதி பிறக்க)

நாராயணன்
அறிவீர் ஆயினும் யானென் செய்துளேன்?
என்செய வல்லவன்! என்கைம் மாறு? (180)
பாத்திர மோநும் பரிவிற் கித்தனை!
சேவகர்
காத்தனை காத்தனை! காவற் கடவுள்நீ!
நாராயணன்
கெட்டார்க் குலகில் நட்டார் இல்லை!
ஆயினும், வீரர்நீ ராதலின், நும்முடன்
ஈண்டொரு வேண்டுகோள் இயம்பிட ஆசை (185)
அளிப்பிரோ அறியேன்?

(படைஞர் நெருங்கிச் சூழ)

சேவகர்
.... .... அளிப்போம் உயிரும்!
குடிலன்
(பலதேவன்காதில்)
ஒளித்ததிங் குணர்வனோ? ஓ!பல தேவ!
நாராயணன்
ஒருதின மேலும் பொருதுளேன் உம்முடன்.
கருதுமின் என்னவ மானமுஞ் சிறிதே.
சேவகர்
உரியதே எமக்கது. பெரிதன் றுயிரும்; (190)

(யாவரும் கவனமாய்க் கேட்க)

குடிலன்
(தனதுள்)
எரியிடு வானோ இல்லிடை? ஐயோ!
நாராயணன்
அத்தனை அன்புநீர் வைத்துளீர் ஆயின்
என்மொழி தனக்குநீர் இசைமின், எனக்காத்
தீதே ஆயினும் செமித்தருள் புரிமின்!
சேவகர்
யாதே ஆயினும் சொல்லுக! (195)

# தொகு

நாராயணன்
.... .... .... சொல்லுதும்!
போர்க்களத் துற்றவை யார்க்கும் வெளிப்படை!
ஊர்ப்புறத் தின்னம் உறைந்தனர் பகைவர்
நாற்புறம் நெருப்பு, நடுமயிர்த் தூக்கின்
மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி நிலைமை.
இதனிலும் அபாயமிங் கெய்துதற் கில்லை. (200)
நுந்தமிழ் மொழியும் அந்தமில் புகழும்
சிந்திடும், சிந்திடும் நுஞ்சுதந் தரமும்.
இத்தகை நிலைமையில் என்னைநும் கடமை?
மெய்த்தகை வீரரே! உத்தம நண்பரே!
எண்ணுமின் சிறிதே! என்னைநம் நிலைமை? (205)
களிக்கவும் கூவவும் காலமிங் கிதுவோ?
வெளிக்களத் துளபகை, வீண்கூக் குரலிதைக்
கேட்டிடிற் சிறிதும் கேலியென் றெண்ணார்;
கோட்டையுட் படைவெட் டேயெனக் கொள்வர்.
பெரிதுநம் அபாயம்! பேணி அதற்குநீர் (210)
உரியதோர் கௌரவம் உடையராய் நடமின்.
விடுமின் வெகுளியும், வீண்விளை யாட்டும்.
படையெனப் படுவது கரையிலாப் பெருங்கடல்
அடலோ தடையதற்கு? ஆணையே அணையாம்.
உடைபடின் உலகெலாம் கெடுமொரு கணத்தில். (215)
கருமருந் தறையிற் சிறுபொறி சிதறினும்
பெருநெருப் பன்றோ? பின்பார் தடுப்பர்?
அதனால் அன்பரே! ஆணைக்கு அடங்குமின்!
குடிலன்
(மூச்சுவிட்டு) ஆ!
நாராயணன்
இதுபோல் இல்லை யெனக்குப காரம்!

(மௌனம்)

இரந்தேன், அடங்குமின்! இரங்குமின் எமக்கா! (220)
ஒன்றாம் சேவகன்
நாரா யணரே! நவின்றவை மெய்யே!
ஆரே ஆயினும் சகிப்பர் அநீதி!
நாராயணன்
ஏதுநீர் அநீதியென் றெண்ணினீர்? நண்பரே!
ஓதிய அரசன் ஆணையை மீறி
எனதுளப் படிபோர்க் கேகிய அதற்கா (225)
மனுமுறைப் படிநம் மன்னவன் விதித்த
தண்டனை யோவநி யாயம்? அலதியான்
உண்டசோற் றுரிமையும் ஒருங்கே மறந்துமற்
றண்டிய அரச குலத்திற் கபாயம்
உற்றதோர் காலை உட்பகை பெருக்கிக் (230)
குற்றமில் பாண்டிக் கற்றமில் கேடு
பண்ணினேன் என்னப் பலதலை முறையோர்
எண்ணிடும் பெரும்பழிக் கென்பெயர் அதனை
ஆளாக் கிடநீர் வாளா முயலவோ
யாதே அநீதி! ஓதுமின். அதனால் (235)
என்புகழ் விரும்பு வீராயின், நண்பரே!
ஏகுமின் அவரவர் இடத்திற் கொருங்கே!
ஒன்றாம் சேவகன்
எங்கினி ஏகுவம் இங்குனை இழந்தே?
இரண்டாம் சேவகன்
உன்கருத் திருப்பிற் குரியதோ இவ்விதி?
நாராயணன்
கருத்தெலாம் காண்போன் கடவுள், விரித்த (240)
கருமமே உலகம் காணற் குரிய.
ஒருவனோ அலதிவ் வுலகமோ பெரிது?
கருதுமின் நன்றாய், காக்குமின் அரசனை.
செல்லுமின், நில்லீர்! செல்லிலென் றனக்கு
நல்லீர் மிகவும்!
சேவகர்
.... .... நாரா யணரே!
உமக்காங் கொடிய கழுமரம் எமக்கும்
நன்றே என்றே நின்றோ மன்றிக்
கெடுதியொன் றெண்ணிலம். கொடுமதற் கநுமதி.
நாராயணன்
தென்னவன் சிறைசெயச் செப்பினன், அதனால்
இன்னம் பிழைப்பேன் இக்கழு, உமக்கியான் (250)
சொன்னவா றடங்கித் துண்ணென் ஏகில்.
இல்லையேல் எனக்கினி எய்துவ தறியேன்.
வல்லைநீர் செல்லுமின்! செல்லுமின்! வந்தனம்.
செல்லுமின்! சத்தியம் செயிக்கும்! செயிக்கும்!
நல்லது நல்லது!

(படைஞர் விடைபெற்றுப் போக)

முருகன்
.... .... நாரா யணரே!
நுஞ்சொல் என்சிரம், ஆயினும் நுஞ்செயல்
சரியோ என்றெனக் குறுவதோர் ஐயம்.
சத்தியம் செயிக்கு மென்றீர். எத்திறம்?
குடிலன் தனக்கநு கூலமாய் அனைத்தும்
முடிவது கண்டும் மொழிந்தீர் முறைமை! (260)
நாராயணன்
பொறுபொறு! முடிவில் அறிகுவை.
முருகன்
.... .... .... முடியும்
தருணம் யாதோ? மரணமோ என்றால்,
மரணம் அன்றது, மறுபிறப் பென்பீர்.
யாதோ உண்மை?
நாராயணன்
(இருவரும் நடந்து)
.... .... ஓதுவம், வாவா!
நன்றிது, தீதிது, என்றிரு பான்மையாய்த் (265)
தோற்றுதல் துணிபே. அதனால்
தேற்றம் இதேயெனச் செய்கநல் வினையே. (ஆசிரியப்பா-01)

(நாராயணனும் முருகனும் சிறைச்சாலைக்குப் போக)

பலதேவன்
என்னையுன் பீதி? எழுவெழு. இவர்க்குன்
பொன்னோ பொருட்டு?

(பலதேவனும் குடிலனும் வெளியே வந்து)

குடிலன்
.... .... போபோ! மடையா!
உன்னினன் சூதே.
பலதேவன்
.... .... உன்குணம், நாரணன் (270)
சொன்னது கேட்டிலை?
குடிலன்
.... .... சொல்லிற் கென்குறை?
முன்னினும் பன்னிரு பங்கவன் துட்டன்.

(சேவகன் வர)

சேவகன்
மன்னவன் அழைத்தான் உன்னைமற் றப்புறம்.
குடிலன்
வந்தனம் ஈதோ! சுந்தரர் போயினர்?
சேவகன்
போயினர்.
குடிலன்
.... ஓஓ! போஇதோ வந்தோம்.

(சேவகன் போக)(தனதுள்)

ஆயின தென்னையோ அறிகிலம், ஆயினும்
சேயினும் எளியன். திருப்புவம் நொடியே. (ஆசிரியப்பா- 02)

(குடிலனும் பலதேவனும் போக)

நான்காம் அங்கம், நான்காம் களம் முற்றிற்று, தொகு

பார்க்க: தொகு

IV

மனோன்மணீயம்: நான்காம்அங்கம், நான்காங்களத்தின் கதைச்சுருக்கம்

IV:01

IV:02

IV:03

IV:05

I

மனோன்மணீயம் மூலம்(முதல்அங்கம்-பாயிரம்)
I:01 * I:02 * I:03 * I:04 * I:05

II

II:01 * II:02 * II:03

III

III:01 * III:02 * III:03 * III:04

V

V:01 * V:02 * V:03