மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 03
மனோன்மணீயம்
தொகுஅங்கம் ஐந்து
தொகுமூன்றாம் களம்
தொகு- இடம்
- அரண்மனையில் மணமண்டபம்.
- காலம்
- நடுநிசி.
(அமைச்சர், படைவீரர் முதலியோர், அரசனை எதிர்பார்த்து நிற்க.)
- ;(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிகள்: 1-58
தொகுமுதற்படைஞன்:
- அடிகள்பின் போயினர் யாவர்? அறிவீர்!
இரண்டாம் படைஞன்:
- நடரா சனைநீர் அறியீர் போலும்!
முதற்படைஞன்:
- அறிவேன். ஆஆ! அரிவையர் யாரே
- வெறிகொளார் காணில்! வீணில் வாணியைக்
- கெடுத்தான் கிழவன்.
மூன்றாம்படைஞன்:
- .... .... அடுத்ததம் மணமும்! (5)
- தெரியீர் போலும்!
முதற்படைஞன்:
- .... .... தெரியேன், செய்தியென்?
மூன்றாம் படைஞன்:
- கோணிலா நாரணன் கொடுஞ்சிறை தவிர்த்தலும்
- வாணியின் மனப்படி மன்றல் நடத்தலும்
- இவ்வரம் இரண்டும் அம்மணி வேண்ட
- அளித்தனன் அனுமதி களிப்புடன் அரசன். (10)
முதற்படைஞன்:
- இருதிரை இட்டவா றிப்போ தறிந்தேன்
- ஒருதிரை வாணிக்கு ஒருதிரை மணிக்கே.
மூன்றாம்படைஞன்:
- எத்திரை தாய்க்கென் றியம்புதி கேட்போம்.
முதற்படைஞன்:
- இத்திரை தாய்க்காம்.
மூன்றாம்படைஞன்:
- .... .... சீசீ! அத்திரை,
இரண்டாம்படைஞன்:
- எத்திரை ஆயினென்? ஏனிரை கின்றீர்?
முதற்படைஞன்:
- இருதிரை வந்தவா றிதுவே ஆயினும்
- ஒருதிரைக் கொருதிரை எத்தனை தூரம்?
மூன்றாம்படைஞன்:
- அதோஅவன் அறிகுவன். அறிந்திதோ வருவேன்.
(மூன்றாம் படைஞன் மற்றோரிடம் போக)
முதற்படைஞன்:
- ஐயோ! பொய்யறு அன்னையம் மணிக்கும்
- பொய்யன் பலதே வனுக்குமோ பொருத்தம்? (20)
இரண்டாம் படைஞன்:
- வருத்தமேன் உனக்கு? மன்னன் திருவுளக்
- கருத்தனு சரித்துநாம் காட்டலே கடமை.
(மூன்றாம் படைஞன் மீண்டும் வர)
மூன்றாம் படைஞன்:
(முதற்படைஞனை நோக்கி)
- இப்புறம் வருதி, செப்புவன் ரகசியம்.
- சத்தியம் செய்தபின் சாற்றினன், நீயும்
- எத்திறத் தோர்க்கும் இயம்பலை பத்திரம்! (25)
- அத்திரை மணத்திற் கன்றுமற் றப்புறம்
- நெருங்கிய சுருங்கையொன் றுளதாம். அவ்வுழி
- செல்லில் வெகுதொலை செலுமாம். இப்போர்
- வெல்லும் வரையும் அவ்வழி மணந்தோர்
- இருவரும் எய்திவாழ்ந் திருப்பராம்,
முதற்படைஞன்:
- ... ... ... சரிசரி! (30)
- பொருவரும் புத்திமான் குடிலன், எத்தனை
- விரைவிற் சமைத்தான்! வெகுதிறம் உடையான்.
மூன்றாம் படைஞன்:
- இப்போ தன்றது, நகரா ரம்பம்
- எப்போது அப்போ தவரும் துயரம்
- கருதிமுன் செய்தனன்!
முதற்படைஞன்:
- .... .... ஒருவரும் அறிந்திலம்! (35)
(முருகன் வர)
மூன்றாம் படைஞன்:
- யாரது, முருகனோ? நாரணன் எங்கே?
முருகன்:
- நாரணன் அப்புறம் போயினன், வருவன்.
மூன்றாம் படைஞன்:
- பிழைத்தீர் இம்முறை
முருகன்:
- .... .... பிழைத்திலம் என்றும்!
மூன்றாம்படைஞன்:
- அத்திரைச் செய்தி அறிவாய். வைத்ததார்?
முருகன்:
:
- வைத்தது ஆராயினென்? வெந்தது வீடு! (40)
(இருவரும் நகைக்க)
இரண்டாம்படைவீரன்:
- வாயினை மூடுமின், வந்தனன் மணமகன்.
முருகன்:
- ஈயோ வாயில், ஏறிட நாயே!
முதற்படைவீரன்:
- அரசனும் முனிவரும் அதோவரு கின்றார்!
சீவகன்:
(சீவகன், சுந்தரமுனிவர், கருணாகரர், நிஷ்டாபரர்,
பலதேவன், நடராசன், நாராயணன் முதலியோர் வர)
- இருமின் இருமின்! நமர்காள் யாரும்!
(சீவகன் முதலியோர் தத்தம் இடத்திருக்க)
- கொலுவோ கொல்லிது! மணவறை! இருமின். (45)
- பலதேவ ரேநும் பிதாஇது காறும்
- வந்திலர் என்னை?
பலதேவன்:
- .... .... மன்னர் மன்ன!
- அந்தியிற் கண்டேன் அடியேன், அதன்பின்
- ஒருவரும் கண்டிலர் தனிபோ யினராம்.
சீவகன்:
- இருமிரும் நீரும். எங்கே கினும்நம் (50)
- காரிய மேயவர் கருத்தெப் பொழுதும்.
(நாராயணனை நோக்கி)
- பாரீர் அவர்படும் பாடு.
நாராயணன்:
- .... .... .... பார்ப்பேன்!
- சத்தியம் செயிக்குமேற் சாற்றிய படியே!
சீவகன்:
- இத்தகை உழைப்போர் எப்புவ னமுமிலை,
- எண்ணிநிச் சயித்த இத்தொழில் இனியாம் (55)
- பண்ணற் கென்தடை? சுவாமி! அடிகள்
- தந்தநன் முகூர்த்தம் வந்ததோ?
சுந்தரமுனிவர்:
- .... .... .... வந்தது.
அடிகள்: 58- 113
தொகு(புருடோத்தமனும், குடிலனும், அருள்வரதன்
முதலிய மெய்க்காப்பாளருடன் கற்படை வழிவர)
புருடோத்தமன்:
- (கற்படையில் அருள்வரதனை நோக்கி)
- நின்மின்! நின்மின்! பாதகன் பத்திரம்!
- என்பின் இருவர் வருக.
(தனதுள்)
- .... .... .... இதுவென்?
- இந்நிசி எத்தனை விளக்கு! ஏதோ! (60)
- மன்னவை போலும்! மந்திரா லோசனை!
- இவர்சுந் தரரே! அவர்நட ராசர்!
- இவர்க ளிங்குளரோ! எய்திய தெவ்வழி?
- இத்திரை எதற்கோ? அத்திரை எதற்கோ?
- இத்தனை கோலா கலமென் சபைக்கு? (65)
- மாலையும் கோலமும் காணின் மணவறை
- போலாம் அறிந்தினிப் போவதே நன்மை!
- மந்திரம் ஆயின் மற்றதும் அறிவோம்.
- இந்தநல் திரைநமக் கெத்தனை உதவி!
(திரைக்குப் பின் மறைந்து நிற்க)
சீவகன்:
- என்குலம் காக்க எனவருள் பழுத்துக் (70)
- கங்கணம் கட்டிய கருணா நிதிகாள்!
- மனத்திறத் தாழ்ந்த மதிமந் திரிகாள்!
- எனக்கென உயிர்வாழ் என்படை வீரர்காள்!
- ஒருமொழி கூறிட அனுமதி தருமின்.
- ஆடையின் சிறப்பெலாம் அணிவோர் சிறப்பே; (75)
- பாடையின் சிறப்பெலாம் பயில்வோர் சிறப்பே,
- எம்மரும் மதிகுலச் சிறப்பெலாம், எமர்காள்!
- கள்ளமில் நும்மனோர் காப்பின் சிறப்பே!
- ஆதலில் உமக்குப சாரம்யான் ஓதுதல்,
- மெய்க்குயிர் கைக்குநா விளம்புதல் மானும்! (80)
- ஈண்டுகாத் திடுவல்யான் எனக்கடன் பூண்டதும்
- மதிகுல மருந்தாய் வாய்த்தென் சிறுமி
- விதைபடும் ஆலென விளங்கினள். அவளைக்
- காத்திடும் உபாயம் கண்டிட இச்சபை
- சேர்த்தனன் என்பது தெரிவீர் நீவிர். (85)
- இன்றுநாம் பட்டதோர் இழுக்கிவ் வைகறை
- பொன்றியோ வென்றோ போக்குவம் திண்ணம்
- ஒருகுலத் தொருவன் ஒருமரத் தோரிலை.
- அப்படி அன்றுநம் கற்பகச் சிறுகனி!
- தப்பிடின் மதிகுலப் பெயரே தவறும். (90)
- அரியவிச் சந்தியைப் பெரிதும் கருதுமின்.
- இருந்திடச் சிறியள்; அபாயம்! தனியே
- பிரிந்திடப் பெரியள்; பிழை! அஃதன்றியும்
- குலமுடி வெண்ணிக் குலையுநம் உளத்திற்
- கிலையத னாலோர் இயல்சமா தானம் (95)
- ஆதலில் அரியதற் காலத் தியல்பை
- யாதென நீவிர் ஆய்ந்தியான் இப்போ
- தோதிடும் உபாயத் தாலுறு நன்மையும்
- தீமையும் நன்றாய்த் தெரிந்து செப்புமின்!
- குடிலனை அறியார் யாரிக் கொற்றவை? (100)
இரண்டாம்படைவீரன்:
- குடிலனை அறியுமே குவலயம் அனைத்தும்.
சீவகன்:
- அறிந்திடில் இறும்பூ தணையார் யாவர்?
- மதியுளார் யாரவன் மதியதி சயித்திடார்?
- நெஞ்சுளார் யாரவன் வன்திறற் கஞ்சார்?
- யார்வையார் அவனிடத் தாரா ஆர்வம்? (105)
- உண்மைக் குறைவிடம்; திண்மைக் கணிகலம்.
- சத்திய வித்து; பத்தியுன் மத்தன்.
- ஆள்வினை தனக்காள்; கேள்விதன் கேள்வன்,
- ஏன்மிக? நமர்காள்? இந்நடு நிசியிலும்
- யான்றி யாதுழைக் கின்றானன் எனக்கா (110)
- நன்றே இங்கவன் இலாமையும்! அன்றேல்,
- தற்புகழ் கேட்க அற்பமும் இசையான்!
புருடோத்தமன்:
(தனதுள்)
- எத்தனை களங்கமில் சுத்தன்! கட்டம்!
அடிகள்:114-
தொகுசீவகன்:
- பற்பல பாக்கியம் படைத்துளர் பண்டுளோர்.
- ஒப்பறும் அமைச்சனை இப்படி ஒருவரும்
- முன்னுளோர் பெற்றிலர்; பின்னுளார் பெறுவதும்
- ஐயமென் றுரைப்பேன், அன்னவன் புதல்வன்
- மெய்ம்மையும் வாரமும் வீரவா சாரமும்
- பத்திசேர் புத்தியும், யுத்திசேர் ஊக்கமும்
- உடையனாய் அடையவும் தற்பிர திமைபோல்
- இனியொரு தலைமுறை தனிசே வகஞ்செய
- இங்குவீற் றிருந்திலன் ஆயின், எமர்காள்!
- எங்குநீர் கண்டுளீர் இச்சிறு வயதிற்
- பலதே வனைப்போற் பலிதமாம் சிறுதரு?
இரண்டாம் படைவீரன்:
இலையிலை எங்கும்! இவர்போல் யாவர்!
சீவகன்:
- எனதர சுரிமையும் எனதர சியல்பும்
- தமதார் உயிர்போல் தாம்நினைத் திதுவரை
- எவ்வள வுழைத்துளார் இவ்விரு வருமெனச்
- செவ்விதின் எனைவிட நீவிரே தெரிவீர்.
- இக்குலம் அவர்க்கு மிக்கதோர் கடன்பா (130)
- டுடையதென் றொருவரும் அயிர்ப்புறார். அதனால்
- தடையற அக்கடன் தவிர்க்கவும் நம்முளம்
- கலக்கிடும் அபாயம் விலக்கவும் ஒருமணம்
- எண்ணினேன். பண்ணுவேன் இசைவேல் நுமக்கும்.
- மணவினை முடிந்த மறுகணம் மணந்தோர்
- இருவரும் இவ்விடம் விடுத்துநம் முனிவரர்
- தாபதன் சென்று தங்குவர். இத்தகை
- ஆபதம் கருதியே அருட்கடல் அடிகள்
- தாமே வருந்திச் சமைத்துளார் அவ்விடம்
- போமா றொருசிறு புரையறு சுருங்கை.
- அவ்வுழி இருவரும் அடைந்தபின், நம்மைக்
- கவ்விய கௌவையும் கவலையும் விடுதலால்
- வஞ்சியன் ஒருவனோ, எஞ்சலில் உலகெலாம்
- சேரினும் நம்முன் தீச்செறி பஞ்சே!
- இதுவே என்னுளம். இதுவே நமது
- மதிகுலம் பிழைக்கும் மார்க்கமென் றடிகளும்
- அருளினர் ஆஞ்ஞை! ஆயினும் நுமது
- தெருளுறு சூழ்ச்சியும் தெரிந்திட விருப்பே!
- (நேரிசை ஆசிரியப்பா)
- உரையீர் சடரே! உமதபிப் பிராயம்!
சகடன்:
- அரசர் குலமன்று. ஆயினென்? சரிசரி!
நாராயணன்:
(தனதுள்)
- மருகன் தப்பிய வருத்தம் போலும்!
சீவகன்:
- குலந்தேர் வதுநற் குணந்தேர் வதுவே!
- பெயரால் என்னை? பேயனிவ் வஞ்சியான்
- பெயரால் அரசன்! செயலாற் புலையன்!
இரண்டாம்படைவீரன்:
- செயசெய! சரிசரி! தெளிந்தோம்! தெளிந்தோம்!
நாராயணன்:
- மனிதரால் ஆவதொன் றில்லை. மன்னவா!
- இனியெலாம் ஈசன திச்சை.
சகடன்:
- .... .... .... சரிசரி!
யாவரும்:
- சம்மதம் சம்மதம்! சர்வ சம்மதமே!
சீவகன்:
- வாராய் நாரணா! ஆனால் அப்புறம்
- சென்றுநம் மனோன்மணிச் செல்வியை யழைத்து
- மன்றல் திரைப்பின் வரச்செய்
(நாராயணன் போக)
- .... .... .... யார்க்கும்
- சம்மத மெனிலிச் சடங்கை முடிப்போம்.
- வம்மின்! இனியிது மங்கல மணவறை
- கவலை அகற்றுமின் கட்டுடன்! பனிநீர்த்
- திவலை சிதறுமின்! சிரிமின்! களிமின்!
- இன்றுநாம் வென்றோ மென்றே எண்ணுமின்!
- இனிநாம் வெல்லற் கென்தடை? தினமணி
- வருமுன் ஏகுவம். அரைநா ழிகைத்தொழில்!
- ஆற்றுவம் அரும்போர் கூற்றுமே அஞ்ச,
- நாளைநல் வேளை; நம்மணி பிறந்தநாள்,
- பாரீர்! பதினா றாண்டுமிந் நாளில்
- ஓரோர் மங்கல விசேடம்!
சகடன்:
- .... .... .... ஓஓ!
- சரிசரி! ஒவ்வொரு வருடமும் அதிசயம்!
(நாராயணன் திரும்பிவர, மனோன்மணி,
- வாணி முதலிய தோழியருடன் திரைப்பின் வந்து நிற்க)
நாராயணன்:
- இட்டநின் கட்டளைப் படியே எய்தினர்.
சீவகன்:
(நாராயணனை நோக்கி)
- மற்றிவர் கவலை மாற்றிட ஒருபா
- சற்றிசைத் திடுவளோ வாணி! சாற்றுதி!
வாணி:
(பாட)
- (கொச்சகக் கலிப்பா)
- நீர்நிலையின் முதலையின்வாய் நிலைகுலைந்த ஒருகரிமுன்
- ஓர்முறையுன் பெயர்விளிக்க உதவினைவந் தெனவுரைப்பர்
- ஆர்துயர அளக்கர்விழும் அறிவிலியான் அழைப்பதற்குன்
- பேர்தெரியேன் ஆயிடினும் பிறகிடல்நின் பெருந்தகையோ. (1)
- பாரரசர் துகிலுரியப் பரிதவிக்கும் ஒருதெரிவை
- சீர்துவரை நகர்கருதிச் சிதைவொழிந்தாள் எனவுரைப்பர்
- ‘ஆர்துணையும் அறவிருக்கும் அறிவிலியான் அழைப்பதற்குன்
- ஊர்தெரியேன் ஆயிடினும் உறுதிதரல் உனக்குரித்தே. (2)
- மறலிவர மனம்பதறும் மார்க்கண்டன் உனதிலிங்கக்
- குறிதழுவி அழிவில்வரம் கொண்டான்முன் எனவுரைப்பர்
- வெறிகழுமிப் பொறியழியும் வெம்பாவி விரவுதற்குன்
- நெறியறியேன் ஆயிடினும் நேர்நிற்றல் நினதருளே. (3)
சுந்தரமுனிவர்:
- (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
- எதுவோ இதனினும் ஏற்புடைப் பிரார்த்தனை?
- மந்திரம் தந்திரம் வழங்கும் நற்செபம்
- யாவையும் இதுவே, பாவாய்! மனோன்மணீ!
- வருதி, இப்புறம். வாங்குதி மாலை.
(மனோன்மணி மணமாலை கொண்டு பலதேவன் எதிர்வர)
- ஒருதனி முதல்வன் உணர்வன் உன்னுளம்
- உன்னன் புண்மேயேல் இன்னமும் காப்பன்.
(புருடோத்தமன் திரைவிட்டு வெளிவந்து நிற்க)
முதற்படைவீரன்:
- ஆற்றேன் ஆற்றேன்! ஐய!இத் தோற்றம்!
மூன்றாம்படைவீரன்:
- ஊற்றிருந் தொழுகி உள்வறந் ததுகண்!
நாலாம்படைவீரன்:
- அமையா நோக்கமும் இமையா நாட்டமும்
- ஏங்கிய முகமும் நீங்கிய இதழும்
- உயிரிலா நிலையும் உணர்விலா நடையும்
- பார்த்திடிற் சூத்திரப் பாவையே, பாவம்!
(மனோன்மணி புருடோத்தமனைக் காண,
உடன் அவன் நிற்குமிடமே விரைவில் நடக்க)
யாவரும்:
- எங்கே போகிறாள்? இதுயார்? இதுயார்?
புருடோத்தமன்:
- இங்கோ நீயுளை! என்னுயிர் அமிர்தே!
(புருடோத்தமன் தலைதாழ்க்க, மனோன்மணி மாலைசூட்டி,
அவன் தோளோடு தளர்ந்து மூர்ச்சிக்க)
சுந்தரமுனிவர்:
- மங்கலம்! மங்கலம்! மங்கலம்! உமக்கே!
யாவரும்:
- சோரன் சோரன்! சேரன்! சோரன்!
நிஷ்டாபரர்:
- கண்டேன்! கண்டேன்! கருணா கரரே!
(கருணாகரரைத் தழுவி)
யாவரும்:
பற்றுமின்! பற்றுமின்! சுற்றுமின்! எற்றுமின்!
பலதேவன்:
- கொன்மின்! கொன்மின்!
(யாவரும் புருடோத்தமனைச் சூழ,
சுந்தரர் கூட்டம் விலக்க)
சுந்தரமுனிவர்:
- .... .... நின்மின்! நின்மின்!
(அருள்வரதனும் மெய்க்காப்பாளரும் வர)
அருள்வரதன்:
- அடையின் அடைவீர் யம்புரம். அகன்மின்!
(புருடோத்தமனையும் மனோன்மணியையுஞ்
சூழ்ந்துநின்று காக்க)
யாவரும்:
- படையுடன் பாதகன்!
(பின்னிட)
அருள்வரதன்:
(விலங்குடன் குடிலனைக் காட்டி)
- .... .... பாதகன் ஈங்குளான்!
சீவகன்:
- குடிலா! உனக்குமிக் கெடுதியேன்? ஐயோ!
- அடிகாள்! இதுவென்? இதுவென்! அநீதி!
- அறியேன்! இச்சூ தறியேன்! அறியேன்!
சுந்தரமுனிவர்:
- பொறுபொறு! சீவக! அறிகுதும் விரைவில்.
புருடோத்தமன்:
- வஞ்சியான், வஞ்சியான்! மன்னவ! உன்சொல்
- அஞ்சினேன். சூதுன் அமைச்சன் செய்கை.
- சுருங்கையின் தன்மை சொல்லி, என்னையிங்
- கொருங்கே அழைத்தான், உன்னகர் கவர,
- உன்னர சுரிமையும், உன்னகர் நாடும்
- என்னிடம் இரந்தான், இச்சூ திதற்கா!
- ஓதிய சுருங்கையின் உண்மைகண் டிவன்தன்
- சூதும் துரோகமும் சொலிஉனைத் தெருட்ட
- எண்ணியான் வந்துழி, இவ்வொளி விளக்கும்
- பண்ணியல் பாட்டும், பழையபுண் ணியமும்
- தூண்டிட ஈண்டுமற் றடையவும், யாண்டும்
- எனதுயிர் அவாவிய இவ்வரு மருந்தை
- நனவினிற் காணவும் நண்ணவும் பெற்றேன்.
- பிரிகிலம் இனிமேல். உரியநின் உரிமை
- யாதே ஆயினும் ஆகுக, ஈதோ!
- மீள்குவன், விடைகொடு; நாளையும்
- வேட்பையேற் காண்போம் ஞாட்பிடை, நாட்பே.
சீவகன்:
- உண்மையோ? குடிலா! உரையாய்!
(குடிலன், முகங்கவிழ்ந்து நிற்க)
நாராயணன்:
- .... .... .... இதுவுநின்
- உண்மையோ! மௌனமேன்?
யாவரும்:
- .... .... ஓகோ! பாவி!
நாராயணன்:
- படபடத் திடுநின் பாழ்வாய் திறவாய்!
சுந்தரமுனிவர்:
- விடுவிடு! விசாரணைக் கிதுவன் றமையம்!
- நன்மையே யாவும், நன்மையாய் முடியின்
- வாராய் சீவக! பாராய் உன்மகள்.
- தாராத் தன்னிரு கைதோள் சூட்டி
- எண்படு மார்பிடைக் கண்படு நிலைமை.
- இருமனம் ஏனினி; என்றுமிப் படியே
- மருகனு மகளும் வாழ்கவாழ்த் துதியே!
சீவகன்:
- கண்மணீ! அதற்குள் கண்வளர்ந் தனையோ?
- உன்னையும் மறந்துறங் குதியேல், இனிமேல்
- என்னையெங் கெண்ணுவை? இறும்பூ திருவரும்
- ஒருவரை ஒருவர் உணர்ந்தமை!
(மனோன்மணி திடுக்கிட்டு விழிக்க)
- வெருவலை மணியே! பிரியீர் இனியே! (3)
- (வாழ்த்து-மருட்பா)
- பள்ள உவர்க்கடலிற் பாய்ந்தோடும் வெள்ளமென
- உள்ளம் உவந்தோடி ஒன்றானாய்-விள்ளா
- மணியின தொளியும், மலரது மணமும்
- அணிபெறு மொழியின் அருத்தமும் போல.
- இந்நிசி யாகவெஞ் ஞான்றும்
- மன்னிய அன்புடன் வாழ்மதி சிறந்தே!
(யாவரும் வாழ்த்த)
- (கலித்துறை)
- சிறிதா யினும்பற் றிலாதுகை யற்ற திருமகடன்
- குறியாந் தலைவன் குடிலன்பின் எய்திய கொள்கைகண்டீர்!
- அறிவாம் எனுநம் அகங்கரம் ஆறும் அவத்தையினிற்
- செறிவா யிருக்குந் திருக்கு வெளிப்படும் சீரிதுவே.
ஐந்தாம் அங்கம் முற்றிற்று.
தொகுமனோன்மணீயம் முற்றிற்று.
தொகுV
தொகுமனோன்மணீயம்: ஐந்தாம்அங்கம், மூன்றாங்களத்தின் கதைச்சுருக்கம்
பார்க்க:
தொகுமனோன்மணீயம்/மூலம்(முதல்அங்கம்-பாயிரம்)