மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 05

மனோன்மணீயம் நாடகம்Edit

அங்கம் 01- ஐந்தாம் களம்Edit

இடம்: குடிலன் மனை

காலம்: மாலை

(குடிலன் உலாவ)

(இணைக்குறள் ஆசிரியப்பா)

குடிலன்: (தனிமொழி)

புத்தியே சகல சக்தியும்! இதுவரை
நினைத்தவை யனைத்தும் நிறைவே றினவே
உட்பகை மூட்டிப் பெட்புற் றிருந்த
மதுரையாம் முதுநகர் விடுத்து மன்னனைப்
புதியதோர் பதிக்குக் கொணர்ந்து புரிசையுங்
கட்டுவித் தோம்நம் இட்டமாம் வகையே
நாமே யரசும் நாமே யாவும்!
மன்னவன் நமது நிழலின் மறைந்தான்
பிடித்தாற் கற்றை விட்டாற் கூளம்
மதுரையை நெல்லை இனிமேல் வணங்குமோ? (10)
இதுதனக் கிறைவன் இறக்கில் யாரே
அரச ராகுவர்?--
(மௌனம்) --
புரவலன் கிளைஞர் புரிசையைக் கேட்கினும்
வெருளுவர், வெல்லார். ஆயினும்--
முழுதும் நம்மையே தொழும்வகை யிலையோ?
கருவியுங் காலமும் அறியில் அரியதென்?
ஆ!ஆ! அயர்த்தோம் அயர்த்தோம்!
மயக்கம் மனோன்மணி கொண்டதை முற்றும்
அயர்த்தோம்! ஆ!ஆ! ஆயிழை யொருவனைக்
கண்டு காமங் கொண்டவ ளல்லள்; (20)
பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள்.
அருகுள தெட்டியே யாயினும் முல்லைப்
படர்கொடி படரும்; பலதே வனையவள்
இடமே பலமுறை யேவி லுடன்படல்
கூடும். கூடிலென் கூடா?
யாவன் அஃதோ வருமொரு சேவகன்?
(சேவகன் வர)

சேவகன்: ஜய!ஜய! விஜயீ பவகுடி லேந்திரா?

(திருமுகம் கொடுக்க)

குடிலன்: (வாசித்து நோக்கி)

நல்ல தப்புறம் நில்லாய்; ஓ!ஓ!
சொல்லிய தார்கொல்? சுந்தர னேயாம்.
(சேவகன் ஒருசாரிருந்து தூங்க)
அடுத்தது போலும் இம்மணம். அவசியம் (30)
நடக்கும். நடக்கிலென்? நமக்கது நன்றே
அரசர்கட் காயுள் அற்பமென் றறைவர்;
பிரியமாந் தன்மகட் பிரிந்து வெகுநாள்
வாழான் வழுதி. வஞ்சிநாட் டார்க்குத்
தாழார் இந்நாட் டுள்ள சனங்களும்,
அதுவும் நன்றே- ஆயினுங்
கால தாமதஞ் சாலவு மாகும்;
வேறொரு தந்திரம் வேண்டும்; ஆ!ஆ!
மாறன் மாண்டான்; மன்றலும் போனது;
சேரன் இறுமாப் புடையதோர் வீரன் (40)
ஆமெனப் பலரும் அறைவர். அதனால்
நாமவன் பால்விடுந் தூதுவர் நலம்போன்
மெள்ள அவன்றன் செருக்கினைக் கிள்ளிற்
படைகொடு வருவன்; திண்ணம் பாண்டியன்
அடைவதப் போதியாம் அறிவம்.
போர்வந் திடிலிவன் நேர்வந் திடுமெலாம்
யார்இற வார்கள்? யார்அறி வார்கள்?
முடிதன் அடிவிழில் யாரெடுத் தணியார்?
அரச வமிசக் கிரமம் ஓரில்
இப்படி யேமுத லுற்பவம் இருக்கும் (50)
சிலதலை முறையாப் பலவரு டஞ்செலில்
இந்துவில் இரவியில் வந்தோ ரெனவே
மூட உலகம் மொழியும். யாரே
நாடுவர் ஆதியை? நன்று நன்றிது!
தோடம்!- சுடு! சுடு!
தீது நன்றென ஓதுவ வெல்லாம்
அறியார் கரையும் வேறுமொழி யலவோ?
பாச்சி பாச்சி என்றழும் பாலர்க்குப்
பூச்சி பூச்சி என்பது போலாம்;
மன்னரை உலகம் வணங்கவும், பார்ப்பார்க்(கு) (60)
அன்னங் கிடைக்கவும், அங்ஙன மறைந்து
மதியிலாரை மயக்குவர் வஞ்சகமாய்.
அதனால் நமக்கென்? அப்படி நினைக்கில்
இதுவரை இத்தனை நன்மையெப் படிவரும்?
பார்க்குதும் ஒருகை சுந்தரன் யந்திரங்
காக்கும் வகையுங் காண்போம்; சுவான
சக்கரம் குக்கனைத் தடுத்திடும் வகையே
யந்திரத் தந்திரம் இருப்பதென் றறியான்.
பித்தன் மெத்தவும்! நமக்கினி இதுவே
உத்தம உபாயம். ஓகோ! சேவக! (70)
சித்தம் மெத்தக் களித்தோம், இந்த
மணவுரை கேட்டென மன்னன் துணியப்
பாவனை பண்ணுவோம். ஏ! ஏ! சேவக!

(சேவகன் எழுந்துவர)

இன்றுநாம் உற்றஇவ் வின்பம் போல
என்றும் பெற்றிலம். இணையறு மாலை
இந்தா! தந்தோம், இயம்பாய்,
வந்தோம் விடியுமுன் மன்னவைக் கென்றே.
(நேரிசை ஆசிரியப்பா)


சேவகன்: வாழ்க! வள்ளால்! நின்உதா ரம்போல்

ஏழுல கெவற்றிலும் உண்டோ?
வாழ்க எப்போதும் மங்கலம் வரவே. (80)

குடிலன்:(தனிமொழி)

நல்லது; விரைந்து செல்வாய்! நொடியில்

(சேவகன் போக)

மதியிலி! என்னே மனிதர் மடமை!
இதுவும் உதாரமாய் எண்ணினன்; இங்ஙனம்
தருமந் தானம் என்றுல கறியுங்
கருமம் அனைத்துஞ் செய்பவன் கருத்தைக்
காணின் நாணமாம்; அவரவர் தமக்கா
எண்ணிய எண்ணம் எய்துவான் பலவும்
பண்ணுவர் புண்ணியம் போல. எல்லாந்
தந்நயங் கருதி யன்றித் தமைப்போற்
பின்னொரு வனையெணிப் பேணுவ ருளரோ? (90)
புண்ணியஞ் சீவகா ருண்ணிய மெனப்பல
பிதற்றுதல் முற்றும் பித்தே, அலதேல்
யாத்திரை போன நூற்றுவர், சோறடு
பாத்திரந் தன்னிற் பங்கு பங்காக
ஒருவரை யொருவர் ஒளித்துப் பருமணல் (95)
இட்ட கதையா யிருக்குமோ? அவ்வளவு
எட்டுமோ உலகின் கட்டைச் சிறுமதி!-
ஆயினும் அரசனைப் போலிலை
பேயர் பெரிய மேதினி யெங்குமே.
முதல் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று.Edit
(கலித்துறை)
சீரும் வதுவையுஞ் சேர்முறை செப்பியுஞ், சீவகன்றான்
போரும் நிதனமும் புந்திசெய் மந்திரம் போற்றினனே;
சாருந் தனுகர ணங்களைத் தானெனுந் தன்மைவந்தால்,
யாரும் அருள்வழி நிற்கிலர் மாயை யடைவிதுவே.

முதல் அங்கம் முற்றிற்று.Edit

ஆசிரியப்பா 52-க்கு அடி 830;
ஆசிரியத் தாழிசை 6-க்கு அடி 18;
வெண்பா 2-க்கு அடி 08;
கலித்துறை 1-க்கு அடி 04;

ஆக அங்கம் 1/க்கு: பா. 61/க்கு அடி 860.

பார்க்கEdit

I. முதல் அங்கம்Edit

மனோன்மணீயம்- ஆசிரியமுகவுரை, கதைச்சுருக்கம்.
மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 01
மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 02
மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 03
மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 04

IIEdit

II:01 + II:02 + II:03

IIIEdit

III:01 + III:02 + III:03 + III:04

IVEdit

IV:01 + IV:02 + IV:03 + IV:04 + IV:05

VEdit

V:01 + V:02 + V:03